20 December 2011

சென்னை உலக திரைப்படவிழா 19 டிசம்பர் 11 மலையின் நிறங்கள்

குட்டிப் பையனொருவன் எட்டி உதைக்கும் நிலையில் இருக்க, அந்தரத்தில் நிற்கும் கால்பந்து. தபால்தலை அளவில் இப்படியான ஒரு புகைப்படமும் கொலம்பிய நாட்டுப்படம் என்கிற கூடுதல் தகவலும் மட்டுமே இந்தப்படத்தைப் பார்க்குமுன் எனக்குத் தெரிந்தவை.
இந்த பொக்கிஷத்தைத் தவறவிடாமலிருக்க இவையே போதுமானதாக இருந்தன. ’உள்ளுணர்வு’ என்பது சமகால இலக்கியத்தில் கெட்டவார்த்தையாகக் கருதப்படுவதால் அதை உபயோகிக்க, அதுவும் குறிப்பாக அறிவு ஜீவிதத்தால் எல்லாப்புறமும் சூழப்பட்டிருக்கும் இணையத்தில் பயன்படுத்த குலைநடுங்குகிறது.

ஐஎம்டிபி ஹாலிவுட்டுக்கானது.ஐரோப்பியப் படங்களுக்கானதன்று. விகடன் இத்தனை மார்க்கு கொடுத்திருக்கிறான் என்பதைப்போல் அவன் அத்தனை ஸ்டார் கொடுத்திருக்கிறான் என்கிற அள்வீடுகளை வைத்து படத்தைப் பார்ப்பதற்குத் தேர்ந்தெடுப்பதில் எனக்கு என்றுமே நம்பிக்கையில்லை. ஒற்றைவரிக் கதைச்சுருக்கம் படித்துப் பார்த்துவிட்டு செல்வதிலும் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. உள்ளே வெளியே மூணு சீட்டு போன்ற சூதாட்ட சாகசமே எனக்கு உவப்பு. எதிர்கலாச்சாரம் அ-கலாச்சாரம் என்று படித்துவிட்டு எடுத்த வாந்திகளைப் பிடித்து அரிதாரமாய் முகத்தில் பூசி தானும் ஒரு ஆளாய் நடமாடுவதைவிட எதிர்கலாச்சார அ-கலாச்சாரப் பொறுக்கியாய் வாழ்ந்துவிடுவது எனக்கு எளிய காரியமாய் இருக்கிறது.

இல்லையென்றால், இவர் சொன்னால் சரியாக இருக்கும் என்று ரசனை சார்ந்த முந்தைய அனுபவத்தின் காரணமாய், இவர் சொன்னால் தப்பாகாது என நான் ’நம்பிக்கை’ வைத்திருக்கும் ஓரிருவரின் தேர்வு சார்ந்து மட்டுமே எப்போதும் சூதாடிக்கொண்டு இருக்கிறேன். சரி தவறுகள் என் எச்சத்தால் அறியப்படட்டும்

வெகுஜன-வணிக படைப்புகளுக்கும் நுட்பமான கலைப் படைப்புகளுக்கும் பல வேறுபாடுகள் உண்டு எனினும், குறிப்பாக எல்லாவற்றையும் வட்டம்போட்டு சுழித்து வைப்பதை வணிகப்படைப்பின் முக்கிய கூறாகக் கானலாம். அந்த  வகைப்பட்ட வாசகர்களுக்கும் எதுவும் தொக்கி நிற்காமல் தொடக்கம் முடிவுக்கு வந்து வட்டம் முழுமையடைந்து நின்றால்தான் ஒரு காரியம் முடிந்து மறுகாரியம் பார்ப்பது போல நிம்மதியாக இருக்கிறது. வாழ்க்கை ஒரு தொடர் நிகழ்வு. அதற்குள், நிகழ்வுகள் முழுமையான வட்டமாய் ஒருபோதும் முடிந்து நிற்பதில்லை. சிறந்த கலைப்படைப்புகள் திறந்த முடிவுகளுடன் இருப்பதற்கு இதுவே காரணாகவும் இருக்கலாம்.

இந்தப்படத்தின் சிறப்பு அம்சமே எந்தக் காட்சிக்கும் அடிக்கோடோ அழுத்தமோ கொடுக்கப்படாதிருப்பதுதான். பத்துவயதுப் பையனுக்கு எவ்வளவு தெரியுமோ அவ்வளவுதான் காட்டப்பட்டிருக்கும். இயக்குநர் என்று ஒருவர் இருப்பதே நம் ‘அறிவுக்கு’ தட்டுப்படாது. 

மலைசார்ந்த ஒரு குக்கிராமம். ஒரு கால்பந்து. ஏழெட்டு சிறுவர்கள். கொஞ்சம்போல விரிவாகக் காட்டப்படும் இரண்டு குடும்பங்கள். ஒரு மாடு ஒரு கன்றுக்குட்டி. ஒன்றாம் வகுப்பு முதல் நாலாம் வகுப்புவரை ஒன்றாக ஒரே அறையில் நடத்தப்படும் பள்ளி. கிராமத்திற்கு வெளியிலிருந்து வந்து தங்கி பள்ளி நடத்தும் ஆசிரியை. முக்கோண மேற்போர்வையும் துப்பாக்கியும் அணிந்து அவ்வப்போது வந்துபோய் கூட்டத்தில் ’கலந்துகொண்டு’ இயன்றதைத் தரசொல்லிக் கட்டாயப்படுத்தும் கொரில்லாப் போராளிகள். எப்போதாவது வானில் தட்டுப்படும் ஹெலிகாப்டர்கள். கொரில்லா அல்லது கொரில்லாக்களின் ஆதரவாளர் என்கிற சந்தேகத்தின்பேரில் டிரக்கில் நீட்டிய துப்பாக்கிகளுடன் வந்து, அழைத்துச்சென்று, குதிரையின்மேல் பிணமாகத் திருப்பி அனுப்பும் ராணுவம். போராளிகள் ராணுவம் என்கிற வெந்நீர் மற்றும் கொதிக்கிற எண்ணெய்க்கொப்பறைகளுக்கிடையில் கப்டன் கதைபோல மாட்டிக்கொண்டு பயந்து பதுங்கும் பையனின் தந்தை. கால்பந்தைத் தவிர வேறு எதைப்பற்றியும் பெரிதாகத் தெரியாத கவலைப்படாத பொடிப்பயல்கள். மலையிலிருக்கும் கால்பந்தாட்ட மைதானத்தின் அருகில் முரண்டுபிடித்து ஓடும் பெரிய பன்றி, பையன்களின் கண்ணெதிரில் திடீரென கண்ணிவெடியில் சிக்கி சிதறிச் சாகிறது. அப்புறம் விளையாட்டுக்கிடையில் அதே இடத்தில் கால்பந்து போய் விழுந்துவிடுகிறது.

அப்புறம்? அப்புறம் என்னவென்று படத்தைப் பார்ப்பதுதான் சிறந்த காரியம்.
.
The Colours of the Mountain / Dir: Carlos Ceasar Arbelaez / Columbia / 2010 / 90 Mins

***

மூச்சடைக்கும்விதமாக முக்கியபடி போய்க்கொண்டிருந்தால்தான் சிறந்த படைப்பு என்பது, அறிவுதாகமெடுத்து அலைவதுபோலக் காட்டிக்கொள்ளப் பிரியப்படும் அரைகுறைகளை அசத்துவதற்காக அவிழ்த்துவிடப்பட்ட மாயபிம்பம்.


The Woman on the 6th Floor / Dir: Philippe Le Guay / France / 2010 / 104 Min

வீட்டு வேலைக்காரிகளைப்பற்றி எடுக்கப்பட்ட படம் ஏதும் பார்த்திருப்பீர்களா? அப்படியேப் பார்த்திருந்தாலும் மிஞ்சி மிஞ்சிப்போனால் உம்மணா மூஞ்சி தகவல் படங்களாகப் பார்த்திருக்கவே வாய்ப்புண்டு. கிண்டலும் கேலியும் குத்தலும் நக்கலுமாகப் பார்த்திருக்க வாய்ப்புண்டா? வேலைக்காரிகளைப் பற்றிய கிண்டல் கேலியல்ல, ’எஜமானர்களைப்’ பற்றி வேலைக்காரிகள் அடிக்கும் லூட்டி. படம் பார்த்து ஒருசிலர் எகிறி குதித்து சிரித்ததில் உட்லண்ட்ஸ் பால்கனியில் இருக்கும் சில இருக்கைகள் பழுதடைந்து இருக்கலாம். நாளை படம்பார்க்கச் செல்கையில் இன்று உட்கார்ந்தது எந்த வரிசை என்பதை கவனமாய்த் தவிர்த்தாகவேண்டுமே என்பதுதான் எனது தலையாய கவலை. வீட்டில் இருந்தபடியே இதைப் பார்ப்பவர்களுக்கு முன்னெச்சரிக்கையாய் இருக்கட்டும் என்கிற நல்லெண்ணத்திலேயே இது எழுதப்படுகிறது.