12 December 2011

நெஞ்சிலுள்ள காதல்


சுகுமாரன் பேசிக்கொண்டிருந்தபொழுது சொன்னார் - சு.ரா. எல்லா நண்பர்களுக்குமே ஸ்பெஷல் என்று. அது சரிதான். விமலாதித்த மாமல்லன் என்கிற இளவயது நண்பர் - இப்பொழுது அவர் இளைஞர் இல்லை - எங்கள் வாழ்க்கையில் பங்களிப்பு செய்துகொண்டிருந்த காலங்களில் சு.ராவுக்கு மாமல்லன் ஸ்பெஷலாக இருந்திருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்தக் குறிப்பை எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து பல சந்தர்ப்பங்களில் ஏன், என்ன காரணம்? என்கிற கேள்வியை சு.ராவிடம் கேட்டு நான் ஏன் பதில் தெரிந்துகொள்ளாமலிருந்தேன்? ஏன் எனக்குக் கேட்கத் தோன்றவில்லை என்று நினைத்துக்கொள்கிறேன். இப்பொழுது மாமல்லனைப் பற்றி எழுதும்போதும் அந்தக் கேள்வி எழுகிறது.

மாமல்லன் எங்கள் வீட்டிற்கு முதன்முதலில் சு.ரா வெளியூர் போயிருந்தபோது வந்திருந்தார். கருகரு தாடி மீசையும் துருதுரு கண்களும் திருத்தமான மூக்குமாக சந்நியாசி உடையில் புயல்போல வந்துவிட்டுப் போனார்.

சு.ரா ஊரிலிருந்து வந்ததும் மாமல்லன் வந்துபோன விஷயத்தைச் சொல்லிவிட்டு, “பால்வழியும் அழகான முகம் இப்படி சந்நியாசியாகப் போகத் தோணுமா?” என்று கேட்டேன். “கவலைப்படாதே. இந்தப் பால்வழியும் முகம் தேர்ந்தெடுத்த வாழ்க்கை நாடகத்தில் ஒரு பகுதிதான் இந்த சந்நியாசி வேடம்” என்றார் சு.ரா.

அடுத்து நான் மாமல்லனைப் பார்த்தது க்ரியா ராமகிருஷ்ணன் வீட்டில். சு.ராவுக்கு விடியற்காலை நாலு நாலரை மணிக்கு எழும்ப வேண்டிய அவசியம் நேர்ந்தபொழுது சு.ரா சிறிதும் எதிர்பாராமல் மாமல்லன் சரியான நேரத்தில் வந்து கதவைத் தட்டி எழுப்பிவிட்டார். சு.ராவை எழுப்புவதற்காக இரவு முழுவதும் வெளியில் சுற்றி அலைந்துவிட்டுவந்து எழுப்பியிருக்கிறார் என்பது அவருக்குச் சங்கடத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

“யார் இவர்?” என்று நான் கேட்டதும் “அந்தப் பால் வழியும் முகத்திற்குரிய சந்நியாசிதான். இப்போழுது க்ளீன் ஷேவ், பைஜாமா குர்த்தாவுடன். வாழ்க்கை நாடகத்தின் மற்றொரு காட்சி இது” என்றார் சு.ரா. அவர் அவசரமாக வந்துபோனதால் எனக்கு அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

பின் அண்ணா நகரில் சு.ராவின் அக்க மகள் சாருவின் வீட்டில் சந்தித்தோம். வீடியோ சி.டி போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் வராத காலம். புரொஜெக்டர் எல்.டி தட்டுகள் போன்ற சாதனங்களை ஆட்டோவிலிருந்து எடுத்து இரண்டாவது மாடிக்குத் தானே தூக்கிவந்து ‘மொஸார்ட்’ என்ற பிரபல இசையமைப்பாளரின் படத்தைப் போட்டுக் காட்டினார். தன்னை வருத்திக்கொண்டு எதற்காக சு.ராவின்பால் இவ்வளவு அக்கறை? இருவருமே ஒருவருக்கொருவர் ஸ்பெஷல் என்று சொல்லலாமா?

மாமல்லன் சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ‘பாபா ஆம்தே’யின் சைக்கிள் ராலியில் சேர்ந்து கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீருக்கும் பம்பாயிலிருந்து கல்கத்தாவிற்கும் பயணம் மேற்கொண்டிருந்தார். கன்னியாகுமரியிலிருந்து ’ராலி’ கிளம்புவதற்கு முன் எங்கள் வீட்டிற்கு வந்து அதுபற்றிய சகல விவரனங்களையும் சு.ராவிடம் விரிவாகச் சொல்லி விடைபெற்றுச் சென்றார். 

இந்தவிதமான ராலி, நடைபயணங்கள் எல்லாம் சு.ராவிற்கு மிகவும் பிடித்தமான காரியங்கள். அவருக்குப் பயணம் பற்றி மூச்சுவிடாமல் சொல்வதற்கு ஆசை. இவருக்கு மகிழ்ச்சி பொங்கக் கேட்பதற்கு விருப்பம். ஒன்றுக்கொன்று சரியாய்ப்போச்சு. பிரயாணத்தின்போது தங்கும் இடங்களிலிருந்து மாமல்லன் தொலைபேசியில் தொடர்புகொள்வார். அவர் சொன்ன தகவல்களை சு.ரா என்னிடம் மகிழ்ச்சியுடன் விவரிப்பார். மானசீகமாக சு.ராவும் அந்த யாத்திரையில் பங்குகொண்டிருந்தார் என்று நினைக்கத் தோன்றும்.

மாமல்லன் நான் இல்லாமலும் சு.ராவைப் பலமுறை சந்தித்திருப்பார் என்று நினைக்கிறேன். இதுதவிரத் தொலைபேசித் தொடர்பு வேறு. அமெரிக்காவிலிருக்கும்போதும் தொலைபேசியில் பலதடவை தொடர்புகொண்டிருக்கிறார். பேச்சு மணிக்கணக்காக நீண்ட சமயங்களும் உண்டு. தொலைபேசியில் பேசுவது, பேசிக்கொண்டேயிருப்பது மாமல்லன்தான். சு.ரா ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்வது கேட்கும். இருவருக்கும் தொடர்பு இல்லாத காலங்களும் இருந்திருக்கின்றன.