13 February 2011

பாலை - பிரமிள்

பாலை

பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல்.

என் பாதம் பதித்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல் தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒரு பிடி நிலம்.

*
(1973)

கவிதைக்கும் நமக்கும் ரொம்ப தூரம் என்கிற பெரும் புலம்பலுக்கான அடிப்படைக் காரணம், கவிதையைக் கதைகள், கட்டுரைகள் படிப்பது போல் வாசிக்கும் பழக்கம்தான். பலசமயங்களில் இப்படிப் புலம்புவதான பாவனையின் அடியில் அவர்களையும் அறியாமல் மறைந்திருப்பது, கவிதைக்கும் நமக்கும் மிகுந்த தூரம் என்றபடி வெகண்டையாகப் பெருமை பீற்றிக் கொள்ளல். உரைநடையின் ஓட்டத்தில் படிக்க முற்படுவதை விடுத்து, வார்த்தை வார்த்தையாய்ப் படிக்க முயற்சிப்பது முதற்படியாய் உதவக்கூடும்.

ஆரம்ப நிலையில் கவிதை எழுத ஆசைப்படுபவன் வேண்டுமானால வாக்கியங்களை ஒடிப்பவனாக இருக்கலாம். ஆனால் கவிஞனிடமோ, கைக்கடிகாரக் கலைஞனின் நுட்பகவனத்துடனும், பொற்கொல்லனின் தேர்ந்த லாவகத்துடனும், வார்த்தைகளாலான வாக்கியங்கள் வளைக்கப்படுகின்றன. தலைமை வைரக் கொல்லனென, தேர்ந்த வார்த்தைகள் தலைப்பாகவும், ஆங்காங்கே பளீரிடும் விலைமதிப்பற்ற கற்களாகவும் சொற்கள் பதிக்கப் படுகின்றன. இவற்றை இணைக்கவும் தாங்கிக் கொள்ளவும் வேண்டிய அளவிற்கு மட்டுமேயான தங்கமென இணைப்பு வார்த்தைகள் உட்கார்ந்து இருக்கின்றன.

கவிதைகளில் படிமங்கள் உவமைகள் உருவகங்கள் கருத்துகள் இன்னபிறவென அனைத்தும் ஏற்ற இறக்கங்களுடன் உயிர்த்துடிப்பே போல இருப்பதை, வார்த்தை வார்த்தையாய்ப் படிக்க முனைகையில் பிடிபடக்கூடும். ஒரு வாசிப்பில் அதன் அத்துனை அழகும் வசப்படுமா? படலாம், பார்க்கப் பார்க்க, பரவசப்பட வைக்கும் ஜொலிப்பு கூடவும் கூடும். அருகில் நெருங்க நெருங்க ஆரம்பக் கூச்சம் களைந்து அன்பில், அணைப்பின் இளஞ்சூட்டில், மனத்தோளில் தவழவும் கூடும் கவிதை. தனித்தனி உறுப்புகளின் மோகக் கவர்ச்சியின் ஈர்ப்பு அடங்கும் போது தரிசனப்படுவது ஒரு முகமல்ல. முழுமையின் பல முகங்கள்.

பாலை என்கிற ஒற்றைச்சொல் ஒரு வாசக மனத்தில் உருவாக்கும் அலைகள் எத்துனை! அந்த சொல்லின் முழுப் பொருளும் கிரகிப்பது என்பது - ராணுவ நடைக் கட்டளைப் போல - கவனம் என்கிற அதட்டலாக அல்லாது இயல்பான அணுகலில், நிலமாகவும், மனத்தின் நிலையாகவும் வெறுமைக்கும் வெம்மைக்கும் என பல்வேறு விதமாகவும் அதன் வீச்சு விகஸிக்ககூடும்.

//கண் குளிரும் பொன் மணல்//

பொன் மணி வைர முத்து இப்படியான கற்களின் அடுக்கலே ஒரு காலக் கவியரங்குகளின் கவிதைகளாகக் கொண்டாடப்பட்ட ஆஹாக்களுக்கும் ஓஹோக்களுக்கும் பல வருடங்கள் முன்னதாகவே, தமிழின் புதிய கவிதையை பீஷ்ம ஞானப் பேரொளியென நவீனத்வத்துடன் முதிர்த்தவன் பிரமிள். அவனது வார்த்தைக் கோர்ப்பு சும்மா எதிர்மறைகளை அடுக்கிப்

போனா வராது பொழுது போனாக் கெடைக்காது ஐயா வாங்க அம்மா வாங்க அள்ளிக்கோங்க, என்கிற மரத்தடிக் கூச்சல் அல்ல.

தொலைவில் இருந்து பார்க்கையில் தகதகப்பதால் அது பொன் மணல். கண் பார்த்ததில் உடல் படாத வரையில் ’கண் குளிரும்’ - இக்கரைக்கு அக்கரைப் பச்சை பார்வையாகவும் படுகிறது போலும். கவிதையின் காண் சட்டகத்திற்கு வெளியில் அவ்ட் ஆஃப் ஃப்ரேமில் அவன் இருக்குமிடத்தின் வெம்மை நோக்க அந்த பாலை கண் குளிர்கிற நிலையில் இருக்கிறது போலும். பின்னால் வரப்போகும் பெருமலையின் அடிவாரம் போல தொடங்குகிறதோ கவிதை?

மீதி இருப்பவை வெறும் பதினான்கு சொற்கள். பிரமிளின் முத்திரைக்குரிய எந்த வெசேஷ சொற்களும் கவிதையின் பின் பகுதியில் இல்லை.

என் பாதம் பதித்து
நடக்கும்
இடத்தில் மட்டும்

இதை ஒரு மின்ரயிலோ அல்லது விமானமோ நகரத் தொடங்கும் நிதான வேகக்கூட்டலுடன் வாய்விட்டுப் படித்துப் பாருங்கள்.

நிழல் தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒரு பிடி நிலம்.

நிழல்தேடி என்பதிலிருந்து ஒரு உந்தல், வேகமெடுத்து ஈர்ப்பு விசையைக் கிழித்து விண்ணைத் தாண்டி வெளிக்குள் நுழைந்து விடுகிற்து கவிதை.

நிழல் தேடி
என்னோடு

வாய்விட்டு வாசித்தால், வெறும் ஒலிப்பிலேயே ஆதங்கம் வெளிப்படுவதை உணரலாம்.

அலைந்து எரிகிறது ஒரு பிடி நிலம்

சொற்களனைத்தும் நெடிலற்ற நிறைகள். ஏன்? ஏதேனும் விசேஷ காரணம்?

பரபரத்துத் தவித்து அலைகையில் மனிதனோ மிருகமோ எந்த உயிரும், எம்பிக் குதித்தா அலையும். ஆகவேதான் நெடிலற்ற நிறைகள் போலும்.

சரி. சிறந்த கவிதை. நன்றாக உள்ளது. நல்லது.

இன்னொரு முறை படித்துப் பாருங்கள். உடனேவோ அல்லது ஒரு இடைவெளி விட்டோ, இன்னுமன்னியில், ஒரு வாரம் கழித்தோ ஏதோ ஒரு தருணத்தில் படித்துப் பாருங்கள்.

என்னோடு

என்பதற்கான பொருள் பிடிபடலாம். நான் நிழல் தேடி கிடந்து அலைகையில் என் காலின் நிழல் படும் இடத்தில் எல்லாம் அந்தப் பாலை நிழலின் இதம் கண்டு இது இன்னும் கிடைக்காதா என என்னோடு அதுவும் சேர்ந்து அலைகிறது என் காலடியில் படுகின்ற ஒரு பிடி நிலம். அலமந்து சூட்டில் இட்ட அடி நோக எடுத்த அடி கொப்புளிக்க ஒவ்வொரு அடியாக பரபரத்து நான் வைக்கும் ஒவ்வொரு காலடிக்குக் கீழும் இருக்கும் அந்த நிலம் என்னோடு தானும் அலைந்து திரிகிறது எனது நிழலுக்காய்.

நண்பர்களுக்குள் ஒரு சொல் பிறழ்ந்து தெறித்ததில் உண்டான விரிசலில் அடுத்தவர் புக அது பிளவாகி ஊரார் குலவையிட்டுக் கைதட்ட யுத்தமாகி உயிர்ச் சேதத்தில் முடிகையில் ப்ச். பார்வையாளர்களுக்கோ, ஏன்யா இது? என்பதில் தொடங்கி அட விடாதே அடி என்பதாக ஆகி எதையும் யோசிக்காதே முடிவு நோக்கி முன்னேறு முடி என்றாகி முடிந்தபின் ப்ச் எவ்வளவு வீண் விரயம் எனத் தத்துவப் புலம்பலில் முடியும் கதைகளானாலும் எந்த யுத்தத்திற்கும் இரண்டு பக்கம் உண்டு.

ஒன்று பொருதலின் வீரம் மற்றது இழப்பின் சோகம்.

வென்றவன் பக்கமிருந்து பார்த்தால் வீரம். தோற்றவன் தரப்பிலிருந்து பார்த்தால் தியாகம். போர் முனையில் நிற்கும் இரு தரப்பானுக்கும் ’தனிப்பட’ யுத்தம் வெறும் வாதை. ராணுவம் என்பது மனித நாகரீகத்தின் கலாச்சாரத்தின் வீழ்ச்சியன்றி வேறென்ன? தேசாபிமானம் எனக்கு மட்டுமேயானதா? அடுத்தவனை நோண்டுதல் என் பிறப்புரிமையா? ஆனால் அதிகாரம்? அதிகாரத்திற்கான மனித வேட்கை என்பது கவிதை போல சில எளிய சொற்காளால் விளங்கிவிடக் கூடியதா என்ன? விழித்துப் பார் என உலுக்கிச் செல்வது வேண்டுமானால் கவிதையின் காரியமாய் இருக்கலாம்.

என் எதிரியிடமிருந்து என்னைத் தற்காத்துக் கொள்ள அவனை அழித்தாக வேண்டும், இல்லையெனில் நான் அழிந்தேன், என் உயிர் வெல்லம் என்பதில் தொடங்கி எனது தேசத்தின் நலனின் பேரால், நான் நம்பும் தத்துவத்தின் பேரால்...

எனக்கு நிழல்தேடி நானலைய தனக்கு நிழல்தேடித் தானலைகிறது பாலை.

பாலை எனப் பெயர் தாங்கி இருப்பது மட்டுமே பாலையா? அல்லது தாங்க முடியா மனிதனும் தன்னிகரற்ற கவிஞனும் ஒரு சேர உருவான பிரமிள் அன்பற்று அலைந்து கொண்டிருந்ததற்கு என்ன பெயர்?

அன்பு செலுத்தவும் அன்பைப் பிறரிடமிருந்து எதிர்பார்த்தும், கிடக்கும் இந்த வாழ்க்கையில், அது கிடைக்காது போகையில் அதன் பெயர் என்ன?

நன்றி
பிரமிளைத் தொகுத்த கால சுரமணியனுக்கும்
வெளியிட்ட அடையாளத்திற்கும் சாதிக் அவர்களுக்கும்