07 February 2011

தமிழினியின் சிலைகள் - வசந்தகுமாரின் கண்வண்ணம்

பார்வை உள்ளவர்கள் அட்டை மற்றும் உள்ளேயுள்ள படங்களோடு நிறுத்திக் கொள்வது உசிதம். ஜம்பத்துக்கேனும் ஜம்ப் பண்ணியே தீருவேன் என்பவர்கள் புரட்டிப் படிக்கவும் செய்யலாம். 

உள்ளே முழுக்கவும் ப்ரெய்ன் மேட்டர். குறைந்த பட்சம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அப்ரெண்டீஸ் மெம்பராகவேனும் நீங்கள் இருப்பீர்களேயானால் உங்களுக்கு மட்டுமாகிலும் சிறு குட்டையளவு நீரேனும் தோன்றி ரட்சிக்கக்கூடும். தவறிப்போய் ஒரு இலக்கிய நாடோடியாகவோ அல்லது அநாதையாகவோ இருப்பவர் நீங்கள் எனில், பத்திரிகைக்குள் குதிக்குமுன் குறைந்தது ஒருவரையேனும் உஷார் படுத்தி வையுங்கள். நேரப்போகும் அசம்பாவிதத்திற்கு அவசியம் தேவைப்படும்.

புரியவில்லை என ஒரு வார்த்தைகூட இல்லை. இருட்டான வாக்கியங்கள் இல்லவே இல்லை. ஆனால் படித்ததும் நாள் முழுக்க உடற்பயிற்சி செய்த களைப்பு உண்டாகிவிடும். 

இதில் வந்து கொண்டிருந்த நகைச்சுவைப் பக்கம் ஜெயமோகனால் எழுதப்பட்டுக் கொண்டு இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நான் எச்சரிப்பதன் விபரீதம் இப்போது உங்களுக்கு ஓரளவிற்கேனும் புரிந்திருக்ககூடும். இதற்கு நேர் எதிர் கோஷ்டியான சாருவின் சதுரத்தைச் சேர்ந்தவர் நீங்கள் என்றால் நான் ஏதும் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும். புரிந்து கொள்ள என்ன இருக்கிறது? போடு இல்லையேல் போட்டுத் தள்ளு என்ற எளிய தத்துவத்துடன் வாழ்வை தரிசித்துக் கொண்டிருபவர் அல்லவா நீங்கள். உட்கார்ந்த இடத்திலேயே உலகம் சுற்றும் வாலிபர் இன்னொருவர். சொல்ல ஒன்றுமே இல்லை என்பதையும்கூட புத்தகமாக எழுதிவிடக்கூடிய திறமையாளர். 

ஆக இப்படியாக முமூர்த்திகள் சஞ்சரிக்கும் இந்தப் பொல்லாத உலகில் இறப்பிற்குப் பின்னும், ஜே.கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து தமிழில் எழுதும் தமிழினி ஒரு அதிதீவிர சிறுபத்திரிகை.

இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் நா.விஸ்வநாதன். மற்றபடி நடந்து செல்கையில் நம்மைப்போலவே அவரும் பாதசாரி. நெருங்கிய நண்பரென நினைத்திருப்போருக்கு அவர் பெயர் காசி.

ஒருவனுக்கு அதீத தன்னம்பிக்கையும் பரிசீலனையே அற்ற தன் அபிப்ராயங்களின்மேல் அசைக்கமுடியாத தீர்மானங்களும் இருக்குமேயானால், அவன் ஏதோ ஹிட்லரைப்போல் இருப்பான் என பொதுப்புத்திக்கு தோன்றக்கூடும். இல்லவே இல்லை என்பதற்கு எளிய எடுத்துக்காட்டுதான் நான் சொல்லவரும் நபர். பிகாசோ டாலி ஆதிமூலம் இதெல்லாம் ஒன்றுமே இல்லை, மைக்கலேஞ்சலோ மட்டுமே கலை (எழுத்திலே ஜெயமோகன்) என்று சொல்லி, எதிர் வாதத்தைக் கழுத்திலே கடித்த கொசு போல, ஒரு தட்டு தட்டிவிட்டுக் கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு, பக்கத்து பாயிடம் டீ சாப்பிட்டு தம்மடிக்க சாவகாசமாய் நடந்து கொண்டிருக்கும், வடிவமைப்பு, புகைப்படம், எழுத்துருவாக்கம், எழுத்தாள உருவாக்கம் என்று இழுத்துபோட்டு இஷ்டாவதானம் செய்து கொண்டிருக்கும் இவன் பெயர் வசந்தகுமார்.

அட்டைகளுக்காகக் கட்டாயம் வாங்க வேண்டிய பத்திரிகை தமிழினி.