03 February 2011

ஆண்டன் செகாவின் ‘காதலைப் பற்றி’ கதை ஆங்கில PDF

முந்தைய பதிவில் கு.ப.ராவின் சிறிது வெளிச்சம் கதையைப் படித்துவிட்டு ஒரு இணைய நண்பர், சாருதான் வழக்கம்போல, தன் பாணியில் கு.ப.ராவை செகாவோடு ஒப்பிட்டிருந்தார் என்றால் உங்களுக்கு என்ன ஆயிற்று?  என்று பிலுபிலுவெனப் பிடித்துக்கொண்டார்.


நீங்கள் வெளியிட்டிருந்த கு.ப.ராவின் ’சிறிது வெளிச்சம்’ ஆண்டன் செகாவின் ‘காதலைப் பற்றி’ கதையுடன் ஒப்பிடத் தகுந்ததா? முதலில் இது அவர் வாழ்வில் நிகழ்ந்ததா? அவர் மனதில் தோன்றிய எண்ணத்தை வைத்து எழுதப்பட்ட கதையாகவே அல்லவா தோன்றுகிறது..... 

70களில் பிறந்தவர் 40களில் இறந்துவிட்ட ஒருவரின் மனதிற்குள் அசால்ட்டாய் நுழைந்து அலசுவதின் ஆச்சர்யம் மீதூர்ந்து விக்கித்தேன். இணையம் எத்துனை வல்லமை கொண்டதாக இருக்கிறது. அதுவும்தான் கிஞ்சித்தும் சளைக்காமல், எத்துனை இலக்கிய இண்டலெக்ச்சுவல்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.

ஆண்டன் செகாவின் ‘காதலைப் பற்றி’ கதையைத் தேடப் போய், இந்தா பிடி கொள்ளை என The Wife and other stories by Anton Chekhov.pdf என்கிற புத்தகமே கிடைத்தது. அதுவும் மனப்பல் கூசாத சரள மொழிபெயர்ப்பாளரான, CONSTANCE GARNETT கைவண்ணத்தில். 

Constance Clara Garnett (née Black) (19 December 1861, BrightonEngland – 17 December 1946, The Cearne, Crockham HillKent) was an English translator of nineteenth-century Russian literature. Garnett was one of the first English translators of TolstoyDostoevsky and Chekhov and introduced them on a wide basis to the English speaking public.


கைவண்ணத்தில் என்கிற தேய்ச்சொல்லை - இப்படிச் சொன்னால் அல்லது க்ளீஷே என்று கூறினால்தான் கொஞ்சம் அறிவுஜீவி அல்லது கரண்ட் காண்டம்ப்ரரியாக இணையத்தில் ஏற்றுக்கொள்வார்கள் போலும். கொஞ்சம் சரளமும் மனதின் எழுத்தை ஊசிமுனைப் புள்ளியாய்க் குவிக்க முனைதலும் சேர்ந்து, மணிப்ரவாளம் தவிர்க்க முடியாமல் வந்துவிடுகிறது. இதை அவதானித்து,  ஐயோ பாவம் இவன் 80களின் சிறு பத்திரிகைகளிலேயே தேங்கிப்போய்விட்டானே என்று அடைப்பெடுக்கப் பாடுபடுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. எப்படியேனும் தற்கால நவீன தமிழ் இலக்கியத்தில் இவனுக்கும் ஒரு ஸீட் போட்டுவிட வேண்டும் என துண்டு கைக்குட்டை சகிதம் துடியாய் துடிப்பவர்களைப் பெற்றுள்ள நானும்தான் எப்பேற்பட்ட பாக்கியவான். அவர்களுக்கு என் நன்றி.

கைவண்ணத்தில் என்று குறிப்பிட்டமைக்குக் காரணம், காண்ஸ்டன்ஸ் மாமி மொழிபெயர்க்கையில், சரளத்துடன் சல்லாபிக்கும் அளவிற்கு மூல எழுத்திற்குக் கற்போடு இல்லை என ஒரு குற்றச்சாட்டு இருந்தது. 

இதையும் உங்களுக்கு சொல்லி வைப்பதோடு என் கற்பு ஓவர். 

இப்போதெல்லாம் உலக மொழிகள் கற்றுக்கொள்வது பெரிய விஷயம் இல்லை என்று ஆகிவிட்டது. ருஷ்ய மொழி கற்று, மூலத்திலேயே இந்தக் கதையைப் படிக்க வேண்டும் என்று விழைபவர்களுக்கு சிறிய பரிந்துரை. கஸ்தூரி ரங்க (தமிழகத்தில் சாதி ஒழிக்கப்பட்டுவிட்டதால் அய்யங்கார் நீக்கப்பட்ட) சாலையில் இருக்கிற, சோவியத் சிதறுண்டபின் ருஷ்ய கலாச்சார மையமாக இயங்கிவரும் கட்டிடத்தில், பாலே நடனம் போக, ருஷ்ய மொழியும் கற்றுத்தரப் படுகிறது. உபரித் தகவல், அயல் மொழி கற்பவற்களுக்கு, சேவை வரியிலிருந்து விலக்கு உண்டு. 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் MBA படித்துவிட்டு சென்னைக்கு வேலை தேடி வந்த பையன், திருமுடிவாக்கத்தில் (ஜிஎச்டி ரோடில் பழைய பாண்ட்ஸ் தொழிற்சாலை எதிரில் செல்லும் சாலையில் 15 கிமீ உள்ளே போனால் வருகிற இடம்தான் திருமுடிவாக்கம். அங்கே சோப்பு மற்றும் சக்லேட்டுக்கு வாசனை திரவம் தயாரிக்கும் கம்பெனியில் தினக்கூலி அடிப்படையில் மாத சம்பளத்திற்குக் கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறான். அவன் படிப்பிறகு ஏற்ற வேலை எங்குமேக் கிடைக்கவில்லை. காரணம் ருஷ்ய மொழி தெரியாதது அல்ல. சரளமாக ஆங்கிலம் பேச வராதது. அவன் ஆங்கிலம் சரளமாகப் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும் எனில் சேவை வரியும் சேர்த்துக் கட்டியாக வேண்டும்.

ருஷ்ய மொழியைக் கற்றுக்கொள்ள வருபவர்களில் பெரும்பாலோனோர் சொந்தக் காரில் வந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள். மனோன்மணியனார் வேலை முடித்து 8.30 மணிக்கு கணக்கு நேராகாமல் கம்பெனி வண்டியைத் தவற விட்டால், ரெண்டு கிலோமீட்டர் நடந்து, பஸ்பிடித்து அறைக்குச்சென்று ஆறியதை அள்ளித்தின்று அடுத்த நாள் கூலிக்குத் தன்னை ஆயத்தப் படுத்திக்கொள்ள, தூங்கப்போகையில் இரவு 11 ஆகிவிடுகிறது. 

ஆண்டன் செகாவின் தாத்தாவிற்குக் கடிதம் எழுதும் குழந்தை நினைவில் வந்து கண்களை நிறைக்கிறான். இந்த MBA என்றேனும் அந்தக் கதையை தமிழிலேனும் படிக்க வாய்ப்பு உள்ளதா?

இனி இந்தப் புத்தகத்தில் ABOUT LOVE கதையைப் படித்து சிறிது வெளிச்சத்தைக் குப்பைக்குத் தள்ளுவதோ கோபுரத்தில் வைப்பதோ உங்கள் பாடு.