08 February 2011

நிகழ மறுத்த அற்புதம் - பிரமிள்

பிரமிள்
நன்றி: பிரமிள் கவிதைகள் பின்னட்டை: லயம் வெளியீடு

 

நிகழ மறுத்த அற்புதம்

பொய்யின் கூன்முதுகில்
விட்டெறிந்த மண்ணுருண்டை
மோதிச் சிதறிற்று பட்டாபிஷேகம்.
மண் வளர்ந்து
கானகப் பாதையாயிற்று...
நகர் நீங்கி நெடுந்தொலைவில்
எதிரே,
முலைமொக்கு குத்தி நிற்க
கூனிக் கிடந்தது ஒரு கிழவிப் பாறை.
அகலிகையும் கூனியும்
ஆத்மா கலந்துறைந்து
கல்லாயினரோ?

என்றோ ஒரு நாள்
தனது விளையாட்டுச் சிறுபாதம்
அறியாது மிதிக்க –
அற்புதம்! –
ஒருகல்
துயில் கலைந்தெழுந்த்து!

பழைய கருணையை
பரிசோதித்துப்
பார்ப்போமென்று
இன்றிக்கல்லை
வேண்டுமென்றே இடறி
நின்று
கவனித்தான்.

கல்லில் கலந்து நின்ற
கூனியின் பாபமோ
கந்தல் வரலாறு
கருணையின் பாதியை
நழுவவிட்ட காரணமோ
அற்புதம் நிகழவில்லை.
மிஞ்சியது
இடறிய கால் விரலில்
ஒரு துளி ரத்தம்.
கால் விரல் வலித்த்து
கருணை கலைந்தது.
த்ச்என்றான்
மனிதன் ராமன்.

வழி நடந்தது
அவதாரம்.

*
(1976)

நன்றி: அடையாளம்.