06 May 2011

சரக்கல்ல லேபிளே சாரம்!

விமலாதித்த மாமல்லன் கதைகள் என்கிற புத்தகம் ஏன் அப்பெயரைத் தாங்க நேர்ந்தது? 

சிறுகதை நெடுங்கதை, குறுநாவல் என வெவ்வேறு வடிவங்கள் கொண்ட கதைகளை உள்ளடக்கியதால் ’கதைகள்’ என்கிற பொதுத் தலைப்பைக் கொண்டு வெளியாயிற்று. 

பதிப்பகத்தார், விற்பனையாளர்களின் அறிவிப்பில் ஆன்லைன் வகைப்படுத்தலில் ’கதைகள்’ என்று பொது வகை ஒன்று இல்லாத காரணத்தால் சிறுகதைகள் என்கிற வகைப்பாட்டில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. எனவே அனைத்தும் சிறுகதைகளாகிவிட்டன. போதாக்குறைக்கு ஒவ்வொரு கதைக்கு எதிரிலும் சிறுகதை நெடுங்கதை குறுநாவல் என லேபிள் போடாதது ஒரு குறை என்பது இப்போதுதான் உறைக்கிறது.

பெரியவர்கள், முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள், சோழிகள் இவை மூன்றும் குறுநாவல்கள்.

பெரியவர்கள் - 1982 
ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்கள், ஒரு நாளின் நிகழ்வுகள் மற்றும் பிரச்சனையின் பின் கூறுகள் எனப் பல பகுதிகளாய்க் கூறப்பட்ட கதை.

கணியாழி நடத்திய முதல் குறுநாவல் போட்டியில் பரிசு வென்றும் பத்திரிகையில் அல்லாது புத்தக வடிவில் படிக்கும் புதிய வாசகனுக்கு குறுநாவல் என லேபிள் ஒட்டினால்தான் அது குறுநாவல் என நினைவில் தங்குமா என்ன? 

முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் - 1986
பகுதி ஒன்று - இலக்கிய ஆர்வமுள்ள ஆரம்ப எழுத்தாளன். அவன் இயங்கும் சிறு பத்திரிகை இலக்கிய முற்போக்கு இயக்கங்கள் சார்ந்த அந்தக் காலத்தைய சூழல், 99% இலக்கியவாதிகளைப் போல அவனுது குமாஸ்தா ஜீவனோபாயம். குடிமகன் - இலக்கியவாதி - அரசு ஊழியன் - பொது வாழ்வு குறித்த மூவருக்குமான கருத்துரிமை வெளியீட்ட்டின் வரையறுக்கப்பட்ட எல்லைகள்.

பகுதி இரண்டு - யாரோ எழுதிய கதைக்கான அறிமுக முன்னுரை.

பகுதி மூன்று - ஒருகாலத்தில் இயக்கவாதியாக இருந்த யாரோ ஒரு எழுத்தாளன் எழுதிய, நெருக்கடி நிலை காலத்தில் எழுதப்பட்டதாக இருக்கலாம் என யூகிக்கக் கூடிய சாத்தியக்கூறுகளைக் கொண்ட ஜனநாயக அரசின் போலி கோஷ புரட்டல்களின் பின்னணியில் இருக்கும் அதிகார நசுக்கலை அம்பலப்படுத்தும் நையாண்டி வகையிலான ஒரு சிறுகதை. அந்தக் கதையின் பாத்திரங்கள், நிகழ்வுகள்.

பகுதி நான்கு - கதைக்குள் ஒரு பகுதியாய் வரும் சிறுகதையை எழுதிய எழுத்தாளனின் துல்லியப்படாத மூட்டமான மூன்று நிலைகள். தீவிர குழு-இயக்கம் சார்ந்து முனைப்புடன் இயங்கிய நாட்கள். நெருக்கடி நிலையில் சந்திக்க நேர்ந்த இடர்பாடுகளால் உண்டான குழுவின் சிதைவு. இயக்கத்திலிருந்து வெளியேற்றம் அல்லது விலகல். வெறும் போதையாளனாகி வீழ்ந்ததை மறுபரிசீலனை செய்யப் போய் திரும்ப எழுந்து நிற்பதற்கான நம்பிக்கையின் முனை முளைவிடுதல்.

வேறு வேறு மனப்போக்குள்ள வெவ்வேறு காலகட்டமும் சூழலும் கருத்துச் சாய்வுகளும் கொண்ட இரண்டு எழுத்தாளர்கள், கதாபாத்திரங்களாக இயங்கும் ஒரு கதை

இவ்வளவு பகுதிகள் கொண்ட ஒரு கதை ’குறுநாவல்’ என்கிற லேபிள் இல்லாததால் ‘சிறுகதை’ ஆகிவிட்டது பொலும்.

சோழிகள் - 1994
இதைக் குறுநாவல் எனக் குறிப்பிடுவதில் யாருக்கும் எந்த குழப்பமும் இருக்காது என்றே தோன்றுகிறது.

எழுதி, பெயரை இருத்திக் கொள்வது அல்ல, எழுதியதை இருத்திக் கொள்வதே பெரும்பாடாக இருக்கும் போல இருக்கிறதே!

இருப்பைச் சொல்லிக் கொண்டே இரு இல்லையேல் காணாமல் போவாய்!

சிறுகதை, குறுநாவல் என வகைப்படுத்தாமல் கதை என்று சொன்னால் கெளரவக்குறைவாக ஒலிக்க ஆரம்பித்தது எப்போதிருந்து? ஏன் இப்படி ஆகிப்போனது? ஒட்டப்பட்ட லேபிளில்தான் இருக்கிறது போலும் இலக்கியத்தின் அந்தஸ்து.

சரக்கல்ல லேபிளே சாரம்.