30 May 2011

ஹைஜெம்பும் லாங்ஜெம்பும்

ந. முருகேசபாண்டியன்

மேடைப் பேச்சுகள் கட்டமைக்கும் அரசியல்

உயிரோசை 17 - 05 - 2011
நன்றி


இன்றைய தலைமுறை கேள்விப்பட்டிருக்கக்கூட வாய்ப்பற்ற, அரசியல் மேடைப்பேச்சுகள் பற்றிய நிறைய சுவாரசியமான தகவல்கள் கொண்ட கட்டுரை.

முருகேச பாண்டியன், சமயவேலின் நெருங்கிய நண்பன். சமயவேல் சென்னையை விட்டுக் கிளம்பியதும் இவன் வந்து சேர்ந்தான். நானும் ஈரோடு போய்விட்டு வந்திருந்த நேரம். 83-84. நிறைய நாட்கள் ஒன்றாகத் திரிந்திருக்கிறோம்.

ஷேவ் பண்ணினால் ஆஃப்டர் ஷேவ் லோஷன் போடவேண்டும் என்பதை இவன் மூலமே அறிய நேர்ந்தது. தாடியுடனேயே பிறந்தவனாய், கடவுள் போலவே பிளேடின் மேலும் நம்பிக்கையற்றுத் திரிந்து கொண்டிருந்தவனுக்கு அது ஒரு அவசியமற்ற தகவலாக இருந்தும், வார்த்தை தடித்து சண்டையாகி முகம் திருப்புகையில் மனதிற்குள் ஆஃப்டர்ஷேவ் லோஷன்லாம் உபயோகிக்கும் இவனெல்லாம் கம்யூனிஸம் பேசுகிறான் எனத் திட்ட வாய்ப்பாய் இருந்ததால் தகவல் மனதில் தங்கிப் போனது. சண்டை போட்டுக் கொண்டு நான்கு நாட்கள் பார்க்காமலும் பேசாமலும் இருந்திருக்கிறோம். அப்புறம் நானே அவனது அறையைத் தேடிப் போனபோது “ஏய் ஒனக்கு தாம்ப்பா நெஜமாவே மனுஷங்க வேண்டி இருக்கு. அதனாலதான் எவனும் வேணான்னு எப்பவும் சொல்லிகிட்டு இருக்கியோ” என்றான்.

2000-2002ல் நான் திருச்சியில் இருக்கையில்,மாமல்லன் இப்ப இலக்கியத்துலையே இல்லை யாரையும் பாக்கக்கூட விரும்பலைனு சொல்லிகிட்டு இருக்கான் என்று கேள்விப்பட்டிருக்கிறான். நான் போய் பாக்கறேன் என்கிட்ட அவன் சொல்றானா பாப்போம் என்று நேரிலேயே தேடி வந்து விட்டான். மதிய உணவின் போது, எதைப் பற்றியோ படபடப்பாகப் நான் பேச, இன்னும் அப்பிடியே பரபரப்பாவே இருக்கியே வயசு கூட அமைதி நிதானத்தைக் குடுக்கலியே என்றான். ரொம்பப் பெருமையாக இருந்தது.

இப்போது பார்த்து இன்னமும் அதையே சொன்னால் ஜென்மசாபல்யம். ஒரே வித்தியாசம் இளமையில் எனக்கு முன்னால் கோபம் மட்டுமே போய்க் கொண்டிருந்தது. இப்போது அதற்கும் முன்னால் வயிறு போகத் தொடங்கி இருக்கிறது. முருகேசபாண்டியன் போன்ற இல்லாதவர்கள் அதை வாங்கிக் கொண்டால் போதும். வாழ்க்கை பற்றிய எந்தக் குறையும் இல்லாமல் இன்னும் எகிற வாகாய் இருக்கும். கோணங்கி சமயவேல் போலவே என்னைவிடவும் கிழம். ஆனால் இன்னும் அகலமாகியும் பழைய நெட்டை ஷோக்கனாகவே இருந்து வயிற்றெரிச்சல் கிளப்புகிறான். ஆறடி உயரம் இருப்பவனெல்லாம் ஹைஜெம்பு லாங்ஜெம்பு என்று போகாமல் என்ன கொட்டிக் கிடக்கிறதென்று இலக்கியத்திற்கு வருகிறார்கள்?

84ல் ஒரு நாள் மாலை தேனாம்பேட்டை அலுவலகம் வந்தவன், அருகிலிருந்த  அன்றைய தினத்தந்தியை எடுத்து,சத்தியத்துல இந்தப் படம் போட்டுருக்காம்ப்பா இன்னிக்கிதான் கடைசிநாள் போலாம்” என்றான். இரண்டாவது காட்சி பார்க்காமல் இரவு கழியாத எனக்கும் எதுவாய் இருந்தால் என்ன என்றே தோன்றியது. அப்புறம்தான் சொன்னான், அந்தப் படம் போக அவனுக்கு உந்துதல் அன்னா கரீனின் என்று. அப்போது அவன் படித்துக் கொண்டொருந்த டால்ஸ்டாயின் நாவல் அது. அந்த நாவல் போலவே இந்தப் படத்திலும் கதாநாயகி ட்ரெயின் முன் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள். இது போதாதா ஜிங்கு ஜிங்கென்று இலக்கிய ஆர்வத்தில் குதிக்க.

படம் ஆரம்பித்தது. கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால் அன்னா கரேனின் நாவலை திரைக்கதையாக எழுதி வைத்துக் கொண்டு இவளே கதாநாயகியாய் நடிக்க வேண்டும் என்று இளமை மாறாத, தனியாகக் கோட்டைக்குள் வாழும் ஒரு பழைய நடிகையின் பின்னால் அலையும் இயக்குநராகத் துடிக்கும் ஒருவனின் கதை. அல்ல அந்த நடிகையைப் பற்றிய கதை. இல்லையில்லை, அவளது....

ஐ ஐ கடைசிவரை கதையைச் சொல்லி, கெடுத்துக் குட்டிச்சுவராக்க நான் என்ன எனக்குப் பிடித்த நூறு எனக்குப் பிடித்த ஆயிரம் என்று எழுதி புக்கு கணக்கை ஏற்றும் எழுத்தாளனா? இல்லை இணைய சினிமா விமர்சக மேதையா? சினிமாவின் ஒருதலைக் காதலன்தானே! படத்தைச் சொல்வது அல்ல பார்க்க வைப்பதே என் வேலை பார்ப்பதும் பார்க்காததும் உங்கள் இஷ்டம்.