29 May 2011

உண்மையின் பன்முகத்தன்மை

நஹி நஹி ரக்ஷகி

-விக்ரமாதித்யன்

’அஸ்வினி’யில் ப்ரூப்-ரீடராக நான் வேலை பார்த்தபோது, நண்பர் ஞாநி அங்கே துணையாசிரியராக இருந்தார்; அப்போதெல்லாம் அவரைத் தேடிக்கொண்டு வருவார் இளைஞர் ஒருவர். ஒரு நாள் சிறுகதை ஒன்றை எழுதிக் கொண்டு வந்தார்; படித்துப் பார்த்துவிட்டு அபிப்ராயம் சொன்னேன். புதுமைப்பித்தன், கு.ப.ரா, மெளனியெல்லாம் படித்திருக்கிறீர்களா என்று விசாரித்தேன். சிறுகதை எழுதுகிற ஒவ்வொருவரும் இவர்களைப் படிக்காமல் இருக்கக்கூடாது என்று சொன்னேன். இப்படி அறிமுகமானவர்தான் விமலாதித்த மாமல்லன்.

என் அமைதியான சுபாவமும் அவருடைய பரபரப்பான இயல்பும் நேர் முரணானவை; என்றாலும், இதுதான் எங்கள் நட்பை நெருக்கமாக்கியதோ என்றுகூடத் தோன்றும். தனது ஒவ்வொரு சிறுகதையையும் அவர் கையெழுத்துப் பிரதியிலேயே படிக்கத் தருவது வழக்கம். நான் எப்போதுமே உண்மையான அபிப்ராயத்தைச் சொல்வேன். தொடர்ந்து அவர் நிறைய எழுதி வந்தார். நாலு வருஷங்களிலேயே தொகுதியும் வெளியிட்டார்.

அவருடைய ’அறியாத முகங்கள்’ சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா நடந்து முடிந்த அன்று; Party தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். நண்பர் வித்யாஷங்கர், மாமல்லன், நான் மூவரும் பேசிக்கொண்டே ராயப்பேட்டைப் பக்கம் வந்தோம்.

அரை பாட்டில் பிராந்தி வாங்கி உணவு விடுதிக்குப் போய்ச் சாப்பிட்டோம். இரவு பதினோரு மணி இருக்கும். வெளியே வந்தால், சிறு தூரல். மழை வருமென்று நினைத்து ஒரு கடைப்பக்கமாக ஒதுங்கினோம்.

எதிரேயுள்ள ஓட்டு வீடுகளுக்கு அப்பால் ஒரு பெரிய மரம்; பின்புலத்தில் வானம். அந்தக் காட்சி அப்போது புதுமையாகப் பட்டது.

எப்போதுமே எனக்குத் தருணங்களைக் கவிதையாக்கிப் பார்ப்பதில் ஓர் ஆர்வம் உண்டு. அந்த மிதமான போதை, அந்தச் சூழல், மூவரின் இருப்பு எல்லாவற்றையும் இணைத்து எழுதத் தோன்றியது. நான் சொல்லச் சொல்ல நண்பர் வித்யாஷங்கர் எழுதினார். கவிதை கொஞ்சம் நீளமாக இருந்தது; மாமல்லன் வாங்கிப் பார்த்தார்; மரம் பற்றி எழுதி இருப்பதுதான் முக்கியம் என்று, மற்றதை எடிட் செய்து தந்தார். தலைப்பு ஒன்றும் தோன்றவில்லை; வித்யாஷங்கரிடம் கேட்டேன். ஜி.வி.ஐயரிடம் ‘ஆதிசங்கரா’ படத்துக்கு உதவி இயக்குநராக இருந்தவர் அவர். நஹி நஹி ரக்ஷகி’ என்று தலைப்பு வைத்தார். இப்படி உருவானதுதான் இந்தக் கவிதை.

நஹி நஹி ரக்ஷகி

நாட்டு ஓடுகள் வேய்ந்த
வீடுகளுக்கு மேல்
தலையை மட்டும்
காட்டிக்கொண்டு நிற்கிறது
அது
என்ன மரம்
போதையில்
புலப்படப் போவதில்லை
வெறிச்சோடிய
வானம்
நட்சத்திரம்
எதுவுமின்றி தூறலுடன்.

- ’உள்வாங்கும் உலகம்’, பக்கம் 42

”நஹி நஹி ரக்ஷகி
டுகுரங் கரனே”

ஸ்ரீ ஆதிசங்கரர், வித்யா வாஸஸ்பதியின் மாணவனான தோடகனின் பாடலைக் கேட்டுச் சொன்னது.

பொருள்: இலக்கணம் ஒருபோதும் காப்பாற்றுவதில்லை.

இந்தக் கவிதையின் மூலத்தை இன்னும் வைத்திருக்கிறேன். மாமல்லன் மையப் பகுதியை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை வெட்டி எறிந்துவிட்டாரோ என்று எனக்கு ஒரு சந்தேகம்; ஆனால் அது அப்போது எனக்குப் புதுசாக இருந்தது என்பதால் ஏற்றுக் கொண்டேன்.

நான் தருணங்களைக் கவிதையாக்கியது முதன்முதல் இதில்தான். அந்த மரம், சூழலைக் கவிதைக்குள் கொண்டு வந்துவிட்டேன் என்பதுதான் எனக்கு இப்போதும் பெரிதாகப்படுகிறது. நிறையப்பேரின் கவனத்தை ஈர்த்தது இது.

*****
விக்ரமாதித்யன் எழுதி, இந்த சம்பவம் ஏற்கெனவே புத்தகத்திலும் வெளியாகி இருக்கிறது என்பதை அறியாமல் Tuesday, March 1, 2011 அன்று நான் எழுதிய பதிவிலும் இதே சம்பவம் என் கோணத்தில் பதிவாகி இருக்கிறது. ஒரே சம்பவம். அவரவர்க்கு முக்கியமானதை அவரவர் பாணியில் பதிவு செய்திருக்கிறோம். நம்பி அந்த காலத்தில் அடிக்கடி உபயோகப்படுத்திய தொடர் உண்மையின் பன்முகத்தன்மை. அவர் கவிதையில் இந்தத் தொடர் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை.


இந்தப்பதிவில் நஹி நஹி ரக்ஷதி என்கிற விக்ரமாதித்யனின் கவிதை யாரிடமேனும் இருக்குமா எனக் கேட்டதற்கு, ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அனுப்பி உதவிய பத்மஜா நாராயணன் அவர்களுக்கு நன்றி.

அறியாத முகங்கள் வெளியீட்டு விழா பற்றிய பதிவு

இலக்கியத்திற்கு விளம்பரம் தரமான எழுத்து