24 May 2011

மன்னிக்க வேண்டுகிறேன்!

நான் எப்போதும் ஆன் லைனிலேயே இருப்பேன். கூகுள் சாட்டில் எனது ஸ்டேட்டஸ் எப்போதும் பிஸி என்றே இருக்கும். ஆனாலும் எப்போதும் கணினி முன்பாகவே உட்கார்ந்திருப்பேன். ஏனெனில் நான் ஒரு எழுத்தாளன். இலவச உதவி மையம் போல, இருபத்துநாலுமணி நேரமும் தமிழ் சமூகத்திற்கு சேவை செய்யவே கடவுள் என்னை உருவாக்கி அனுப்பி உள்ளார்.


tomadrasdada@gmail.com
dateTue, May 24, 2011 at 4:38 AM
subjectChat with                 @gmail.com
mailed-bygmail.com

hide details 4:38 AM (14 minutes ago)
4:33 AM           : குட் மார்னிங் சார். அன்னிக்கு கொஞ்சம் அவசரமா புறப்பட வேண்டியதா போயிடுச்சு.
4:34 AM me: :) அது ஓகே!
          : குல்லா கதை மிக அருமை. (இப்பவும் 'இலை'தான் எனக்கு #1)... குட்டிசாத்தான் பத்தியும், அதைப் பிடிக்கிறதைப் பத்தியும் அருமையா விவரித்திருந்தீங்க. அது முழுக்க முழுக்க கற்பனையா... இல்ல அப்படி எதுவும் மாந்த்ரீக கதை உண்டா...
4:37 AM இப்படி அதிகாலையில மொக்கை கேள்வி கேக்கறானேன்னு திட்டிகிட்டே பதில் எழுதறீங்களோ? :))))))))))
4:38 AM me: இப்பவேக் கூட எழுதிக்கிட்டு இருந்தவன் அப்படியே தூங்கிட்டேன். ஓவர் ஏஸி குளிர்ல, முழிப்பு வந்த்டுடுச்சி. சூசூ போய்ட்டு பொண்டாட்டி கிட்டப் படுத்துக்கலாம்னு போய்கிட்டு இருக்கேன். காத்தால ஆஃபீஸ் போகணும்:))) )))))
         : நீங்க உங்க பணியை தொடருங்க.... நான் அப்புறமா வர்றேன்....
  ஐ மீன்.... தூக்கத்தை தொடருங்க சார்
  :)
 me: நன்றி:))))))))))))))

இதை அதீத பந்தா காட்டுவதாய் தயவு செய்து நினைக்க வேண்டாம். அப்படி நினைத்து யாரும் என்னை சீந்தாமல் / சீண்டாமல் போய்விடவும் வேண்டாம். இருப்பதே ஓரிருவர் அதையே ஒரு லட்சமாய் நினைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

மாத்வர்களுக்கான மடங்களில் ஒன்றான உத்திராதி மடத்தில் காரியங்கள் செய்யும் ஆச்சாரியார் (மாத்வர்களுக்கான புரோகிதர்) தானம் கொடுக்க வேண்டி வரும் நேரங்களில் (மராட்டி அல்லது கன்னட கஸ்டமரின் பாஷையில்) இப்படிச் சொல்லுவார்.

ஒரு ரூபா காயினை எடுத்துக் கொள்ளூங்கள்

இட வல நெற்றிகளில் ராகவேந்திர சுவாமிகள் போல் சந்தன மற்றும் கரியில் சாப்பா (முத்திரை) குத்திக் கொண்டு எதிரில் உட்கார்ந்திருப்பவன் கையில் ஆச்சாரியார் தம்மிடமிருந்தே ஒரு ரூபாயை எடுத்துக் கொடுப்பார். அவன் அதை பூமியை நோக்கிப் போடுவது போல நீட்டியபடி, அருகில் பஞ்சபாத்திரத்தில் இருக்கும் நீரை உத்தரிணியில் இருந்து இடது கையால் எடுத்து (உத்தரிணி என்பது நெய்க் கரண்டிபோல குட்டியாக செப்பில் இருக்கும். பஞ்சபாத்திரன் நெய் வட்டில் போல என்று வைத்துக் கொள்ளவும்) ) வலது கையில் இருக்கும் நாணயத்தின் மேல் விட்டபடி அதைத் தரையில் போட வேண்டும்.

அடுத்து அவர் சொல்லும் வாக்கியம்தான் முக்கியம்.

”ஒரு லட்சத்தியொரு வராகன்” 

பசு கன்று எனப்பல தானங்களுக்கும் அந்த ஒரு ரூபாய்க் காயினே அடுத்தடுத்து உருமாறி நனையும்.

அது போல ஒரு வாசகநண்பர் எந்த நேரத்தில் சாட்டில் வந்தாலும் ஓஹோவென்கிற மகிழ்வோடுதான் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. எழுத்தாளனுக்கு எவரும் ஒரு லட்சத்தி ஒரு வராகன்தானே!

இது பரிகாஸமல்ல, பல தருணங்களில் இதுவே பெரும் உதவியாகவும் இருக்கிற விஷயம். ஒருபோதும் நம் பிழை, அடுத்தவருக்குத் தெரிவதுபோலத் துல்லியமாய் நமக்குத் தெரிவதே இல்லை. இவரேதான் இரண்டு நாள் முன்பாக சிறுமி கொண்டு வந்த மலரில் ஒரு இடத்தைச் சுட்டினார். 


அந்த சேட்டுக் கடை இருக்கற வீதியை பற்றிய வர்ணனையில ஓரிடத்தில....
 me: புக்கும் கைல வெச்சிருக்கேன்
8:18 AM             : பசுகிட்டயிருந்து கோமீயத்தை .......
 me: ஆமா
            : ஒரு புரோகிதர்.... உத்தரணியில பிடிக்கிற மாதிரி எழுதியிருப்பீங்க...
  அது சின்ன உறுத்தலா இருந்தது
 me: சரி
           : யாரும் கோமீயத்தை நேரடியா உத்தரணியில பிடிப்பாங்களா... சொம்பு... அல்லது ஏதாவது பாத்திரத்திலதானே பிடிப்பாங்க
 me: நல்லா திரும்பப் படிங்க்
8:19 AM          : அப்படின்னு தோணினது
 me: முழுசா
         : ம்ம்
 me: அதுலதான் விஷயமே இருக்கு சாமி
        : ம்ம்
 me: அந்தப் புரோகிதர் யாரு?
        : ஓஹ்ஹ்ஹ்ஹ்
8:20 AM 

அங்க தவற விட்டுட்டேனோ 

அவர் தவறவிடவில்லை. விட்டது நான். பெரிய மனதுடன் போனால் போகிறது என விட்டது அவர்தான்.

1984ல் சிறுமி கொண்டுவந்த மலர் எழுதுகையில் நான் தீவிர நாத்திகன் (விதியில் மட்டும் நம்பிக்கை இருந்தது) இன்று சாஷ்டாங்கமாய்க் கோவிலில் விழுந்து கும்பிட்டாலும், திவசம் போன்ற சடங்குகளில் என்றுமே நம்பிக்கை இருந்ததில்லை, எனவே கடைபிடிப்பதில்லை என்பது வேறு விஷயம். 

அப்பா இறந்தது,  நான் தெருக்கூத்து கற்றுக் கொள்ள மதுரை சென்றிருந்த பத்து நாள் இடைவெளியில். எனவே கொள்ளி போட்டது என் கடைசி மாமன். அப்பா இறந்த இரண்டாம் நாள் சேதி கிடைத்து மூன்றாம் நாள்தான் வந்து சேர்ந்தேன். ஆகவே மாமனே, ஐஸ்ஹவுஸ் கிருஷ்ண தீர்த்தத்தில் காரியம் செய்ய, தொட்டுக் கொடுப்பதே என் ’காரியமாக’ இருந்தது. 21வயது காரணமாகவும் நாத்திகன் என்பதாலும் அதற்கே, அந்தத் தொட்டுக் கொடுத்தலுக்கே, இதைச் செய்ய மாட்டேன் அதை செய்ய மாட்டேன் என்று அம்மாவின் மனதை நோக அடித்து இருக்கிறேன். மூர்க்கப் பிடிவாதத்தில் மோகம் கொண்டு அலைந்த நாட்கள். பிறவி வாசனை போல இன்னும் பின் தொடர்கிறது சற்றே குறைந்த வீரியத்துடன்.

ஆகவே, சிறுமி கொண்டுவந்த மலர் எழுதிய 84க்கு சில வருடங்கள் முன் 81ல் மனம் ஒன்றாமல் செய்த ’காரியத்தின்’ தேசலான நினைவு எனினும், என்னதான் திவசப்ரோகிதர் என்றாலும், மாட்டின் கோமியத்தை, தேக்கரண்டியிலா பிடிப்பார்? பஞ்ச பாத்திரம் (செம்பினாலான சிறு பாத்திரம்) என்று எழுதுவதற்கு பதில் அதோடு ஜோடியாய்க் கூடவே இருக்கும் தேக்கரண்டியின் பெயரை ‘உத்தரிணி’ என்று எழுதித் தொலைத்திருக்கிறேன். இது எழுத்துப் பிழையோ விடுபடலோ அன்று. பஞ்சபாத்திரம் / பஞ்சோத்ரம் / பஞ்சோத்திரை என்பது உத்தரிணியாக மனதில் பதிந்த பிழை. 

இந்தத் தவறு இதே நண்பரோடு நேற்றைக்கு முந்தினநாள் சாட் செய்யும் போது அவர் சுட்டிகாட்டியும் உறைக்கவில்லை. இப்போது அவருடன் நடந்த இன்றைய அதீத காலை சாட் உரையாடலைக் கிண்டலாக எழுத முற்படும்போதுதான் பிடிபடுகிறது. 

என் தவறை தமிழ் இலக்கிய சமூகமும் தப்பும் தவறுமாக எழுதுவதையேத் தவமாகக் கொண்டிருக்கிறார் என்று என்னால் படுத்தப்படும் ஜெயமோகன் அவர்களும்

க்ஷமிக்கணும்.

பிரதியுடன், முந்தைய புத்தகத்துடன் ஒற்றைக்கொருவனாக ஒப்பீடு செய்ததில் வேறு, சில விடுபடல்கள் மற்றும் ப்ரூஃப் பார்க்கத் தெரியாமையால் நேர்ந்த சில பிழைகள் உருவாகி இருக்கின்றன. உதாரணமாகக் ‘குல்லா’வில் 

<மலிவாய் கிடைத்திருந்த மாளிகையைப் புறநகர்ப் பகுதியில் பிடித்துப் போட்டு வைத்திருந்தார் அப்பா>

<தந்தையைப் பதவியில் உயர்த்திய வீடு தமையனைத் தரணியாள வைக்கப்போகிறது>

அர்த்தப்படி பார்த்தாலே <தனையனை> என்பதுதானே சரி. (தாயைக் காத்த தனையன்) இந்தப்பிழை உயிர்த்தெழுதல் புத்தகத்திலேயே இருக்கிறது. அப்படியே இந்த முழுத் தொகுப்பிலும் உட்கார்ந்திருக்கிறது.

கண்டுபிடித்த நிறைய எழுத்துப் பிழைகளைக் குறித்து வைத்திருப்பதாய் சாட்டில் ஒருமுறை கே.வி.ஆர் கூறினார். 

முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் கதையில் முக்கியமான சில விடுபடல்கள் தொகுப்பில் இருக்கின்றன. அவற்றைக கண்டுபிடித்ததே அழியாச்சுடர்கள் தளத்தில் திரும்பப் படித்த போதுதான். 

அத்துனைப் பிழைகளையும் அடுத்த பதிப்பில்தான் சரி செய்ய வேண்டும். 

அடடா பதினாறு வருடம் விடுப்பில் இருந்தவனுக்கும் கூட அடுத்த பதிப்பு பற்றி என்னவொரு நம்பிக்கை.

பி.கு: சாட்டில் வந்த நண்பருக்கு என் சிரம்தாழ்ந்த நன்றி. அவர் செய்த உதவிக்கு அவர் பெயரைக் குறிப்பிட்டு நன்றி சொல்வதே சரி. அதற்கு அவர் அனுமதி அளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இன்னும் ஒன்றரை மணி நேரமேனும் தூங்கப் பார்க்கிறேன். நல் இரவு/காலை.