21 May 2011

காணாமல் போன கவிதை

தீப்பிடிக்காத வயர் என ஒரு விளம்பரம் தொடர்ச்சியாய் வந்து கொண்டு இருந்தது. அதில் கோடவுன் போன்ற பின்னணியில் ஒண்டக்கிடைத்த இடத்தில், வேலைக்காரி போன்ற தோற்றத்தில் இருக்கும் பெண் ரொட்டி சுட்டுக் கொண்டிருப்பாள். பக்கத்தில் பையன் பள்ளிப்புத்தகம் படித்துக் கொண்டிருப்பான். ரொட்டி சுடுகையில் அவள் கையயும் அவ்வப்போது சுட்டுக் கொள்ளுவாள், சுட்ட கையை ஊதி விட்டுக் கொண்டபடி அவள் இரவு உணவு தயாரிப்பில் ஈடுபட்டிருப்பாள். 

படிப்பிற்கு இடையில் இதை கவனிக்கும் பையன் சட்டென எழுந்திருப்பான். எங்கோ போகிறானே என தாய் அழைப்பாள். அவன் சட்டை செய்யாமல் சற்றுத் தொலைவில் கிடக்கும் ஒரு வயரை எடுத்து இரண்டாக மடித்துக் கொண்டுவந்து தாயிடம் கொடுத்துத் திரும்ப புத்தகத்தைத் திறந்து கொள்வான். ஆச்சரியத்துடன் தாய் அதை சட்டுவமாக உபயோகித்து கையில் சூடு படாமல் ரொட்டி சுடுவாள். பிறகு பையன் ரொட்டி சாப்பிடுவதைத் தாய் பார்த்துக் கொண்டிருப்பாள். அவளது கண்களில் பையனின் புத்திக்கூர்மை குறித்த பெருமிதம் பாராட்டுணர்வு அவளது எதிர்காலம் குறித்த நம்பிக்கை என என்னென்னவோ தெரியும்.

எங்கள் வயர் தீப்பிடிக்காது என்பதை மட்டுமேவா சொன்னது அந்த விளம்பரம்?

இந்த கவித்துவம் பார்த்து, பார்க்கும் ஒவ்வொரு முறையும் தொண்டை அடைக்கக் கசிந்திருக்கிறேன்.


இன்று அதே விளம்பரம் புதிய படமாக. 

வசதியான உடைகளுடன் பிராமண தம்பதியர் ஹோம குண்டத்தின் எதிரில் அமர்ந்திருக்கின்றனர். குண்டத்தில் நெய் விடவேண்டி இருக்கிறது அம்மாக்காரிக்கு கை சுடுகிறது. அருகில் இருக்கும் அப்பா போலவே புதுப்பூணூலுடன் இருக்கும் சிறுவன் சூட்டிகையாய் ஓடிப்போய் ஒரு வயரை எடுத்துத் திருகிக் கரண்டிபோலாக்கிக் கொண்டுவந்து நெய்யை எடுத்துத் தாயிடம் தருகிறான். 

கிருஹப்பிரவேசத்திற்காக செய்யப்படும் ஹோமமாக இருக்கலாம்.

வியாபாரமே குறி எனினும் முந்தையப்படம் உண்டாக்கும் நெகிழ்ச்சி பார்ப்பவனைப் பரவசப்படுத்தும் அவன் மனதில் ஆழமான தடம் பதித்துத் தங்கும் என்கிற எதிர்பார்ப்புடன் எடுக்கப்பட்டிருந்த கலாபூர்வமான படைப்பாய் இருந்தது. நினைத்திருந்தால், வேலைக்காரி என்றைக்கு வயர் வாங்கப் போகிறாள் என்று முதலிலேயே அந்தக் கருவைத் தவிர்த்திருக்கலாம். 

தீப்பிடிக்கா வயர் விற்பனைக்கு நேரடி குறி யார்? மத்தியதர வர்க்கமும்,  மேல்மத்தியதர வர்க்கமும்தானே. ஆகவே அவர்களையே நேரடியாய் காட்டிவிடுதல் எளிய வழி. அவர்கள் புத்திசாலிகள் எனவே அந்த வயரையே உபயோகித்தனர். அவர்கள் மகன் கூர்மையானவன் ஓரமாய்க் கிடந்த உபரி வயரை உபயோகிக்கிறான்.

வயர் வாங்க வைப்பதுதான் குறி. எங்கள் வயர் தீப்பிடிக்காதது என்பதுதான் செய்தி.

செய்தி அதனளவில் ஒரு போதும் கலையாவதில்லை. அது சொல்லப்படும் விதத்தில்தான் கலையாகிறது. 

கூடைப்பந்து கம்பத்தின் கூடையிலேயே கடவுள் குந்தி இருப்பதாய் எண்ணிக்கொண்டு குய்யோ முறையோவெனக் கதறியபடி கதைக்குக் கதை எம்பி எம்பித் தொட்டுவிட்டதாய் காலட்சேபம் நடத்திக் கொண்டிருக்கும் கனவானுக்கும் இதில் ஒரு செய்தி இருக்கிறது. செய்தி கலை அல்ல என்கிற செய்தி.

பெயர் தெரியா நல்ல விளம்பரப்படக் கலைஞனொருவன், வியாபார அல்லது புறக்காரண நிர்பந்தம் எதனாலோ கூலிக்கு மாரடித்து இருக்கிறான்.

இதை நினைக்கையிலும் துக்கம் தொண்டையை அடைக்கிறது.