27 May 2011

வார்த்தை தவறிவிட்டாய்...

from                                                 @gmail.com
toவிமலாதித்த மாமல்லன்
dateThu, May 26, 2011 at 10:56 AM
subjectRe: குல்லா
mailed-bygmail.com
signed-bygmail.com
10:56 AM (12 hours ago)

<அன்புள்ள மாமல்லன் ஐயாவிற்கு,>

அய்யையோ ஐயாவா? விட்டால் ஆயா என்றுகூட அழைப்பார்கள் போலிருக்கிறதே!

<உங்கள் பதிவு இன்று காலைதான் பார்த்தேன். சாட்டில் உரையாடிய அன்றே எழுதிவிட்டீர்கள் போலிருக்கிறது... செம ஃபாஸ்ட்தான் நீங்க.>

<செம ஃபாஸ்ட்தான் நீங்க> 30 வருடத்தில் வெறும் முப்பது எழுதினவனுக்கு இப்படி யாராவது ஓஸிகாஜியாக பந்து போட்டால்தான் உண்டு.
<முதலில் ஒன்று சொல்லிக் கொள்கிறேன்... நீங்கள் என் பெயரைக் குறிப்பிட்டு எழுதுவதில் எனக்கு எந்தவித தயக்கமுமில்லை. சொல்லப் போனால் உங்களைப் போன்ற பிரபலங்களின் தளத்தில் குறிப்பிடப்படுவது கசக்குமா என்ன...>

இது இரண்டாவது ஓஸிகாஜி. <பிரபலங்கள்> 

ஆனால்...

<நீங்கள் அப்படியே ட்ரான்ஸ்கிரிப்ட் முதற்கொண்டு வலையில் பதிவது ஒருவித சங்கடம்தான்.>

அதை நானே எழுதிக்கொள்ளவில்லை என்பதை வேறு எப்படித்தான் அறிவிப்பது? எழுத்தாளன் என்றாலே எல்லாவற்றையும் தனக்கு அளிக்கப்படும் விருது வாசகம் தவிர அல்லது அது உட்பட அனைத்தையும் தானே எழுதிக் கொள்பவன் என்பதை சகஜமாய் ஏற்றுக் கொண்டுவிட்டது தமிழ்கூறு நல்லுலகம். எல்லோரும் அப்படி இல்லை எனக் காட்ட ஒரு பேக்காவது இருக்க வேண்டாமா?

<பலரும் படிக்கும் உங்கள் தளத்தில் வெளியாகுமோ என்று நான் தயங்கித் தயங்கி ஜாக்கிரதையாக எழுத வேண்டும்>

தட்டச்சில் கைவைக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய அடிப்படை பொறுப்புணர்வு இது. எழுத்தாளர்களுக்குக் கொஞ்சம் கூடுதலாக இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. 

தமிழிலக்கியத்தில் இன்றென்ன அதிவேக தட்டச்சர் வேலைக்குத் தேர்வா நடந்துகொண்டு இருக்கிறது? ஆம் எனில் உண்மைத் தமிழனிடம் சமகால எழுத்தாளர் ஒருவரேனும் தாக்குபிடிக்க முடியுமா? பேச்சாளர் அடுத்து என்ன பேசுவது என்று நீர் குடித்தபடி யோசித்துக்கொண்டு இருக்கையிலேயே அடுத்து பேசப்போவதை அடிக்கும் அளவிற்கு தட்டச்சுப் பலகையின் எழுத்துக்கள் வேகத்தில் எகிறுமாமே! இன்றைய நிலவரப்படி அலெக்ஸாவில் இலக்கியத்தை அளந்துகொள்ளவும்.

<நினைத்ததை எல்லாம் சுவாரசியமாக சாட்டில் சொல்லும் அளவுக்கு எனக்கு திறமை கிடையாதே... :)>

இது ஒருவகை மனப்பயிற்சிதான். சூவாரசியமான உரையாடல்காரர்கள் - சினிமா பத்திரிகை அரசியல் போன்றவற்றை பிரதிபலிக்காமல், சொல்லும் விஷயத்தை இயல்பாகவே சுவாரசியமாக சொல்லத் தெரிந்தவர்கள், பெரும்பாலும் யதார்த்த வாழ்வின் பாத்திரங்களை, சம்பவங்களைக் கூர்த்த கவனத்துடன் பார்ப்பவர்களாக இருப்பார்கள். வெறும் சுவாரஸியத்தியத்திற்காக அதிலேயே தேங்கி விடாமல் நம்மைத் திறந்துகொண்டாலே போதும்.

<அச்சுபிச்சுவென பேசி அதை எல்லாருக்கும் காட்டிக் கொள்வதா என்ற சங்கடம்தான்... :)>

இதற்கு அநேகமாய் எவருமே விதிவிலக்கில்லை. சாமான்யர்கள் அடிக்கடி செய்வதை சிறந்த எழுத்தாளர்கள் சிலசமயம் செய்வதுண்டு. எடுத்துக்காட்டாய் அசோகமித்திரனின் The acclaimed Tamil writer opens his heart to S. Anand on the experience of being a Brahmin in Tamil Nadu. http://www.outlookindia.com/article.aspx?227027

<மேலும் போயும் போயும் இந்த பஞ்சபாத்திர உத்தரணி மேட்டர்தான் முக்கியமாக கண்ணுக்கு தெரிந்ததாமா இவனுக்கு... க்தையைப் பற்றி ஒண்ணும் சொல்லக் காணோமே என்று இன்னும் மானம் போகும் :)>

என் மானம்தானே! அது வெளியில் போகும் முன் எனக்குப் போனதுதான் முக்கியம். 

சோழிகள் கதையை 94ல் எழுதி முதலில் சுகுமாரனிடம்தான் படிக்கக் கொடுத்திருந்தேன். 80லிருந்தே எனக்கு முதல் வாசகனாக இருந்தவன் ஷங்கர் ராமன்தான். 89லிருந்து 94வரை எழுத முடியாமல் அவஸ்தைப்பட்ட காலங்கள். (89ல் எழுதிய நிழல் - தகுடு லோம்டே 91 காலச்சுவடு மலரில் வெளியாயிற்று) ஷங்கர் ராமனுடனான அன்றாட சந்திப்பு மெல்ல அருகத் தொடங்கி இருந்த காலம். அப்போது சுகுமாரன் குங்குமத்தில் இருந்தான். 

எழுத்தாளர் ஜெயமோகன் தமது 2011 வடகிழக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்கி வரலாற்றில் இடம் பெற வைத்திருக்கும் ’பிரதாப் பிளாசா’ முரசொலிக்கும் பெட்ரோல் பங்கிற்கும் இடையில் அப்போதுதான் ஆரம்பிக்கப்பட்ட நேரமாய் இருக்கவேண்டும். காபி குடித்துவிட்டு ’சோழிகள்’ பற்றிக் கூறினான் சுகுமாரன்.

கதை துங்கபத்திரா ஆறு மாதிரியே அனாயாசமா ஓடுது. 

பூரிப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமலிருக்கப் போராடினேன். குரல் குழைவது என் கண்ணுக்கே தெரிந்தது. ஐந்து வருடம் எழுத முடியாமல் அவதிப்பட்டவன். அதே ட்ரைவ்-இன் அதே மாமல்லன் எழுத உட்கார்ந்தால், எதுவுமே ஒரு பத்திக்கு மேல் தாண்டாது. அப்படி இருந்தவன், ஆறு கதைகள் எழுதி ஒரு குறுநாவல் எழுதி இருக்கிறேன். பாராட்டுகளாய் சில வார்த்தைகளுக்குப் பின், 

பார்த்தசாரதி கோவில் அர்ச்சகர்னு எழுதி இருக்கே பாரு! பார்த்தசாரதி கோவில்ல அர்ச்சகர் ஏது? அங்க அய்யங்கார் பட்டர்தானேப்பா! என்றான். 

குறுகிவிட்டேன்.

’சோழிகள்’ ராயர் கன்னட மாத்வர். மாத்வர்கள் வைஷ்ணவத்திற்கு நெருக்கமான அனுஷ்டானங்களைக் கொண்டவர்கள். ராயரிடம் சகஜமாய் வாதம் பண்ணுபவர் ஒரு பிராமணராக மட்டும் இல்லாது சனாதன வைஷ்ணவராகவும் இருக்க வேண்டும்.அப்போதுதான் ராயரின் வித்தியாசமான எண்னங்கள் வலிந்த மேடைப் பேச்சாக இல்லாமல், இயல்பான கூர்மையுடன் இருக்கும். வித்தியாசமான எண்ணங்கள் உடையவர் ராயர் என்று ஆரம்பத்திலேயே அஸ்திவாரம் போட்டால்தான் பின்னால்வரும் அவரது அலைக்கழிப்பு அர்த்தமுள்ளதாய் இருக்கும். 

ராயருக்கு எதிரிடையாகக் கோர்க்க, கோவிலில் பூஜை செய்யும் பட்டரே சரியான பாத்திரம். அனைவருக்கும் அறிந்தவராக மட்டுமல்லாது ஊரில் அந்தஸ்தும் உள்ளவர் அல்லவா? மேலும் சுயமரியாதை கோஷ்டிக்காரக் கோனாரை, ஜாதீயத்தின் உச்ச பிரதிநிதியான கர்ப்பக் கிரகத்தில் பூஜைசெய்பவர் 

“என்ன ராயரே, மாட்டு வாலைப் பிடிக்க ஓடறானோ கோனாம் பயல்” என்று துச்சமாகப் பேசுவதே பொருத்தமாக இருக்கும்.

ஆமோதித்துத் தலையசைத்தவராய் எதிர்த்திசையில் வாய் நீரைத் துப்பினார் ராயர். 

“இவனைப் போல க்ரஹச்சாரம் பிடிச்ச கிறுக்குப் பயலுக்கெல்லாம் ஏன் சோழி உருட்டறீர். சூனா மானா மீட்டிங்குக்கெல்லாம் போறானாமே இவன், கேழ்விப்பட்டேன்”.

மெக்கானிஸம் மோட்டாருக்கு மட்டுமன்று பிரபஞ்சத்திற்கே அத்யாவசியம்.  ரூப அரூபம் என அனைத்திற்கும் மெக்கானிஸம் உண்டு. அதைக் கண்டுபிடிக்கவே விஞ்ஞானியும் சந்யாசியும் அல்லாடுகிறார்கள் அவரவர் வழியில். 

திருவல்லிக் கேணி, 50கள் காலகட்டம், பார்த்தசாரதி கோவில் மந்தைவெளி எல்லாம் வந்து அதனதன் இடத்தில் அமர்ந்தன. ஆனால் மனதில் உதித்த பட்டர் எழுத்தில் அர்ச்சகர் என்று அய்யராக இருந்தது கண்ணில் பட்டராகவே தெரிந்து கொண்டிருந்தது மெக்கானிக் முதுகில் பட்ட கிரீஸ்கறை போல. 

சுகுமாரனிடம் கொடுத்தது இரண்டாம் முறையாக எழுதப்பட்ட வரைவு என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு அது மூன்று நான்குமுறை இழைக்கப்பட்டது வேறு விஷயம். முழு கதையையும் படியெடுக்கப் படியெடுக்க கோரை மயிர் எண்ணெய்க்கு ஒட்டிக் குழைவதுபோல் படியும். ஒவ்வொரு முறை திரும்ப எழுதப்படுகையிலும் ட்ரைவ்-இன் மறையும். இடக்கை சிகரெட்டின் இழுப்பிற்கிடையில் தள்ளி உட்கார்ந்திருக்கும் வாளிப்பும் தளுக்குகளும் விழித்திரையில் பதியாது. பியரர்களின் கைநழுவி அடிக்கடி விழும் எவர்சில்வர் ட்ரேகளின் கிறீச்சிடும் அதிர்வுகள் வங்கக்கடலுக்கு அப்பாலிருந்து சன்னமாய்க் கேட்கும். 

பாலில் தோய்ந்து எழும் தேனீர் பை சாரத்தை இழக்கிறதா அல்லது பாலுக்கு ஏற்றுகிறதா? செம்புலப் பெயல் நீர்!

94கில் சனி ஞாயிறு பகல் வேளையில் எழுதிக்கொண்டு இருக்கையில் தொலைவில் இருந்த மற்றொரு மேஜையில் பிரசன்னா ராமசாமி மற்றும் அன்றைய இண்டியா டுடே வில்லன் அரவிந்தனுடன் (கதைகள் பிரசுரமாகாமைக்கு, தான் காரணம் இல்லை எனப் பலமுறை காலச்சுவடு அரவிந்தன் கூறிவிட்டார். இருந்தும் சரிசெய்ய முடியாமல் அர்ச்சகர் பட்டராகத்தான் இன்னமும் தெரிந்துகொண்டு இருக்கிறாரே என்ன செய்ய? ’ஒன்றுமே இல்லை’ என அதே காலகட்டத்தில் சற்றுத் தள்ளி எழுதப்பட்ட புத்தக விமர்சனமும் தற்செயலா? உயிர்த்தெழுதல் என்கிற தலைப்பா அல்லது உள்ளே இருந்த முஸ்லீம் பெயர்களா? எதில் இல்லாமல் போனது இலக்கியம்?) 

அதே ட்ரைவ்-இன்னில் ஒரு மதியவேளையில் பிரதான பாதையின் வலதுபுறம் ஆரஞ்சுக் கம்பிகளையொட்டிய மைய மேஜையில் அமர்ந்து வெளியில் சென்றுகொண்டிருந்தவனைப் பார்த்து,

”குல்லா படிச்சேன். மேஜிகல் ரியலிஸம். ரியல் கம்பேக்” என்று முகம் முழுக்க விரவிய சிரிப்புடன் கையுயர்த்தி பாராட்டிய சாரு நிவேதிதாவின் குரல் இன்னும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. இத்துனைக்கும் சுமுகமான இடைவெளியில் இருந்த நேரம் அது.

அன்று அரவிந்தனுடன் ட்ரைவ்-இன்னில் அமர்ந்திருந்த என்னைப் போன்ற இன்னொரு பென்சில் ஜெயமோகனாக இருக்கக்கூடும் என்ற ஆர்வ அனுமானத்தில் பேப்பர் பேனாவை ஒதுக்கி வைத்துவிட்டு அருகில் போனேன். பிரசன்னா ராமசாமியின் அறிமுகத்திற்குப் பின் நான் அங்கேதான் எழுதிக் கொண்டு இருக்கிறேன் என்பது தெரியவர,

இங்கேவா? எப்படி எழுதுகிறீர்கள்? இந்த சத்தத்தில் என்னால் ஒரு வரிகூட எழுத முடியாது, என்றார் ஜெயமோகன். 

என் எல்லாக் கதைகளும் இங்கேயே எழுதப்பட்டவைதாம் என்றேன்.

பெளதீக ரீதியில்கூட எழுதுதல் என்பது ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதம். 

எந்த பசு எந்த செடி எவருக்குத் தெரியும்? பாலில் தேயிலையின் சாரம் ஏறி இரண்டின் சுயமும் முயங்கி புதிதாக தேனீர் ஜனித்ததா என்பதுதான் கேள்வி!

<மேலும்.. அது என்ன 'மன்னிக்க வேண்டுகிறேன்' என்று தலைப்பில் போட்டுவிட்டீர்கள்? அதிகாலையில் உங்களை சாட்டில் தொந்தரவு செய்ததற்கு நான்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் சார். நீங்கள் உங்கள் கதையை கரிசனத்தோடு மெயிலில் அனுப்பிய வைத்ததற்கு சரியாக நன்றி சொல்லவில்லையோ என்று ஒரு உறுத்தல்.>

கரிசனமெல்லாம் ஒன்றும் இல்லை. கதையைப் படிக்கக் கேட்டீர்கள் கொடுத்தேன். சுஜாதா,  ஜெயமோகன் போன்ற பெரிய எழுத்தாளர்களுக்கு வாசக மனதில் கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஒரு மூலையில் தொங்கும் ஒட்டடையில் ஒண்டவேனும் நமக்கும் ஒரு இடம் கிடைக்காதா என்கிற  ஏக்கம்தான். வருடுகிற கைக்கு வாகாக மாடு தன்னிச்சையாகத் தலை உயர்த்துவது இல்லையா அதுபோலத்தான் இதுவும். சொறிதலின் சுகம் என்ன சும்மாவா?

<உங்களை ஆன்லைனில் பார்த்தவுடன் தடாலென கூப்பிட்டு விட்டேன். நீங்கள் நெடுநேரம் செய்தி எழுதுவதாக காட்டிக் கொண்டிருந்தது. அப்பொழுதும் எனக்கு உங்களுக்கு அதிகாலையாக இருக்கும் என்று உறைக்கவில்லை.... (உரைப்பு - சுவை; உறைப்பு - நினைவு; சரிதானே?) பிற்கு நீங்கள் சொன்னவுடன்தான் அடப்பாவமே இந்நேரத்தில் போய் சாட்டில் தொந்தரவு செய்திருக்கிறோமே என்று நினைத்துக் கொண்டேன்.>

சுந்தர ராமசாமியை நான் படுத்திய ’பாவம்’ காலம் கழித்து வந்து என் கதவைத் தட்டுகிறது. 

<ஆகவே.... நீங்கள் பெரிய மனது பண்ணி மன்னித்து விடுங்கள்.>

குறைகளையும் துல்லியமாக சுட்டுபவர்கள் மன்னிப்பல்ல நன்றிக்கு உரியவர்கள்!

<அந்தப் பதிவில் இருந்த நீங்கள் குறிப்பிட்டிருந்த நண்பர் 'நண்பராகவே' இருக்கட்டுமே. அல்ப சந்தேகம் கேட்கும் XXXXXXXX மாற்றி விட வேண்டாம் :))>

ததாஸ்து!

<அடுத்த முறை இன்னும் அழுத்தமான விமர்சனத்தோடு வருகிறேன். நீங்களே வாழ்த்தி பெயரோடு உங்கள் பதிவில் போடுமளவுக்கான தரத்தோடு... >

அந்த விமர்சனத்தில் இந்த நடையின் வாடை வராமல் பார்த்துக் கொள்வதில் இருக்கிறது, எழுத்தின்மேல் உங்களுக்கு இருக்கும் ஆளுமை. 

<அன்புடன்>

என்புடன்.