30 May 2011

ஒன்று போட்டு ஏழு சுன்னம் ஒரு கோடியா!


படித்துப் பாருங்கள். 

ஒரு மூன்றாந்தர எழுத்தாளன், காரமும் இனிப்பும் கலந்து கிடைத்ததென கண்ணீரும் கம்பலையுமாய்க் கற்பனை பிசைந்து களேபரப்படுத்தி எழுதி இருக்கக்கூடிய ஏகப்பட்ட உண்மை அனுபவ சம்பவங்களை அநாயாசமாய் உதட்டோர வறட்டுப் புன்னகையில் கடக்கிறார். கதையல்ல இது அவரது வருங்காலம். இருந்தும் துளி மிகையுணர்ச்சி இல்லை. இதில் மிகப்பெரிய ஆச்சரியம் இவர் ஜெயமோகனின் நெருங்கிய நண்பர் அபிமானி. அ.முத்துலிங்கம் போலவே இவர் இன்னுமொரு ஆச்சரியம்.

இதைப் படித்தபோது 90களின் நண்பரும் (எஸ்.ராமகிருஷ்ணன் எனக்கு இவர் மூலமாகவே அறிமுகம்) பல வருடங்களாய்த் தொடர்பில் இல்லாதவரும் புனே திரைப்படக் கல்லூரியில் கேமரா படித்தவருமான ராம்ஜி ஒரு படத்தின் முதல்நாள் படப்பிடிப்பைப் பற்றிக் கூறியது நினைவிற்கு வந்தது.

போதைப் பொருள் துப்பறிவுத்துறை போலீஸ்காரர் ஒரு கடத்தல்காரனைத் துரத்திக் கொண்டு சென்று கம்பி வேலி உள்ள இடத்தில் கைது செய்ய வேண்டும். இது காட்சி.

போதைப் பொருள் கடத்தல்காரனைக் கம்பி வலை மேல் சாய்த்து அழுத்தியபடி வசனம் பேசுவதுதான் படப்பிடிப்பின் முதல் ஷாட். ஒரு நாள் பூராவும் அந்த ஒரு ஷாட்ட் 22 முறை எடுத்தும் ஓகே ஆகவில்லை. தயாரிப்பாளர் கடுப்பாகி மறுநாள் காலை எடுக்கும் முதல் ஷாட்டில் இது ஓகே ஆகாவிட்டால் படத்திலிருந்து இயக்குநர் நடிகர் இருவரும் மாற்றப்படுவார்கள் என்று அறிவித்தே விட்டார். 

ராம்ஜி என்கிற ராம்நாராயணன் சொன்ன இந்த சம்பவத்திற்கு இணையத்தில் ஆதாரம் தேடினேன் கிடைக்கவில்லை. அவரைத் தேடினேன் அவரும் கிடைக்கவில்லை.

அந்தப் படம் ரிலீஸாகி பேயோட்டம் ஓடி பெரும்புகழ் பெற்று, இன்றுவரை மைல்கல்லாக நிற்கிறது. எந்த இயக்குநரும் நடிகரும் தூக்கப்படுவார்கள் என்று விளிம்பிற்குத் தள்ளப்பட்டார்களோ அவர்கள் இருவருக்கும் சிறந்த இயக்குநர் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார்கள் கிடைத்தன.

ஃப்ரெஞ்ச் கனெக்‌ஷனில் நாயகன் முதல் வில்லன்வரை கதாபாத்திரத் தேர்விலிருந்து என்னவெல்லாம் கூத்துகள் நடந்தன என்பது இயக்குநர் சுகா எழுதியிருப்பது போலவே மிகமிக சுவாரசியமானது. 


அகில உலக சினிமாவிற்கும் அதிர்ஷ்ட கனெக்‌ஷன் அத்தியாவசியம். மூடநம்பிக்கை குறித்து இலவசமாய் ஒரு ட்விட்டு போடும் அளவிற்கு எளிய காரியம் அல்ல. சினிமா கோடிகள் சார்ந்தது. ஒன்று போட்டு ஏழு சுன்னம் போட்டால் கோடி என்பது பள்ளியில் சொல்லிக் கொடுத்தது. ஏழுசுன்னம் எல்ல்லோருக்கும் கோடி ஆகிவிடுகிறதா என்ன? ஆகவேதான் கட்டுரைக்கு இறுதிச் சுன்னமாய்க் கடவுளை வைத்திருக்கிறார் போலும் இயக்குநர் சுகா.