03 September 2011

புகார் மனு போன்றதொரு விண்ணப்பம் [சிறுகதை]

ஐயன்மீர்,

பொருள்: 1986ல் சத்ரபதி வெளியீடாய் பதிப்பிக்கப்பட்டு, இன்று அச்சில் இல்லாது அருகிப்போன, முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மற்றும் பிற கதைகள் என்கிற புத்தகத்தின், (கையில் இருந்த மிகச்சிலப்) பிரதிகளில் ஒன்றை, சுமார் 9 மாதங்களுக்கு முன்னால், படித்துவிட்டுத் தருகிறேன் என்று கொடுத்த வாக்கை நம்பிக் கொடுத்த, அரசு அதிகாரி, தற்போது புத்தகத்தைத் திருப்பிக் கேட்டால், இடையில் நடந்த அன்னா ஹசாரேவின் ஜன்லோக்பால் உண்ணாவிரதப் போராட்ட வரலாற்றுத் தருணத்திற்குப் பின், ஏதேதோ காரணங்களைக் கூறி டபாய்க்கும் ஒரு ஜன் பற்றிய புகார் மனு போன்ற விண்ணப்பம்.

1.அன்னாவின் ஜென் தருணத் திறப்பின் விழிப்புதான் இந்தப் புத்தகத் திருப்பிக்கொடாமை என்பது என் நம்பிக்கை. இது ஊழலில் சேருமா இல்லையா? எவரேனும் தெளிவுபடுத்த இயலுமா?.

2. இதைச் செய்தவர் வான மண்டலத்தை ஆளும் அரசு அதிகாரி அல்ல, மத்தியதரவர்க்கத்தைச் சேர்ந்த சாமானிய ஜன், என்பதால் இது ஊழல் இல்லை என்று ஆகிவிடக்கூடுமா?

3. பிறரின் புத்தகங்களாலேயே, புழுதிபடிந்த எனது நூலகம் எழுந்து நிற்கிறது என்கிற உண்மை காரணமாய் எனக்கு இழைக்கப்பட்டது அநீதியில்லை என்று ஆகிவிடுமா?

4. மேலும் அரசு அதிகாரியான எனக்குப் புத்தகம் கொடுத்த நண்பர்கள் சிநேகிதர்கள் மற்றும் பரிச்சயப்பட்டவர்கள் அனைவரும் எந்த நிபந்தனையும் நிர்பந்தமும் இல்லாமலேயே கொடுத்தனர் எனினும் ’வாங்கிக்கொண்டேன்’ என்கிற ஒரே காரணத்தாலேயே ஊழலாகிவிடக்கூடுமோ?

5.அடுத்தவர் புத்தகங்களைத் திருப்பித்தராது வைத்துக்கொண்டதானது, அறியப்பட்ட வருமானத்திற்கும் அதிகமாய் சேர்க்கப்பட்ட சொத்துக் கணக்கில் வந்துவிடுமோ?

6. கொடுத்தவர்கள் யாருக்குமே, திருப்பாதது பற்றி எந்தப் புகாரும் இல்லை என்ற போதிலும் இதைச் செய்தவர் ஒரு அரசு அதிகாரி என்கிற காரணத்திற்காக மட்டுமே, இது ஊழல் என்று ஆகிவிடுமா?

7. இருபத்தியேழு வருடங்கள் கழித்தேனும் அபூர்வ புத்தகம் ஒன்றை உரியவரிடம் நான் திருப்பிக் கொடுத்துள்ளேன் என்பது தமிழலக்கிய வரலாற்றில் கம்பீரமாய்ப் பொறிக்கப்பட்டிருப்பதைச் சற்றேனும் பாருங்கள் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

8. போகவும் நான் வாங்கித் திருப்பிக் கொடுக்காத புத்தகங்கள் அனைத்தும் இன்றும் நடைபாதைக் கடைகளில்கூடக் கிடைக்கக்கூடியவை. ஆனால் எனக்கு வந்து சேராத புத்தகம் ஒன்றே ஒன்றுதான் எனினும் அது அச்சிலேயே இல்லாதது, அதுவுமன்னியில் அதை யாராலும் திரும்ப உருவாக்கவும் முடியாது. புத்தம்புதுப் பதிப்பே கொண்டுவந்தாலும்கூட 86ன் என் கனவுக் கானல்களையும் கற்பூர நினைவுகளையும் அதனுள்ளே யாராலேனும் பொதித்து ’அந்த’ப் புத்தகமாய் ஆக்கிக் கொடுக்க முடியுமா? 

9. ஜன்லோக்பால் அமல்படுத்தப்படுகையில் இந்தப் புகார் மனு போன்ற விண்ணப்பமும் விசரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமா?

10.நீ பலருடையதைத் திருப்பிக் கொடுக்காமல் வைத்துக் கொண்டிருக்கிறாய்.அவர் உன்னுடையதைத் திருப்பிக் கொடுக்காமல் வைத்துக்கொண்டிருக்கிறார். அதற்கு இது சரியாகிவிட்டது ஆகவே அடுத்தவருடையதைத் திருப்பிக் கொடுத்ததாய் எண்ணி அவரவருடையதை அவரவரே வைத்துக்கொள்ளுங்கள் என்கிற நாட்டாமைத் தீர்ப்பாய் ஆகிவிடுமோ என்று சஞ்சலமாய் உள்ளது.

11. அலுவலக நேரம் முடிந்தபின் இரண்டு தனி ’ஜன்’களுக்குள் நடந்தது இந்த ஊழல் என்பதால் ஜன்லோக்பாலின் கீழ் வராமல் போகவும் வாய்ப்புண்டு என்கிற நினைப்பே பதைபதைக்கச் செய்கிறது. ஜன்லோக்பாலின்கீழ் பிரத்தியேகமாய் அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் மட்டுமே வருமென்றால், அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழலும் வரவேண்டும் என்பது உட்கிடை அல்லவா?

12. மேற்குறிப்பிட்ட இரண்டு நபர்களில் ஊழல் இழைத்தவர் தனியார் நிறுவனத்தின் ஊழியர். ஊழல் இழைக்கப்பட்டவர் அரசு அதிகாரி. நித்ய சைதண்ய யதியின் நிரந்த சீடரும் அன்னா ஹசாரேவின் தலைமைக் கொபசெவுமான ஜெயமோகனின் - இந்த ஊழல்பற்றிய ஜென் தருண தரிசன விளக்கம் என்ன என்று யாரேனும் கேட்டுச் சொல்ல முடியுமா? நாடி ஜோசியம் ஏடு ஜோசியம் ஓலைச்சுவடி ஜோசியம் போல் ஏழு பிறவிக்கும் சேர்த்து இந்தப் பிறவியிலேயே எழுதி வைத்துக்கொண்டிருப்பவர் என்பதால் ஏற்கெனவே இதைப் பற்றி ஜென்மோகன் இணையத்தில் எழுதியிருப்பின் எவரேனும் அதற்கு சுட்டி கொடுத்து உதவ முடியுமா? அரசு ஊழியன் அதையும் ஓஸியில் கேட்கிறான் பார் என்கிற அவதூறுக்கு ஆளாக நேரிடும் ஆகவே பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிறுவப் பாடுபடும் இணைய தளம் போல பேபல் மூலமாக, நன்கொடைக் கட்டணம் ஏதும் உண்டென்றால் ஆன்லைன் பேமெண்டாய் செலுத்தியே தரவிறக்கிக்கிக் கொள்கிறேன். 

13. இந்தப் புத்தக ஊழல் வழக்கை ஜன்லோக்பாலின்கீழ் எப்படிப் பதிவது என்பதைப்பற்றி, பல்லி விழுந்த பலனுக்குக் கூட எட்டு பத்து எடிட்டர்களை வைத்து ஏகப்பட்ட புத்தகங்களில் இருந்து ஆழ்ந்தகன்று ஆராய்ச்சிகள் பல செய்து அழகாக வடிவமைத்து சகாய விலையில் எல்லோரின் பாக்கெட்டிலும் திணிக்கப்படும் புத்தகம் ஏதும் துரிதப் பதிப்பகத்தாரால் அன்னாவின் உண்ணாநோன்பு முடியும் முன்பாகவே வெளியிடப்பட்டு உள்ளதா?

14. இருப்பது போதாதென்று உபரியாய் இன்னொரு பிரச்சனை. மக்களின் வரிப்பணத்தை வீணாக்கலாகாது என்கிற நல்லெண்ணத்தில் உருவாக்கப்பட்ட எதிர்கட்சி எம்பிக்களையும் உள்ளடக்கிய ‘அரசு நிர்வாக சிக்கண நடவடிக்கை செயல்திட்டக் கமிட்டி’சுவிட்சர்லாந்தில் கூடி விவாதித்து அறிக்கை வெளியிட்டது. சிக்கண நடவடிக்கையாய் அரசு அலுவலகங்களுக்கு A4 பேப்பர் சப்ளை அன்றுமுதல் தடைசெய்யப்பட்டதாய் முன்புறம் ஹிந்தியிலும் பின்புறம் ஆங்கிலத்திலுமாய் ஒற்றைப் பேப்பர் சுற்றறிக்கை அனைத்து அலுவலகக் கதவுகளைலும் ஒட்டப்பட்டது. தேர்தலை ஒட்டிய சமயத்தில் வந்த, பரவலாக விளம்பரப்படுத்தப்பட்ட அறிவிப்பு என்பதால் பொது மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, கண்டகண்ட வார்த்தைகளால் அதுவரை அர்ச்சிக்கப்பட்ட அந்தக் கமிட்டியின் தலைவர், நயாபைசா செலவின்றி அமோக வெற்றி பெற்றார்.

14A. அதிகாரிகளுக்கோ அரசு யந்திரத்தை ஓட்டியே ஆகவேண்டிய கட்டாயம். ஆகவே, அச்சே அடிக்காத வெள்ளைப் பேப்பருக்கும் கூட, பாலன்ஸ் ஷீட்டுகளை அசால்ட்டாய்ப் பப்படம் மடிக்க உபயோகிக்கும் நிறுவனங்களிடம், கையேந்தும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். எப்படியும் பஞ்சப்படி பதவி உயர்வு உள்ளூர் நல்லூர் போஸ்டிங் என்று எப்போது பார்த்தாலும் எதற்காகவேனும் ஏந்திக்கொண்டே இருக்கப் பழகிவிட்ட கரங்கள்தானே, A4 பேப்பருக்காக ஏந்தினால் என்ன குடியா முழுகிவிடப்போகிறது என்று  கண்டுகொள்ளாது இருந்துவிட்டது அரசும். கிட்டத்தட்ட அதே நேரத்தில் தொலைக்காட்சிகளில் பற்றி எரியத்தொடங்கியது ஊழல் ஒழிப்பிற்கான உண்ணாவிரதப் போர்.

14B. ஆயிரம் அசிங்கம் நடந்தாலும் அரசாங்க சிங்கத்தைப் பெட்டி விட்டு பெட்டி மாற்றுவதே ஆக மோசமான ஆபாச ஊழல் என்று தொலைக்காட்சியில் கவித்துவமாய்க் குரல் கொடுத்துக்கொண்டிருந்தாள் யாரோ ஒரு யுவதி. எல்சிடி திரையைத் தொட்டு முத்தமிடத் தினவெடுக்க வைக்கும் முகம் என்பதால் விசேஷ குளோசப்பில் வேறு காட்டினார்கள்.

14C. யுவதி உதிர்த்த முத்து என்பதாலும், போதாக்குறைக்கு குல்லா அணிந்த குலக்கொழுந்து மற்றும் அஹிம்சாவாதியின் பத்துநாள் தீவிரவாதப் பேச்சாளரான அவரே சொல்லிவிட்டார் என்பதாலும் அச்சடிக்காத பேப்பரை வாங்குவது ஊழல் இல்லைதான் என்றாலும் - இந்த விண்ணப்பத்தைப் பிரிண்ட் எடுக்க இனாமாய் A4 பேப்பர் வாங்கியது, எதிர்காலத்தில் ”விண்ணப்பப் பேப்பர் பேர ஊழல்” என்று நாமகரணம் செய்யப்பட்டு - நிறுவனத்திடம் பேப்பரை வாங்கியதால்தான் அரசு அதிகாரியாகிய நான் அந்த நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட்டை சரியாகப் பார்க்காமல் பலகோடிகளை நாட்டிற்கு நஷ்டப்படுத்தினேன் என்கிற பரபரப்பான ஜன்லோக்பால் கேசாகிவிட்டது. அந்த நிஜத் தருணத்தின்போது யுவதியின் பேச்சை ஒரு கேஸ் லா போலக் குறிப்பிட்டு, அச்சடித்த நோட்டுக்களை வாங்கியிருந்தால் மட்டுமே ஊழலாகும் என்று, குற்றம் சாட்டப்பட்டவரே வக்கீலாய் வாதாடி வழக்கின் தீர்ப்பை நீர்க்கச்செய்ய முடியுமா என்கிற நினைப்பிலேயே பதற்றம் பற்றிக்கொள்கிறது. பத்துவருடம் முன்பான விதிமுறைகளையே இன்னும் மனனம் செய்து முடிக்காத அதிகாரிகளான நாங்கள், ஜோக்கடித்துக்கூட ஸ்டே வாங்கும் திறமைசாலி வக்கீல்களா என்ன?

15. எதிர்கால இணையத்து விமானத்தில் அரிப்புஜீவிகளின் கருத்துச் சிதறல் இப்படியாக இருந்தது:

காழலுக்கான ஊரணங்கள்
லஞ்சமாகப் A4 பேப்பர் கொடுத்த நிறுவனத்திடம், ஊழல் நடந்த ஆண்டிற்கான பேலன்ஸ் ஷீட்டைக் கேட்டால் அவர்கள் புதிதாய்க்கூட அச்சடித்துத் தந்துவிடுவார்கள். கையூட்டாய்ப் பேப்பர் கொடுத்ததற்கு தண்டனையாய் விதிக்கப்படும் தண்டத்தையும் கட்டிவிடுவார்கள். ஆனால் வெள்ளைப் பேப்பரை வாங்கிய அதிகாரிக்கு என்ன ஆகப்போகிறது? பார்த்துக்கொண்டே இருங்கள். இப்போதிருக்கும் ஜன்லோக்பால் சட்டத்தை வைத்துக் கொண்டு எதுவும் செய்துவிட முடியாது.

15A. விண்ணப்பப் பேப்பர் பேர ஊழலில் மாட்டிய அதிகாரி ஏதோ கொஞ்ச நாள் விடுப்பில் வெளிநாட்டிற்குச் சுற்றுலா போய் வந்ததுபோல், சில மாதங்களில் அதே நாற்காலியில் திரும்ப வந்து அமர்வார். A4 பேப்பர்களை ரீம் கணக்கில் வாங்கக் கையேந்துவார். இது நடக்கிறதா இல்லையா எனப் பொறுத்திருந்து பாருங்கள்.  இவர்களையெல்லாம் தப்பவிடாமல் தீர்க்கமாய் தண்டிக்கத்தான், குணக்குன்றான குசாரேவால் பரிந்துரைக்கப்படும் குண்லோக்பால் என்கிற கெட்டியான சட்டியை குணசீலத்தில் இருப்பவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்கிறோம்.

16. ஐயா, ஊழல் எங்கும் வியாபித்திருக்கிறது என்பதில் எவருக்கும் எள்ளளவு சந்தேகமும் இருக்க முடியாது. ஊழலை ஆதரிப்பதோ அல்லது அதை இன்னும் பெலப்படுத்தி நாட்டின் இண்டு இடுக்குகளுக்கெல்லாம் கொண்டு செல்வதோ இந்த விண்ணப்பத்தின் நோக்கம் அல்ல. ஆயினும், இதற்கு அப்படியான சாயம் பூசுவதுதான் உண்மையில் பெல்ட்டுக்குக் கீழே அடிப்பது இல்லவா? இதைச் சொல்பவன் ஒரு அரசு அதிகாரியாய் இருப்பதால் அவனை என்னவும் சொல்லிவிடலாம் என்கிற செளகரியம் அரைகளுக்கும் மரைகளுக்கும்  மட்டுமின்றி எல்லோருக்கும் இருக்கிறது இல்லையா? பொங்குகிற மாவடுக்கள் எல்லாம் அதிர்ஷ்டவசமாய் அரசு அதிகாரிகளாய் இல்லாதிருக்கிறார்கள் அல்லது இதே கருத்தை பொது-ஜன் ஒருவர் சொல்கிறபட்சத்தில் அவரது பெல்டையும் கழற்றி அதற்கு அடியிலும் அடிக்க முடியுமா? ஒன்றை விமர்சிப்பது பிறிதொன்றை ஆதரிப்பதுதான் என்பது சினிமா ரசிகர்களின் கட்சிகட்டும் மனோபாவம் மட்டுமேயல்லவா?

17. ஒரு சந்தேகம். ஜன்லோக்பாலின்கீழ் அதிகாரமற்ற நிர்வாகம் அமையப்போகிறதா? அதிகாரமே இல்லாது எந்த நிர்வாகமேனும் அமைய முடியுமா? அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்களில் அநேகமாய் அனைத்து புத்திஜீவிகளும் உச்சத்தில் அதிகாரக்குவிப்பை அடியோடு எதிர்ப்பவர்கள் அல்லவா? அதனால்தானே அவர்கள் கம்யூனிஸத்தை நாபிக்கமலத்திலிருந்து வெறுத்து ஜன்நாயகத்தின் பக்கம் நிற்கிறார்கள். ஜனநாயகம் ஊழலை உருவாக்குவதாய் உள்ளது ஆகவே ஜன்நாயகம் வேண்டும் என்றால் அதை நிர்வகிக்கப்போகிறவர் போராட்டத்தை முன்னெடுத்த கிராம ராஜ்ஜியத்தின் தன்னிகரற்ற அதிபதியா? எடுத்தோம் கவிழ்த்தோம் என எவனையும் வீட்டிற்கு அனுப்பும் அதிகாரம் எவ்வளவு பெரிய போதையைத் தரக்கூடியது? அல்லது எந்த நேரமும் எவரும் வீட்டிற்கு அனுப்பப்படலாம் என்கிற கத்தியைத்  தலைக்குமேல் நிரந்தரமாய்த் தொங்கவிட்டுக் கொண்டு எந்த அதிகாரியும் எதைத்தான் நிர்வகித்துவிட முடியும்? அல்லது நிர்வகிக்கப்பட வேண்டிய ஜன்கள் எல்லோரையும் அப்பழுக்கற்ற ஜின்களாய் மாற்றிவிட ஏதேனும் உத்தரவாத மந்திரம் உள்ளதா?

18. அடிப்படை உண்மை என்னவென்றால், அரசு அதிகாரிகள் பிறப்பிலேயே பயங்கரவாதிகள் அல்லர். அப்படியான தோற்றம் கொடுப்பதற்காய் விசாலமான அறையைத் தேர்வு செய்து, ஓமக்குச்சிக்கு உருட்டு மீசையை ஒட்டிவைத்ததுபோல்,உள்ளே வருபவர் நீண்டு குனிந்தே கைகுலுக்கும்படியான, நீள் அகல மேசையின் பின்னால் ஒளிர்ந்து அமர்ந்து கொள்பவர்கள். பார்க்க வருபவனைப் பெரும்பாலும் ஒற்றையாய் மட்டுமே உள்ளே அனுமதித்து, அத்துவானக்காட்டில் தான் அம்போவென நிற்பதாய் அவனை உணரவைப்பதிலேயே ஒளிந்திருக்கிறது, அதிகாரக் கிளியின் அபூர்வ உயிர். கனத்த மடியின் உள்ளே இருக்கும் வழிநடை பயத்தையும் இன்னமும் எப்படி கெனம் சேர்த்துக்கொள்வது என்கிற பேராசையையும் மறைப்பதற்கான முகமூடியே அதிகார மிரட்டல். இதை அன்னாவுக்கும் அவர் பின்னால் அணிதிரண்ட முன்னாக்களுக்கும் பெரியவரை வளர்ப்புத் தாத்தாவாய் தத்தெடுத்துக்கொண்ட பெத்தண்ணாக்களுக்கும் யாரேனும் புரிய வையுங்கள். குறைந்தபட்சம் சாப்ளினின் தி கிரேட் டிக்டேட்டர் படத்தையேனும் அவர்களைப் பார்க்க வையுங்கள். உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகட்டும். ஈரேழு உலோகங்களிலும் உமது நாமம் ஜெபிக்கப்படுவதாக. உலகையே நடுநடுங்க வைத்துக் கொண்டிருந்த சர்வாதிகார ஹிட்லரின் உள்ளே இயங்கிக் கொண்டிருந்தது எப்படிப்பட்ட பயம் என்பதை அதைவிடச் சிறப்பாய் எவரால் காட்டிவிட முடியும்?

19. நிஜமாக மிரட்டத் தொடங்கினால் உசெய்ன் போல்ட்டையே போல்டாக்கிவிடும் அளவிற்கு ஓட்டம்பிடிக்கும் அதிபராக்கிரம அதிகாரிகளை அப்புறம், விரட்டித்தான் பிடிக்க வேண்டி இருக்கும் என்பதை உள்குரலாய் உரத்துச் சொல்கிற காரணத்திற்காகவாவது, என் புத்தகத்தை யாரேனும் அந்த ஒன்வே ட்ராஃபிக்கிடம் இருந்து பெற்றுத்தாருங்களேன், புத்தகம் வங்கித்தர இது லஞ்சமா என மனசாசட்சியே இன்றி கொணஷ்டையாய்க் கேட்காமல் மனம் கசிந்து கேட்கிறானே என்கிற பரிதாபத்திலேனும் இந்த உதவியைச் செய்யுங்கள்.

19A. அதிகாரிகளையேனும் சிபிஐயில் போட்டுக் கொடுத்துவிடுவேன் என மிரட்டிக் காரியத்தை சாதித்துக் கொள்ளலாம். ஆனால் இந்த சாமான்யர்களிடம் எந்த ஜபர்தஸ்தும் பலிப்பதில்லை. கொத்துக்கறி புரோட்டா உள்ளே போனாலும் புத்தகம் வெளியேவர மாட்டேன் என்கிறது. கொடுத்ததைத் திரும்பப்பெற என்ன ததிங்கிணத்தோம் போட்டாலும் பெரியாரின் நெற்றியும் பெருமாளாகிவிடும் காலம்.

20. புத்தகம் திரும்பக் கிடைக்கும் என்கிற நம்பிக்கை எதுவும் பெரிதாக இல்லை எனினும், என்றேனும் ஒருநாள் இதை வாசிக்கும் எவரேனும் ஒருவருக்கு பூரணத்துவ அறிதலாய் ஒரு ஜென் தருணமாய் அமைந்துவிடாதா என்கிற மூட ஆவலாதியில் எழுதப்பட்டதுதான் இந்த பகிரங்க விண்ணப்பம்.

தங்கள் உண்மையுள்ள