16 September 2011

எழுத்தால் என்ன செய்துவிட முடியும்?

நேற்றிரவு அலைபேசியில் சகா ஒருவனின் அழைப்பு.

சொல்லுமா.

மச்சி நாளைக்கி எக்ஸ்போர்ட் குடுக்கப்போறேன்.

சரி அதுக்கென்ன?

இல்ல என்னென்ன செய்யணும் செய்யக்கூடாதுன்னு கொஞ்சம் சொல்லேன். 

ஏண்டா ஒரு வருஷமா ரேஞ்சுலதான இருக்கே என்னவோ புதுசாக் கேக்கறே?

இல்ல மச்சி மொதல்தடவையாப் போறேனா அதான்.

அடப்பாவி ஒருவருஷமா ரேஞ்சுல இருக்கே மொதல் தடவையா இப்பத்தான் எக்ஸ்போர்ட்டுக்கு நேர்லப் போப்போறியா? அப்ப இது வரைக்கும் சூப்பிரெண்டெண்ட் மட்டும்தான் போய்கிட்டு இருந்தாரோ?

சூப்ரெண்டா? நீ வேற, அஞ்சாறு வருஷமா இங்க யாருமெ சீட்டை விட்டு நவுந்தது இல்ல மச்சி.

அடப்பாவிகளா! என்னா அநியாயம். கண்டெய்னர் சீலை சுண்டலாட்டம் எட்த்துக் குடுத்துகிட்டு இருந்தீங்களா? இப்ப என்ன திடீர்னு?

புது சூப்பிரெண்டெண்ட்டு மொதல் ரெண்டுமாசமாவுது நேர்லப் போ இல்லாட்டி எவன் மதிப்பாங்கறாரு மச்சி. போதாக் கொறைக்கி நீ எழுதி இருந்ததைப் படிச்சப்புறம் கொஞ்சம் பயம் வேற வந்துடிச்சி. தப்புப் பண்றமோன்னு கொஞ்சம் கில்ட்டியாவும் இருந்திச்சி. அதான்...

சுயசொறியின் அரிப்பைத் தீர்ப்பதைத்தவிர எழுத்தால் என்ன பெரிதாய் செய்துவிடமுடியும் என்று எப்போதும் தோன்றும்.

மழை நனைக்கும் வண்டியில் மதுராந்தகத்திலிருந்து சென்னைக்கு வந்துகொண்டிருக்கும் இந்த இரவு 11.44க்கு, எழுத்து இதைவிட வேறு என்ன செய்யவேண்டும் என்று தோன்றுகிறது.