01 February 2012

ஹாஜி முராத் - டால்ஸ்டாயின் கடைசி நாவல் - சுகுமாரன்

''அப்போதுதான் உழுதுபோட்டிருந்த கரிசல் வயல்வெளிக்குக் குறுக்காகத்தான் வீட்டுக்குப் போகும் வழி.புழுதி படர்ந்த அந்த வழியாக நடந்தேன். உழவு முடிந்த அந்த வயல் ஒரு பெரிய நிலவுடைமையாளனுடையது.பாதையின் இருபுறமாகவும் எனக்கு முன்னால் தெரியும் குன்றின் அடிவாரத்திலுமாகவும் வயல் விரிந்து கிடந்தது. சீரான உழவு சால்களையும் சதுப்பான மண்ணையும் தவிர வேறு எதுவும் தென்படவில்லை.ஆழமாக உழவு செய்யப்பட்டிருந்ததனால் மண்ணில் புல்லையோ வேறு செடிகளையோ பார்க்க முடியவில்லை. எல்லாம் கறுப்பாக இருந்தது. உயிரற்ற அந்தக் கரிய பூமியில் உயிருள்ள ஏதாவது தென்படுமா என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே ' மனிதன்தான் எத்தனை நாசக்காரன். தன்னுடைய இருப்புக்காக உயிருள்ள வெவ்வேறான எத்தனை தாவரங்களை அழிக்கிறான்?' என்று யோசித்தேன். எனக்கு முன்னால் பாதையின் வலது பக்கத்தில் சின்னப் புதர் தெரிந்தது. நெருங்கிப் பார்த்தபோது சற்று முன்பு, நான் அநாவசியமாகப் பறித்து வீசியெறிந்த நெருஞ்சி என்று தெரிந்தது. அந்தத் 'தார்த்தாரிய' தாவரத்துக்கு மூன்று கிளைகள் இருந்தன. ஒரு கிளை உடைந்து வெட்டப்பட்ட கை போல ஒட்டிக்கொண்டிருந்தது. மற்ற இரு கிளைகளிலும் பூக்கள் இருந்தன.அவை முன்பு சிவப்பாக இருந்து இப்போது கருமையேறியிருந்தன. ஒரு தண்டு ஒடிந்திருந்தது. மறு பாதி நுனியில் அழுக்குப் புரண்ட பூவுடன் தொங்கிக் கொண்டிருந்தது. அடுத்த பூவும் கறுப்புச் சேறு படிந்து இருந்தாலும் நிமிர்ந்து நின்றிருந்தது. ஏதோ வண்டிச் சக்கரம் அந்தச் செடியின் மேல் உருண்டு போயிருக்க வேண்டும். ஆனாலும் செடி மறுபடியும் நிமிர்ந்து எழுந்திருக்கிறது. அதனால்தான் விறைப்பாக நின்றாலும், உடலின் ஒரு பகுதி பிய்த்து எடுக்கப் பட்டதுபோலவோ, குடல்கள் உருவப்பட்டது போலவோ, ஒரு கை முறிக்கப்பட்டதுபோலவோ, கண்கள் பிடுங்கப்பட்டதுபோலவோ அது ஒரு பக்கமாகத் திருகியிருந்தது. எனினும் தன்னுடைய சகோதரர்களை அழித்த மனிதனுக்கு அடிபணியாமல் நிமிர்ந்து நின்றது. 

'என்ன உள் உரம். மனிதன் எல்லாவற்றையும் வெற்றி கொண்டு விட்டான். கோடானுகோடித் தாவரங்களை நாசம் செய்திருக்கிறான். ஆனால் இந்த ஒன்று மட்டும் அவனிடம் சரணடைவில்லையே' என்று வியந்தேன்.

காக்கசஸில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கதை என் நினைவுக்கு வந்தது. அதன் சில பகுதிகள் நான் நேரில் பார்த்தவை; சில பகுதிகள் நேராகப் பார்த்த சாட்சி ஒருவர் சொல்லக் கேட்டவை; சில கற்பனை செய்யப்பட்டவை. எனது நினைவிலிருந்தும் கற்பனையிலிருந்தும் உருப் பெற்ற அந்தக் கதை பின்வருமாறு''.

இப்படித் தொடங்குகிறது லியோ டால்ஸ்டாயின் கடைசி நாவலான 'ஹாஜி முராத்'. படைப்பிலக்கியத்துக்கு அவருடைய இறுதிப் பங்களிப்பு இது. 1903 ஆம் ஆண்டு தொடங்கி எட்டு ஆண்டுகளாக எழுதிய நாவலை மரணத்துக்கு ஓர் ஆண்டு முன்புதான் முடித்தார் என்று டால்ஸ்டாயின் மனைவி சோபியா ஆந்தரேவ்னா தன்னுடைய நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார். 'ஹாஜி முரா'தைப் படியெடுப்பதைத் தவிர இப்போது நான் வேறு எந்த வேலையையும் செய்வதில்லை. அது எவ்வளவு உன்னதமான படைப்பு. கொஞ்ச நேரம் கூட அதை விட்டு விலகியிருக்க என்னால் முடிவதில்லை' என்று வியக்கிறார் சோபியா. 

ஆனால் அவ்வளவு வியப்புக்குரிய படைப்பை தன்னுடைய இறப்புக்குப் பின்னரே வெளியிட வேண்டும் என்பதில் டால்ஸ்டாய் உறுதியாக இருந்தார் என்றும் சோபியாவின் குறிப்பு தெரிவிக்கிறது. ஜார் அரசால் சந்தேகத்துக்குரிய நபராக அவர் கருதப்பட்டார். அரசு மீதான அவருடைய கடுமையான அரசியல், சமூக விமர்சனங்கள் அதிகார மையங்களைக் கொந்தளிப்புக்குள்ளாக்கியிருந்தன. அவரை வீட்டுச் சிறையில் வைப்பதற்கான தருணத்துக்காக அரசு காத்துக் கொண்டிருந்தது. கிறித்துவ மத அமைப்புகளின் மீதான அவருடைய குற்றச் சாட்டுகள் விசுவாசிகளை உலுக்கியியிருந்தன. அவர்களும் அந்த மதத் துவேஷியை வீழ்த்தும் வாய்ப்புக்காகக் காத்திருந்தார்கள். அந்த இக்கட்டான நேரத்தில் நாவல் வெளியாகுமானால் கடுமையான தணிக்கைக்கு உட்படும் என்ற அச்சமும் டால்ஸ்டாய்க்கு இருந்தது. கணவரின் உத்தரவுப்படி 'உன்னதமான படைப்பை' சோபியா ஒளித்து வைத்தார். டால்ஸ்டாய் மறைந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே 'ஹாஜி முராத்' வெளியிடப்பட்டது.அதற்குள் ஜார் அரசும் வீழ்ச்சியை நெருங்கியிருந்தது. 

புதிய படைப்பை மறைத்துவைக்க சோபியாவுக்குத் தனிப்பட்ட காரணமும் இருந்தது. டால்ஸ்டாயின் நண்பரும் சீடருமான விளாதிமீர் செர்த்கோவின் கைக்கு நாவல் போய்விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு. ஏனெனில் எழுத்து மூலம் கிடைக்கும் தன்னுடைய வருவாய் அனைத்தும் அகதிகளுக்கு உதவும் வகையில் உயிலைத் தயாரித்து இருந்தார் டால்ஸ்டாய். அதற்குத் துணைநின்றவர் செர்த்கோவ். புதிய நாவல் ஈட்டும் வருவாயைக் குடும்பத்துக்குரியதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பது சோபியா சீமாட்டியின் எண்ணமாக இருந்தது.வெளியீட்டைப் பற்றிப் பத்திரிகைகளில் அறிவிப்பு வந்த உடனேயே எட்டு பதிப்பாளர்கள் 'ஹாஜி முரா'தை புத்தகமாக அச்சிட்டு விற்க ஆரம்பித்தார்கள். எட்டு வடிவங்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவையாகவும் இருந்தன. ஆனால் சோபியா படியெடுத்த வடிவம்தான் நம்பகமானதாகக் கொள்ளப்பட்டது. தன்னுடைய எல்லா நாவல்களையும் பலமுறை திருத்தியும் செம்மைப்படுத்தியும் இறுதி செய்யும் டால்ஸ்டாய் சோபியா தயாரித்த படிகளுக்குப் பின்னர் 'ஹாஜி முரா'தின் கையெழுத்துப் படியைப் பார்க்கவில்லை. சோபியாவின் இலக்கிய அக்கறையோ அல்லது அந்தக் காலப் பகுதியில் குடும்பத்தில் ஏற்பட்ட தீராத சச்சரவுகளோ அவரை அதிலிருந்து விலக்கியிருந்திருக்கிறது. எனினும் அவரது விருப்பப்படியே நாவல் அவரது மறைவுக்குப் பிறகே வெளியானது. ஒரே நாவலுக்கு எட்டு கள்ளப் பதிப்புகள் எப்படி வந்தன என்ற புதிர் மட்டும் இன்னும் மிஞ்சுகிறது.

2

1851 ஆம் ஆண்டின் கடைசி' - என்ற ஒற்றை வரியுடன் 'ஹாஜி முராத்' தொடங்குகிறது. நாவலின் முகப்புரையில் டால்ஸ்டாய் எழுதியிருக்கும் வாசகங்களுக்கும் இந்த காலக் குறிப்புக்கும் தொடர்பு இருக்கிறது. அந்தக் கால அளவில்தான் டால்ஸ்டாய் காக்கசஸில் ராணுவப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கிடைத்த அனுபவங்களிருந்தே நாவலின் ஆதார வடிவத்தை உருவாக்கியிருந்திருக்கிறார். இந்த நாவலின் அதே இடப் பின்னணியில் 'ஸ்வெஸ்தபோல் கதைக'ளை ஏற்கனவே எழுதியிருந்தார். செச்செனிய இஸ்லாமியர்கள் மத்தியிலும் ரஷ்ய ராணுவத்தினரிடையேயும் பேசப்பட்டு வந்த சாகசப் போராளியான ஹாஜி முராத் ஒரு நாவல் பாத்திரமாக மாறுகிறான். 

நூற்றாண்டுகளாக ரஷ்யர்களிடமிருந்து விடுதலை பெறப் போராடும் அவார் இனத் தலைவன் முராத். துணிச்சலானவன், இதமானவன் என்ற நோக்கில் எல்லாருடைய பிரியத்துக்கும் இலக்கானவன். ஆரம்பத்தில் அவனுக்குப் போராட்ட இலக்கு எதுவும் இருப்பதில்லை. செச்செனிய இஸ்லாமிய இன விடுதலைக்காகப் போராடும் ஷமீலுடன் இணைந்த பிறகே அவன் போராளியாக மாறுகிறான். ரஷ்யப்படையை எதிர்க்கிறான். அந்த எதிர்ப்புக் கூட தர்ம சங்கடத்துடன் அவன் செய்வதுதான். ஏனெனில் முராத்தின் நண்பர்களான கான்கள் ரஷ்ய ஆதரவாளர்கள். ஷமீலின் படை, கான்க¨ளையும் முராதின் சகோதரனையும் கொன்று விடுகிறது. ஷமீலின் போர் நடவடிக்கைகளில் கசந்து போகிறான் முராத். ஒரு கட்டத்தில் அவனை எதிர்க்கிறான். புதிய எதிரியை விட்டுவைப்பது ஆபத்து என்று எண்ணும் ஷமீல், முராதையும் ஒழித்துக் கட்ட உத்தரவிடுகிறான். செச்செனியர்கள் அதை ஏற்றுக் 
கொள்கிறார்கள். இரு தனி நபர்களின் விரோதம் அவார் , செச்செனிய இனக்குழுக்களின் பகைமையாக மாறுகிறது.ஷமீலின் கையில் சிக்கி விடாமல் தப்புவதற்காக செச்செனிய மலைக் கிராமமான மக்மெத்துக்கு வருவதிலிருந்து நாவலின் கதை முன்னேறுகிறது.

கிராமத்தில் தனது நம்பிக்கைக்குரியவனான சாதோவின் குடிலுக்கு தனது மெய்க்காப்பாளனான எல்தாருடன் அடைக்கலம் தேடி வருகிறான் முராத். ஷமீலின் விசுவாசிகள் நிரம்பிய அந்த கிராமத்தில் விதி அவனை விரட்டுகிறது. அங்கிருந்தும் தப்பியோடுகிறான். அவன் அந்த கிராமத்துக்கு வந்ததே ரஷ்யர்களிடம் தன்னை அழைத்துச் செல்ல ஓர் உதவியாளனை எதிர்பார்த்துத்தான். சாதோவின் சகோதரன் பாதா அதற்கான ஏற்பாடுகளைச் செய்யப் புறப்பட்டுப் போகிறான். அதற்கிடையில் கிராமத்து விசுவாசிகளுக்கு முராத் அங்கே இருப்பது தெரிந்து விடுகிறது. துப்பாக்கிகளுடன் அவனைத் துரத்துகிறார்கள்.அவர்களிடமிருந்து தப்பும் முராத்துக்கு ரஷ்யர்களிடம் தஞ்சமடைவதைத் தவிர வேறு வழியில்லாமல் போகிறது. ரஷ்ய இளவரசன் வோரந்த்சோவ் முராத்துக்கு இணக்கம் காட்டுகிறான். முராத்தின் வீரம் ரஷ்யப் படைக்குத் துணையாக இருக்கும் என்பதும் முராத்தின் மூலம் ஷமீலை வீழ்த்தி செச்னியர்களின் தொந்தரவிலிருந்து விடுபடலாம் என்பதும் இளவரசனின் நோக்கம். இளவரசி மரியா வசிலேவ்னாவும் அதை ஏற்றுக் கொள்கிறாள். இந்த இணக்கங்களின் இடைவெளியில் முராதின் துர் விதியும் காத்திருக்கிறது. முராதுடன் முன்பு மோதித் தோல்வி அடைந்த அஹமத்கான் என்ற படைத்தலைவன் வடிவில் காத்திருக்கிறது. முராத் நம்பத்தகுந்தவன் அல்லன். செச்செனியர்களின் ஒற்றன் என்று இளவரசனிடம் அழுத்திச் சொல்லுகிறான். 'அஹமத்கானும் ஷமீலும் என்னுடைய எதிரிகள். அஹமத் கான் செத்தொழிந்தவன் அவனைப் பழிவாங்க முடியாது ஆனால் ஷமீல் இன்னும் உயிரோடு இருக்கிறான் அவனைப் பழிவாங்காமல் நான் சாக மாட்டேன் ' என்பது முராதின் பதில். இந்த பதில் அஹமத்கானை முராத்தின் கொடூர எதிரியாக்குகிறது. மற்ற படைத்தலைவர்களுக்கும் முராத், தகவல்கள் பெறுவதற்கான ஒரு கேந்திரமாக இருக்கிறானே தவிர அவனைப் போர்க்களத்துக்கு அனுப்ப அவர்களுக்கும் விருப்பமில்லை. கிட்டத்தட்ட சிறைக் கைதியாகத்தான் அவன் நடத்தப்படுகிறான். சகோதரனின் மரணத்துக்காக ஷமீலைப் பழிவாங்கவும் செச்சென்யாவில் வசிக்கும் மனைவியையும் மகனையும் குடும்பத்தவர்களையும் காப்பாற்றவும் துடிக்கும் முராத் அடைபட்ட விலங்காகக் குமுறுகிறான். ரஷ்யப் படைகளுடன் ஷமீல் மோத வந்திருப்பதையறிந்து தன்னைப் போர்க்களத்துக்கு அனுப்பும்படிக் கேட்கிறான். ரஷ்யப்படைத் தலைவர்கள் மறுத்து விடுகின்றனர். அவர்களிடமிருந்து தப்புகிறான் முராத். ரஷ்யப்படை அவனை விரட்டுகிறது. முராத்தின் விதி அவனுக்கு இரண்டு அடையாளங்களைத் தருகிறது. ஷமீலின் கண்ணோட்டத்தில் அவன் ரஷ்யர்களின் கைப்பாவை. ரஷ்யர்களின் பார்வையில் அவன் செச்சென்யன். இந்த இரண்டு அடையாளங்களும் முராத்துக்கு ஒரே முகத்தைத்தருகின்றன. துரோகியின் முகம். அவன் செச்செனியர்களுக்குத் துரோகம் செய்தான் என்பது ஷமீலின் தரப்பு. செச்செனியப் போராளிகளுடன் இணைந்து கொள்வதற்காகவே தப்பினான் என்பது ரஷ்யப் படையின் தரப்பு. இரண்டு குற்றச் சாட்டுகளுக்கும் நடுவில் மனைவியையும் மகனையும் காப்பாற்றுவதற்காகவே முராத் தப்பினான் என்ற உண்மை புதைந்து போகிறது. முராதின் மனைவியும் பிள்ளையும் ஷமீலின் ஆணைப்படிக் கொல்லப் படுகிறார்கள். இரண்டு எதிரிகளுக்கிடையில் அபத்தமாக அகப்பட்டுக் கொள்ளும் ஹாஜி முராத் தீவிரமாகப் போராடியும் ரஷ்யப்படையினரால் கொல்லப்படுகிறான். அவனுடைய தலை உடலிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. கர்கானோவ், ஹாஜி ஆகா அஹமத் கான் ஆகியோரும் அவர்களது படை வீரர்களும்,கொல்லப்பட்ட விலங்கின் உடலைச் சுற்றி நிற்கும் வேட்டைக்காரர்களைப் போல துப்பாக்கிப் புகைக்கு இடையில் புதர்களுக்கு அருகில் ஹாஜி முராத்தின் உடலையும் அவனுடைய தோழர்களின் சடலங்களையும் வட்டமிட்டு நின்றார்கள். அவர்களுடைய வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். 

இங்கே நாவல் முடிய வேண்டும். ஆனால் டால்ஸ்டாய் எழுதும் உபரி வரிகள்தாம் நாவலின் முத்தாய்ப்பு 'துப்பாக்கிகள் வெடித்துக் கொண்டிருந்தபோது நிசப்தமாக இருந்த வானம்பாடிகள் மறுபடியும் பாட ஆரம்பித்தன. முதலில் அருகில் இருந்த ஒன்று. பிறகு தூரத்திலிருந்த பறவைகள்.

உழுதுபோடப்பட்ட வயலில் இருந்த நசுக்கப்பட்ட மலர்ப் புதர் இந்த மரணத்தைத்தான் என் நினைவுக்குக் கொண்டு வந்தது'. 

இந்த இறுதி வரிகள் நாவலின் வட்ட வடிவத்தை முழுமை செய்கின்றன. கூடவே இறந்த காலத்திலிருந்து வாசகனை விடுவித்து நிகழ்காலத்துக்கு அழைத்து வருகின்றன.

நாவலின் தொடக்கத்திலும் முடிவிலும் இடம் பெறும் தார்த்தாரியப் பூ என்ற உருவகம் கதை முழுவதும் ஒரு குறிப்பீடாகவே (motif) பொருள்படுகிறது. படைப்புகளில் மையத்தைத் தொடர்ந்து நினைவுறுத்தும் குறிப்பீடுகளை - மோடிஃப்களைப் - பயன்படுத்துவது டால்ஸ்டாயின் இயல்பு. 'அன்னாகரேனினா' நாவலில் அன்னாவின் சிவப்பு நிறக் கைப் பைகுறிப்பீடாக நாவலின் முக்கிய இடங்களில் புலப்படுவதைச் சொல்லலாம்.

இதே உருவகத்தை இன்னும் நுணுகிப் பார்த்தால் நாவலின் மையமும் விளங்கி விடும். முள் மலர்ச் செடியின் ஒரு கிளையை ஷமீலாகவும் பூவுடன் நிமிர்ந்து நிற்கும் இன்னொரு கிளையை ஹாஜி முராதாகவும் செடியை நாசம் செய்த வண்டிச் சக்கரத்தை ரஷ்யப்படையாகவும் அர்த்தப்படுத்தலாம். நிமிர்ந்து நிற்கும் அந்தப் பூவை டால்ஸ்டாய் என்று வைத்துக் கொண்டால் மற்றவற்றை 
யூகிப்பதும் எளிது. தன்னுடைய இறுதிக் காலங்களில் குடும்பம் தந்த மன வேதனைகளாலும் அரசாங்கத் தொந்தரவுகளாலும் தளர்ந்து போய் ஆன்ம பலத்தால் விறைப்பாக நின்றிருந்தவர் அவர் என்பதால் அவருக்குமே கச்சிதமாகப் பொருந்துகிறது இந்த உருவகம் .

3

ஆங்கில மொழிபெயர்ப்பில் சுமார் இருநூறு பக்கங்களுள்ள நாவலை ஒரு கதைச் சரடாகத் திரித்துச் சொல்வது அநீதி. எனினும் நாவலின் கதைப் போக்கை மேலோட்டமாகக் கூடத் தெரியாமல் அதை பற்றிப் பேசுவது எளிதல்ல. முதல் வாசிப்பில் அவ்வளவு ஒன்றும் சிலாகிக்கக் கூடியதல்ல என்று தோன்றிய ஹாஜி முராத் மறு வாசிப்பில் வெவ்வேறு தளங்களைக் கொண்டிருப்பது துலங்கியது. வரலாற்று நிகழ்ச்சிக் குறிப்புகளின் மீது புனைவுகளை உருவாக்கும் ரஷ்ய இலக்கியத்தின் பொது சாமர்த்தியம் டால்ஸ்டாயிடம் இன்னும் அதிகம்; இன்னும் நம்பகம் என்ற எண்ணத்தை உருவாக்கியது. 

கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் , ஐரோப்பா முதல் ஆசியா வரை நீண்டு விரிந்து கிடக்கும் காக்கசஸ் பிரதேச மக்களின் வாழ்க்கையை டால்ஸ்டாய் பரிவுடன் கவனித்து வந்திருக்கிறார். பதினேழாம் நூற்றாண்டு முதல் ஜார் அரசர்களின் ஆட்சிக்கும் பின்னர் சோவியத் ஆட்சிக்கும் உட்பட்டிருந்தவை இந்தப் பகுதிகள். அந்த நாட்களில் எல்லாம் மக்கள் சுதந்திரத்துக்காகப் போராடிக் கொண்டிருந்திருக்கிறார்கள் . காலப்போக்கில் காக்கசஸ் மலைவாழ் மக்களைத் தவிர பிற இனங்கள் அவ்வப்போது அமைந்த அரசுகளுடன் ஒத்துப் போயின. மலைப் பகுதியான செச்செனியாவில் வாழும் மக்களிடையே மட்டும் கலகங்களும் போர்களும் தொடர்ந்திருக்கின்றன. மதத்தாலும் மொழியாலும் பண்பாட்டாலும் ரஷ்யர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் அவர்கள். இந்த வாழ்க்கையின் அவதானிப்பிலிருந்துதான் 'ஹாஜி முராத்'எழுதப்பட்டிருக்கிறது. அதை எழுதிய கைகள் ஓர் இலக்கிய ஞானியுடையவை என்பதால் அந்த வரலாறு மனித துக்கத்தின் ஒரு பகுதியாகவும் ஆவணம் பெறுகிறது.

'ஹாஜி முரா'தை டால்ஸ்டாயின் மகத்தான படைப்பு என்று அமெரிக்க விமர்சகர் ஹெரால்ட் ப்ளூம் வியக்கிறார். டால்ஸ்டாயின் மகத்தான நாவல்களான 'போரும் அமைதியும்', 'அன்னாகரேனினா', 'புத்துயிர்ப்பு' ஆகியவற்றை வாசித்திருக்கும் வாசகனுக்கு ப்ளூமின் வியப்பு மிகையானதாகவே தோன்றும். எனினும் 'ஹாஜி முராத்' புறக்கணிக்கமுடியாத படைப்பு. டால்ஸ்டாய் கலையின் கூறுகள் இந்த நாவலிலும் மிளிர்கின்றன. கதாபாத்திரங்களின் மீது ஆசிரியர் கொள்ளும் வாஞ்சை, சிறு பாத்திரங்களுக்கும் துலக்கமான சித்தரிப்பு, நுட்பமான பின்புலத் தகவல்களின் குறிப்பு, வரலாற்றுத் தகவல்களைப் பின் தொடர்ந்து செல்லும் கற்பனை - ஆகிய டால்ஸ்டாய் இயல்புகள் இதிலும் இழையோடுகின்றன. எனில், வாழ்வின் பேரனுபவத்தையும் அது சார்ந்த தார்மீகக் கேள்விகளையும் தன்னுடைய படைப்புகளில் எழுப்பும் அவரது பார்வையின் வீச்சு இந்த நாவலில் குறைவு. அதற்கு மாறாக நேர் முரண்களின் மோதல் அதிகம்.ரஷ்ய மரபுக்கும் இனக்குழு மரபுக்குமான முரண், மேற்கத்திய சிந்தனைக்கும் கீழ்த் திசை நம்பிக்கைகளுக்குமான முரண். இஸ்லாமிய மதத்துக்கும் கிறித்தவ மதத்துக்குமான முரண், ரஷ்ய மொழிக்கு ம் செச்செனிய மொழிக்குமான முரண் என்ற பின்னல்கள் படைப்பு ரீதியாக நாவலுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. காலம் அளிக்கும் முக்கியத்துவமும்'ஹாஜி முரா'துக்கு உண்டு. 

டால்ஸ்டாயின் கடைசி நாவல் நிகழ் காலத்துக்கும் ஏற்றதாக இருப்பது வரலாற்றின் இரக்கமின்மையால். மூன்று நூற்றாண்டுகளாகத் திரும்பத் திரும்ப நடைபெற்றுக் கொண்டிருக்கும் செச்செனிய - ரஷ்ய மோதல்கள் இன்றும் ஓய்ந்த பாடில்லை. இஸ்லாமிய மத உணர்வுகள் மேலோங்கியதுடன் செச்செனியப் போராட்டங்களுக்கு சமகாலத் தொடர்ச்சியும் ஏற்பட்டது. 1994 இல் ரஷ்யப் படைகள் செச்செனியப் பிரதேசத்தின் மீது தாக்குதல் தொடுத்தபோது நேர்ந்த நாசங்கள் கடந்த நூற்றாண்டுகளில் ஏற்பட்டதை விட அதிகம். அது இன்றும் தொடர்கிறது.இடைக் காலத்தில் சின்ன விடுதலையை அனுபவித்த செச்செனியா மீண்டும் ரஷ்யக் கூட்டமைப்பின் கீழ் திணறிக்கொண்டிருக்கிறது. செச்செனியக் கலவரத்தை அடக்குவதற்காக ஜார் அரசு அனுப்பிய ராணுவத்தில் பணியாற்றப் போனபோது பார்த்ததும் கேட்டதுமான நிகழ்வுகளிலிருந்து உருவான தன்னுடைய கற்பனை நூறு ஆண்டுகளைத் தாண்டியும் அப்படியே தொடர்வது டால்ஸ்டாய் என்ற எழுத்தாளருக்கு வெற்றியா? தோல்வியா? போர் என்பது மனிதனின் வெற்றியா? தோல்வியா? இனப் போராட்டங்களில் உயிர்கள் பறிக்கப்படுவது தியாகமா? பலியா? 'ஹாஜி முரா'தை வாசித்து முடிக்கும்போது இந்தக் கேள்விகள் மனதைக் குதறுகின்றன.அவை நாவல் காட்சிகளுக்குச் சமாந்தரமான அண்மைக் கால வரலாற்றுக் காட்சிகளை தமிழ் வாசக மனதில் புரளச் செய்கின்றன. 

கட்டுரையில் இடம் பெறும் மேற்கோள் பகுதிகள் ' Hadji Murad' (Translated by Aylmer Maud - Published by Modern Library, New York) இலிருந்து எடுக்கப்பட்டவை. 

நன்றி: காலச்சுவடு நவம்பர் 2010 & சுகுமாரன்