26 February 2012

யாகாவராயினும் புக்காக்க

ஆன்லைன் விளையாட்டுக்களை ஆடிக்கொண்டிருந்த எதிர் வீட்டுக் குட்டிப்பையன் திடீரென காண்ட்-கண்ட், தெர்தா-சர்தா, ஃபூக்கோ-பூக்கோ என தொடர்ந்து கத்தத்தொடங்கிவிட்டான். அந்த வீட்டுக்காரர்கள் என்னமோ ஏதோ என அரண்டுபோயினர். குடும்ப கெளரவத்துக்கு பங்கம் வந்துவிடாத வண்ணம், கமுக்கமாய் அம்மன் கோவில் பூசாரி முதல் 24மணிநேர கிளினிக்கின் ஈயோட்டி மருத்துவர் வரை எல்லோரையும் முயற்சித்துப் பார்த்தனர். ஏது செய்தும் அவன் கத்தலை நிறுத்த முடியாமல் போகவே, இதுபோன்ற கிறுக்கிருக்கும் வீடு என நினைத்தனரோ என்னவோ தம் கவலையை மெல்ல என் மனைவியிடம் பகிர்ந்துகொண்டனர். 

இவளோ, இதெல்லாம் ஒரு விஷயமா இத்துனை சிறிய விஷயத்திற்கு ஏன் இவ்வளவு அல்லா-குல்லா? இந்த வியாதியோடுதான் நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாய் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இவர்கூட இப்படித்தான் இருந்தார்போல் இருந்து திடீரென ஆவேசம் வந்ததுபோல் சாரு-ஜெமோ-எஸ்.ரா-எம்டிட்ரம் எனப் பினாத்தத்தொடங்கிவிடுவார். ஆரம்பத்தில் நானும் உங்களைப்போல பயந்துதான் போனேன். அப்புறம் டிவியில் எந்திரன் படம் போட்டபோதுதான் சூட்சுமம் பிடிபட்டது என்று கூறியிருக்கிறாள்.

அவர்களோ ஆச்சரியம் தாங்காமல், இதை குணப்படுத்த எந்திரனா? என்று வாயைப் பிளந்தனர்.

அட்டகாசமாய் அதகளம் பண்ணும் எந்திரன் பேட்டரி தீர்ந்துபோனதும் எப்படி துவண்ட வெற்றிலை போல் தொங்கிவிடுகிறான், அதைப்பார்த்ததும்தான் இந்த ஐடியா எனக்குப் பிடிபட்டது. மேசைக் கணினி எனில் பிளக்கைப் பிடுங்கிவிடுவேன் மடிக்கணினி எனில் பேட்டரியைக் கழற்றிவிடுவேன். அதுபோதும்,கொஞ்ச நேரத்தில் சொஸ்தமாகிவிடுகிறார் என்று கூறியிருக்கிறாள்.

அதே வழி முறையைக் கடைப்பிடித்து அண்டைவீட்டார் தங்கள் பையனைக் குணசீலத்திற்குக் கூட்டிக்கொண்டு போகாமலே குணமாக்கிவிட்டார்கள் என்று என்னிடமேப் பெருமையாய்க் கூறினாள் என் மனைவி.

அறையை விட்டு அகலாத பையன் இப்போதெல்லாம் படியிறங்கி சமத்தாகத் தெருவில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிவிட்டானாம்.

அவன் தனது இணைய வாழ்க்கையின் இலக்கிய அனுபவத்தை அப்படியே ஆத்மார்த்தமாய் அர்க் போல் டிஸ்டில் செய்து கவிதை எழுதியிருப்பதாய்க் கூறி என்னிடம் கொடுத்தாள். எழுத்தாளன் என்று சொல்லிக்கொண்டால் எப்படியெல்லாம் படவேண்டி இருக்கிறது பாருங்கள்.

யாகாவராயினும் புக்காக்க

கட்டுரையைப் பார்த்து புக்காக்க ஜெமோ 
புக்கைப் பார்த்துக் கட்டுரையாக்க சாரு
அட்டையைப் பார்த்தே புக்காக்க எஸ்.ரா
எல்லாத்தையும் தத்துவமாக்க எம்டிஎம்
நொட்டை சொல்லி இம்சிக்க 
எதிர்வீட்டு எம்எம்

- குணசீலன்

கவிதையின் மீதி வரிகளெல்லாம் எப்படி எழுதினான் என்று எனக்குப் பிடிபடவில்லை ஆனால் <புக்கைப் பார்த்துக் கட்டுரையாக்க> என்கிற இரண்டாவது வரியை இவ்விரண்டைப் பார்த்துதான் எழுதியிருக்க வேண்டும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

சாருவின் 24 பக்கக் கட்டுரை - சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே

விந்தனின் 207 பக்க புத்தகம் - எம்.கே. டி. பாகவதர் கதை (194லிருந்து 206வரை பக்கங்களில்லை)