05 February 2012

எஸ்.ராவும் தமிழ் நண்டுகளும்

எழுத்தாளரும் இல்லை சினிமாவில நுழைய முயற்சித்துத் தோற்றவரா என்பதும் தெரியவில்லை. இருந்தாலும் வாசகரும் பதிவருமான கோபிக்கு ஏனைய்யா எஸ்.ரா மேல் இத்தனை வயிற்றெரிச்சல்?

சூப்பர்ஸ்டார் விழாவுக்கு வந்த புல்லரிப்பில்தான் எஸ்.ரா ஆண்டர்சனின் தாய் கதையை உளறிவிட்டார் என்று மட்டுமே இதுவரை நினைத்திருந்தேன். ஏதோ பாவம் சினிமா விவாத மூடிலேயே இருப்பதன் காரணமாய், எம்ஜிஆர் டிவிடி பார்த்த நினைவில் ‘என் அண்ணன்’ என்று தவறிப்போய் தருமனைப் பார்த்து கர்ணன் சொல்லிவிட்டான் என்று வாய்தவறி எஸ்.ரா பேசிவிட்டார் என்றுதான் எண்ணி இருந்தேன்.

ஆனானப்பட்ட ஜெயமோகனே இன்னமும் இதிகாசப் பின்னணியை வைத்து நாவல் எழுதாதபோது, உபன்யாசம் போலவே எழுதப்பட்டிருப்பதான பேச்சு இருந்தாலும் உப பாண்டவம் என்பது இரண்டாயிரத்திலேயே எழுதப்பட்ட நாவல் இல்லவா? ஆனால் அதிலேயே இப்படித்தான் தப்புத்தவறுகளுக்கு நடுவில் சில வாக்கியங்களும் எழுதி இருக்கிறார் எஸ்.ரா எனப்படிக்க நேர்ந்து துன்புற்றேன் துயருற்றேன் வாடினேன் வதங்கினேன் நெடுங்குருதி மனதிற்குள் ஆறாகப் பெருகிற்று.

என்ன இருந்தாலும் கோபி வாசகர்தானே என மனதைத்தேற்றிக்கொண்டு,எதையெடுத்தாலும் இருபது ரூபாய் என்கிற ரீதியில், எல்லாவற்றையும் படித்து கருத்து சொல்லி வைத்திருக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் இதைப்பற்றி என்ன சொல்லி இருக்கிறார் எனத் தேடினேன்.

<இவ்வகைபப்ட்ட இந்திய நாவல்களின் வரிசையிலும் பெருமிதத்துடன் வைக்கப்படவேண்டிய ஆக்கம் இது.>

கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். சாட்சாத் உப பாண்டவம் பற்றித்தான் இப்படிச் சொல்லி இருக்கிறார். ஆனால் இப்படியும் சொல்லிவிட்டு,

<இதன் தத்துவ விசாரங்கள், கவித்துவக் கூற்றுகள் மற்றும் நெகிழ்ச்சிகள் சற்று செயற்கையாக ஆகிவிட்டன. அதிலும் கதாபாத்திரங்கள் எல்லாமே ஒரே மாதிரியான உருவக நடையில் பேசவதும், ஒரே மாதிரியான கருத்துக்கள் மீண்டும் மீண்டும் வருவதும் படிப்படியாக அலுப்பூட்டுகின்றன.>

<இந்நாவலில் உள்ள ராமகிருஷ்ணனின் உரைநடை மிகவும் கவனமற்றது. எழுவாயும் பயனிலையும் முரண்படுவது, ஒருமை பன்மை மயக்கம், புணர்ச்சிவிதிகள் மீறப்படுவது முதலியவை தரும் அசௌகரியம் சாதாரணமானதல்ல. இவை மீறப்பட முடியாத விதிகளா என்ற கேள்வி எழலாம். மொழி அகவயமாக எல்லை மீறிப் பாய்ந்து செல்லும்போது இலக்கணங்களை அது படைப்பூக்கத்துடன் மீறும். அது ஓர் அழகும்கூட. அது கவனமின்றியும் இயலாமையாலும் சிதைவது ஏற்கக்கூடிய விஷயமல்ல.>

<அதைவிடச் சிக்கலானது இந்த உரைநடையில் உள்ள படைப்பூக்கம் கைகூடாத தன்மை. படைப்பூக்கம் கைகூடிய மொழியில் அடிப்படையாக உள்ள உத்வேகம் அதன் எல்லா மாறுபட்ட கூறுகளையும் ஓர்அழகியல் ஒழுங்குடன் பிணைத்துக் காட்டும். இதில் அது நிகழவில்லை. மொழிபெயர்ப்புச்சாயல் கொண்ட நவீன மொழி, புராண உபன்யாச மொழி, சம்பந்தமே இல்லாமல் நெல்லை கிறித்தவ மொழி எல்லாம் பிணைந்து மிகச் செயற்கையான நடையை உண்டு பண்ணுகின்றன. அத்துடன் வேறு ஒரு நாவலின் வலுவான பாதிப்புடைய உருவக மொழியும் ஊடாடுகிறது.>

<பலநூறு பக்கங்கள் உடைய ஒருநாவலில் சித்திரிப்புகளில் மீள்தன்மை இருப்பது இயல்பே. ஆனால் ராமகிருஷ்ணன் மீண்டும் மீண்டும் ஒரே குரலில் மாறாத சொற்களில் சித்தரிக்கிறார். (எத்தனை அலைவுகள், மிதத்தல்கள்!) கடைசியாக அவரது சில சொல்லாட்சிகளைக் கூறவேண்டும். ‘கதாநிலவியல்’ ‘கதாஸ்த்ரீகள்’ போன்றவற்றை சமஸ்கிருதமாகவோ தமிழாகவோ கொள்ள முடியாது. மகாபாரதமேயானாலும் தேவையற்ற இடங்களில் கூட பொருத்தமோ அழகோ இல்லாமல் இறைக்கப்பட்டுள்ள ஏராளமான சமஸ்கிருதச் சொற்கள் சங்கடமேற்படுத்துகின்றன.>

<மூன்றாவதாக நாவல் முழுக்கத் தொடர்ந்துபோகும் தேடல் என்று எதுவும் இந்நாவலில் இல்லை. குறைந்த பட்சம் என்ன காரணத்துக்காக இந்த நாவல் எழுதப்பட்டதோ அந்தக் காரணம் தொடர்ந்து இயங்குவதன் தடயம் கூட இல்லை. பிறகு எஞ்சுவது ஒரு எளிய தொழில்நுட்பம் மட்டுமே.>

இதிகாச நவீனத்துவம், எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்

இப்படி குறைகளாய் அடுக்கிக்கொண்டே செல்கிறார்.

பகோடா ஊசிப்போய் விட்டதுதான் ஆனால் அதைக் கட்டிவந்த பொட்டலக் காகிதம் இருக்கே அது ஃபாரீன் நியூஸ் பிரிண்டு என்பதில் என்னையா பெருமை?

திரும்ப கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். ஜெயமோகன் ஜெயமோகனாகவேதான் எப்போதும் இருந்துகொண்டு இருக்கிறார்.

எழுத்தாளனிடம் போய் உண்மையைத் தேடலாமா,அவனே பாவம் சதாசர்வகாலமும் அதை மட்டுமே தேடிக்கொண்டிருப்பதான பாவ்லாவில் அல்லவா காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறான்.வேறு வழியே இல்லை  பதிவர் கோபி R எழுதி இருக்கும் உப பாண்டவம் விமர்சனத்திற்கே திரும்பவேண்டியதுதான். முழுநீள நகைச்சுவை சினிமாவுக்கு சீரியசாய் விமர்சனம் எழுதியதைப்போல இருக்கிறது என்றாலும் சிரித்து மாளவில்லை.

FRIDAY, FEBRUARY 3, 2012 உப பாண்டவம்.

கோபி நிறைய எழுதி இருக்கிறார். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.

“அண்ணா, விளையாட்டின் விதிகள் எல்லோருக்காகவும் ஏற்படுத்தப்படுவதில்லை. அவை பொதுவானவை”

முற்றுப்புள்ளிக்கு முன்னாலும் பின்னாலும் இருப்பவை இரு வேறு விஷயங்கள் போலும் எஸ்.ராவின் உலகத்தில்.

“எந்த மலருமற்ற அந்த சுகந்தத்தை யாவரும் முகர்ந்தனர்”

எப்படி சார் எப்படி இப்படியெல்லாம் எழுத முடிகிறது?

“அவன் எல்லா மனிதர்களைப் போலவே மிக மெலிந்தவனாகவும், கூரிய கண்கள் கொண்டவனாகவுமாக இருந்தான்”

மகாபாரதம் நடந்த காலத்தில் எல்லோரும் எஸ்.ரா போல இல்லாமல் ஈர்க்குச்சியாய் இருந்தார்களோ?

கோபி கொடுத்திருக்கும் இந்தப் பகுதி இருக்கிறதே ‘ஏ’ கிளாஸ்.

‘ஏ’ விகுதியின் மேல் அப்படியென்ன மோகமோ?. பலமுறை அது திரும்பத் திரும்ப வருகிறது. சில சமயங்களில் ஒரே பத்தியில். கீழே உள்ளது ஒரு நல்ல உதாரணம்.

“சமையல் கூடத்தின் நெருப்பு அணைக்கப்படுவதேயில்லை. எரிந்து கொண்டேயிருக்கிறது. அதன் வெக்கை தாளாது உடல் கொப்பளித்த சமையல் ஆட்கள் ஈரத் துணிகளால் உடலைப் போர்த்திக் கொண்டே அலைகிறார்கள். தானியங்கள் அரைபட்டுக் கொண்டே இருக்கின்றன. கொதித்துக் கொண்டே இருக்கிறது அடுப்பு. தீராத உணவின் தேவை பசியைப் போக்கிடவே முடியவில்லை"

நடிகர் சிவக்குமார் உணர்ச்சிவசப்பட்டு நடுங்கும் குரலில் பேசுவதற்காக எழுதப்பட்ட வசனமாய் எஸ்.ரா எழுதி இருப்பதாய் இதைக் கற்பனை செய்துகொண்டு வாய்விட்டுப் படியுங்கள். ஆயுள் நீட்டிப்புக்கான சிறந்த பயிற்சியாக இது அமையும்.

<அரக்கு மாளிகையில் வேடுவச்சியும் அவளுடைய ஐந்து மக்களும் இறந்து போகின்றனர். திருதராஷ்டிரன், காந்தாரி ஆகியோர் இதே போலத் தீயில் எரிவார்கள் என்று அந்த வேடுவச்சியின் கணவன் சாபமிடுகிறான். அந்த இருவரின் முடிவையும் அரக்கு மாளிகை சம்பவத்தையும் கோர்த்தது நல்ல கற்பனை. கிட்டத்தட்ட இதே போன்றதொரு கற்பனையை இந்தப் பதிவில்குறிப்பிடப்பட்டிருக்கும் கதையிலும் காணலாம்.>

இந்த இடத்தை கோபி போதுமென்ற மனதோடு நிறுத்திக்கொண்டுவிட்டார் போலும்.

அது என்னைய்யா, திருதராஷ்டிரன் காந்தாரிக்கு மட்டும் சாபம்? அதுவும் அவர்களது மக்கள் செய்த பாவத்திற்கு?

அரக்கு மாளிகையை எரிக்கப்போகிறார்கள் என்பது ஏற்கெனவே தெரிந்த காரணத்தால், பாண்டவர்கள் பலியாகிவிட்டதான தோற்றத்தை உருவாக்க, வேடுவக் குடும்பத்தை அங்கே வரவழைத்த முதல் குற்றவாளி யார்?

எரித்தது கொளரவர்கள் என்றாலும் தன் மக்களைக் காப்பாற்ற, செத்த பிணங்களின் கணக்கைக் காட்ட, வேடுவக்குடும்பத்தைத் தந்திரமாய் பலியாக்கியது யார்? குந்தி அல்லவா?

கலைஞன் குறி அங்கே அல்லவா ஐயா நிலைத்திருக்க வேண்டும்.

மகாஸ்வேதா தேவியின் கண்டணம் மையப்பட்டிருப்பது எங்கே என்று பாருங்கள். ’குந்தியும் நிஷாதப் பெண்ணும்’

எழுத்துக்காக விருதுகள் வழங்கப்படுவது உண்டு. விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன எனவே இவர் எழுத்தாளராகத்தான் இருக்கவேண்டும் என்பதும் சமயங்களில் நடப்பதுண்டு. மகாஸ்வேதா தேவியின் எழுத்துக்காக ஞானபீடம் வழங்கப்பட்டது.  பின்னது, ரஜினி சொன்ன கிரியேஷன் கிரியேட்டர் தத்துவம்போல புக்கு இருக்கிறது எனவே புக்காளன் என்று இருக்கிறான்.

எப்போதோ வாங்கிய கைமாத்தைத் திருப்பித்தர எஸ்.ரா மறந்துவிட்டிருக்க வேண்டும்.அதை மனதில் வைத்துக்கொண்டுதான் கோபி இப்படி எழுதிக்கொண்டிருக்கிறார்போலும். இல்லையெனில் கலப்படமில்லாத அசல் வயிற்றெரிச்சல்காரனான என்னுடைய கூகுள்பிளஸ்ஸிலும் வந்து இப்படி எழுதிவிட்டுப்போவாரா இந்த கோபி?


எப்படி இந்த மாதிரி என்று யோசித்தபோது விடை கிடைத்தது. குந்தி சூரசேனனின் புதல்வி. வாசுதேவரின் தங்கை. கிருஷ்ணரின் பல பெயர்களில் வாசுதேவனும் ஒன்று. உபபாண்டவம் எழுதும்போது கிருஷ்ணனின் தங்கை குந்தி என்று எழுதிவிட்டார் போலும். தீர்ந்தது விஷயம்:-)

சுபத்ரா கிருஷ்ணனின் தங்கையாயிற்றே, அர்ஜுனன் அவள் கணவனாயிற்றே, சித்தி முறை உள்ள ஒரு பெண்ணை அவன் திருமணம் புரிந்துகொண்டானா என்றாவது யோசித்திருக்கலாம்.
11:38 AM (edited)>
https://plus.google.com/u/0/110744683177357188353/posts/KMimVaLWgxW

அகநாழிகை வாசுதேவனை எழுத்தாளர் எஸ்.ராவுக்கு தெரியாமல் போனது தான் எவ்வளவு துரதிருஷ்டம்?

தெரிந்திருந்தால் மகாபாரத காலத்தில் சமகால மதுராந்தகத்தை வெல்டு பண்ணி காலங்களைத் தகர்த்த காப்பியமாகவும் உப பாண்டவம் உருவாகியிருக்கும்தானில்லையா?