22 February 2012

கதை சொல்லும் கார்ட்டூன்

Courtesy The Hindu February 22, 2012

சுரேந்த்ராவின் கை என்னமாய் விளையாடியிருக்கிறது. கருத்தை விடுங்கள் அதைச் சொல்ல ஆயிரம்பேர் இருக்கிறார்கள்.

அந்தக் குடும்பம் பற்றிய அவரவர் கருத்து பற்றிய வெளிப்பாட்டில் கோடுகளும் குறிப்புகளும் என்னமாய் ஒத்திசைந்து முழுமையை நோக்கி முன்னுகின்றன.

கதவு திறந்ததும் நேராக ஹால் இருக்கும் பெரும்பாலான ஃப்ளாட்டுகளின் பிரதிநிதித்துவம். 
ஹாலிலும் ஏஸி வைத்திருந்தாகவேண்டிய டஞ்சன்.  
காலண்டரற்ற துணியலங்காரத்தொங்கலில் தெரியும் உயர் மத்தியதர வர்ககத்தின் பாலுமகேந்திரா மணிரத்தின பிராண்டு கலாரசனை 
உயர் மத்தியதரத்தின் அடையாளமாய் கணினியின் மானிட்டரும் டிவியும் எல்.சி.டியில்.
டிவி போக தனி இசைக்காகவென்று இருக்கும் ஸ்பீக்கர்கள். டிவிக்கு மட்டுமே  கொடுக்கப்பட்டிருக்கும் சத்தக்கோடுகள்.
கிரிக்கெட் பார்க்க டிவியிலிருந்துவரும் ஒலியே போதும் என நினைக்கும்  மத்தியதர வர்க்க சிக்கண மனம்.
டிவியின் கீழே சுவரின் அடிப்புறத்தில் பாதி தெரியும் பட்டையில் இரண்டு பிளக்குகள்.
வீட்டுப் பெண் பேசுகிறாள் என்பதற்காக அவள் வாயில் குட்டியாய் பிளவு.
அண்டைவீட்டுப் பெண்மணி வெளியில் கிளம்பிப் போய்க்கொண்டிருக்கையில் தற்செயல் பேச்சு என்பதற்காக அவரிடம் குட்டி கைப்பை.
வாசலிலேயே நின்றபடியான அப்பார்ட்மெண்ட் பேச்சு. 
ஒருக்களித்த கதவைப்பிடித்தபடி லாகவ நிற்றலின் கால் மடக்கல்.. வெளிப்புரத்தின் வெளிச்சத்தால் கதவு, சுவரில் பூசிய நிழல். 
கதவைப் போலவே டிவிக்குப் பின்னால் சுவரில் விழும் சரிந்த நிழல்.
ஏஸிக்குக்கீழே சரியும் குட்டி நிழல்.
சோபாக்களுக்கு அடியிலும் குப்புறக்கிடக்கும் பையனுக்கடியிலும் என தேங்கியிருக்கும் நிழல்கள். 
அணைந்திருக்கும் கணினி மானிட்டரில் கொடுக்கப்பட்டிருக்கும் மங்கிய பளபளப்பு.
நாற்காலியின் முதுகில் பாதி மறைந்த கணினிக்குப் பக்கத்தில்தான் கார்ட்லெஸ் மெளஸ் இருக்கிறதான அனுமானம். 
வீட்டினுள் இருக்கும் டைல்ஸுக்குக் கம்மியாய் வெளிப்புர நடைவழி.
அப்பனும் பெண்ணும் தத்தம் அட்டைகளுக்கேற்ப டெஸ்ட்டு மற்றும் அனைத்துவகை கிரிக்கெட் ஆட்டங்களுக்கென நெடுநேரம் டிவி எதிரில் செலவிடுவதால் கண்ணாடியோ?
சுண்டுக்குக் கார்ட்டூன் நெட்வொர்க்குக்கு இடையில் குறைந்த பொறுமை யுடன் மட்டுமே பார்க்க முடியும் என்பதால்தான் அதன் தேர்வு டி20 போலும்.
ஒவ்வொரு பாத்திரத்திற்கும் கொடுக்கப்பட்டிருக்கும் உடற்பாங்கு கால்மேல் கால்போட்டு, கால மடக்கி சோபாவில் வைத்து, கால்களைப் பின்னியபடி குப்புறபடுத்து என அதனதன் பரிமாணத்தைக் காட்டுகிறது.

சுரேந்த்ரா நம்மை நிற்க வைத்திருக்கும் இடம் டைனிங் டேபிளருகில் போலும்.
காட்டப்படாத திறந்திருக்கும் சாப்பாட்டறைக் கதவைப் பக்கவாட்டு ஃப்ளெவர் வாஸ் மூலம் உருவாக்கி விட்டிருக்கிறார்.

பெரும்பாலோர் இவற்றைத் தனித்தனியாகப் பார்த்துத் துய்க்காமல் தாண்டிப்போய்வ்விட்டிருக்க சாத்தியம்தான். ஆனால் அவர்களின் உள்ளுணர்வில் முதல் பார்வையிலேயெ முழு நிறைவு உருவாக இவ்வளவும் அவசியம் என்று நினைக்கிறான் கலைஞன்.

நுணுக்கங்களையும் நுட்பங்களையும் எந்தக் கலைஞனும் சுயலயிப்பில் தோய்ந்தே உருவாக்குகிறான். கண்டுகளிப்பதற்கான கண்களை ஒருவர்கூடவா உருவாக்கிக்கொள்ளாமல் போய்விடுவார்கள் என்கிற எளிய எதிர்பார்ப்புடன்.