08 February 2023

சார்ந்தும் சாராமலும்

"மாமல்லன் எழுதும் ஆபீஸ் நாவல் தொடர் மெட்ராஸ் பேப்பரில் யாரும் படிக்கிறீங்களா"

சில நாட்களுக்குமுன், காலையில் இப்படியொரு செய்தி வந்தது வாட்ஸப்பில். 

அ வெற்றிவேல் என்கிற இவரை, நான் இணையத்திற்கு வந்த நாளிலிருந்தே தெரியும் எனலாம். இலக்கியம் படிக்கிற உடன்பிறப்பு. உபியாக இருந்தாலும் இலக்கியமும் படிக்கிற பார்ட்டி. தீவிர திமுக. திராவிடமாக இருந்தும் ஒருவர் தீவிர எழுத்தையும் படிக்கிறாரே என்ன பாக்கியம் என்று இலக்கியவாதி திருப்திபட்டுக்கொள்ளவேண்டியதுதான். 

சிலிர்த்தபடியே இருக்கும் சீமானின் மாமனாரான காளிமுத்து, ஜேஜே சில குறிப்புகளை பாராயணம் பண்ணுவதைப் போல படித்தவர். இதனால் காளிமுத்துவிடம் நிகழ்ந்த மாறுதல் என்ன. அரசியல்வாதிகள் படிக்கிறார்கள் என்று பேஸ்புக்கில் போஸ்ட் போட்டு காலச்சுவடு கண்ணன் ஈஷிக்கொள்ளலாம். அது விளம்பரத்திற்காகும். அரசியல் அதிகாரத் தொடர்புகள் வியாபாரத்திற்காகும். அமைச்சரே ஜேஜேவைப் படித்திருக்கிறார் என்பதில் சுந்தர ராமசாமிக்கு என்ன பெருமை. 

அமைச்சராக அவைத்தலைவராக இருந்தவர் பைபிளைப்போல தினந்தோறும் படிப்பதாகச் சொல்லிக்கொண்டாலும் சுண்டல் போல கண்டவனும் வாங்குகிற சாகித்திய அகாதெமிகூட சுந்தர ராமசாமிக்குக் கிடைக்கவில்லை என்பதுதானே நிதர்சனம். சீர்வரிசையாக வந்ததைப்போல சிலர்   மட்டுமே நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆண்டு அனுபவித்துவரும் சாகித்திய அகாதெமியின் விருதை வானம்பாடி கும்பலில் வாங்காதவர்களை விரல்விட்டு எண்னிவிடலாம். ஆனால், பிரமிள், ஞானக்கூத்தன் என்று நவீன கவிஞர்கள் எவருக்காவது கொடுக்கப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. வானம்பாடி கும்பலில் எதுவும் கதை எழுதாததால், ஒப்புக்காவது தப்பின நவீன தமிழிலிக்கியத்தின் முக்கிய பகுதிகளான சிறுகதைகளும் நாவல்களும். 

இலக்கியரீதியாக செய்த காரியங்களால் காலத்திற்கும் நிற்கவல்லவை கசடதபற போன்ற எண்ணிறைந்த இலக்கியச் சிறுபத்திரிகைகள். 'கசடதபற'விற்கு எதிராக நின்ற வானபாடிகள் இலக்கியரீதியாக தோற்றதற்கு வன்மத்துடன் பழிதீர்த்துக்கொள்வதைப்போல நவீன கவிஞர்கள் எவருக்கும் கொடுத்துவிடாமல், தமிழ் நவீன கவிதை தமிழைத் தாண்டி வெளியில் சென்றுவிடாதவண்ணம், தப்பித்தவறியும் சாகித்திய அகாதெமி விருதைக் கொடுத்துவிடாமல் கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொண்டனர். ஆனால் பாருங்கள், பரிசுத்த திராவிட உலகமோ பாப்பான்கள்தான் ஆபத்தானவர்கள் என்று இணையத்தின் ஒரு இண்டு இடுக்கு விடாமல் எல்லா பக்கமும் ஜெபித்துக்கொண்டு இருக்கிறது.


"மாமல்லன் எழுதும் ஆபீஸ் நாவல் தொடர் மெட்ராஸ் பேப்பரில் யாரும் படிக்கிறீங்களா" என்று கேட்பதிலிருந்தே தெரிகிற முதல் விஷயம்: 'யாராவது' - இது யாரோ 'ஒருவருக்கு' அனுப்பப்பட்ட செய்தியன்று, ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்பப்படும் ப்ராட்காஸ்ட் செய்தியென்பது. 

அதில் தவறில்லை. என் ப்ராட்காஸ்ட் பட்டியலில் நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் இந்த அ. வெற்றிவேலும் ஒருவர். இதை எனக்கும் சேர்த்துக் கைத்தவறுதலாக அனுப்பியிருக்கிறார். என்னைப்பற்றிய விசாரிப்பை எனக்கே அனுப்பியிருப்பது சிறிய நகைச்சுவை. இருந்துவிட்டுப் போகட்டும்.

இப்போதைய தலைமுறைதான், மானம் மிகுத்துப் போனதன் காரணமாக, வளைக்காமல் எல்லா வார்த்தைகளையும் கட்டை கட்டையாகத் துண்டுத் துண்டாக எழுதுகிறார்கள் என்றால் என் வயதொத்த இவருக்கு, நாவல் தொட'ரை' என்று வளைக்க என்ன கேடு. இவரும் நாவல் தொடர் படிக்கிறீர்களா என்று தமிழ் 'ஊடகர்ஸ்' போலவே எழுதுகிறார். இதுவும் போய்த்தொலையட்டும். 

படிக்கிறீர்களா என்பதன் மூலமாக நகுலன் போல எதோ சொல்ல வருகிறார் என்று தெரிகிறது. என்ன என்றுதான் புரியவில்லை. அவரவர் மனதிற்கேற்ப நல்லதாகவும் எடுத்துக்கொள்ளலாம் அல்லதாகவும் எடுத்துக்கொள்ளலாம். வாட்ஸப் மெசேஜிற்கும் லைவ் இருந்திருந்தால் முகபாவத்தை வைத்து வாழ்த்தா வசையா என்பதைப் படிக்க வாய்ப்பிருக்கும். அதுவும் இதிலில்லை. 

எனவே, வேறு வழியின்றே அவருக்கே வாட்ஸப் கால் செய்தேன். 

என்ன, ஆபீஸ் பத்தின விசாரிப்ப எனக்கே அனுபிட்டீங்க என்று சிரித்தேன். 

நான் ஒரு வாசிப்புக் குழுமம் வெச்சிருக்கேன். அதுல போட்டது, தவறுதலா உங்களுக்கும் வந்திட்டுது என்றார். 

நீங்க நடத்தற வாசிப்புக் குழுமம் பூரா திமுகவாயில்ல இருப்பாங்க. அவங்கெங்க என்னை படிக்கப் போறாங்க என்றேன். 

திமுகக்காரனை விட்டா இலக்கியம் படிக்க எவன் இருக்கான் இங்க என்று ஒரே போடாய் போட்டாரே பார்க்கலாம். 

விளக்கும் வெளிச்சமும் புத்தகத்தை முன்பதிவு செய்து வாங்கிய 50-60 பேர்களில் ஒருவர் தீவிர பிஜேபி இன்னொருவர் விஷ்ணுபுரம் இரண்டு வாங்கிய ஒருவர் சாரு வாசகர் வட்டம். இவர்களைப் போலவே ஒருவர் தீவிர திமுகக்காரர் என்பதால் அமைதியாகிவிட்டேன். 

வாசகர்களுக்கு அரசியல் சார்பு இருக்கலாம். எழுத்தாளனுக்கு இருக்கக்கூடாது என்பது என் திண்ணமான எண்ணம்.