24 February 2023

ஆபீஸ் - அத்தியாயம் 12 ரெட் லைட்

சுர்ரென்று ஏறிற்று. 

நீங்கள் ஏசி, இவர்கள் சூப்பிரெண்டெண்ட்டுகள், என்பதைப் போல நான் எல்டிசி. இதில் எங்கிருந்து வந்தது ஆஃப்ட்டரால் என்று உரக்கச் சொன்னான். 

யூ கேன்னாட் ஷவ்ட் அட் மீ என்று அவர் கத்தினார். 

நீங்கள் கத்தாமல் கேட்டால் நானும் கத்தாமல் சொல்வேன். 

எப்படிப் பேசுகிறான் பார்த்தீர்களா. 

திரும்ப கெழபோல்டு எதோ சொல்ல வாயெடுத்தது. அவன் முகம் கன்னிச் சிவந்திருந்ததைப் பார்த்து. எனக்கேன் வம்பு எக்கேடும் கெட்டுப்போ என்று சும்மா இருந்துவிட்டது. 

ஏசி, நான் கண்டிப்பாக இருக்கச் சொல்லியும் ஏன் போனாய் என்று திரும்பக் கத்தினார். 

சாவித்ரி மேடம் இல்லை சாட்சாத் கடவுளே வந்து அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அதனால்தான் போனேன் என்று சொல் எனச் சொன்னாலும் கேட்கிற மனநிலையில் அப்போது அவன் இல்லை. 

ஐந்து நிமிடம் லேட்டாக வந்ததற்கு அரை நாள் லீவ் எழுதிக்கொடுத்துவிட்டு சீட்டில் உட்கார்ந்து வேலையும் பார்க்கவேண்டும் என்று சொன்ன உங்களுக்கு ஆபீஸ் நேரத்தைத் தாண்டி வேலை செய்யவேண்டும் என்று சொல்ல என்ன உரிமை இருக்கிறது.

எல்லோரும் வாயடைத்து பார்த்துக்கொண்டு இருந்தனர். 

அரசு ஊழியனைப் போலவா இருக்கிறது உன் நடத்தை. கொடி பிடிக்கிற டிரேட் யூனியனிஸ்ட் போல அல்லவா நடந்துகொள்கிறாய். 

உள்ளதைச் சொல்வது உங்களுக்கு டிரேட் யூனியனிஸ்ட் போலத் தோன்றினால் நான் என்ன செய்ய முடியும் என்று பதிலளித்தது, பணிவாகச் சொன்னதாகத்தான் அவனுக்குப் பட்டது.