15 February 2023

ஆபீஸ் - அத்தியாயம் 3 முதல்நாள்

சித்திரகுப்தன் பேரேடு என்று கேள்விப்படாதவர்களே இருக்கமாட்டோம். அதேதான் மத்திய அரசாங்கத்தில், சர்வீஸ் புக் என்கிற நாமகரணத்தில் இருக்கிறது

(வித்தியாசமாகப் பார்க்கவேண்டாம் சந்திரன் ஆண்டாலும் சூரியன் ஆண்டாலும் மத்திய அரசில் இந்திதான் அலுவல் மொழி. அதன் அப்பா-தாத்தாதான் சமஸ்கிருதம். எனவே அரசாங்கக் கதையும் அதை அனுசரித்துப் போவதே அனைவருக்கும் அனுகூலம். அதெல்லாம் முடியாது என்று முரண்டிக்கொண்டு நின்றால் இந்தக் கதையின்அவன்போல நாமும் அவஸ்த்தைப்படவேண்டியிருக்கும். ஒரு வேளை நீங்கள் கூட அவஸ்த்தைப்படத் தயாராய் இருப்பீர்களாய் இருக்கும். நான் தயாரில்லை. என் வேலை சும்மா ஒரு கதை சொல்லிவிட்டுப் போவதுதானே. எனக்கெதற்கு வழக்கு வியாஜ்யம் என்று அரசாங்கத்துடன் வீண் பொல்லாப்பு).

ஆகவே, சித்திரகுப்தனாகப்பட்டவன்எல்லாருக்கும், பொறந்த டைம்லையே போகப்போற டைமையும் எழுதிடறான்என்பது சாதாரண ஜனங்களின் தத்துவார்த்த வார்த்தை. அதே தான் இங்கும்

ஒருவர் வேலைக்கு சேர்ந்த உடனே, இதற்கென்றே பிரத்தியேகமாக அச்சடித்து வைக்கப்பட்டிருக்கும் பேரேட்டைத் திறந்துவிடுவார்கள். அட்டையைப் புரட்டியதும்   வருகிற முதல் பக்கத்தில், அவர் யார் என்ன என்கிற - அவர் ஓய்வுபெறப்போகிற தேதி உட்பட - அவரது ஜாதகமே அதில் எழுதப்பட்டுவிடும். இதற்கென்றே இயங்குகிற பிரிவின் பெயர்தான் சர்வீஸ் புக் செக்‌ஷன். அதில்தான் அவனுக்கு முதல் போஸ்ட்டிங்.