23 February 2023

ஒழுங்காய் இருந்த அமேஸான்...

செவ்வாய் மதியம் 12:30 மணி வாக்கில் அமேஸானில் 2 கேஜி கோத்தாஸ் காபி பெளடர் ஆர்டர் செய்தேன். அன்றிரவே 8 - 12PMக்குள் டெலிவரி என்றது ஆப்பு.  

இரவு வரவில்லை. சரி காலையில் வரும் என்று பார்த்தால் வரவில்லை. மதியமும் வரவில்லை. என்ன ஆயிற்று என்று ஆப்பைப் பார்த்தால் வாங்க மறுத்துவிட்டதால் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாகவும் 3-5 வேலை நாட்களுக்குள் 1,072 ரூபாய் திருப்பிக்கொடுக்கப்படும் என்றும் இருந்தது. 

கொய்யால நாம் எங்கே நிராகரித்தோம் என்று மண்டை சூடாகி, கஸ்டமர் கேரை தொடர்புகொண்டு காச்சு மூச்செனக் கத்தியதில் எதிர்முனையில் மரண அமைதி. இரண்டு மூன்றுமுறை திரும்பத்திரும்ப அடித்து, எனக்கு ரீஃபண்ட் வேண்டாம் காபிதான் வேண்டும், காபி இல்லாமல் மண்டை காய்கிறது உடனே அனுப்புங்கள் என்று கத்தினேன். 

சாரி சார் அதற்கு வழியில்லை. நீங்கள் புதிதாகதான் ஆர்டர் செய்யவேண்டும். 

என்ன அநியாயம் இது. குத்துக்கல்போல வீட்டில் உட்கார்ந்திருக்க டெலிவரியே செய்யாமல் நான் வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டேன் என்று பழியை என் மீதே போடுவது எந்த ஊர் நியாயம். 

சாரி என்னவென்று பார்க்கிறோம். 

என் 1000 ரூபாயை ஒருவாரம் வட்டி இல்லாமல் இவர்கள் சுற்றில் விட்டு சுழற்றிக்கொள்ள இப்படியொரு வழியா என்று ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. 

வேறு வழியில்லை, காலையில் காபி வேண்டுமே என்பதால் எழவே என்று திரும்ப ஆர்டர் போட்டேன். நேற்று மதியம் 500 கிராம் 268 ரூபாயாக இருந்த அதே அய்ட்டம் இப்போது 285 ரூபாயாக ஆகிவிட்டிருந்தது.  எதோ ஒரு இழவு என்று 1,140 அழுதுவைத்தேன். 8-10PMக்குள் டெலிவரி என்று இருந்தது. 

இவ்வளவு கத்தி உயிரை விட்டதற்கு ஒரே லாபம் இந்த முறை ஆர்டருடன் தொடர்பு எண் கொடுக்கப்பட்டிருந்தது. 

8:45PM ஆகியும் வரவில்லையே என்று கொடுத்திருந்த எண்ணுக்கு அடித்தேன். 

கேட்லதான் சார் இருக்கேன். அட்ரஸ் எழுதிக்கிட்டு இருக்கேன் என்றார். 


வந்தவரிடம் என்னதாங்க ஆச்சு என்றேன். 

தெரியல சார், என்று நகர பார்த்தவரிடம், அது எப்படிங்க, வீட்ல இருக்கும்போதே, கேக்காம கொள்ளாம, வேணாம்னுட்டாங்கனு திருப்பி எடுத்துக்கிட்டுப்போனா என்னங்க அர்த்தம். கார்ப்பரேட் கம்பெனியே இப்படி நடந்துக்கிட்டா எப்படி என்று, கிண்டிலில் ராயல்டி படியை கரெக்டாக அளக்கிறானே என்கிற பாசத்தில், வேலைக்காரன் தப்பு என்பதைப்போல தீவிர முதலாளித்துவனாகக் குமுறினேன். 

சார் நாங்க அமேஸான் இல்லே. வெண்டார் என்றார். 

வெண்டார்னா. காண்ட்ராக்ட்டா. 

ஆமா சார். ஒவ்வொரு ஏரியா ஃப்ரெஷ்ஷுக்கும் இப்படி நாலஞ்சு வெண்டார் இருப்பாங்க. 

ஓஹோ. சரிங்க. ஏன் நேத்தைய வெண்டார் வராமையே வந்து நான் வேணாம்னு சொன்னா மாதிரி சொன்னாரு. 

யார்னு தெரியல சார். ஒரே ஒரு ஆர்டரா இருந்தா சமயத்துல ரெவ்யூஸ் பண்ணிடுவோம்.  

அடப்பாவிகளா. போகமுடியாதுனு நீங்க ரெவ்யூஸ் பண்றதைத்தான், கஸ்டமர் ரெவ்யூஸ் பண்ணிட்டதா, வெண்டார் சொன்னா மாதிரி எங்களுக்கு அல்வா குடுத்துடறானா இந்த அமேஸான் அயோக்கியப் பய.

முன்ன மாதிரி இல்ல சார். முன்ன மாசத்துக்கு சேத்து குடுத்துக்கிட்டு இருந்தான். அப்பறம் கிலோமீட்டருக்கு ஆறு ரூவானு மாத்தினான். இப்ப, டெலிவரிக்கு 28 ரூபாய்னு மாத்திட்டான். தாம்பரத்துலேந்து சோழிங்கநல்லூருக்கு 28 ரூபாய்ல டெலிவரி பண்ணமுடியுமா. அட்லீஸ்ட் 5, 6 டெலிவரி இருந்தா சமாளிக்கலாம். டூவீலர்னா கூட பரவாயில்ல. டார்ட்டாய்ஸ் வண்டில வரோம். டீசல் போட்டு கட்டுமா. இப்ப கூட தாம்பரத்துல இருந்து கெளம்பினதுல பெரும்பாக்கத்துல ஒரு டெலிவரி, அடுத்து உங்களுது. இங்கேந்து ஈஞ்சம்பாக்கத்துல ஒண்ணு, இன்னோண்ணு நேரெதிர்ல இந்தப் பக்கம் போய்ட்டு, திரும்ப தாம்பரம் போயாகணும். 

அதுக்காக இப்படிப் பண்ணினா அமேஸான் உங்க மேல ஆக்‌ஷன் எடுக்கமாட்டானா. 

28 ரூபாய்க்கு டார்ட்டாய்ஸ் வண்டிக்கு டீசல் போட்டு ஓட்டமுடியாதுனு அவனுக்கும் தெரியுமில்ல. இதாச்சும் பரவாயில்ல தாங்கற பொருள். காய்கறிய நெனச்சுப் பாருங்க. 

அமேஸானுக்கும் நஷ்டம். கஸ்டமர் கிட்டயும் பேர் கெட்டுரும். 

என்ன பண்றது, என்று எல்லோருக்கும் பொதுவாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். 

'என்ன பண்றது' என்று ஓலா ஊபர் டிரைவர்கள் கேன்ஸல் செய்துகொண்டே இருப்பதைப்போல அமேஸான் வெண்டார்களும் ஆரம்பித்துவிட்டார்கள்போல. 

காபி பொடி கொடுத்தவர் போய் பல மணி நேரம் கழித்துதான் இதை எழுதுகிறேன். எனக்கென்னவோ நேற்று கேன்சல் செய்தவர் இவராகவேக்கூட இருப்பாரோ என்று அப்போதே தோன்றிய சந்தேகம் இன்னும் தீர்ந்தபாடில்லை. ஆனால், நேற்றளவுக்கு இப்போது கோபமில்லை. ஓலா ஊபர்காரர்களைப்போல இவர்களும் வேறு என்னதான் செய்வார்கள். 

இனி, அன்றே தருகிறேன் என்று அமேஸான் ஃப்ரெஷ் காட்டியதும் ஆகா என்று அலைந்து செலக்ட் செய்யாமல், ஒன்றும் அவசரமில்லை நாலைந்து ஆர்டர்கள் சேர்ந்த பிறகு  கொண்டுவந்துகொடு பரவாயில்லை என்று 'நாளையை' தேர்வு செய்வதே - பொருளும் வராமல், என் பணமும்  என் கண்ணெதிரிலேயே ஒரு வாரத்திற்கு அபேஸ் ஆகாமல் தப்பிக்க - ஒரே தீர்வாக இருக்கும் என்று தோன்றுகிறது.