18 February 2023

ஆபீஸ் அத்தியாயம் 9 ஆபீஸ் டைம்

எட்டு மணி நேரத் தூக்கம். எட்டு மணி நேர வேலை. மிச்சமிருக்கிற எட்டு மணி நேரம் மட்டுமே அவனுக்கு. அதுவரை அப்படியில்லை. தூக்கம் தவிர நாள் முழுவதுமே அவனுடையதாக இருந்தது. இப்படி இருக்கவேண்டும் அப்படி இருக்கவேண்டும் என்கிற எந்தக் கட்டுப்பாடும் இருந்ததில்லை. 

ஆபீஸ் இப்படி இரு என்கிறது. இல்லையேல் சிறுவயதில் அப்பா மிரட்டியதைப் போல அத்தா பண்ணிவிடுவேன் என்கிறான் அதிகாரி. சிவசுப்பிரமணியை தூக்கி வீசிவிடுவேன் என்றான். அவனுடைய அட்டன்டன்ஸை தூக்கி வைத்துக்கொண்டுவிட்டான். 

ஆபீஸ் என்றால் அதிகாரம், அதிகாரி. ஒன்றரை மணி நேர இடைவெளியில் கேண்ட்டீன் டீ காபி வடை பஜ்ஜி போண்டா. மதியமானால் சாப்பாட்டு டப்பா. டப்பாவைத் திறந்தால் தொட்டுக்கொள்ள வெட்டிப் பேச்சு. வாயைத் திறந்தால் பாலிட்டிக்ஸ், சினிமா. அரசியல் என்றால் கருணாநிதி எம்ஜிஆர். சினிமா என்றால் ரஜினி கமல். கிளுகிளுப்புக்கு, கூட வேலை செய்கிறவர்கள் பற்றியே செக்ஸ் வம்பு. கலை இலக்கியம் தெரியாதரசனையே இல்லாத அசட்டு சோத்துப் பட்டாளம். 

இதுகளுடன் சேர்ந்தால் சத்தியமாக எழுத்து போய்விடும். இலக்கியத்தை எடுத்துவிட்டால் ‘தான்’ என்ன? ஒன்றுக்கும் உதவாத குப்பையல்லவா. 

ஆபீஸ் அத்தியாயம் 9 ஆபீஸ் டைம்