10 January 2011

ஸ்கூட்டரில் வந்த தோழர்

பிரமிள்
நவீன தமிழின் தலையாய கவி



ஸ்கூட்டரில் வந்த தோழர்

கால்நடைக்காரன் என்னை,
குறி, பார்த்து வந்தது
அவரது ஸ்கூட்டர்.
தோழர் அவர் எனக்கல்ல. எனவே
நின்றபடி ஓடும்
எஞ்ஜினுடன் ஓடவிட்டார்
இயங்கு இயல் வாதத்தை-
’நீ பூர்ஷ்வா
உன் அப்பன் பூர்ஷ்வா
உன் பாட்டன் முப்பாட்டன்
உன் பரம்பரை
பூராவும் பூர்ஷ்வா
பூ ஊ ஊ ஊர்ஷ் வாஹ்!’ என்றார்.
’நீ?’ என்றேன்.
’நானா?’ என்று
பிரேக்கை ரிலீஸ் பண்ணி
‘நான் ஒரு லெப்ட்...’ என்று
பள்ளத்தே பாய்ந்த
முன்சில்லைத் தூக்கி
‘டிஸ்ட்’ என்று எம்பினார்.
‘டூ’...என்றார் ‘டா’ என்றார்.
பறந்தார் ஸ்கூட்டரில்.
பள்ளம் பார்த்துப் பாதை பிடித்து
நடந்தேன் நான்.

- பிரமிள்

(1986)
மீறல், அக் 1993.

ச்சும்மா இடக்கையால் அடித்துவிட்டுப் போகும் கவிதை. ஆனால் ஒவ்வொரு வார்த்தைத் தேர்விலும் பிரிப்பிலும் விளையாடி இருக்கிறான் அங்கதத்தை, விஷயத்தின் ஆழத்தை. 80களிலெல்லாம் சேத்தக் ஸ்கூட்டர் பிரீமியத்தில் ஓடிக்கொண்டிருந்தது. ஸ்கூட்டர் வைத்திருத்தல் அன்று வசதியின் மேட்டிமையின் சின்னம். 

அன்று ஸ்கூட்டரில் வந்த தோஷர் தோழியர், இன்று பொட்டி வாசித்தபடி இணையத்தில், கம்யூனிஸம் நக்ஸல்பாரியிஸம் போதிக்கிறார்கள் பஸ்ஸும் ட்ரெயினும் பிடிக்க அல்லாடும் மிடில் க்ளாஸுக்கு.

கம்யூனிஸத்திற்கு ஒரு கை
காமாக்ஷிக்கு ஒரு கை
பிரமிளுக்கும் ஒரு கை
அப்பப்பா என்ன ஒரு
சமூக விஞ்ஞான
மெய்ஞானப் பெருந்த கை