03 January 2011

சத்தமில்லாத சாதனையும் ஆர்பாட்டமில்லாத ஆதரவும்

அமெரிக்கவாழ் தமிழர்களால் ஆண்டுதோறும் நவீன தமிழ் இலக்கிய சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் விளக்கு பரிசு 02.01.2011 அன்று திலீப்குமாருக்கு வழங்கப்பட்டது. அசோகமித்திரன் வழங்குகிறார்.

1970ல் எழுதத் தொடங்கிய திலீப்குமார், இதுவரை எழுதியிருப்பவை 20 கதைகள். சென்ற ஆண்டே கிடைத்திருக்க வேண்டிய பரிசு இது. 

திலீப்குமார் அப்போது வாங்க மறுத்தார். 

காரணம்: அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளிலும் தேர்வுக்குழுவில்  உறுப்பினராக இருந்துவிட்டு அதற்கு அடுத்த வருடமே தான் விருது பெற்றுக் கொள்வது நன்றாக இருக்காது என மறுத்துவிட்டார். 

நேர்காணல் ஒன்றில் தற்போது எழுத்தாளர்களிடம் தன்னடக்கம் என்பது காணக் கிடக்காத விஷயமாய் ஆகிக்கொண்டிருப்பதைக் கூறி இருக்கிறார். 

(கவிஞர் சிபிச்செல்வன் உரையிலிருந்து தகவல்)
விளக்கு பரிசு பெற்ற திலீப்குமாருக்கு 40 ஆயிரம் ரூபாய் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. பாராட்டுச் சான்றிதழை வெளி ரங்கராஜன் வாசிக்கிறார்.
அசோகமித்திரனின் உரை, என் நினைவிலிருந்து, சாத்தியப்பட்ட சத்தியத்துடன்.
திலீப்குமார், வீட்டுக்கு வந்து நீங்கதான் விழாவுக்கு வந்து உங்க கையால பரிசு வழங்கணும்னு சொன்னப்போ சரின்னேன். ஆனா மூணு நாள் முன்னால ஒடம்புக்கு ரொம்ப முடியல. ஆஸ்த்துமா. ரன்னிங் நோஸ் வேற. அதனால எப்டி வரப்போறேன்னு இருந்துது. 

உங்களுக்கெல்லாம் கடவுள் நம்பிக்கை இருக்கான்னு தெரியாது. எனக்கு இருக்கு. விழாவுக்கு வரதுக்கு முன்னால நின்னுடுத்து. ஒழுகற மூக்கோட இந்த மீட்டிங்குக்கு வந்து. மூக்கு ஒழுகிண்டே பேசிண்ட்ருந்தா, பாக்க நன்னாவா இருக்கும். நல்ல வேளையா நின்னுடுத்து.
திலீப்குமாருக்கு விருது குடுத்துருக்கா. சாகித்திய அகாடமிய விட்டுடுங்கோ. இந்த விருது இதுக்கு முன்னாடியும் சில பேர் வாங்கியிருக்கா. அந்த லிஸ்ட்ல இருக்கறவா எல்லாரும் எனக்கு சரின்னு படலை. அது பரவால்லை. எல்லாருக்கும் சரியாப்படற மாதிரி எல்லாமும் இருக்க முடியாது.  எனக்கு சரின்னுப்படறதுதான் எல்லாருக்கும் சரியா இருக்கணுன்ம்னு சொல்லவும் முடியாது. இருக்கறதுக்குள்ள சரியில்லாதது இதுலக் கொறவா இருக்கு.
.மொத மொதல்ல நான் திலீப்குமாரைப் பார்த்தது 1970ல. அவரோட கதை ஒண்ணு பிரசுரமாகியிருந்தது. என்னைப் பாக்க எங்க வீட்டுக்கு வந்துருந்தார். ராத்திரி 9 மணிக்கு. ஒரு எழுத்தாளனைப் பாக்க வறதுக்கு நேரம் ராத்திரி 9 மணி.

அந்த காலத்துல எல்லாம் வாசல்லயே பார்த்து அப்ப்டியே அனுப்பிச்சுடறத்துக்கு வீடுகள்ல வசதி இருந்துது. இப்ப மாதிரி இல்லெ.
மொதல் தடவை திலீப்குமார் பாக்க வந்ருந்தப்போ சஃபாரி போட்ருந்தார். பளபளன்னு இருந்துது. கொஞ்ச நாள் கழிச்சு பாத்தப்போ அழுக்கா இருந்துது. அப்பறம் பார்த்தா சஃபாரி கிழிஞ்சிருந்துது. அப்ப அவர் ஏதோ பத்திரிகை நடத்திண்ட்ருந்தார். அதுவும் இன்கிலீஷ்ல. எனக்கு இந்த இங்கிலீஷ் பத்திரிகைகளோட ரொம்ப பழக்கம் இருக்கு.
ஒரு தடவை சங்கர ராம சுப்ரமனியம் ஒரு பத்திரிகை கொண்டாந்திருந்தான். சிறுபத்திரிகை. இந்த மாதிரி பத்ரிகல்லாம் ஒரு ரெண்டு இஷ்யூ வரும். அப்பறம் நிண்ணு போயிடும். அந்தப் பத்திரிகைல எழுதி இருந்தது அதைவிட பயமுறுத்தறாப்பல இருந்துது.
இப்பல்லாம் எல்லாரும் கவிதை எழுதறா. தப்பில்லே. அதைக் கொண்டாந்து குடுத்துப் படிக்க வேற சொல்றா. இப்ப இங்க இருக்கற நீங்க எல்லாம்கூட கவிதை எழுதறவாளா இருப்பேள்.  
குறிப்பா பெண்கள் நெறைய கவிதை எழுதறா. ஆனா ஒரு பெண்கூட பத்திரிகை நடத்தறதில்லே. என்னப் பண்னப்படாதுன்னு அவாளுக்கு நன்னாத் தெரியறது.
அப்பறம் திலீப்குமார் க்ரியால வேலைக்கு சேந்தார். க்ரியா இருந்த எடமே சின்னது. அதுல இத்தித்துனூண்டு எடமா, க்யூபிக்கல்ல பார்ட்டிஷன் பண்ணி டேபிள் சேர்லாம் இருக்கும். ஆனா அந்த டேபிள் வசதியா எல்லாம் வெச்சுக்கற்புல மேல கீழ காலாண்ட எல்லாம் ஸ்பேஸ் இருக்கும். அதுக்குள்ள போய் நேரா நிமுந்து ஒக்காந்துண்டு வேல செஞ்சிண்டே இருக்கணும்ங்கறாப்ல இருக்கும். 

ராமகிருஷ்ணன் க்ரியா இருந்த எடத்தைக் காலி பண்ணினப்போ அதெல்லாம் டிஸ்போஸ் செஞ்சார். நான்கூட ஒண்ணு வாங்கி இருந்துருக்கலாம். அதைக் கொண்டாந்து வெச்சுக்க வீட்ல எங்க எடம் இருக்கு.
என்ன புஸ்தகம் வேணும்னாலும் திலீப்பக் கேள்ங்கற அளவுக்கு எங்கெங்கேந்தோ வரவழைச்சுக் குடுத்துருவார். 

அப்பறம் அவரே தனியா நடத்தினார். ரெண்டு மாடி ஏறிப்போகணும். அதுல முக்யமான விஷயம், பத்ரிகைக்குன்னு தனியா ஒரு எடம் ஒதுக்கினார். அதெல்லாம் விக்கறதோ இல்லியோ பாக்கறதுக்காவது ஒரு எடம்னு இருந்துது. ரெண்டு பத்திரிகை குடுத்தவன் வந்து பாக்கும் போது ஒரு பத்திரிகை இருக்காது. வந்தவன் ஒரு பத்திரிகை வித்ததுக்கு அஞ்சு ரூபா குடுன்னு சொல்லுவான்.

பார்வையாளர்களின் இடைவிடாத சிரிப்பிற்கு இடையில் எதைச் சொன்னாலும் இப்டி சிரிச்சிண்ட்ருந்தா எப்டிப் பேசறது என்றபடி அசோகமித்திரனும் கொஞ்சம் பேசினார்.

பேசிவிட்டு வந்து நாற்காலியில் அமர்ந்தவரின் கூடான தேகத்தின் நெஞ்சுக்கூடு படபடப்பு அடங்கி இயல்புக்கு வர நெடுநேரம் ஆயிற்று.

விழா தொடங்கும்முன் வேண்டுமென்றே ஷெர்வாணி டைப் நீண்ட குர்த்தாவின் மேல் ஷால் சுற்றிக்கொண்டு சாளேட்சரக் கண்னாடியும் அணிந்து போயிருந்தேன். டிசம்பரில் கூட உபயோகிக்கவில்லை என்றால் வேறெப்போதுதான் இதையெல்லாம் அணிந்து கொள்வதாம். 

தேவநேயப்பாவாணரின் சிற்றறை வராந்தாவில் சென்றபோதே அங்கு நின்ற க்ரியா ராமகிருஷ்ணன் தெரிய சிரித்தேன். கைநீட்டி நீங்கள் என நினைவில் தேடியபடி இழுத்தார். அடப்பாவி என்ரு இழுத்து அணைத்துக் கொண்டார். அருகில் மாமல்லன் என கமறி உடைந்த குரல் வரவே திரும்பினேன். ஞாநி சுட்டினார். ப்ளாஸ்டிக் சேரில் அசோகமித்திரன். அனிச்சையாக அவர் கால்களைத்தொட்டு வணங்கினேன். அநேகமாக எவர் காலையும் தொட்டதாக நினைவு இல்லை. காலருகில் அரை மண்டியிட்டு அமர்ந்தேன். 

எங்க இருக்கே என்ன பண்றே அம்மா கல்யாணம் குழந்தை என விசாரிப்புகளுக்கெல்லாம் பெஸண்ட் நகர் அதே வேலை 2005 ஆயிடுத்து உதட்டுப் பிதுக்கலாக பதில் சொல்லி வைத்தேன். 

ஆத்துக்கு வந்து எவ்ளோ சண்டை போடுவே. கடைசியா பாத்தப்போகூட  எதுக்கோ சண்டை பொட்டுட்டுப் போனே இல்லே என்று குலுங்கி வெடித்துச் சிரித்தார். 

என் வீட்டில் இல்லாமல் ஏகப்பட்ட ஆண்டுகள் எங்கே இருந்தேன் நான். 

எது எது எப்போது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது அது அப்போது நடக்கிறது.