22 January 2011

நமக்குக் கிடைத்தது நாட்டுடைமை

T N சேஷகோபாலன்

fromH. Abedeen 
tomadrasdada@gmail.com
dateSat, Jan 22, 2011 at 12:20 PM
subjectசேஷகோபாலன்
mailed-bygmail.com
signed-bygmail.com

hide details 12:20 PM (2 hours ago)
அன்பு மாமல்லன்,


சேஷகோபாலனின் ’காக்கைச் சிறகினிலே'யை எனக்கு அனுப்பி வையுங்கள் தயவுசெய்து. நானும் ரொம்பநாளாக தேடிக் கொண்டிருக்கிறேன். உங்களின் பதிவிலும் மறுமொழியிட்டேன். ஆனால் 'google account' அங்கே கோளாறு செய்யும் என்பதால் மீண்டும் இப்படி.

நன்றி

ஆபிதீன்

***


அன்பான ஆபிதீன்.

கணினியில் சேமித்த இடம் தேடி, கிடந்து அல்லாடிக் கொண்டிருந்தேன். 1983லிருந்து, தேடிக் கிடைக்காததை, அனுப்பி வைத்த லலிதாராமிடம் சேமித்த இடம் எங்கே எனத் தெரியவில்லை, ஆகையால், திரும்பவும் அனுப்பிவை எனக் கேட்டால், அந்த ஆள் காரியமாக, பெங்களூரில் இருந்து பஸ் ஏறிவந்து அடிக்கக்கூடும்.

அது நியாயமும் கூடத்தான். பொருளியல் விஞ்ஞானியாக, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில், வேலை பார்த்துக் கொண்டு, நேரம் ஒதுக்கி இசைக்காக ஊரூராய் அலைபவர். 


ஒரு தபா ஸியாட்டிலில் இருந்து போஸ்டனுக்கு, இரண்டு டேப் ரிக்கார்டருடன் பயணம் செய்து நாலு நாள் தங்கி 130க்கும் மேற்பட்ட கேஸட்டுகளில், ஃபாஸ்ட் டப்பிங்கில் ரெக்கார்ட் பண்ணிக்கொண்டு திரும்பியிருக்கிறார். நேரடி, உண்மைத் தகவல்களைத் திரட்டிய பின்னரே எழுதுகிற கோஷ்டி. சொம்மா ஒரு எல்பி ரெக்கார்ட் அட்டையும், ஐஎம்டிபி வீக்கிபீடியா தகவலும் கலந்து கட்டி 45 புக்கு தேத்தும் தமிழ்கூறு நல்லுலக போர்ஹே அல்ல. 


எப்படிங்க எழுத்தாளர்கள்ளாம் இவ்ளோ ஃபாஸ்ட்டா எழுதறாங்க, எனக்கு ஒரு புக்கு எழுதவே நாலஞ்சு வருஷம் புடிக்கிதே எனப்புலம்பாதீர். ஒழுங்கா ஆராய்ச்சி பண்ணி, உருப்படியா எழுத நெனச்சா அப்படித்தான் ஓய், நாலஞ்சு புக்ஃபேர்ல அடுத்தவன் போட்ட புக்கைதான் பார்த்துகிட்டு இருக்கணும்.


ஒரு கச்சேரிப் பதிவைக் கையகப் படுத்த, கலாக்ஷேத்ராவின் ஆவணக் காப்பகத்தோடு ரெண்டு வருஷம் கெஞ்சிக் கொஞ்சி அல்லாடியவனை, மாலி எழுதிய கடிதம் இருக்குமிடம் தெரிந்தும் நகல் கிடைக்காமல் அலைமோதிக் கொண்டிருக்கிற ஆளை, எனக்காகப் பிரத்தியேகமாக அனுப்பியதைக் காணாமல் அடித்துவிட்டேன் இன்னொருமுறை அனுப்பி வை என்பது எதிலாவது அடுக்குமா? 


இதுவே ஆய் சாஸ்த்திரியாக இருந்தால் நம் கதி என்ன? ஸ்பஷ்ட்டமான கெட்டவார்த்தை அர்ச்சனை. பொழுது போய் பொழுது புலர்ந்தால் இணையத்தை எட்டிப்பார்க்கவே அஞ்சும்படியாக ஆய்விடும். செக்கிழுத்த சிதம்பரத்தை வெட்கப்பட வைக்கும் எனது 35 வருட, இலக்கிய தியாகத்தை, எழுத்தாள தாகத்தை, வியர்வையை, இத்யாதி இத்யாதிகளை அவமதித்த நண்பனின் துரோகம் என்று, இன்னா பதிப்பாளரே இன்னுமா ஒரு புக்கு சைஸுக்குத் தேறலை, என்று கேட்டபடி 45 அல்லது 50 பதிவுகளைத் தாண்டிவிடாதா என்ன?

அவனவனும் திருப்பதிக்கும் காஞ்சிக்கும் சொந்த வேண்டுதலுக்காகக் காவடி தூக்கிக் கொண்டிருக்கையில் - பின்னே அவனவனும் - பூமி உய்ய ணும் புரட்சியை சீக்கிரம் வரவை, நேர்த்திக்கடன் செலுத்துகிறேன் என வேண்டிக்கொள்ளவா கோயிலுக்குப் போகிறான். தாயே, இரண்டு ஜென்மங்களுக்கு, மூன்று மாடி எப்படியம்மா போதும், கொஞ்சம் பெரிய கார் வாங்கப் புதிய வேலை கொடு, அதை நிறுத்த இன்னும் கொஞ்சம் பெரிய காம்பவுண்ட் இருக்கிற தனி பங்களா கொடு. அப்படிக் கொடுத்தால், உனக்கு கார்ப்பரேஷன் லாரி முழு லோடு வாங்கி திவ்யமாய் அபிஷேகிக்கிறேன், என்றுதானே வேண்டுதல். இன்னும் கொஞ்சம் பேராசைக்காரன், காளியை எப்படிக் கைவசப்படுத்துவது என பாய் சாமியாரிடம் தாந்த்ரீகம் யாசிக்கிறான். 


சிவப்பில் அச்சடித்த லேபிளெல்லாம் முற்போக்கா? பிநாயக் சென் அருந்ததி ராய் இரோம் ஷர்மிளா பற்றி எவனோ எழுதிய கட்டுரைக்கு சும்மா இணையத்தில் ஒரு சுட்டியைக் கொடுப்பதே பெரிய சமூக சேவையாய், சுய வாழ்க்கைக்கு சுண்ணமடித்து சட்டாம்பிள்ளையாய் ஊரை மிரட்ட ஒரு கெளரவக் கும்பல். அதற்கொரு பீஷ்மப் பெருந்தகை.



படித்தவன் சூதும் வாதும் பண்ணித் தனக்கான உயர்ந்த முகமூடியை ஒப்பனை செய்து கொண்டிருக்கிற உலகத்தில், இப்படியும் ஒரு வித்தியாசி.

ராமச்சந்திரன் என்கிற இந்த ஆசாமி, இந்தக்ஷணம் இருக்குமிடம் புதுக்கோட்டை.

பாமரரின் காமன் பண்டிகையில் டேப் அடித்து, ராஜாங்க லாந்தர் தூக்கியாக அப்பன் வேலை சுப்பனுக்கு என விதிக்கப்பட்டிருந்த வாழ்வை, சென்ற நூற்றாண்டில், இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னாலேயேக் கட்டுடைத்து, லயத்தில் விற்பன்னராகி, கர்நாடக இசைக்கருவியான கஞ்சீராவைக் கண்டுபிடித்தவருக்கு 1950ல் கட்டப்பட்ட கோயிலில் நடக்கும் மான்பூண்டியா பிள்ளை குருபூஜைக்கு பெங்களூரில் இருந்து புதுக்கோட்டைக்கு சென்றிருக்கும் ஒரு உண்மையான சஞ்சாரியிடம்,   சேஷகோபாலனின் காக்கைச் சிறகினிலேவைத் திரும்ப அனுப்பி வை எனக் கேட்பது எப்படி?

ஆபிதீன் புண்ணியத்தில், இப்போது தேடப்போகக் கிடைத்துவிட்டது. அனுப்பப்பட்டிருந்த ஆடியோவை, விண்டோஸ் எக்ஸ்பி மூவிமேக்கரில், கொஞ்சம் ஷார்ப்பாக நறுக்கி படம் ஒட்டி மூவியாக்கி, அதை வீடியோவாக சேமித்து, யூட்யூபுக்கேற்றிக் கொண்டு வந்தபின் - சேஷகோபாலன் இதைப் பாடுவதற்கு எடுத்துக் கொண்ட சிரமத்தைவிட நான் பட்டது அதிகம் என்பதால் - இது நமதல்லவோ!  நமக்குக் கிடைத்தால் அது நாட்டுடைமை அல்வா!

ஜகத்தீரே எல்லோரும் கேட்பீர். 

சிறு விண்ணப்பம். கனகாரியமாய், இதை சேஷு காதில் போட்டுவிடாமல் கேட்பீராக.