31 January 2011

லேபிள் மோகம்!சாரு நிவேதிதாவின் ப்ரில்லியண்ட் பீஸ்! 

நாகார்ஜுணன், சிரஸாசனம் செய்தபடி புத்தகத்தை மட்டும், நேராக வைத்துக் கொண்டு படிக்கிற பெரிய படிப்பாளி என்பதுதான் எனது நெடுநாளைய எண்ணம்! இப்போது கொஞ்சம் எளிமையாக எழுத முயற்சிப்பது போல் தோன்றுகிறது. 

இவரிடம் இருந்த பேச்சின் எளிமை, எப்படி எழுத்தில் மட்டும் திருகிக் கொண்டது? 

பல வருடங்கள் முன்னால், கோணங்கியிடம் ஒரு முறை, லாயிட்ஸ் ரோடு கெளடியா மட் ரோடு சந்திப்பில் ஒரு முனையில் இன்னமும் இருக்கும் டீக்கடையில் டீ பிஸ்கெட் சாப்பிட்டு விட்டு சிகரெட் பற்ற வைத்தபடி, கோபமாகக் கேட்டேன்.

ஏண்டா ஆட்டோ ட்ரைவர் ஆட்டோ மட்டும் ஓட்டினாப் போதும். நாங்க மட்டும் ஆஃபீஸுங்கறப் பேர்ல ஆட்டோவும் ஓட்டணும், எலக்கியமும் எழுதணும், ஆனா நம்பி (விக்ரமாதித்த்யன்) மாதிரி ஆட்கள் ஒன்னை மட்டும் கலைஞன்னு சொல்வாங்க, நாங்கள்ளாம் குமாஸ்த்தா! இல்ல! ங்கோத்த.

டேய் அப்படியெல்லாம் ஒண்ணுமில்லடா உன் அன்புக்கு நான் என்னைய வித்துப்பேண்டா!

என்ற கோணங்கி இன்னமும் அப்படியேதான் இருக்கிறான். சமயவேல் மூலம் நம்பர் வாங்கி இரண்டு மாதம் முன்பாகப் பேசியபோது, 

ஏய் மாமல்லா எப்பிட்றா இருக்கே, எனக்கும் உதய சங்கருக்கும் சோறு வாங்கிக் குடுத்தியேடா! (எப்போ? 20 வருஷம் இருக்கலாம். மூன்றுபேராய் சாப்பிட்டோம் அவ்வளவுதான்) எப்பிட்றா இருக்கே!
மெட்ராஸ் எப்ப வறே!
வியாளக் கெளமை
வீட்டுக்குக் கண்டிப்பா வரணும்.
நா மெட்ராஸ் வந்துட்டு இந்த நம்பர் தானே ஃபோன் பண்றேண்டா!

வியாழக்கிழமைமேல் வியாழக்கிழமைகள் வந்தன. கோணங்கியைக் காணோம்.

கோணங்கி இன்னமும் அப்படியேதான் இருக்கிறான்.

1982ல் என் காவியுடைப் பயணத்தில் கோணங்கி மற்றும் நண்பர்களூடன் விளாத்திகுளத்தில் ஒரு டூரிங் டாக்கீஸில் இரவுக் காட்சி பார்த்தோம். படம். அவள் அப்படித்தான். போஸ்டரில் டைரக்டர் பெயர்:  ஐ.வி.சசி. (நாகர் கோவிலில் சுந்தர ராமசாமியிடம் தீக்ஷை பெற்று ஊர்திரும்பி, திரும்ப ஜிப்பா ஜீன்ஸ் அணிந்து, முதல் வேலையாக, ரத்தம் கொதிக்க விளாத்திகுளம் பற்றி ருத்ரையாவிடம் சொன்னேன். அது திருட்டு காப்பியாக இருக்கக்கூடும் என விநியோகஸ்தரைத் தொடர்பு கொள்ள முயன்றார்.) 

எழுத்தாளன் என்றில்லை, வியாபாரத்திற்குத் தேவைப்படுவதெல்லாம், சரக்கல்ல லேபிள். விற்கிற லேபிள் அவ்வளவுதான்.

விற்பனைக்கு அல்லவே அல்ல என்கிற திடசித்த அன்பான கோணங்கியை, எழுத்தில் மட்டும் மனுஷ குலத்தின்மேல் துளியும் இரக்கமற்ற நரமாம்ஸப் பட்சிணியாக மாற்றியதன் முழு பாபம் நாகார்ஜுணனையே சாரும். 

யாருமே பயணிக்காத பாதையில் பயணம் போக ஆசைப்படும் கோணங்கி, கடைசியில் ஒரு குழந்தையைப் போல மோகித்து கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பது இல்லாத பஸ்ஸின் இலவச டிக்கெட்டைத்தானா? 

உரைக்குள் தூங்கிக் கிடப்பதால் ஒருபோதும் போர்வாள் துரு பிடிப்பதில்லை. விழித்தெழ உனக்கும் ஒரு நேரம் இருக்கிறது கோணங்கி, நீ அன்று திரும்பக்கூடும் உன் வேர்களுக்கு!