18 January 2011

ஆறு கவிதைகள்

தற்செயல்

உயிர்த்தெழுதலில்
இருக்கிறதுன் இறவாமை.

எலும்பை மண் தின்னும்
அச்சடித்த காகிதத்தைக் கரையானாய். 


படைத்தவனைக் கடந்து
காலங்கள் பலகடந்து
மனங்களில் வாழும் கதையைத்
தின்றரிக்க வல்லதெது?

மாதிரியாய் நின்றதற்கே
மத மதர்ப்பா?

தன்னைக் கடப்பதுதான் தரிசனம்.
கண்காணா வெளியிலெங்கோ
வசிப்பவனா உன் கடவுள்?

ஊத்தை உடல் நிறுவ
உணமையின் கோர முகம் தவிர்க்க,
எதன் பின்னும் மறைவாயோ?
தெய்வமே மனிதனாய்த் தேய்ந்தது
மரத்தின் பின் மறைந்ததனால்.  

கொந்தளிக்கும்
அகத்தை
ஊர்முகத்திற்காய்
ஒப்பனித்துப் பரப்பாதே  
ஒரு பண்டமாய்

குவிந்த அகம் கூர்த்த நகம்
இவற்றின்
குறியீடே நரமிருக ந்ருசிம்ஹம்.
விதிகளைக் கட்டுடைத்த விவேகம்.

கபோதக் கண் திறந்து
மனம் கழுவி வாயடைத்து
நோக்கடா நோக்கு!
காமாக்ஷியின் கடாக்ஷம்
இருக்குமிடம் எங்கென்று!

மெளனித்துக் குனிந்த தருணத்தில்
குதிரை ஏற்றக் கொக்கரிப்பா?

தற்செயல் நிமிர்வில் தொடங்கியதுன்
நிரந்தரச் சரிவு. 

*****

வலை


சிக்கும் என விரித்த வலை
சிக்கலாகிப் போனதுதான்
நிஜக் கவலை.
சிடுக்கெடுக்க முடியா எரிச்சலில் 
திட்டத் தொடங்கினால்

தின்னக் கொடுக்கவேண்டி
இருக்கிறது
சொந்தத் தலை .

*****



பொறி

மூச்சிறைக்கக் கூவும் மூஞ்சூர்
அறியுமோ 
பெருச்சாளியின் பதற்றம்?
வரலாற்றின்
எலிப்பொறிக்குள் இருப்பது 
வடையா? தேங்காய் பத்தையா? 
பழைய வாசனையா?

*****

பழி

கொடிக்கம்பத்திற்கு உள்ளே
மெளடீகக் கோபத்தால்
நடந்தது ஒரு கொலை.

காலாகாலப் பழியோடு
பிணம் சுமந்து
பிழைத்துத் திரிகின்ற
பிரேதமாய் ஆகிப்போனான் ஆச்சாரி.

*****


வக்கணை

குடமுழுக்கு நெருங்கிக் கொண்டிருக்க
கலசம் பொருத்தும் மும்முரத்தில்
மேஸ்திரி கடுத்தான்

வெட்டியாய்க் கூவாமல்
வேலையைப் பார். 

மோவாய் தோளில் இடித்தது.

கலசம் கைதவறிற்று.

*****


ஜனிப்பு

கர்த்தாவைக் கடக்கவல்ல
சிருஷ்டியிடம்
கதாபாத்திரம்
தருக்கோடு தர்க்கித்தது
நானின்றி நீ இல்லை.

கண்டும் காணாமல் சிரித்துக் கொண்டான்
கடவுள்.

ஆன்மாவும் உடலும் முயங்க
உருவாகத் துடித்துக் கொண்டிருந்தது
உயிர்