ramji yahoo - New year in front of computer monitor thaana? boss10:03 pm (IN BUZZ)
அன்பான ramji yahoo
திருமணத்திற்கு முன்னால் சரியாக 12 மணிக்கு ஏதேனும் ஒரு கடற்கரையில் பெரும்பாலும் மெரினா அல்லது பெஸண்ட் நகர் கடல் அலைகளுக்கு முன்னால் கண்மூடி அமர்ந்திருப்பேன். Far From The Madding Crowd.
90-91 வாக்கில் ஆழ்நிலை தியானம் கற்றுக் கொண்டேன். சில நாட்கள் தொடர்ந்து செய்தும் வந்தேன். ஒரு வாரம் ஆவதற்குள்ளாகவே இயந்திரத்தனமாக இருப்பதாக உணர்ந்தேன். ’விதி நம்பிக்கை’ தவிர கடவுள் நம்பிக்கை அற்றவனாக இருந்த காலம். ஆழ்நிலைத் தியானம் பற்றிய அதீத கனவுகள் இருந்ததாலோ என்னவோ ஒன்றுமே ஆகாததுபோல் தோன்றிற்று. நண்பன் ஷங்கர் ராமனிடம் கேட்டேன்.
உனக்கு ஏன் தியானம்? ஒரு பிரச்சனையும் இல்லாமல், கோவம் வந்தால் திட்டி, சீண்டினால் சண்டைபோட்டு, வருத்தப்பட்டால் அழுது, மனதில் ஒன்றுமே இல்லாமல் காலியாக வைத்துக் கொண்டிருப்பவனுக்கு இதெல்லாம் எதற்கு? தேவையில்லாத பேராசை என்று சொல்லி விட்டான்.
போதாக் குறைக்கு ஒற்றை அசை மந்திரம் போன்ற ஒலியை தியான வகுப்பில் சொல்லிக் கொடுத்த குருவாக வந்த கேப்மாரி, எல்லோருக்கும் ஒன்றே சொல்லிக் கொடுத்து இருக்கிறான் என்பது பின்னரே தெரிய வந்தது. இதில் எதற்காக ”உன் பெயர் மற்றும் உனது மன ஒலியலைகளுக்கு ஏற்றவாறு மந்திரம் தயாரிக்கப் பட்டுள்ளது” என்கிற தனி கவனிப்பு தருவது போன்றதான ஜால வாக்குறுதி. இதை ஒருவரிடமும் சொல்லாமல் ரகசியம் காப்பேன் என்று உறுதிமொழி வேறு எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற வற்புறுத்தல். ம் என்கிற அந்த ஒற்றை ஒலியை வைத்தே உலகம் பூராவும் பஜனை ஓடுகிறது போலும். அதனாலேயே ஒவ்வொருத்தன் காதிலும் தனித்தனியாக ஒலி கிசுகிசுக்கப்படுகிறது. ஒருவார வகுப்பில் டிப் டீ விளக்கம் கொடுத்து ஃபுல் மீல்ஸ் அடித்திருக்கிறார்கள் என்று பின்னாளில் தெரிந்து கொண்டதும் அடச்சீ இந்தக் கருமாந்திரமும் இவ்வளவுதானா என்றாகி விட்டது.
ஆன்மீகவாதி நன்கொடை கேட்கிறான் மதவாதி தட்சனை கேட்கிறான் கடவுள் மறுப்பாளன் சந்தா கேட்கிறான் - ஒரு பயலும் ரசீது கொடுப்பதில்லை. கொடுத்தாலும் வரி விலக்கில் இருக்கிறான். எல்லாவற்றிற்கும் பொதுஜனம் மட்டுமே முடிச்சு அவிழ்க்க வேண்டும் அவரவர் வாழ்வின் முடிச்சுகள் அவிழ்க்கப் படும் என்கிற வாக்குறுதியை நம்பிக்கொண்டு.
ஆன்மீகவாதி நன்கொடை கேட்கிறான் மதவாதி தட்சனை கேட்கிறான் கடவுள் மறுப்பாளன் சந்தா கேட்கிறான் - ஒரு பயலும் ரசீது கொடுப்பதில்லை. கொடுத்தாலும் வரி விலக்கில் இருக்கிறான். எல்லாவற்றிற்கும் பொதுஜனம் மட்டுமே முடிச்சு அவிழ்க்க வேண்டும் அவரவர் வாழ்வின் முடிச்சுகள் அவிழ்க்கப் படும் என்கிற வாக்குறுதியை நம்பிக்கொண்டு.
கடவுள் அல்லது அது குறித்த நம்பிக்கை மனதுக்கு மிக மிக நெருக்கமானது. வெளியில் பேசி விவாதிக்கத் தேவையற்ற ஒன்று எனத் தோன்ற ஆரம்பித்திருந்த காலம் அது. கடவுள் இருப்பதோ இல்லாமல் இருப்பதோ என் மனம் சம்பந்தப் பட்டது. இப்போதெல்லாம், மசூதி சர்ச் தெரு மாரியாத்தாக் கோயில் என வர்ஜாவர்ஜமில்லாமல் நெடுஞ்சாலை வாகன ஓட்டி போல அல்லாஹ் என சொல்லிக்கொள்வதும் சிலுவை போட்டுக் கொள்வதும் கும்பிடுவதும் அனிச்சை காரியமாகிக் கொண்டு இருக்கின்றன. நெடுஞ்சாலை வாகன ஓட்டி சாவை வண்டிக்கு முன்னால் நிறுத்தியபடி வாழ்வை ஓட்டிக் கொண்டிருக்கிறான். அவனிடம் வெட்டி நியாயம் விவாதிப்பது விவேகமில்லை. எனக்கென்ன கேடு எல்லா இயந்திரத் தனங்களையும் தவிர்க்க வேண்டும் என பிரயாசை தோன்றுகிறது. தோன்ற மட்டுமே செய்கிறது. என் தோளில் என் தலையை எவ்வளவு காலம்தான் சாய்த்துக் கொள்வது?
அப்போதெல்லாம் 11 அல்லது 11.30க்கு பீச்சுக்கு செல்பவன், 12 ஆனதும் அடையார் கேட் ஓட்டலுக்குப் புறப்பட்டு விடுவேன். யாருமற்ற தனிமையிலிருந்து எல்லோருக்கும் இடையில் தன்னந் தனியனாக.
10 பைசா செலவழிக்காமல் நட்சத்திர ஓட்டலில் இயற்கை உபாதைகளைத் தணித்துக் கொண்டு வெறும் தண்ணீர் குடித்துக் கொண்டு, சும்மா பணக்காரார்கள் தொழிலதிபர்கள் சினிமாக்காரர்கள் விஐபிக்களின் சில்லுண்டித் தனங்களைப் பராக்குப் பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு இரண்டு அல்லது மூன்று மணி வாக்கில் அண்ணா நகர் வீட்டிற்குக் கிளம்புவேன். தொடர்ந்து சில ஆண்டுகள் பார்த்ததை எல்லாம் எழுதத் தலைப்பட்டால் 10 நாவல் தேத்துகிற அளவுக்கு அற்பத்தனங்கள். எவன் காசிலோ குடித்ததைப் பெருமையடித்து எழுதி புக்காக்குவது இன்னொரு அற்பத்தனம். புகழ்த்தப்பட்ட அற்பத்தனம். இயந்திரமயமாக பக்கங்களின் மேல் கண் பதித்த அற்பத்தனம்.
சட்டச் செவ்வகமாய் வெட்டி அனுப்புவது சவக்கார கட்டிக்கு சரி. தொடர்ச் சுழல் நகர்வுப் படுகையில் இயந்திர கதியில் உறை மூடும். சமயத்தில் கட்டி இல்லையென்றாலும் இயந்திரம் யோசிப்பதில்லை அதன் வேலை அழகாக உறை மடித்து உருவம் கொடுத்து வெளித்தள்ளுவது. பிரிக்காதவரை அச்சசலாக சோப்பு போலவே மழமழுக்கும் புத்தகங்கள்.
சில சமயம் வேண்டுமென்றே 12.30 அல்லது 1 மணிக்கு அப்போதைய எம் 80யில் மவுண்ட் ரோட் புகாரி அருகில் செல்வேன். அதுதான் லத்தி சார்ஜ் ஸ்பாட். அநேகமாக தடியடி வாங்குபவனும் தடி சுழற்றுபவனும் ஆண்டுதொறும் மாறினாலும் வைபவம் மட்டும் மாறுவதே இல்லை.
திருமணமான முதல் ஆண்டு மனைவியுடன் பீச்சுக்குப் போய்விட்டு வந்தேன். தனியாக இருப்பவனிடம் ஹேப்பி ந்யூ இயர் தணிந்த குரல் தண்ணி கத்தல்கள், கூட ஒரு பெண் இருக்கிறாள் என்றதும் உச்சத்தை அடைவதைக் கண்டு மிரண்டு போனாள். நின்றால் இவர்களிடம் சாவு. தப்பிக்க வேண்டி வண்டியின் வேகம் கூட்டினால் எதிர்ப்படும் வண்டியில் மோதி சாவு. என்னத்துக்காக இவ்வளவு கலாட்டா அல்லது மகிழ்ச்சி என்று எனக்குப் புரிந்ததே இல்லை.
மகிழ்த்திக் கொள்வதற்காகக் குடித்து, மகிழ்த்துவதாக எண்ணி கூக்குரலிட்டு சட்டை தளர்த்தி இலகுவாக்கிக் கொள்வதாக இம்சித்தும் இம்சித்துக் கொண்டும் இளைஞர்கள் சந்தோஷமாய் இருப்பதாகக் கற்பித்துக் கொள்கிறார்கள். பல சமயம் குடிக் கொண்டாட்டங்கள் வாய்ப் பேச்சு முற்றி சட்டை கிழிந்து வடுவாக மட்டுமே எஞ்சுகின்றன.
சாவின் வடு தன் சந்ததிமேல் ஏறாமல் இருக்க பயண வழியில் தென்படும் கடவுளின் இருப்பிடங்களை வண்டியோட்டி கும்ம்பிட்டு வைக்கிறான். எல்லா உறைக்குள்ளும் சவக்காரம் இருப்பதான நம்பிக்கையில் தயாரிக்கப்படும் புத்தகங்களாய் ஜனங்கள் எதையேனும் கொண்டாடிக் கொள்கிறார்கள்.
உண்மையில் பார்த்தால் எதிலும் எதுவும் இல்லை. எல்லாவற்றிலும் ஏதோ இருப்பதாய் நம்புவதில்தான் எல்லாம் இருக்கிறது.
அவரவர் நம்பிக்கை அவரவரிடமே இருப்பது நாகரிகம். என்னுடையதைப் பார் என அடுத்தவன் மேல் அதைக் கொண்டுபோய் இடித்தபடி இருப்பது அநாகரிகம். சுயநம்பிக்கையை நிறுவ ஏற்படும் தள்ளுமுள்ளுகளே இடிப்பில் தொடங்கி இடிபாடுகளாகின்றன்.
எதன் பேராலும் கும்பல் சேர்க்காமலும் கும்பலில் சேராமலும் இருப்பவனுக்கு என்றென்றும் நாளை மற்றுமொரு நாளே.