20 January 2011

அடித்துத் துவை

துவைப்பதென வந்துவிட்டால்
அடித்துத் துவை.

அழுக்குப் போகவேண்டும்
அதுதான் குறிக்கோள். 


விரும்பி அப்பிக் கொண்டதா என்ன?
தும்பைப்பூவைக் கேவலப்படுத்த,  
வேண்டுமென்றே வீசப்பட்டது.

வேறு மார்க்கமில்லை
வெளுத்தே தீர வேண்டும்.

கட்டுப்பாடற்ற அழுக்கு
எங்கும் நிறைந்து கொண்டிருக்கிறது.
இப்போது துவைக்கவில்லை என்றால்
நிரந்தரமாகிவிடும்.

உனக்கென சமூகக் கடமை இல்லையா?
அழுக்கு நீக்குவது அதில் தலையாயது.

தூய்மை எப்படி இருக்குமென
நிரூபிக்க
உன்னைவிட்டால் யாரிருக்கிறார்கள்?

யோசிக்காமல்
அடித்துத்துவை.

சாயம் வெளுக்கிறதா?
சபாஷ்! 
அழுக்கு போவதன் முதல் அறிகுறி.

கிழியத் தொடங்குகிறதா?
கவலைப்படாதே!
லட்சியத்தை நோக்கிய முன்னேற்றத்தில்
இன்னொரு மைல்கல்

நார்நாராய்க் கிழிந்து கொண்டிருப்பது
ஒற்றை இடுப்புத்துணியே ஆனாலும்
துவைப்பதென வந்துவிட்டால், 
கசக்கி குமுக்கிக் கொண்டிருக்காமல் 
அழுக்கு போக
நன்றாக அடித்துத் துவை.