16 January 2011

ஸ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை

ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை. இது பிரமிளின் மிக முக்கியமான கட்டுரை. வெளியிடப்பட்டது டிசம்பர் 1984. 

அன்று, ஸ்ரீலங்கா பிரச்சனையில் போராளிக் குழுக்களை அரசு இயந்திரம் உட்பட ஆதரிக்காதவர்களே கிடையாது. அந்த காலகட்டத்தில், பொதுவாகத் தம்மை இலங்கையோடு பெரிதாக அடையாளப்படுத்திக் கொள்ளாத தருமு சிவராமு என்கிற பிரமிள், தமிழனுக்கு ஸ்ரீலங்காவில் இருக்கும் உரிமையை வரலாற்று ரீதியாக தேடி நிறுவிய கட்டுரை.
காந்தியின் போராட்டத்திற்கும் காந்தீய வழியில் போராடிய இலங்கையின் முன்னோடிப் போரளிகளுக்கும் இருந்த வேறுபாடுகளை அவருக்கே உரித்தான அற்புதமான மொழியில் எழுதிப் போயிருப்பார்.

பிரமிளுடன் மிக நெருக்கமான நட்பில் இருந்த காலம். கட்டுரையைக் கையெழுத்துப் பிரதியில் படித்ததில், பாதி படிப்பதற்குள், எனக்குப் பரவசம் உண்டாயிற்று. இது கட்டாயம் பதிப்பிக்கப் படவேண்டும் என்றேன். மீதி கட்டுரையைப் புத்தகமாக்கி ஓய்ந்த பிறகுதான் படித்தேன்.
இந்தக் கட்டுரை புத்தக வடிவம் பெற உதவிய நண்பர்கள், நன்கொடை கொடுத்தவர்கள் ஒவ்வொருவரும் எங்கெங்கு வைத்துக் கொடுத்தார்கள் என்பது உட்பட இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. பணமும் கொடுத்து இந்த காரியம் செய்வதற்காக எனக்குப் பாராட்டும் கிட்டியது பரவலாக. இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் போக, புத்தகமாக வெளியானபின் என்னை ஏன் கேட்கவில்லை என அன்போடு கடிந்து கொண்டவர்களும் உண்டு. 

உண்மையிலேயே பொது விஷயத்திற்காகத் தெருவில் இறங்கிக் காரியம் செய்தால், எதிரி கூட உள்ளூரப் பாராட்டுவான் என உணர வைத்த நாட்கள். தருமு ஒருவரின் பெயர் தவிர ஒருவர் பெயரும் இதில் இடம் பெறலாகாது என்கிற என் உறுதியை இதில் ஈடுபட்ட அனைவரும் ஆதரித்ததோடு அல்லாமல் முழுமனதோடு ஒத்துழைத்தனர். 

பிரமிள் தமது மகிழ்ச்சியை வெளிப்படையாகவே தெரிவித்தார். 
மிகமிக உறுதியாகத் தெரிந்த இன்னொரு விஷயம். இந்த உறவு ரொம்ப நாள் நீடிக்காது என்பது. இது எப்போது உடையப்போகிறது, ரெண்டும் கொரங்கு ஒண்ணுக்கொண்ணு சளைச்சது இல்லை எனக் காதுபடவே சொன்னவர்களும் உண்டு. என் காது படத்தான். தருமுவின் காதுபடச் சொல்லி அப்புறம் கவிதை கதை கட்டுரையாக அறம் பாடக் கேட்டு நடைபிணமாக வாழ வக்கிருக்கும் இலக்கியவாதி யார்?

பிரமிள் என்கிற இந்த மகத்தான கவிஞனால் நேரடிக் கசப்பிற்கு உள்ளாகாத இலக்கியவாதிகளே இல்லை எனலாம்.

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த அந்த முகூர்த்தமும் வந்தது. அதன் நேரடி சாட்சியாக இன்னமும் என் நண்பன் இருக்கிறான். அவன் இலக்கியவாதி அல்ல. ஆனால் முதிர்ச்சியுடன் நடந்து கொள்கிற நார்மலான மனிதன். என்னைப்போல வெச்சா குடுமி செறைச்சா மொட்டை கேஸ் கிடையாது.

ஏய் அதுதான் தருமு, அதோ பாரு பஸ் ஸ்டாப்புலதான் நிக்கிறான்.
சரி இப்ப அதுக்கு என்ன?
அவன் எப்பிடி அவ்ளோ ஒதவி செஞ்ச ’அவனை’ப் பத்தி கன்னாபின்னான்னு எழுதலாம்?
எவனோ எவனைப் பத்தியோ எழுதினா ஒனக்கென்ன. எவனோ எவன் கூடயோ சண்டை போட்டா ஒனக்கென்ன?
அதெப்படி?
அது அப்படித்தான், ஒன்னைப் பத்தி எழுதலை உங்கூட சண்டை போடலை இல்லையா? 
இல்லை.
அப்ப மூடிகிட்டு சும்மா இரு.

மூடிக்கொண்டு சும்மா இருப்பவனாக இருந்திருந்தால், முதலில் தருமு என்கிற எரிதழலிடம் போய் எட்டிப் பார்த்து, எடுத்துக் கையில் பிடித்து, குதூகலித்து, சந்தொஷப்படுத்தி, அவன் மகிழ்வு கண்டு புல்லரித்து, தேனாம்பேட்டையில் தமிழின் மகாகவி என் அலுவலகம் தேடி வருவதில் இறும்பூதெய்தி இருந்திருப்பேனா?

ஓய் நீர் எப்படிக் கையெழுத்து போடுகிறீர். காட்டும்.
போட்ட கையெழுத்தைப் பார்த்துவிட்டு, 
இதுதான் விஷயம். இப்படி நீர் கையெழுத்து போடுவதால்தான், அலுவலகத்தில் உமக்கு எப்போதும் பிரச்சனை. C.Narasimhan எனப் போடாதீரும், C.Nara simhan எனப்பிரித்துப் போடும். 

அப்போது டோட்டல் நாஸ்திகனாக இருந்த நான் சிரிக்கக்கூட முடியவில்லை. அதனிடம் இருப்பது என் காதுகள் அல்லவா! சிரிக்கிறானோ என சம்சயம் தட்டினாலே போதுமானது, நம் காது நமது இல்லை.

பிரச்சனை என்னிடம் இருக்கையில் பேரைப் பிரித்தால் என்ன சேர்த்தால் என்ன? என் பிரச்சினையே, நியாயம் தர்மம் என, சம்மன் இல்லாமல் ஆஜர் ஆவதுதான். எங்கு என்ன பிரச்சனை என்றாலும், நானாக ஒரு சார்பு எடுத்து, மூக்கை நுழைப்பதுதான் என் பிரச்சனை என்பது எனக்கேத் தெரிகிற விஷயம்.

பேரைப் பிரித்துக் கையெழுத்து போட்டு மட்டும் என்ன பிரயோஜனம், அலுவலகத்தில் பிரச்சனை இல்லாமல் போனால் என்ன? எவன், உன் பேரைப் பிரி பிரச்சனை தீரும் என்றானோ, அவனுடனேயே பிரச்சனை. 

நடுத்தெருவில் சண்டை போட்டுக் கொண்டு, தேனாம்பேட்டைப் போலீஸ் ஸ்டேஷனில் போய் நானும் தருமுவும் நிற்கப் போகிறோம், என என் பிரிக்கப்பட்ட பெயர், குறைந்த பட்சம் தருமுவிடம் கூடக் கூறவில்லை. 

என்னை எழுத்தாள்ன் என்கிறான் தருமு, அவரை பாரதிக்குப் பிறகு தமிழின் மகாகவி என்கிறேன் நான். போலீஸ் ஏட்டோ ஒன்றும் புரியாமல் அப்புறம் என்ன உங்களுக்குள் பிரச்சனை என்கிறார். நான் எழுத்தாளனாகவும் அவர் மகாகவியாகவும் இருப்பதும்தான் பிரச்சனை என்றால் அவருக்குப் புரிந்துவிடுமா என்ன?

அவ்வளவு எளிதில் எழுத்தாளனுக்கும் கவிஞனுக்குமான பிரச்சனை  மற்றவர்களுக்குப் புரிந்துவிட்டால் அப்புறம் எப்படித்தான் நாங்கள் இலக்கியவாதிகளாக இருப்பதாம்.
பேன் பார்த்ததும் காதை அறுத்ததுமான கதை.

தருமு சிவராமு என்கிற பிரமிளின் மகத்தான ஆளுமைக்கு இன்னுமொரு சாட்சியம், இந்தக் கட்டுரை. 

துரதிருஷ்டவசமாக, இந்தப் புத்தகக் கண்காட்சியில், எவ்வளவு தேடியும் எங்கும் கிடைக்கவில்லை, இந்தப் புத்தகம். வேறுவழியின்றி ஸ்கேன் செய்யத் தொடங்கி இருக்கிறேன். இதுவரை 10 பக்கம் முடித்திருக்கிறேன். இன்னும் 59 பக்கங்கள் உள்ளன. முழுவதும் முடிந்ததும் பதிவேற்ற உத்தேசம்.