21 January 2011

இங்கே ஒரு எழுத்தாளன் - லலிதா ராம்


தற்செயலாக Giridharan Rajagopalan பஸ்ஸில்,
லலிதா ராம். 


பெயரைப் பார்த்ததும் ஒரு நன்றியுடன் கூடிய மலர்ச்சி. காரணம், 1983ல் இருந்து நான் தேடிக் கொண்டிருந்த சேஷகோபாலனின் காக்கைச் சிறகினிலே பாடலை மெய்ல் அனுப்பி வைத்தவர் என்கிற விதத்தில்.


நான் என்ன லா.ச.ராவா? | தமிழ் பேப்பர் என்றிருந்த கட்டுரையைப் படிக்கத் தொடங்கினேன். அநாயாசமாக எழுதிக் கொண்டு போகும் நடை. இடையிடையில் பருக்கையோடு கல் நிரடியது. கிரிதரன் பதிவில் பின்னூட்டமாய் எழுதத் தொடங்கி, வழக்கம் போல வளரத்தொடங்கியது. எனவே ”சில க்கன்னா ங்கன்னாக்கள்.” என தற்காலிகத் தலைப்பை வைத்துக் கொண்டேன். பதிவேற்றினால் ஒரு சிலருக்கேனும் உபயோகப் படக்கூடும் என நினைத்தேன்.


//சச்சின், திராவிட், கங்குலிக்கு இடையில் லட்சுமணை அதிகம் கண்டு கொள்ளாதது //
கண்டு’கொள்ளப்படாதது’


//அவர் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்காததுதான் *நிதர்சனம்.*// 
வருத்தம் தெரிவிக்கத்தான் முனைகிறார். இங்கே நிதர்சனம் சரியாக உட்காருகிறதா? என்பதை மறு பரிசீலனை செய்யலாம்.


//சச்சின், திராவிட், கங்குலிக்கு இடையில் லட்சுமணை அதிகம் கண்டு கொள்ளாதது போலவே, லால்குடி, எம்.எஸ்.ஜி, டி.என்.கிருஷ்ணன் ஆகிய மூவரும் கோலோச்சிய வேளையில் சங்கீத உலகில் காலடி வைத்த வி.வி.சுப்ரமணியத்திற்கு, அவர் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்காததுதான் நிதர்சனம்.// இதை ஒரே சொற்றொடரில் வேறு எழுதி இருப்பதாலும் போலவே என்கிற வார்த்தியை உபயோகித்து இருப்பதாலும், கிடைக்கவில்லை என்கிற வார்த்தையே பொருத்தமானதாக இருக்கும். ’நிதர்சனம்’ என்பது ஒட்டாத அலங்காரமாக துருத்தி நிற்க்கிறது.


//நிறைய எம்.எஸ் கச்சேரி  பதிவு*களிலும்*, பாலமுரளி பதிவு*களும்* //
உம், உம் உம் ஆகத்தான வரும் வரவேண்டும் அதுதான் முறை. இலக்கணம் காதுக்கு இசைவு கொடுக்கத்தான், இலக்கணத்தை எடுத்தெரியலாம். தவறில்லை - தகுந்த முகாந்திரம் இருந்தால்.


//அவர் ஸோலோ வாசிக்கிறார் *என்பதும்*, தயங்காமல் அங்கு செல்ல முடிவெடுத்தேன்//
என்றதும் என்கிற சாதாரண எழுத்துப் பிழையாகத்தான் இருக்க வேண்டும் அல்லது, என்பதும் - ஒரு காரணம் என மனம் எழுத, அவசரப்பட்ட கை வாக்கியத்தை முடித்துவிட்டது போலும்.


//அவருடைய ரசிகானுபத்தை *தெள்ளென* விளக்குகின்றன//
ரசிகானுபவத்தைக் கொண்டாடும் போது *தெள்ளென* என்கிற வெளிப்பாடு மிகச்சாதாரணமாக ஆக்கிவிடுகிறதே! வாக்கியத்திற்குள்ளும் கூட க்ளைமாக்ஸ் உண்டு. முக்கியத்துவம் வாய்ந்த பத்திகளின் கடைசி வாக்கியத்திற்கு முத்தாய்ப்பு அவசியம். துல்லியம்?


//அதி வேகமான சங்கதிகள் வாசித்த போது, அவரது வயதின் *தாக்கம்* தென்பட்டாலும்,// 
தளர்ச்சியைத் தானே சொல்ல வருகிறார்? தாக்கம் பொருந்துமா? ஒரு வேளை ஆங்கிலத்தில் கட்டமைத்துத் தமிழில் எழுதுபவரோ?
வார்த்தைகள் வெறும் நேரடிப் பொருள் கொண்டவை மட்டுமல்ல, இடத்திற்குத்தக கால்முளைத்து எழுபவை. ஒரு பெரிய விஷயம் சிறியதன் மேல் செலுத்தும் ஆளுமையைக் குறிக்கும் இடத்தில் பிரயோகிக்கும் போதுதான் ‘தாக்கம்’ என்கிற வார்த்தை அர்த்த பூர்வமாகும்.


பொதுவாகவே கலைஞர்களும் கலாரசிகர்களும் தொட்டாற் சினுங்கிகள். நுண்மையை ஆராதிக்கும் மனப்போக்கினால் நாளாக ஆக தோல் மெலிந்து உதிர, தொட்டாலே ரணமாகிவிடுபவர்கள். இவரோ அல்லது நீங்களுமோ கூட இதை சட்டாம்பிள்ளைத்தனமாய் எடுத்துக் கொள்ளக் கூடும்.


எழுத்தாளர்களோடும் குறைந்தது எழுத்தாளனாக விழைபவனோடு விவாதிக்க வேண்டிய விஷயத்தைப் போய் ஒரு சங்கீதக் காரனிடம் பேசுவதா அல்லது எதிர்பார்ப்பதா என பல் கடிக்கக்கூடும். என் மேதாவித்தனத்தை தோள்சிலுப்புவதாய்த் தோன்றக்கூடும்.


உண்மையில் சொல்லப் போனால், எத்துனை பேரிடம் என்ன மாதிரியான வெளிப்பாடுகளும் மொழிக் கட்டுப்பாடும் அதன்மேலான ஆளுமையும் இருக்கின்றன என்று எனக்கு ஒளியூட்டிக் கொள்ளவே எழுதிக் கொள்வது இது.


எழுத்து இவனிவனுக்குதான் கைவரும் என விதியேதும் இல்லையே? 


சாதகத்தால் சாதிக்க முடிவது, குறைந்தது ஒரு கட்டம் வரையில் சாத்தியம்தானே.


நல்ல கலைஞனின் வயலின் வாசிப்பில் கிரிபுரி வருவதில்லை. 


ஆசிரியர், தாம் எழுதியதை மறுமுறை வாசிப்பவரா? இசையை இவ்வளவு விஸ்தாரமாக எழுத்தில் காண்பது அபூர்வம். அதனால்தான் இப்படிக் கிடந்து அடித்துக் கொள்கிறது. கட்டுரையில் பாதி விஷயம் புரிவது போல இருக்கிறது. கையில் பிடித்துவிட்டது போலத் தோன்றுகையில் போக்குக் காட்டி பறக்கிறது.


என் போன்ற, ப்ளாஸ்டிக்கிலாவது ஒரு தோடு கிடைக்காதா என ஏங்கும் மூளிக் காதுகளுக்கு, இவரது இசைக் கட்டுரைகள் முத்தும் வைரமும் பதித்த தொங்கட்டான்கள். 


தொங்கவிடும் முன் கொஞ்சம் அழுக்குத் துணியிலேனும் துடைத்து மாட்டச் சொல்லுங்கள்.


என்று (இதன் முந்தைய வடிவத்தை) எழுதி முடித்ததும், உள்ளார்ந்த குறுகுருப்பு, இது எப்படி எடுத்துக் கொள்ளுமோ. ஊசிமூஞ்சி மூடா என்று சொல்லி இன்னொரு சண்டை தொடங்குமோ? எதற்கும் மெய்ல் அனுப்பி வைத்தால் என்ன?


தமிழ்பேப்பரில் வந்த உமது விவிஎஸ் கட்டுரை பற்றி ஒரு குட்டி மேட்டர் எழுதி இருக்கிறேன். மெய்ல் அனுப்புகிறேன். படித்துப்பார்க்கவும். mail id?


டிஎம் அனுப்பினேன். சடுதியில் வந்த்து. (என்னிடம் இருந்த மெய்ல் ஐடி அவரதுதானா? என்கிற உதைப்பு.)


மெய்ல் அனுப்ப அடுத்த ஐந்தாவது நிமிடம் கைபேசி அடித்தது.
நா லலிதா ராம் பேசறேன்.
பெங்களூரிலிருந்து அண்ணாத்தையேதான். அட நம்மைப் போலவே ஒரு நட்டு.


நீங்க எழுதின அவ்ளோத்தையும் ஒத்துக்கறேன். நீங்க என்ன வேண்ணா என்னைப் பத்தி எழுதலாம். எனக்கு இதெல்லாம் பிரச்சனையெ இல்லை. என்னால நம்பவே முடியலை. விமலாதித்த மாமல்லனா இப்படிக் கேக்கறது? அது அவசரத்துல எழுதினதுங்க. ஒரு நாளைக்கு 4-5 கச்சேரி கேக்கணும், அதுக்கு இடைப்பட்ட டைம்ல எழுதணும். ஒத்துகிட்டமேன்னு எழுத வேண்டி நெருக்குது. எழுதறதை விட் எனக்கு கச்சேரி கேக்கறாதுதான் முக்கியம். படிச்சே பாக்கலை. டைமே இல்லை.
அந்த மொபைல் காலின் நீட்சி நம்புவீர்களா? நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

மொபைல் நம்பர் மட்டும் மறைக்கிறேன் அவரது அந்தரங்கம் காக்க வேண்டி.
இந்த ஒரு மணி நேரமும் ஒரே கயிறிழுப்புப் போட்டிதான். கிடைத்தால் விடுவோமா?


***


எனக்கு மகாராஜபுரம் சந்தானம் பிடிக்கிறது ஆனால் அவர் மேம்போக்கான வெகுஜன ரசனை சார்ந்தவர் என இசைத் தீவிரர்கள் சொல்லக் கேள்வி. என்னால் திஜாவையும் பாலாவையும் தனித்தனியாக ஈசியாக அடையாளம் காண முடிகிறது இசையில் எப்படி?


அப்படிப் போடுங்க, சரியாப் புடிச்சீங்க, என் காலேஜ் நாட்கள்ல பாலகுமாரன் படிச்சிட்டு மெரண்டு போயிருக்கேன். திஜா படிச்சப்புறம்தா தெரியுது யார் எங்கேன்னு! சந்தானம் போக (இரண்டு மூன்று பெயர்கள் பிரயோகிக்கப் படுகின்றன) இவங்களைக் கேட்டிருக்கீங்களா. அதுக்கு அப்புறமும் பிடிக்கிதுன்னா ரசனையில் கொஞ்சம் கோளாறுன்னு அர்த்தம். அறிமுகமே சந்தானம்தான்னா நல்லாதான் இருக்கும். போக அப்புறம் வந்த ஜேசுதாசெல்லாம் சந்தானத்தைவிட அந்தக் காரியத்தை பெட்டராவே பண்ணினாங்க.


***


எங்க அப்பா ஜிஎன்பியைக் கேக்கறதை சின்ன வயசுல பாத்துருக்கேன். ஆனா பத்மினி கோபாலன் (கல்பகம் ராமன் அவர்களின் தமக்கை, என் அறியாத முகங்கள் புத்தகத்திற்கு 1500 ரூபாய் 1983ல் அன்பளித்தவர். இவரது தங்கை கல்பகம் ராமன், அவர்களின் கணவர், அடிபொளி வழக்கறிஞர் வி.பி. ராமன்). அவர்கள் வீணை தனம்மாள் ஸ்கூல்தான் ஒஸ்தி அதுலதான் பாவம் இருக்கும் ஜிஎன்பி ஸ்கூல்ல கல்பனை இருக்கும் பாவமே இருக்காது என்பார்.


கரெக்டா சொன்னீங்க ரெண்டும் வேற வேற ஸ்கூல்.லட்சியம் லட்சணம்னு. ஒண்ணு அழகுணர்ச்சி, இன்னொண்ணு அறிவுத் திறன். “இதுதான் அழகு. இப்படிப் பாட்னால்தான் பாவம்.”, என்று தீவிரமாய் நம்பி, பாடிப் பாடி பாலிஷ் ஏற்றும் தனம்மாள் ஸ்கூல் ஒரு பக்கம். புதுசு புதுசா ரூட்டை புடிச்சு தடுக்கி விழிந்தாலும் பரவாயில்லைனு பயணிக்கிற ஜி.என்.பி ஸ்கூல் இன்னொரு பக்கம். ரெண்டும் வேணும். ஆனா அப்படி ரெண்டும் சேந்து இல்லே. கரெக்டா சொன்னா இது ஒரு ஸ்கூல் அது ஒரு ஸ்கூல். இது நடுல ஜாதி வேற சேந்துக்கும். நீ ஒஸ்தி இல்லெ நாந்தான் ஒஸ்தி.


எழுத்துலக் கைவினைத் தேர்ச்சியும் வேணும், சிருஷ்டியின் சுனையும் வேணும் அது மாதிரியா?


அதேதான். ஆனா ரெண்டும் ஒண்ணா சரி விகிதத்துல சேந்து இருக்காது.


***
ஸ்ருதிங்கறாங்களே அது என்ன?


குரலை ஒரு எடத்துலக் கொண்டு போய் ஃபிக்ஸ் பண்ணிக்கறது. வெஸ்டர்ன்மியூஸிக்ல ஆணி அடிச்சா மாதிரி கணக்குப் போட்டு வெச்சிட்டான். கர்நாடக சங்கீத்த்த்துல கொஞ்சம் ஃப்ளெக்ஸிபிலிட்டி இருக்கு. அன்னிக்கித் தொண்டை கட்டி இருந்தா வேற ஒரு எடத்துலப் பொருத்திக்கலாம்.


ஒன்ஸ் ஃபிக்ஸ் பண்ணிட்டா பாட்டு முடியறவரைக்கும் விட்டு விலக்க் கூடாது இல்லியா?


ஆமாம்.


கிரீச் முரீச்னு போகறதே...


அது ஸ்ருதி இல்லீங்க குரல் ஒடையறது.


ஸ்ருதிங்கறது கொஞ்சம் அப்ஸ்டார்க்டோ?


க்ராஃப் போட்டுக் காட்டிடலாம் அதெல்லாம் கண்ணால பாக்கற விஷயம் ஆயிடுச்சி. எங்கெங்க விலகி இருக்குன்னு. பழக்கத்துல பிடிபட்டுடும்.


***


ராஜம்...


வயலினிஸ்ட்டு தானே


யோவ் ஃபோன்லயே ஒதைப்பேன். எனக்குத்தெரிஞ்சி ராஜம்னு ஒரு வயலினிஸ்ட்டே கர்நாடக சங்கீத்துலக் கெடையாதுங்க.


***

என்னைப் பொறுத்தவரைக்கும் ராஜரத்தினம் பிள்ளைதான் கர்நாடக சங்கீத்த்தின் உச்சம்.


அவரோட தோடில எது பெஸ்ட்டுன்னு சிடி பேர் குடுங்க.


சிடியா நாமளா போட்டாதான் உண்டு. எச்எம்வி சொத்து அது. அவன் எங்க போடப் போறான். எங்கிட்ட 1930 ரெக்கார்டிங் இருக்கு. எல்பியைவிட பெரிய சைஸ். ஒரு பக்கத்துல 3 நிமிஷம் மட்டும்தான் இருக்கும். அந்த ஆறு நிமிஷ வாசிப்பு.இன்னி வரைக்கும் யாரும் கிட்டக் கூட போகமுடியலை. ஆனா அவருக்கு சங்கீத கலாநிதி இல்லை.


ஏன்?


எந்தக் கட்டுக்கும் அடங்காத ஆளு


அட எங்க தருமுவாட்டம் (பிரமிள்)


***


இடையில் ஒரு இந்திய ஜென் கதை.


மியூசிக் அகாடெமியில் வித்வான்கள் எல்லாரும் கூடி ராகம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்


ராஜரத்தினம் பிள்ளை 


பேகடாவைப் பத்தி பேசறானுவளாம். ராத்திரி வரச் சொல்லு ஊதிக் காட்டறேன்


***


நேரத்திற்கு வராமல், இழுத்தடித்து, தண்ணியடித்துவிட்டு வந்து பத்து கச்சேரிகளில் அலைக்கழித்தாலும் பதினோராவது கச்சேரியும் கேட்கப்போவேன் மாலி என்பதற்காக. ஏனென்றால் அன்று ஒரு அற்புதம் நிகழ்ந்துவிடக்கூடும்.


ஆமாங்க, தருமு எதை எழுதினாலும் சண்டைக் கவிதை கட்டுரை எழுதினாலும் ஒரு மின்னல் தெறிப்பாவது இருக்கும்.


***


இப்படியாக இசைக்கு ராமச்சந்திரனும், இலக்கியத்திற்கு நானுமாய் உரையாடலை வரித்துக் கொண்டிருந்தோம்.


அப்புறம் பார்த்தால் இந்த அற்புதத்தை அனுப்பி வைத்தார்.


கர்நாடக சங்கீதத்தை மேட்டிமை கோட்டிமை என்று கோமாளி செய்கிற  மனிதாபிமான அதிதீவிரப் புரட்சிகள், மானுடத்தின் வைராக்கிய வெற்றி பற்றி எழுதியிருக்க வேண்டிய கதை/கட்டுரை இங்கே எழுதப் பட்டிருக்கிறது. கச்சேரிக்கு விளக்கு பிடித்தவனின் இசை வெறி அவனை எங்கு கொண்டு சென்றது என்கிற வரலாற்று நிகழ்வு ஒரு கதையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 


உள்ளே ரெக்கார்டு இல்லாத எல்பி அட்டையைக் கண்ணால் பார்த்தே இசைப் பதிவு எழுதும் உள்ளீடற்ற, எண்ணிக்கையில் கண் வைத்த எழுத்தாட்டிகளுக்கு இடையில் இதோ ஒரு எழுத்தாளன்.


முழுக்க படிக்க முடியாமல் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நெஞ்சு விம்மி நெக்குருக, கண்ணில் நீர் கோர்த்தது.


தி.ஜானகிராமன் செய்தி கதையை இப்படி முடித்திருப்பார்.


//“இந்தக் கையை கொடுங்கள். வாசித்த இந்தக் கையைக் கொடுங்கள். கடவுள் நர்த்தனமாடுகிற இந்த விரலைக் கொடுங்கள். நான் கடவுளை முகர்ந்து முத்தமிடுகிறேன்” என்று பிள்ளையின் விரலைப் பிடித்து உதட்டில் வைத்துக் கொண்டான் போல்ஸ்கா.


பிள்ளைக்கும் ஒரு செய்தி கிடைத்துவிட்டது!//


http://azhiyasudargal.blogspot.com/2011/01/blog-post_09.html


*********************************
மான்பூண்டியா பிள்ளை
நவம்பர் 1, 2010 Lalitharam ஆல்


http://bit.ly/fU4Bqt


மான்பூண்டியா பிள்ளையைப் பற்றி கிடைக்கும் தகவல்கள் ஒரு கதை போல உள்ளதாய் போன கட்டுரையில் எழுதியிருந்தேன்.


அதனால், கிட்டத்தட்ட ஒரு கதையாகவே இந்தக் கட்டுரையை எழுதிவிடலாம் என்று தொன்றியது:-) அவர் காலத்தில் இசைப் பதிவுகள் ஏதுமில்லாததாலும், அவரைக் கேட்டவர்கள் இன்றும் யாரும் இல்லாததாலும், இது போன்றே எழுத வேண்டியுள்ளது.


புதுக்கோட்டை மகாராஜா இராமச்சந்திர தொண்டைமானின் அரண்மனையில் கச்சேரி நடை பெற்று வந்தது. ஆஸ்தான வித்வான்களான நன்னுமியானும் சோட்டுமியானும் பாடிக் கொண்டிருந்தர்கள். டோலக் வாசித்துக் கொண்டே பாடுவதில் அவர்கள் வல்லவர்கள். அழகிய கார்வையில் ஸ்ருதியுடன் இணைந்து அவர்கள் நின்றபடியே, பளிச்சென்று முத்தாய்ப்பு ஒன்றை டோலக்கில் வைக்க, லாந்தர் விளக்கை ஏந்திக் கொண்டிருந்த மாமுண்டி தன்னையும் மீறி ‘ஆஹா’ என்றார். அரங்கில் இருந்தோரெல்லாம் அவர் பக்கம் திரும்ப, செய்வதறியாது தலையைக் குனிந்து கொண்டார்.


சில நொடிகள் ஆச்சர்யப் பார்வைகள் ஏளனப் பார்வைகளாயின. “லாந்தர்கார பாகவதரைப் பார்த்தீரா”, என்றொருவர் கூற அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது. மன்னர் இடை மறித்து “கச்சேரி தொடரட்டும்”, என்று சொல்லும் வரை சலசலப்பு தொடர்ந்தது. அனைவரின் கவனமும் கச்சேரியில் சென்று விட, மாமுண்டி என்று அழைக்கப்பட்ட மான்பூண்டியா பிள்ளை சிந்தனையில் ஆழ்ந்தார்.


“லாந்தர் சேவகம் செய்பவரின் மகன் சங்கீத வித்வான் ஆக முடியாதா? சங்கீதம் என்பது பரம்பரையாய் வரும் விஷயமா? அப்படியே பார்த்தாலும் சங்கீதத்துக்கும் எனக்கும் தொடர்பே இல்லையா? அரண்மனையில் நடப்பது மட்டும்தான் சங்கீதமா? வருடா வருடம் காமன் பண்டிகையில் நாடகம், லாவணி ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் எல்லாம் என் சுற்றத்தார்தானே? அவை எல்லாம் சங்கீதத்தில் சேர்த்தியில்லையா? நான்கு வருடங்களாய் காமன் பண்டிகையில் நான் தானே டேப் அடித்து வருகிறேன். அரண்மனை கச்சேரி, தெருவில் நடக்கும் நாடகம், இரண்டிலும் பொதிந்துள்ள லயம் ஒன்றுதானே?”, என்றெல்லாம் அவர் மனம் பல எண்ணங்களை அசை போட்டு வந்தது.


கச்சேரி முடிந்த உடன், “மாமுண்டி! உனக்கெதுக்கு லாந்தர் உத்தியோகம். முழு நேர சங்கீத வித்வானாகும் வழியைப் பாரேன்”, என்று விளையாட்டாய் கூறினார் ஓர் அரண்மனை பிரமுகர். மான்பூண்டியா பிள்ளையின் காதுகளுக்கோ அது தெய்வ வாக்காய் ஒலித்தது. “இன்றோடு இந்த லாந்தர் சேவைக்கு ஒரு முழுக்கு”, என்று முடிவுக்கு வந்தவராய் மாரியப்ப தவில்காரர் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.


இரவுச் சாப்பாடை முடித்து திண்ணையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் மாரியப்ப தவில்காரர். அவரை அவசரமாய் அணுகி காலில் விழுந்த படி “அண்ணா, என்னை உங்க சிஷ்யனா ஏத்துக்க்ணும்”, என்றார் மான்பூண்டியாப் பிள்ளை.


“எழுந்திரு தம்பி. உன்னைப் பார்த்தா மாதிரி இருக்கு, ஆனா அடையாளம் தெரியலையே.”


“நான் ‘லாந்தர் சேவகம்’ அய்யாசாமி சேர்வையின் பிள்ளை. அரை மணி நேரத்துக்கு முன்னாடி வரை நானும் அரண்மனையில் அதே வேலையை செஞ்சுகிட்டு இருந்தேன். இனிமேல் உங்க கிட்ட குருகுலவாசம் செய்ய நினைக்கிறேன். நீங்கதான் மனசு வெக்கணும்”


“தம்பி! உன்னை நிறைய தடவை பார்த்திருக்கேன். போன வாரம் கூட கல்யாண ஊர்வலத்துல நான் வாசிச்ச போது, நீ தலையை ஆட்டி ஆட்டி என் வாசிப்பை ரசிச்சது இப்ப ஞாபகத்துக்கு வருது. ஆனால், இவ்வளவு வயசுக்கு மேல சங்கீதம் கத்துகிட்டு…”


“அப்படிச் சொல்லாதீங்கண்ணே. இவ்வளவு நாளா நான் அரண்மனையில வேலை பார்த்தாலும், என் மனசு முழுக்க லயம்தான் நெறஞ்சு இருக்கு.”


“உன் ஆர்வம் எனக்குப் புரியுது தம்பி. ஆனா, இன்னிக்கு தவில் வாசிக்கறவங்க எல்லாம் பரம்பரை பரம்பரையா இதையே தொழிலா வெச்சுக்கிட்டவங்க. நாளைக்கு நீ எவ்வளவு நல்ல தவில் வித்வானா வந்தாலும், உன்னை எந்த நாதஸ்வர கோஷ்டியிலையாவது சேத்துப்பாங்களானு தெரியலை.”


“அண்ணே! நான் தவில்காரங்களோட போட்டி போடணும்னு கத்துக்க நினைக்கல. ஒவ்வொரு நாளும் அரண்மனை கச்சேரியில வாத்யங்களை கேட்கும் போது, எனக்கும் வாசிக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.”


“அப்ப ஒண்ணு செய். அரண்மனை வேலை முடிஞ்சதும் நேர நம்ப வீட்டுக்கு வந்துடு. ஒழிஞ்ச போது உனக்கு சொல்லி வைக்கிறேன். சங்கீதத்துக்காக நிரந்தர சம்பளத்தை விட்டுடாத”, என்றார் மாரியப்ப தவில்காரர்.
மான்பூண்டியாப் பிள்ளை

மான்பூண்டியா பிள்ளையும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார். அரண்மனையில் லாந்தர் உத்தியோக நேரம் போக மற்ற நேரங்களில் மாரியப்ப தவில்காரரின் வீட்டிலேயே கழித்தார். இயற்கையிலேயே நல்ல லய நிர்ணயம் கொண்டிருந்த மான்பூண்டியா பிள்ளைக்கு, தவில் வாசிப்பில் பொதிந்துள்ள கணக்குகள் சுலபமாகவே கைவந்தன. தன் சிஷ்யன் எவ்வளவுதான் நன்றாக வாசித்தாலும் அவரை எந்த நாதஸ்வர கோஷ்டியும் சேர்த்துக் கொள்ளாது என்பதை நன்குணர்ந்திருந்தார் மாரியப்ப தவில்காரர்.


தவில் கற்பதற்கு முன்னால் பல வருடங்களாய் டேப் அடித்துப் பழக்கம் இருந்ததால், குருநாதர் சொல்லும் சொற்களை எல்லாம் ஒற்றைக் கையால் மான்பூண்டியாப் பிள்ளை வாசிப்பதைக் கண்ட மாரியப்பத் தவில்காரருக்கு, ஒரு யுக்தி தோன்றியது.


தன் சிஷ்யனை அழைத்து, “மாமுண்டி, இவ்வளவு திறமையை வெச்சுகிட்டு நீ லாந்தர் உத்யோகம் பார்க்கிறது சரியில்லை. இப்பல்லாம் எல்லா சமஸ்தானங்களிலும் பாட்டுக் கச்சேரி நிறைய நடக்குது. அதுக்கெல்லாம் மிருதங்கமும் கடமும்தான் வாசிக்கறாங்க. நீ பல வருஷமா டேப் அடிக்கறையே, அதை கச்சேரிக்கு ஏத்த வாத்யமா மாத்த முடியுமானு பாரு. நான் சொல்லித் தரதையெல்லாம் அந்த வாத்யத்துல வாசிச்சுப் பழகு.”, என்றார் மாரியப்ப தவில்காரர்.


இதனைக் கேட்ட மான்பூண்டியாப் பிள்ளைக்குத் தலைகால் புரியவில்லை. அன்று முதல் டேப்பை கச்சேரிக்கு ஏற்ற வாத்யமாய் எப்படி மாற்றலாம் என்று சிந்திக்க ஆரம்பித்தார். பல விதமான மரங்களை வெவ்வேறு அளவுகளில் குடைந்து பார்த்தார். அதன் மேல் வெவ்வேறு தொல்களை மடாய்த்துக் கட்டினார். அவ்வாறு உருவாக்கிய வாத்யங்களின் நாதத்தை பரிசோதித்துப் பார்த்தார். இறுதியில், டேப்பை விட சற்றே சுற்றளவு குறைவாய், பலாக் கட்டையின் மேல் உடும்புத் தோல் போர்த்தியிருந்த வாத்யத்தில் எழுந்த நாதம் அவருக்கு திருப்தியளித்தது. உடும்புத் தோலில் கொஞ்சம் தண்ணீரைத் தடவியதும் வாத்யத்தின் ஒலி தாழ்ந்து ஒலித்து காதுக்கு இனிமையாய் கேட்டது.


மிருதங்கத்தில் உலோகப் பொடி கொண்டு வலந்தலையில் கரணை இடுவதால், உலோகத்தில் எழும் ரீங்காரம் மிருதங்கத்தில் எழுவதை உணர்ந்தார். அது போலவே, தான் உருவாக்கிய ஒற்றைக் கை வாத்தியத்திலும் உலோகத்தை சேர்க்க நினைத்தார். வாத்யத்தின் மரச் சட்டத்தைக் குடைந்து, உலோகத்தால் ஆன காசு போன்ற வட்டங்களை பொருத்தினார். உருட்டுச் சொற்கள் வாசிக்கும் போதும், இந்தக் காசுகளும் அதிர்ந்து, இனிமையான நாதத்தை எழுப்பின.


தன் கடின உழைப்பால் உருவாக்கிய கருவிக்கு கஞ்சிரா என்று பெயர் சூட்டினார் மான்பூண்டியா பிள்ளை. வாத்யத்தை கண்டு பெரிதும் மகிழ்ந்த மாரியப்பத் தவில்காரர், “மாமுண்டி இதுதான் உனக்கு ஏத்த வாத்யம். தொடர்ந்து இதில் சாதகம் செய்தால் நீ பெரிய வித்வானாய் வருவாய்.”, என்று வாழ்த்தினார்.


கஞ்சிராவில் விடாமல் சாதகம் செய்து, மிக வேகமான உருட்டுச் சொற்களைக் கூட தெளிவாகவும் இனிமையாகவும் வாசிக்கும் திறனை பெற்றார் மான்பூண்டியாப் பிள்ளை. அவர் கற்பனைக்கு உதித்த நடை பேதங்கள், மொஹ்ராக்கள், கோர்வைகள் ஆகியவை அதற்கு முன்னால் எவருக்குமே தோன்றாத புது வழியில் அமைந்திருந்தன. அவர் வாசிப்பைக் கேட்டவர்கள் எல்லாம், “கர்நாடக இசையில் ராகங்களின் நுணுக்கங்களை எல்லாம் வெளிக் கொணர தியாக பிரம்மம் தோன்றியது போல, லய நுணுக்கங்களை உலகத்தாருக்கு எடுத்துச் சொல்லத் தோன்றியவர் இவர்”, என்று கூறி மகிழ்ந்தனர். புதுக்கோட்டை அருகில் உள்ள பல பஜனை மடங்களில் கஞ்சிராவை வாசித்துப் பழகிய பின், கஞ்சிராவை கச்சேரிகளில் அரங்கேற்றம் செய்ய நினைத்தார்.


அந்தச் சமயத்தில் கச்சேரிகளில் வாசிப்பதில் முதன்மை இடத்திலிருந்த லய வித்வான் தஞ்சாவூர் நாராயணசாமியப்பாதான். அவருடைய ஒப்புதல் தன் வாசிப்புக்கும், வாத்யத்துக்கும் கிடைத்துவிட்டால் கஞ்சிராவை அரங்கேற்றிவிடலாம் என்றெண்ணி தஞ்சாவூர் சென்றார்.


வியாழக் கிழமை மாலை தஞ்சாவூரை அடைந்த மான்பூண்டியாப் பிள்ளை, நேராக நாராயணசாமியப்பாவை சந்திக்கச் சென்றார்.


“ஐயா! என் பேர் மான்பூண்டி. புதுக்கோட்டையிலிருந்து வரேன். நான் ஒரு கஞ்சிரான்னு வாத்யம் தயார் பண்ணி இருக்கேன். அதை உங்க கிட்ட வாசிச்சு அரங்கேற்றம் பண்ணனும்னு இவ்வளவு தூரம் வந்தேன்.”


“கஞ்சிராவா? ரொம்பப் புதுமையா இருக்கே. நாளைக்கு சாயங்காலம் நம்ம வீட்டுல பஜனை இருக்கு. அதுல நீங்க வாசிங்க. ரொம்ப தூரத்துல இருந்து வந்திருக்கிங்க, ராத்திரி ஜாகை நம்ம வீட்டுலையே போட்டிருலாம்.”, என்று உணவும், திண்ணையில் படுக்க இடமும் அளித்தார் நாராயணசாமியப்பா.


அடுத்த நாள், நிரம்பியிருந்த பஜனை கூடத்தில் நுழைந்த மான்பூண்டியா பிள்ளைக்கு மூலையில் ஓர் இடம் கிடைத்தது. தம்புரா ஸ்ருதி ஒலிக்க நாரயணசாமியப்பா தன் வாத்யத்தை ஸ்ருதியுடன் இணைத்துக் கொண்டார். மான்பூண்டியா பிள்ளை தன் வாத்யத்தை எடுத்ததும், அனைவரின் பார்வையும் அவர் பக்கம் திரும்பின. “ஸ்ருதியே இல்லாத வாத்யம் கேட்க இனிமையாக இருக்குமா? இரண்டு கையில் மிருதங்கத்தில் வாசிப்பதை எல்லாம் இந்த ஒத்தக் கை வாத்யத்தில் வாசிக்க முடியுமா?”, என்றெல்லாம் அவர்கள் எண்ணுகையில், சிறிது நீரை கஞ்சிராவில் தெளித்து வாத்யத்தை தன் காதருகே வைத்துத் தட்டிப் பார்த்தார். கஞ்சிராவிலிருந்து பிறந்த ஒலி தனக்கு திருப்தியானதும், கண்களை மூடி ஒருமுறை முருகனை வேண்டி, கஞ்சிராவில் ‘தீம்’ என்ற சொல்லைப் போட்டார்.


“இந்தப் புது வாத்யத்தின் ‘தீம்காரம்’ அரங்கையே நிரப்புகிறதே”, என்று நாராயணசாமியப்பா வியந்தார். “கீர்த்தனைக்கு கூட சேர்ந்து வாசிங்க”, என்றார். முதலில் நாரயணசாமியப்பா தன் மிருதங்கத்தில் அமைத்து வந்த நடையை எல்லாம் நிழலெனத் தொடர்ந்து வந்தார் மான்பூண்டி. “தம்பி, நான் வாசிக்கறதுதான் வாசிக்கணும்னு இல்ல. உங்க கற்பனைக்கு தோன்றிய படி வாசிங்க”, என்று நாராயணசாமியப்பா கூறவும், கீர்த்தனையின் ஒவ்வொரு வரிக்கும் தினுசு தினுசாய் நடைகள் அமர்த்தியபடி வாசிக்கத் தொடங்கினார். அன்று அவர் வாசித்த லய கோவைகளை அதுவரை தஞ்சையில் யாருமே கேட்டதில்லை. கஞ்சிராவின் கம்பீரமான நாதத்திலும், மான்பூண்டியாப் பிள்ளை அமர்த்திய சொற்கட்டுகளிலும் சொக்கிப் போன நாராயணசாமியப்பா, “தம்பி! பாட்டே வேண்டாம் போல இருக்கு. உங்க வாத்யத்தை மட்டுமே கேட்டாப் போதும்னு தோணுது. இதுல ‘தனி’ வாசிக்க வசதியுண்டா?”, என்றார்.


மான்பூண்டியாப் பிள்ளையும் உடனே தனி ஆவர்த்தனம் வாசிக்க ஆரம்பித்தார். அதுவரை பாடிய கீர்த்தனைகளில் உள்ள லய அபிப்ராயங்களை விஸ்தாரம் செய்து சில ஆவர்த்தங்கள் வாசித்த பின், ஓர் அட்சரத்துக்கு நான்கு மாத்திரை வீதம் சென்று கொண்டிருந்த சதுஸ்ர நடையை மாற்றினார். தாளம் போட்டு ரசித்து வந்தவர்கள் குழம்ப ஆரம்பித்தனர். ‘தகதிமி தகதிமி’ என்று சென்று கொண்டிருந்த நடையை ‘தகிட தகிட’ என்று மாற்றியதும், “ஆஹா! அபச்சாரம்! இப்படியெல்லாம் செய்ய்லாமா? சம்பிரதாய விரோதமில்லையா?”, என்றார் தாளத்தை தவறவிட்ட ஒரு ரசிகசிரோன்மணி. அவரைத் தொடர்ந்து பலரும் வாசிப்புக்கு எதிராய் குரல் கொடுக்கத் தொடங்கினர். நாராயணசாமியப்பாவோ திடமாய் தாளம் போட்ட படியே, அவர்களை கையமர்த்தினார். அவரை எதிர்த்து ஒன்றும் சொல்ல முடியாத நிலையில் மீண்டும் மான்பூண்டியா பிள்ளையின் வாசிப்புக்கு தாளம் போடத் தொடங்கினர். ஒவ்வொரு முறையும் தாளம் கைவசப்பட்டுவிட்டது என்று அவர்கள் நினைக்கும் போதெல்லாம், புதுமையான ஓர் அபிப்ராயத்தை கஞ்சிராவில் வாசித்து அவர்களை திக்குமுக்காட வைத்தார் மான்பூண்டியா பிள்ளை.


நீண்ட நேர பிரஸ்தாரத்துக்குப் பின், மின்னல் வேகத்தில் விழும் சொற்கட்டுகளை கஞ்சிராவில் உதிர்த்து, வாசிப்புக்கு மகுடம் வைத்தது போல, பல நடைகள் கலந்து வரும் நுணுக்கமான கோர்வையை மூன்று முறை வாசித்து தனி ஆவர்த்தனத்தை மான்பூண்டியா பிள்ளை முடித்த போது, நாராயணசாமியப்பா ஒருவர்தான் தாளம் போட்டுக் கொண்டிருந்தார்.


“இப்படி கஞ்சிரா வாசித்தால் மிருதங்கமே தேவையில்லை. எப்பேர்பட்ட கற்பனை. எத்தகைய சாதக பலம். ஆஹா அஹா”, என்று மகிழ்ந்த நாராயணசாமியப்பா கூட்டத்தைப் பார்த்து, “இன்று இவர் வாசித்ததில் எதுவும் சம்பிரதாய விரோதம் இல்லை. நாம் இது வரை அதிகம் கேட்டிராத பாணியில் அமைந்திருந்ததால் உங்களுக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். மான்பூண்டி! இனி எனக்குத் தெரிந்த சங்கீத வித்வான்களுக்கு எல்லாம் உன்னைப் பற்றி சொல்கிறேன். அனைவரது கச்சேரியிலும் உன் வாசிப்பு நிச்சயம் இடம் பெற வேண்டும்.”, என்றார்.


லய சமாசாரங்களில் நாராயணசாமியப்பா கூறியதே கடைசி வார்த்தை என்றருந்த நிலையில் அங்கு குழுமியிருந்தோரும் மான்பூண்டியா பிள்ளையை புகழத் தொடங்கினர்.


தன் திக்விஜயத்தை வெற்றியுடன் தஞ்சாவூரில் தொடங்கிய மான்பூண்டியா பிள்ளை, அடுத்து கும்பகோணம் சென்றார். அங்கு சிவக்கொழுந்து நாயனக்காரர் பெரும் பேருடன் விளங்கி வந்தார். அவரைச் சந்தித்து,தன் வாத்தியத்தை அவ்வூரில் அரங்கேற்ற உதவ வேண்டினார். அடுத்த நாளே திருப்பழனம் பஞ்சாபகேச சாஸ்திரிகள் மடத்தில் அதற்கு ஏற்பாடு செய்தார். எல்லோரும் வியக்கும் படி பல புதுமைகளைப் புகுத்தி மான்பூண்டியா பிள்ளை வாசித்தார். அவர் வாசிப்பில் மயங்கிய சிவக்கொழுந்து நாயனக்காரர் மான்பூண்டியாப் பிள்ளையை கௌரவப்படுத்தி, சன்மானங்கள் அளித்து மிகுந்த மரியாதையுடன் அனுப்பி வைத்தார்.


தொடர்ந்து பல ஊர்களின் தன் திறமையைக் காட்டிய பின்னர் சென்னை வந்தடைந்தார் மான்பூண்டியா பிள்ளை. சென்னைக்கு அவர் வருவதற்கு முன் அவர் புகழ் வந்தடைந்திருந்தது. இம் முறை அவர் அரங்கேற்றத்துக்கு யாரையும் அணுக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவர் சென்னைக்கு வந்தது அறிந்ததும், பலர் அவரை கச்சேரிகளுக்கு வாசிக்க அழைத்தனர். அதில் ஒரு கச்சேரி திருவையாறு சுப்ரமணிய ஐயருக்கு வாசிக்க ஏற்பாடாகியிருந்தது. சுப்ரமணிய ஐயர் சென்னையில் பெரும் புகழுடன் இருந்து வந்த காலமது.


கச்சேரி தொடங்கும் முன் சுப்ரமணிய ஐயர், “பிள்ளைவாள்! லயத்துல உமக்கு இணையே இல்லைனு ஒரு பேச்சு அடிபடறதாக் கேள்விப்பட்டேன். அது உண்மையானு இன்னிக்கு தெரிஞ்சுடும். கச்சேரிக்கு முன்னால் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திப்போம். என் பாட்டுக்கு நீங்க சரியா வாசிச்சுட்டா நான் என்ன செய்யணும்? அப்படி வாசிக்க தவறினால் நீங்க என்ன செய்யணும்? அதை முதல்ல சொல்லுங்க”, என்று கூறி அனைவரையும் திடுக்கிட வைத்தார். அங்கு குழுமியொருந்தவர்கள் எல்லாம் எவ்வளவோ எடுத்துக் கூறியும் சுப்ரமணிய ஐயர் தன் போட்டி மனப்பான்மையை விட ஒப்பவில்லை.


மான்பூண்டியா பிள்ளை, “ஐயா! தற்சமயம் நீங்க எதை வேண்டுமானாலும் பந்தயமா கட்டக் கூடிய நிலையில இருக்கீங்க. என்னிட என் கஞ்சிராவைத் தவிர எதுவுமேயில்லை. அதனால, உங்க பாட்டுக்கு என்னால் வாசிக்க முடியலைன்னா கஞ்சிரா வாசிக்கறதை இன்னியோட தலை முழுகிடறேன்.”, என்றார்.


“அப்படி நான் தோத்துட்டா என் ஸ்தானத்துல உங்களை உட்கார வெச்சுட்டு, நான் பாடறதை விட்டுடறேன்”, என்றார் சுப்ரமணிய ஐயர்.


கச்சேரி தொடங்கியதும், வர்ணம் கீர்த்தனை முதலான உருப்படிகளைப் பாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் சுப்ரமணிய ஐயரோ ராக ஆலாபனையில் இறங்கினார். பெயருக்கு கொஞ்ச நேரம் ராகமும், அதற்கு பின் தானமும் பாடிய பின்னர்,தான் வெகு நாளாய் சாதகம் செய்து வைத்திருந்த பல்லவியை பாட ஆரம்பித்தார்.


பல்லவியை முதல் முறை பாடும் போது கேட்டுக் கொண்டு வந்த மான்பூண்டியாப் பிள்ளை, இரண்டாம் முறை பாடும் போது ஒரு சில சொற்களை வாசித்து பல்லவியில் இணைந்து கொண்டார். மூன்றாம் முறை பாடும் போது பல்லவியையே கஞ்சிராவில் வாசித்து, ஒரு மின்னல் வேக சொற்கட்டுடன் பல்லவி அருதியில் கச்சிதமாய் நிறுத்திய போது அரங்கம் அதிர்ந்தது. அதன் பின் சுப்ரமணிய ஐயர் பாடப் பாட ஒவ்வொரு ஆவர்த்தத்துக்கும் வெவ்வேறு நகாசுகளை தன் வாசிப்பில் புகுத்தி பல்லவியை பரமளிக்க வைத்தார். பாடகர் பல்லவியை த்ரிகாலம் செய்து, நடையை மாற்றி திஸ்ர நடையில் கீழ்க் காலத்தில் பாடி, அதன் பின் மேல் காலத்தில் பாடியதையெல்லாம் வாங்கி, இம்மி பிசகாமல் வாசித்தும் காண்பித்தார் மான்பூண்டியாப் பிள்ளை. அரை மணி நேர துவந்த யுத்ததுக்குப் பின், சுப்ரமணிய ஐயர் மேடையில் எழுந்து நின்றார்.


“நான் இன்று புதுக்கோட்டை மஹாவித்வான் மான்பூண்டியாப் பிள்ளையிடம் தோற்றுவிட்டேன். இனி அவர்தான் என்னிடத்தில் அமர வேண்டும்.”, என்று மேடையை விட்டு இறங்கப் போனார்.


அவரை கையைப் பிடித்து தடுத்த மான்பூண்டியாப் பிள்ளை, “ஐயா! ஊர் ஊராப் போய் கஞ்சிராவை அரங்கேற்றம் பண்ணிட்டு வரேன். மத்த ஊருல எல்லாம் பஜனையோ, இல்ல பிரபல பாட்டுக்கோ வாசிக்கத்தான் வாய்ப்பு கிடைச்சுது. இன்னிக்கு நீங்கதான் கஞ்சிராவில் என்னவெல்லாம் செய்ய முடியும்-னு உலகுக்கு காட்ட வழி செஞ்சீங்க. உங்க பல்லவிக்கு வாசிச்சதை விட சிறப்பான அரங்கேற்றம் இந்த புது வாத்யத்துக்கு கிடைச்சுருக்கவே முடியாது. அதுக்கு நான் என்னென்னுக்கும் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கேன். தயவு செஞ்சு உங்க இடத்துல உட்கார்ந்து கச்சேரியைத் தொடருங்க.”, என்றார்.


மான்பூண்டியாப் பிள்ளையின் பேச்சில் நெகிழ்ந்த சுப்ரமணிய ஐயர் கச்சேரியைத் தொடர்ந்தார்.


இரு மஹா வித்வான்களுக்கு இடையில் நடந்த போட்டியும், போட்டியின் முடிவில் அவர்களுக்கிடையில் இருகிய நட்பும் சென்னை மக்களிடையே தீ போல் பரவியது. பல இடங்களில் இவர்களது கச்சேரி ஏற்பாடானது.


இவ்வாறாக தஞ்சாவூரில் தொடங்கிய மான்பூண்டியாப் பிள்ளையின் திக் விஜயம் தமிழ்நாடெங்கும் பரவி அவருக்கு பெரும் புகழை ஈட்டித் தந்தது. ”இது என்ன புது வாத்யம்”, என்ற பார்த்த ரசிகர்கள் வெகு சீக்கிரத்திலேயே, “கஞ்சிரா இல்லாமல் கச்சேரி நடப்பதாவது?”, என்று சொல்ல ஆரம்பித்தனர். கச்சேரியில் வெறும் ரஞ்சகத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்த வாத்தியக்காரர்கள், மான்பூண்டியா பிள்ளையின் வருகையால் நுட்பமான லய விவகாரங்களில் ஈடுபடத் துவங்கினர்.


அநேகம் பேர் மான்பூண்டியா பிள்ளையிடம் சிஷ்யர்களாகச் சேர்ந்தனர். மாரியப்பத் தவில்காரரே ஓரளவு தேர்ச்சி பெற்ற சிஷ்யர்களை, “கணக்கு வழக்கெல்லாம் நம்ம மாமுண்டி கிட்டப் போய் கத்துக்க” என்று அனுப்பி வைத்தார். அவ்வாறு வந்தவர்களில் தவில், மிருதங்கம், கஞ்சிரா ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்கிய பழனி முத்தையாப் பிள்ளையும் அடக்கம்.


மான்பூண்டியா பிள்ளையின் சிஷ்யர் என்றவுடன் முதலில் நினைவுக்கு வரும் பெயர் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளையே. மான்பூண்டியா பிள்ளை தொடங்கி வைத்த ‘புதுக்கோட்டை வழி’ லய பரம்பரையில் இவருக்கு இணையாய் புகழடைந்தவர் எவருமில்லை.


இவ்விருவரைத் தவிர, புதுக்கோட்டை ராமையா பிள்ளை, திருச்செந்தூர் ராமையா பிள்ளை, ராமநாதபுரம் சித்சபை சேர்வை (இவர் பிரபல வித்வான் சி.எஸ்.முருகபூபதியின் அப்பா), சேத்தூர் ஜமீந்தார், நாடக ஆசிரியர் சங்கரதாஸ் ஸ்வாமிகள் பொன்ற எண்ணற்ற சிஷ்யர்கள் மான்பூண்டியாப் பிள்ளையின் புகழை என்றும் நிலைத்திருக்கச் செய்தனர்.


தன் உழைப்பில் உருவான லய விவகாரங்களை பாட்டில் பாடி வெளிப்படுத்த விரும்பி, அக் காலத்தில் முத்ன்மைப் பாடகராக விளங்கிய கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயருக்கு பயிற்சி அளித்தார் மான்பூண்டியா பிள்ளை. அவரது கச்சேரிகள் பலவற்றில், தன் சீடர் தட்சிணாமூர்த்தி பிள்ளையுடன் இணைந்து வாசித்ததன் மூலம், அவர் உருவாக்கிய வாத்யத்தையும், லய வழியையும் பல ஊர்களில் பரப்பினார்.


இசையன்றி வெறொன்றின் மேலும் பற்றில்லாதவராக விளங்கிய மான்பூண்டியா பிள்ளை, தன் 62-வது வயதில் சன்யாசம் பெற்று முருகானந்த ஸ்வாமி என்ற பெயருடன், தன் இல்லத்திலேயே வேல் பிரதிஷ்டை செய்து, துறவு வாழ்க்கை வாழ்ந்தார். 14 டிசம்பர் 1859-ல் பிறந்த இவர், 17 ஜனவரி 1922 அன்று, தன் சிஷ்யர்கள் புடை சூழ்ந்து திருப்புகழ் இசைப்பதை கேட்டவாறு சமாதியடைந்தார்.


லலிதா ராம் வலைப்பூ - http://carnaticmusicreview.wordpress.com