06 April 2011

ஐரோப்பிய நாவலாசிரியர்களைப் பற்றி கொல்லிப் பாவையில் சுந்தர ராமசாமி

அது அந்தக் காலம். உயர்ந்த விஷயங்களை எழுத்தாளர்கள் வாசகனுக்கு எடுத்துச் சொல்லியது.

இது இந்தக் காலம். எழுத்தாளர்கள் தங்களை உயர்வாய் எடுத்துச் சொல்லிக் கொள்ளுவது. 

எழுத்தாளன் தன்னைப் பற்றிப் பெருமையாய்ப் பேசவேக் கூச்சப்பட்டது அது அந்தக் காலம்.

தன் பெருமையைத் தானே பேசுவதோடு அல்லாமல் எப்படி எல்லாம் தன்னை வாசகன் பெருமையுடன் பேச வேண்டும் என்று வகுப்பெடுப்பது இது இந்தக் காலம்.

விசிலடிப்பதை நிறுத்தி, எழுத்தைப் பற்றிக் கொண்டு ரசிகன் தீவிர வாசகனாகப் போவது, அது எந்தக் காலம்? 

எழுத்தாளர்கள் பெயர் உதிர்க்காமல்,எழுத்தாளர்களைப் பற்றி எழுதி எழுத்தாளர்களை உருவாக்கிய பொற்காலத்தில் இருந்து சில பக்கங்கள்.
கொல்லிப்பாவை இதழ் 3 - 1978
ஸ்வீடிஸ் தேசத்து இலக்கிய கர்த்தா, 1951ல் நோபல் பரிசு பெற்றவர். ‘பாரபாஸ்’ என்னும் நாவல் எழுதி உலகப்புகழ் பெற்றவர். இந்நாவல் வெளிவந்த முதலாண்டிலேயே பதினொரு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதாம். திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது.


‘பாரபாஸ்’ நாவல் தமிழிலும் ‘அன்பு வழி’ என்ற தலைப்பில், க.நா.சு.வால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒரு பதிப்பு வந்ததோடு சரி. வாசகர்கள் கண்டுபிடித்துப் படித்துப் பார்க்க வேண்டிய நாவல் இது.


‘அன்புவழி’ நாவலில் திருடன் ஒருவன் தண்டனைக்கு உள்ளாகிறான். அவனுக்குப் பதிலாக இயேசு குருசில் அறையப்பட்டுத் தண்டனை பெறுகிறார். இயேசுவுக்குப் பதிலாக ‘பாரபாஸ்’ விடுதலை பெறுகிறான். இயேசு குரிசில் அறையப்படும் காட்சியை  கண்ணால் பார்க்க நேரும் ‘பாரபாஸ்’ பெரும் பாதிப்புக்குள்ளாகிறான். இயேசு குரிசில் அறையப்பட்ட காட்சி அவன் மனதில் நீங்காது இடம் பெறுகிறது. ஆனால் அவனால் இயேசுவை முழுமையாக ஏற்றுக்கொள்ளவோ, பின்பற்றவோ முடியவில்லை. செம்புச் சுரங்கம் ஒன்றில் அடிமையாக வேலை பார்க்கும் பாரபாஸ் மன உளைச்சல் என்ற குரிசில் ஓயாது தன்னை அறைந்து அவதிக்குள்ளாகிறான். ஆத்மீக ஒளியை ஏற்றுக்கொள்ள விரும்பியும், ஏற்றுக்கொள்ள இயலாத, தருக்க உலகுக்கு ஆட்பட்டுவிட்ட நவீன மனிதனின் இரண்டுங்கெட்டான் நிலையை பாரபாஸ் காட்டுவதாக கொள்ளலாம்.


பேர்லார்கர் குவிஸ்டு 1891ல் பிறந்தவர். அவருடையது விவசாயிகளின் குடும்பம். மிகுந்த மத நம்பிக்கைக்கு உட்பட்டது. வைதீகமானது. கிறிஸ்துவ வைதீக மத நம்பிக்கைகளை பேர்லாகர் குவிஸ்ட்டால் முழுமையாக ஏற்க முடியவில்லை. முழுமையாக நிராகரிக்கவும் முடியவில்லை.


பேர்லாகர் குவிஸ்ட் சுமார் 35 புத்தகங்கள் வரையிலும் எழுதியிருக்கிறார். 1913ல் சுவீடனிலிருந்து அவர் பாரீஸ் சென்றார். பாரீஸில் கூபிஸ்டு இயக்கம் மும்முரப்பட்டுக் கொண்டிருந்த காலம். இவ்வியக்கம் இவர் மனதை பாதித்தது. நுண் கலைகள், முக்கியமாக ஓவியம் தன் தடைகளை முறித்துக்கொண்டு, வாழும் காலத்தின் பிரதிபலிப்பை ஏற்று பயணத்தை முடுக்கிக்கொண்டிருப்பதாயும், இலக்கியம் தயங்கி பின் நிற்பதாகவும் அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது.


பேர்லாகர் குவிஸ்டு ஒரு கவியாக தன் இலக்கிய வாழ்வை ஆரம்பித்தவர். ‘துக்கம்’ என்ற தலைப்பில் இவர் வெளியிட்ட முதல் கவிதைத்தொகுதி இவருடைய 25வது வயதில் வெளியாயிற்று.


இளமைக் காலத்தில் பேர்லாகர் குவிஸ்ட்டை சங்கடப்படுத்திய பிரச்சனைகள் இரண்டு. ஒன்று அவருடைய மனோபாவத்துக்கு மாறாக வைதீக கிறிஸ்துவ மதம் கொண்டிருந்த நிலை. இரண்டு முதல் உலகப் போரின் விளைவாக ஏற்பட்ட நாசங்கள். இவர் எழுதிய முதல் நாடகம் ‘கடைசி மனிதன்’ என்பது. பைபிளைத் தழுவி எழுதிய நாடகம் இது. முப்பது வயதில் லாகர் குவிஸ்டு பிரஞ்சு தேசத்திலும் இத்தாலியிலும் வாழ்ந்தார். இவருடைய வாழ்க்கைப் பார்வையில் நம்பிக்கையின் ஒளியைச் சேர்க்க இவ்வெளிநாட்டு வாழ்க்கை உதவிற்று. மீண்டும் 1930 வாக்கில் ஐரோப்பியச் சூழ்நிலையில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. வன்முறையும், எதேச்சதிகாரமும், பயமுறுத்தல்களும் வாழ்க்கையை மிக மோசமாக கெடுத்துக் கொண்டிருந்தன. இச்சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு பேர்லாகர் குவிஸ்ட்  ஏகாதிபத்தியத்தின் பரம வைரியாக மாறினார். இக்காலத்தில் இவர் எழுதிய நூல் ‘தூக்குத்தூக்கி’ என்பது. ஏகாதிபத்தியத்தைக் கேலி செய்து முகத்திரையைக் கிழிக்கும் நூல் இது. இந்நாவல் நாடகமாக மாற்றப்பட்டு அரங்கேறியபொழுது ஸ்காண்டிநேவிய நாடக உலகில் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளாயிற்று.


இவருடைய  ’ஆத்மாவை இழந்த மனிதன்’ என்ற நாவலில் பலாத்காரவாதியான ஒரு அரசியல்வாதி காதல் வாழ்க்கை மூலம் பக்குவப்பட்டு மனித வாழ்வைக் கருணையோடு பார்க்கும் மாற்றாத்தைப் படிப்போர் ஏற்றுக்கொள்ளும்படி மிக அழகாக சொல்லி இருக்கிறார். இதற்குப் பின் இவர் எழுதிய பிரபல நாடகம் ‘மனிதன் வாழட்டும்’ என்பது. நாடகத்தில் இயேசு நாதர், சோக்ரதர், ஜாண் ஆப் ஆக், ஒரு அமெரிக்க நீக்ரோ ஆகியோர்கள் வருகிறார்கள். இவர்களுடைய தலைவிதியின் பொதுத்தன்மையை ஆராய்கிறார் பேர்லாகர் குவிஸ்டு இந்நாடகத்தில்.

பேர்லாகர் குவிஸ்டு பேச்சில் நம்பிக்கை அற்றவர். பொதுக் கூட்டங்களின் கோலாகலங்களில் அவர் எப்போதுமே கலந்து கொண்டதில்லை. நோபல் பரிசு பெற்றபொழுது நிருபர்கள் அவரை அணுகி உலக மக்களுக்கு ஒரு விசேஷ செய்தி தர வேண்டும் என்று கேட்டதற்கு பேர்லாகர் குவிஸ்டு, ‘சொல்ல எதுவும் இல்லை என் புத்தகங்களில் அனைத்தும் சொல்லி இருக்கிறேன்’ என்றார்.

கொல்லிப்பாவை இதழ் 4 - 1978 

ஹெர்மன் ஹெஜே எழுதிய ‘சித்தார்த்தா’வின் திரைப்படத்தில், ஓர் இந்தி நடிகை அம்மணமாக நடித்ததை ஒட்டி ஏற்பட்ட பரபரப்பில், இந்திய ‘அறிவாளி’களின் மத்தியில் இந்த ஆசிரியரின் பெயரும் கொஞ்சம் அடிபட்டது. புத்த நிர்வாணத் தத்துவத்தில் வெகுவாக ஈடுபாடு கொண்ட ஆசிரியருக்கு இந்த விதமாய் புகழ் வந்து சேர்ந்தது! இந்த விளம்பரத்துக்கு முன்னாலும் அவர் சில குறிப்பிட்ட வட்டங்களில் தெரிய வந்தவர்தான். ஹெர்மன் ஹெஸே இந்தியாவின் மீதும், இந்திய ஆத்மீகத் தத்துவங்கள் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவருடைய மிக நெருங்கிய உறவினர்கள் கிறிஸ்துவ மதப் பணியில் மிக நீண்டகாலம் இந்தியாவில் செயல்பட்டிருக்கிறார்கள். இவர் மிக விரும்பிப் படித்த புத்தகங்களில் பகவத் கீதையும் ஒன்று. வெளிநாட்டு அறிஞர் ஒருவர் இந்தியாவின் மீது இவ்வளவு ஆழ்ந்த அக்கறை கொண்டு விட்டாரென்றால் ஒரு பதில் உபகாரமாய் அவரை சற்று கவனிப்பது இந்திய அறிவாளிகளின் பண்புகளில் ஒன்றல்லவா. மார்க்ஸ் முல்லர், எமர்சன், தோரோ, எலியட், ரோமா ரோலண்ட் ஆகியோர் அடங்கிய பட்டியலில் ஹேஸேயும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இந்திய ஆத்மீக சிந்தனை வெளிநாட்டில் கொடிகட்டிப் பறப்பதை பற்றி பீத்திக்கொள்ளும்போது பிற ஆசிரியர்களுடன் இவருடைய பெயரும் அவர்களுக்கு நினைவில் வரும்.  ஹெஸேயின் புத்தகத்தையும் படித்துப் பார்க்கலாம்தான். அவை மிக உயர்ந்தவை. ஆனால் படிப்பது, பொறுப்புடன் படிப்பது, அவ்வளவு எளிமையான காரியம் இல்லை. பெயர் உதிர்ப்போ செல்லுபடியாகிக் கொண்டும் இருக்கிறது.

ஹெஸேயைத் தமிழில் படிக்க வேண்டும் என்றால் ‘சித்தார்த்தா’ இருக்கிறது. திருலோக சீதாராம் மொழி பெயர்த்திருக்கிறார். ‘கவித்துவ’ நடையில் செய்து தந்திருக்கிறார். இந்த ‘கவித்துவ’ நடையும் ஆத்மீக விஷயமும் இந்திய நாவலை படிப்பது போன்ற தன்மையை ஏற்படுத்துவதால் சிலர் விரும்பிப் படித்திருக்கிறார்கள். பலர் படிக்க வேண்டும். ஒரு சிறந்த நாவல் இது.

இவர் ஜெர்மனியில் பிறந்தவர். ஜெர்மன் மொழியில் எழுதியவர். மத நம்பிக்கை ஊறிப்போன குடும்பம் அவருடையது. சிறுவயதில் இவரும் பாதிரிப் படிப்புக்குச் சேர்க்கப்பட்டார். ஆனால் இவர் படித்து முடிக்கவில்லை. பாதியில் நிறுத்திக்கொண்டு விட்டார். இவர் பல வேலைகள் பார்த்திருக்கிறார். ஒரு மெக்கானிக்காக, புத்தக விற்பனையாளராக, புராதன கலைப் பொருட்களின் விற்பனையாளராக.

இவர் பிரயாணம் செய்வதில் மிகுந்த விருப்பம் உள்ளவர். பல தேசங்களில் சுற்றி இருக்கிறார். இத்தாலியும், இந்தியாவும் அவருக்கு பிடித்த தேசங்கள். ஹெஸேயை வசனத்தில் எழுதிய கவி என்று சொல்ல வேண்டும். இவருடைய படைப்புகளும் உள்நோக்கியது. மதங்களோ தத்துவங்களோ மனிதப் புதிருக்கு, துக்கத்திற்கு விடை கற்றுத் தரவில்லை என்று மனிதன் இன்னும் அவனுடைய துக்கத்திற்கு அவனே விடைதேடி கண்டுபிடித்துக் கொள்ளும் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறான் என்றும், அவர் எண்ணுவது போல் தோன்றுகிறது, அவருடைய நாவல்களை படிக்கும்போது.

‘சித்தார்த்தா’ 1922-ல் எழுதியது. ஆத்ம ஞானத்தைத் தேடி அலைகிறான் ஒரு இளைஞன். அவன் சீரும் செழிப்புமாய் வாழ்ந்தவன். சுற்றத்தையும், செல்வத்தையும் துறந்து ஊர் ஊராக அலைகிறான். தவ வாழ்க்கையை மேற்கொள்கிறான். அதில் அலுப்புற்று மனந்திரும்பி பெண்ணுறவில் திளைக்கிறான். மீண்டும் ஆத்மீக வாழ்க்கைக்கே திரும்புகிறான். ஒரு சமயம் புத்த பகவானை இவன் நேரில் சந்திக்க நேருகிறது. உண்மைத் தேடலுக்கு பிறர் தரும் தத்துவங்கள் பயன்படா என்றும் ஒவ்வொருவனும் அவனே நொந்து, அறிந்து, ஆராய்ந்தே சத்திய தரிசனத்தை அடைய முடியும் என்றும் கூறி, இவன் புத்த பகவானை விட்டு விலகிச் செல்கிறான்.

இவருக்கு 1946-ம் வருடம் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவர் எழுதிய பிற நாவல்கள் டெமியன், ஸ்டெப்பன் வூல்ப், நார்ஸிஸ் அன்டு கோல்டுமண்ட், மாஜிஸ்டர் லூடி ஆகியவையாகும்.

ஆங்கிலம் அறிந்தோர் படிக்க வசதியாய் இவருடைய நாவலின் மொழிபெயர்ப்புகள் காகித அட்டையில் கிடைக்கின்றன.

கொல்லிப்பாவை இதழ் 5 - 1978
நட் ஹாம்சன் சிறு வயதில் பல வேலைகள் பார்த்தார். செம்மானின் உதவியாளராக, சுரங்கக் கூலியாக, பாதை வெட்டும் தொழிலாளியாக, கிராமப்பள்ளியில் ஆசிரியராக. அன்றைய நார்வேயில், பல இளைஞர்கள், அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். வாழ்வில் சிறு ஆசுவாசங்களையேனும் தேடிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் ஹாம்சனும் போனார். அங்கும் தோட்டக்காரராகவும், பஸ் கண்டக்டராகவும், சிறு கடைகளில் கணக்குப் பிள்ளையாகவும், முச்சந்திப் பிரசங்கியாகவும் வயிற்றைக் கழுவ முயன்றார். அமெரிக்கா அவருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. திருப்தியாக வயிற்றைக் கழுவிக்கொள்ளவும் முடியவில்லை, ரொம்பவும் சங்கடப்படவும் வேண்டியிருந்தது. குளிர் காலத்துக்கு அவசியமான புகையிலையும், ஒரு ஜோடிச் செருப்பும் மிச்சம் பார்த்துவிட வேண்டும் என்ற அவரது எண்ணமும் ஈடேறவில்லை. தமது இலக்கிய ருசி லேசுபட்டதல்ல என்று அவர் பிரசங்கங்களில் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். யாரும் அதைச் சட்டை செய்யவில்லை. கடுமையான வறுமையும், விசித்திரமான அனுபவங்களும், தரித்திரமில்லாமல் கிடைத்தன. நன்றாகச் சுற்றி அலைந்தார். தம் அனுபவங்களைப் பற்றியெல்லாம் குறித்து வைத்துக் கொண்டார். அத்தர் சேர்க்காமல், ஊதுபத்தி புகைக்காமல், காதல் கீதல் என்று புலம்பாமல், சுவாரஸ்யத்தை விட, கெட்டிக்காரத்தனத்தை விட, பிரச்சாரத்தை விட, உண்மை பொருட்படுத்தத் தகுந்தது என்ற நம்பிக்கையில் எழுதினார்.

அமெரிக்காவிலிருந்து ஊர் திரும்பியதும் ‘அமெரிக்கக் கலாச்சார வாழ்க்கை’ என்ற தலைப்பில் ஒரு கிண்டல் புத்தகம் எழுதினார். அமெரிக்க வாழ்க்கையையும் அரசாங்கத்தையும் அரசியல் தலைவர்களையும், நை நை என்று நைத்திருக்கிறார் இதில். இந்நூலைப் படிக்கும் போது அமெரிக்காவைப் பற்றி கிண்டல் செய்து எழுதியுள்ள மாக்சிம் கார்க்கியின் எழுத்து (’அமெரிக்காவிலே’ தமிழ்மொழி பெயர்ப்பு - கு. அழகிரிசாமி) நினைவுக்கு வராமல் போகாது.

இதன் பின், ‘பசி’ என்ற நாவல் எழுதினார். இவரது இலக்கிய நோக்கின் செழுமையை வெளிப்படுத்திய முதல் நூல் இதுதான். தனது மனதைப் பிடுங்கித் தின்று கொண்டிருந்த, பழைய நினைவுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள, இந்நூலை அவர் எழுதினார் என்பார்கள். சொல்லும்படி ‘பசி’யில் கதை என்று ஒன்றுமில்லை. இதில் வரும் கதாநாயகன் பசியினாலும், மனச் சோர்வாலும் இடத்துக்கு இடம் அவனை அணைத்துக் கொள்ளக் காத்திருக்கும் ஏமாற்றங்களாலும் வேதனைப் படுகிறான். ஆசிரியரின் சுய அனுபவத்தின் மெய்ம்மை இந்நூலில் நம்மை ஊடுருவித் தாக்கும்.

நட் ஹாம்சன் ஒரு சில நாடகங்களும் எழுதியிருக்கிறார். விஞ்ஞான முன்னேற்றம் அவர் மனதில் ஏற்படுத்திய சஞ்சலங்களும் சந்தேகங்களும் இந்நாடகத்தில் வெளிப்பட்டுள்ளன. எனினும் நாடகத் துறையில் இவர் அவ்வளவாக வெற்றி பெறவில்லை.

இவரது மிக முக்கியமான நூல் ‘நில வளம்’. இந்த அற்புதமான நாவலை க.நா.சு. தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். வாசகர்கள் அவசியம் தேடிப் படிக்க வேண்டிய நாவல் இது. ‘நான் படித்தவற்றுள்ளேயே இதுதான் மிகச் சிறந்த நாவல்’ என்று எச். ஜி. வெல்ஸ் இந்நூலைக் குறிப்பிட்டுள்ளார். மண்ணைப் பற்றியும், மண்ணில் வேலை செய்யும் கிராமவாசிகளைப் பற்றியும், அவர் தம் ஆசாபாசங்கள் பற்றியும் கலைப்பாங்கோடு இந்நாவல் கூறுகிறது என்றாலும், முற்போக்கு நாவல் என்று இதைச் சொல்ல முடியாது; மிகச் சிறந்த நாவல் என்றுதான் சொல்ல முடியும். கதாபாத்திரங்கள் எல்லாம் தனி மனிதர்கள். தனி மனிதர்களின் ஏக்கங்கள், வெற்றிகள், தோல்விகள். தனி மனிதனைக் கும்பலாக் காணும் ‘தத்துவ தரிசனம்’ இவர் காலத்தில் பரவியிராத ஒன்று போலும்.

‘நில வளம்’ என்ற இந்நாவலுக்குத்தான் 1920-ல், தமது 61-வது வயதில் நோபல் பரிசு பெற்றார் இவர். நன்றாகக் குடித்துக்கொண்டு, சிலபோது இலக்கியக் கூட்டங்களில் கலாட்டா செய்து கொண்டு, (ஸெல்மா லாகர்லாஃப் என்ற சுவீடிஷ் நோபல் பரிசு பெற்ற அம்மையாரின் ரவிக்கையை இழுத்துக் கிழித்தார் இவர் - குடிவெறியில்தான் என்று சொல்லப்படுகிறது.) 93 வயது வரையிலும் வாழ்ந்தார்.

இந்திய மொழிகளில் நட் ஹாம்சன் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறார். இந்தியாவில் காப்பியடிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுள் இவர் முக்கியமானவர். அதிலும் முக்கியமாக இவருடைய ‘பசி’ என்ற நாவல். பசி, நமக்கு மிகவும் அன்னியமான விஷயமல்லவா?


கொல்லிப்பாவை இதழ் 6 - 1978
கிரேசியா டெலடா என்ற இத்தாலிய ஆசிரியையின், நன்றாகத் தெரியவரப்பட்டுள்ள ‘தாய்’ என்ற நாவல், தி. ஜானகிராமனால் அருமையாக மொழிபெயர்க்கப்பட்டு, தமிழில் வெளிவந்துள்ளது. இதை எத்தனை பேர் படித்திருக்கிறார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். இப்பகுதியில், இதற்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆசிரியர்களின் நாவல்களின் மொழிபெயர்ப்பை, நம் அருமை வாசகர்கள் எந்த அளவுக்குப் படித்திருப்பார்களோ, அந்த அளவுக்கு இம்மொழிபெயர்ப்பையும் படித்திருப்பார்கள் என நாம் உறுதியாக நம்பலாம்.

இத்தாலியின் மேற்குப் பகுதியில், சார்டீனியா தீவில், உத்தமக் கிறிஸ்துவர் பெரிய படிப்பாளி என்ற பெயர் பெற்ற, புத்தகங்கள் சேர்ப்பதில் நம்பிக்கையுள்ள, பெரிய நூல்நிலையம் வைத்துக் கொண்டிருந்த மேயர் ஒருவரின் பெண்ணாகப் பிறந்தவர், டெலடா. பெண்கள் படிக்காத அக்காலத்தில், மேயர் தன் பெண்ணை நன்றாகப் படிக்க வைத்து, புத்தக உலகத்திலும் அவளை நகர்த்தி விட்டார்.

டெலடா தனது பதினேழாவது வயதில் ‘சார்டீனியா பூக்கள்’ என்று ஒரு புத்தகம் எழுத, அது வாசகர்களுக்கு ரொம்பப் பிடித்துப் போக, விழுந்து விழுந்து அவர்கள் படிக்க, எக்கச்சக்கம் பிரதிகளும் அழிந்தன. டெலடா பின்னால் சொன்னார்: ‘இந்த நூலின் உரிமையை எனக்கு வைத்துக்கொள்ளத் தெரியவில்லை. வைத்துக்கொள்ளத் தெரிந்திருந்தால் கோடீசுவரி ஆகியிருப்பேன்.’

கோடீசுவரி ஆகத் தெரியாவிட்டாலும், எழுதத் தெரிந்திருந்தது டெலடாவுக்கு. தொடர்ந்து எழுதினார். நன்றாக எழுதியிருக்கிறார்; ஓஹோ என்று சொல்லமுடியாவிட்டாலும். ‘எகிப்துக்கு ஒரு பயணம்’ என்ற இவருடைய நாவலும் முக்கியமானது. தம் எழுத்து பற்றி இவர் சொன்னது: ‘நான் வாழ்ந்த தீவை நேசிக்கிறேன். அங்குள்ள மனிதர்களும், மலைகளும், வயல் வெளிகளும் என் வாழ்வின் பகுதிகள். நான் கண்ணைத் திறந்து பார்க்கப் பார்க்க,  மனித வாழ்க்கை ஒரே அதிசயமாகவும் நாடகங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது. புத்தகங்களை உண்டு பண்ண, தூரத் தொலைவிலுள்ள அடிவானத்தைப் பார்த்து நான் தியானம் செய்வதில்லை.’

டெலடாவின் எழுத்து, துன்பத்தின் சாயல் படிந்தது. தன் தந்தையான மேயரிடம், ஊர்வாசிகள் முறையிட்டுக் கூறிய சங்கடங்கள், சின்னப்பெண்ணாக நின்று கேட்டுக்கொண்டிருந்த டெலடாவின் மனதை ரொம்பவும் பாதித்துவிட்டதாம். சார்டீனியா மக்களின் வாழ்க்கையைப் பற்றி நல்லது, கெட்டது என்று பார்க்காமல், அப்பட்டமாகவும், சூட்சுமமாகவும் இவர் எழுத, ஊர் ரொம்பவும் கொதித்ததாம். ஊரின் தன்மானக் கொதிப்பை விட, உண்மை கொஞ்சம் உயர்ந்தது என்ற எண்ணம் இவருக்கு இருந்ததால், இலக்கிய நோக்கில் ஏதும் சமரசம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து எழுதினார். விமரிசகர்களால் அங்கீகரிக்கப்பட்டு, 1926-ல் நோபல் பரிசு பெற்று, பெருமையும், புகழும் இவர் அடைந்தபோது, ‘எங்க ஊர்க்காரி’ என்று இவருடைய ஊரும் இவரைக் கொண்டாடிற்று.

‘தாய்’ நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பை வாசகர்கள் அவசியம் படித்துப் பார்க்க வேண்டும். கொஞ்சம் தீவிரமாக ஒன்றிரண்டு ஆண்டுகள் தேடினால், புத்தகப் பிரதி, ஏதேனும் ஒரு நூல்நிலையத்தின் மூலையிலிருந்தோ, அல்லது பழைய புத்தகக் கடையிலிருந்தோ (அதிக வாய்ப்பு இங்குதான்) கிடைக்காமல் போகாது.

கொல்லிப்பாவை இதழ் 8 - 1979
ஸெல்மா லாகர் லெவின் ‘மதகுரு’ (கெஸ்டா பெர்லிங்ஸாகா) தமிழில் 1957-ல் வெளிவந்திருக்கிறது. ஸ்வீடிஷ் நாவல். மொழிபெயர்ப்பு: க. நா. சுப்ரமணியம்.

முன்னுரையில் க.நா.சு. சொல்லுகிறார். ‘1931-ல் கல்கத்தாவில் இம்பீரியல் லைப்ரரியில் (இப்பொழுது இதன் பெயர் நேஷனல் லைப்ரரி) என்னுடைய பத்தொன்பதாவது வயதில் நான் முதன் முதலாக கெஸ்டா பெர்லிங்ஸாகாவைப் படித்தேன். அன்றுமுதல் இன்றுவரை இந்த இருபத்தைந்து வருடங்களில் நான் இதை ஆதி முதல் அந்தம் வரை ஐம்பது தடவைகளாவது படித்திருப்பேன். இப்பொழுது மொழி பெயர்க்க உட்காரும்போது கூட நாலு பக்கம் மொழிபெயர்த்தால் தொடர்ந்து நாற்பது பக்கம் படித்துவிட்டுத்தான் அடுத்த நாலுபக்கம் மொழிபெயர்ப்பது என்று ஏற்பட்டுவிட்டது. படிக்குந்தோறும், படிக்குந்தோறும் இந் நாவலில் என் ஈடுபாடு அதிகரிக்கிறது. ஒவ்வொரு தடவையும் புதிதுபுதிதாக நான் பல உணர்ச்சி அனுபவங்களைப் பெறுகிறேன். முந்திய தடவை கவனிக்காத பல புதுப்புது அர்த்தங்கள் ஒவ்வொரு தடவை வாசிக்கும் போதும் எனக்குத் தோன்றுகின்றன. ஸெல்மா லாகர் லெவ் என்ற ஸ்வீடிஷ் ஆசிரியையிடம் எனக்கு ஒவ்வொரு தடவையும் கெஸ்டா பெர்லிங்க்ஸாகாவைப் படிக்கும்போது பயமும் பக்தியும் அதிகரிக்கிறது. உலக இலக்கியத்தின் முதல் வரிசையில் நிற்கக்கூடியவை என்று நினைக்கத்தக்க நூல்களில் கெஸ்டா பெர்லிங்க்ஸாகாவும் ஒன்று என்பதை ஒவ்வொரு தடவையும் நான் ஊர்ஜிதப்படுத்துகிறேன்.’ (’மதகுரு’ முன்னுரையில்)

க.நா.சு. இந்த நாவல் மீது கொண்டுள்ள ஈடுபாடு மிக ஆழமானது. ‘மதகுரு போன்ற நூல்கள் உலக இலக்கியத்திலேயே ஒரு சிலதான்’ என்றும் சொல்கிறார். க.நா.சு. உலக விமர்சன அரங்கில் ஸெல்மா லாகர் லெவின் பெயர் கண்ணில் தென்படுவதே அபூர்வம். ஆங்கில மொழிக்குள் வராத விமர்சன உலகத்தில் அவர் சிறப்பாகக் கருதக்கூடியவராக இருக்கலாம். அப்பொழுதும் ஸெல்மா லாகர் லெவ் எனும் ஸ்வீடிஷ் நாவலாசிரியையின் மிகச்சிறந்த வாசகர் தமிழர் க.நா.சு.தான் என்று சொன்னால் தவற வாய்ப்பில்லை.

ஸெல்மா லாகர் லெவ் 1958-ம் ஆண்டு ஸ்வீடிஷ் மாகாணத்தில் வாம்லேண்ட் என்கிற இடத்தில் பிறந்தார். சிறுவயதில் இளம்பிள்ளை வாதம் தாக்க, ஊனமுற்று, இளமைக்காலத்தை அநேகமாக மருத்துவ மனைகளிலும், வீட்டுக்குள்ளும் கழித்தார். பின் ஆசிரியர் தேர்ச்சிப் பள்ளியில் பயின்று ஆசிரியையானார்.

ஸெல்மாவின் முதல் புத்தகமான ‘மதகுரு’தான் அவருடைய மிகச் சிறந்த புத்தகமாகவும் கருதப்படுகிறது. இப்புத்தகத்திலுள்ள கதைகள் அவர் வாழ்ந்த வான்லேண்ட் பிராந்தியத்தில், அவர் பிறப்புக்கு அரை நூற்றாண்டுக்கு முன் நிலவிய வாழ்வு குறித்த அவருடைய பாட்டியார் கூறியவற்றிலிருந்து, கிளைத்தவையாகும். 1909-ல் இவர் நோபல் பரிசு பெற்றார். பின் ஸ்வீடிவ் அக்காடமியும் இவரை உறுப்பினராக்கிக் கவுரவித்தது. அரசியல் பற்றியோ, மதம் பற்றியோ தீவிரமான அபிப்ராயங்கள் சொல்லாமல், பெண் எழுத்தாளர்களின் பட்டுக்கொள்ளாத ஜாக்கிரதையுடன் வாழ்ந்தார்.  1940-ல் காலமானர்.

லாகர் லெவின் மிக முக்கியமான வேறு நூல்கள் ‘போர்த்துகலியாவின் சக்ரவர்த்தி’, ‘ஜெருசலம்’ ஆகியவை. அதே போல் ‘நில்லின் அதிசய வீரக்கதைகள்’ இவர் எழுதிய மற்றொரு புகழ் பெற்ற புத்தகம். குழந்தைகளுக்காக எழுதியது. மொழிபெயர்ப்பில் பல தேசக் குழந்தைகளுக்கும் பரிச்சயப்பட்டது.

‘மதகுரு’ விவலிய நூல் போல் மேலிட்ட எளிமையும், உள்ளே ஆழமும் கொண்டது. நாடோடிக் கதைகள், புராணக் கதைகள் ஆகியவற்றின் சூழல் நிறைந்தஹ்டு. அவர் காலத்தைத் தாண்டிய ஒரு சுதந்திர உலகம் அது. குஸ்தாஃபிளாபர்ட், எமலி ஜோலா ஆகியோர் எதார்த்தக் கொடியை உயரப் பறக்கவிட்டுக் கொண்டிருக்கும்போது, ஸெல்மா அவருடைய சொந்த உலகில் ஆழ்ந்து, தர்க்க மூளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சம்பவங்களை விதைத்து, புராண மரபுடன் ஒரு கதையைப் பல்வேறு அர்த்தங்கள் தொனிக்கும்படி எழுதிக்காட்டி, அதில் வெற்றியும் பெறுகிறபோது, எதார்த்தம் நாவலின் தவிர்க்க முடியாத அம்சம் அல்ல என்றும் சொல்லலாம், அல்லது மிகச்சிறந்த இக்கதை நாவல் அல்ல என்றும் சொல்லலாம். புராண மரபு கொண்ட இந்திய மனம் இந்நாவலை விசேஷமாக ஏற்கக் கூடியதுதான். ஸாகா என்ற வார்த்தையின் மூலப்பொருளே பழைய சாகசக் கதைகள் என்பதுதானாம்.

இந்த நாவலைத் தமிழில் படித்திருப்பவர்களாக நான் நாலைந்து பேர்களை நிச்சயம் சந்தித்திருப்பேன். உவகையுடன் இச்செய்தியை இங்கு குறிக்கிறேன். கிருஷ்ணன் நம்பிக்கு இந்த நாவல் ரொம்பவும் பிடித்திருந்தது. கி. ராஜநாராயணனும், தீப. நடராஜனும் இந்த நாவலைப் படித்தார்கள் என, போன ஜென்ம வாசனைப் போல் ஒரு நினைவு. வல்லிக்கண்ணன் படித்திருக்கக்கூடும். நகுலன் ஆங்கிலத்திலோ, தமிழிலோ அவசியம் படித்திருப்பார். G.M.L. பிரகாஷ் படித்திருக்கக் கூடும். இதுதவிர இன்னும் ஒரு அரை டஜன் பேர்கள் அல்லது ஒரு டஜன் பேர்கள் கூட நிச்சயம் படித்திருப்பார்கள். தமிழில் வெளி வந்து 22 வருடங்கள் ஆகியிருக்கின்றன. சிறந்த புத்தகங்கள் மெல்ல மெல்ல இலக்கிய பீடத்தைப் பற்றிக் கொண்டுவிடும் என விமர்சகர்கள் தொடர்ந்து நம்பிக்கைத் தெரிவித்து வருகிறார்கள். க.நா.சு.வின் தமிழ் சேவை வீன் போகாது என நம்புவோமாக.

******************************

சுந்தர ராமசாமி எழுதி கொல்லிப்பாவை 78-79ல் வெளியான இந்த அறிமுகங்களைத் தட்டச்சு செய்து வலையேற்ற உதவிய சென்ஷியைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. பொதுக் காரியங்கள் செய்ய முன்வரும் இப்படியானவர்களின் தன்னார்வத்திலேயே காலங்காலமாக கலையிலக்கியம் தழைத்துக் கொண்டு இருக்கிறது. அவருக்கு என் நன்றி.

பாரபாஸ் ஆன்லைனில் வாங்க https://www.nhm.in/shop/100-00-0000-157-0.html
மதகுரு ஆன்லைனில் வாங்க https://www.nhm.in/shop/100-00-0000-156-6.html
கொல்லிப்பாவை இதழ் தொகுப்பு ஆண்லைனில் வாங்க https://www.nhm.in/shop/100-00-0000-156-3.html

கொல்லிப்பாவை இதழ் ஆசிரியர்கள்
அ. ராஜமார்த்தாண்டன்
ஆர்.கே.ராஜகோபாலன்

வாங்கிப் படியுங்கள்
கொல்லிப் பாவை இதழ் தொகுப்பு
மருதா

கிடைக்குமிடம்
புக்லேண்ட்
டிஸ்கவரி புக் பேலஸ்