14 April 2011

கொடுக்கவா எடுக்கவா? நோ பீஸ் ஆஃப் மைண்ட்!

நற்பண்புகளின் அறவுருவாய்த் திகழும் ஜெயமோகன் அவர்களின் சமீபத்திய திருவாய் அமுது, ஞானபீடம் April 13th, 2011. 


”வாசித்தேன். 
என்பேரைச் சொல்லியிருந்தீர்கள். நன்றி. நான் ஒரு ஞானபீடத்தை கொடுக்க வாய்ப்பிருக்கிறது, பெறுவதற்கு முற்றிலும் இல்லை.” 


நிறைய எழுதுதல் என்பதை மட்டுமே தகுதி எனக் கொண்டால் எந்த விருதும் ஜெயமோகனைத் தவிர எவருக்குமேக் கிடைக்க வாய்ப்பில்லை என்பது எவருமே மறுக்க முடியாத உண்மை.


சமீபத்தில் ஜெயமோகன் எழுதிய 12 கதைகளில் ஒன்றான பெருவலி[ சிறுகதை] -1 March 7th, 2011 அன்று வலையேறியது. இந்தத் தொடர் வலையேறத் தொடங்கிய முகூர்த்தம் 12.05 AM 31 ஜனவரி 2011. அவர் இந்தத் தொடரை எழுதத்தொடங்கியது 27 ஜனவரி 2011  (கதைகளின் முடிவில்.. March 15th). பெருவலி என்கிற கோமல் ‘பற்றிய’ கதையை பிப்ரவரி 15ல் எழுதிவிட்டரா அல்லது வெளியேற முடிவெடுத்து அந்தக் கதை வரிசையில் காத்திருந்ததா என்பது அவருக்கு மட்டுமேத் தெரிந்த ரகசியம். ஆனால் பிப்ரவரி 15ல் கோமலுக்கு வீக்கிப் பக்கம் தொடங்கப் படுகிறது.  கதையின் முதல் வார்த்தையிலேயே வீக்கிபிடியாவிற்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது இப்போது. 


09:50, 15 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)
(புதிய பக்கம்: கோமல் சுவாமிநாதன் தமிழின் முக்கியமான முற்போக்கு நாடக ஆசிரி...) 


அதில் குறிப்பாக மூன்று விஷயங்கள் இதழியல் என்கிற பகுப்பிற்கு முன்னும் பின்னும் சேர்க்கப்படுகின்றன. 


ஒன்று.
கோமல் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமை பொறுப்பில் இருந்தார். பொதுவாக சமகால அரசியல் பிரச்சினைகளையும் அறப்பிரச்சினைகளையுமே அவர் எழுதினார். தீவிரமான இடதுசாரி பிடிப்புடையவராக இருந்தார். 


இரண்டு.
வாழ்க்கையின் கடைசியில் கோமல் முதுகெலும்பு புற்றுநோயால் அவதிப்பட்டார். தன் நாடகக்குழுவை கலைத்துவிட்டு இதழியலில் புகுந்தார். முன்னரே அவருக்கு இலக்கிய ஆர்வம் உண்டு. சி சு செல்லபபவின் நண்பராக எழுத்து இதழில் பங்கு பெற்றிருந்தார். ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ் நிறுவனம் நடத்திவந்த சுபமங்களா இதழை எடுத்து இலக்கிய இதழாக நடத்தினார் 


மூன்று.
சுபமங்களா தமிழில் மிகபெப்ரிய இலக்கிய அலையை உருவாக்கிய இதழ். சிற்றிதழ்களில் செயல்பட்டுக்கொண்டிருந்த எழுத்தாளர்களை பரவலாக வாசகர்களுக்கு அது அறிமுகம் செய்தது. நடுத்தர இதழ்களுக்கு முன்னோடியாக விளங்கியது 


இவை பொய்யா? அல்லது குற்றமா? நிச்சயமாக இல்லை. வலைப்பக்கம் தொடங்கப்படும் நேரம்தான் காரியார்த்த நெகிழ்வைக் காட்டிக் கொடுக்கிறது. 


ஜெயமோகன் எழுதிய பெருவலி கதையில், மரணப்படுக்கையிலும் கூட கோமல் ஜெயமோகனுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இந்தப் பின்னணியுடன் படித்தால் தெளிவாய் விளங்கும். கண்மூடித் திறக்கும் வேகத்தில் கதை எழுதுபவருக்கு வீக்கிப்பிடியா எழுதுவதா பெரிய காரியம். 


ஆனால் அதைப் படித்தபோதே, கதையின் முகம் ரொம்பப் பரிச்சயமாக இருக்கிறதே என்று உறுத்தியது, உறுதியாகத் தெரியாததால் கதையின் மற்ற குறைகளை மட்டும் சில ட்விட்டுகளில் எழுதினேன். பிறகு வந்த கவிராஜனின் ட்விட்லாங்கரை இணைத்து என் காவிக் கோமணத்தை நீ கட்ட வேண்டும்! என்ற பதிவாக வெளியிட்டேன். 


சுந்தர ராமசாமியின் கட்டுரைத் தொகுப்பான ஆளுமைகள் மதிப்பீடுகள் என்கிற புத்தகதைப் புரட்டிக் கொண்டிருக்கையில், முதலில் இவர் எழுதிய கட்டுரையின் தரம் எப்படி இருந்திருக்ககூடும் என்கிற குறும்பு ஆர்வத்தில் படிக்கப் போகப் பெருவலி சூழ்ந்து கொண்டது. 


24 வயது இளைஞராக சுந்தர ராமசாமி நோய்வாய்ப் பட்டு படுத்த படுக்கையாய்க் கிடக்கும் கவிமணி தேசிகவிநாயகம் அவர்களைப் பார்க்கப் போகிறார். அவரது மோசமான உடல்நிலையை அசட்டுணர்விற்கு ஆட்படுத்தாமல் விவரிக்கிறார். பல்வேறு விஷயங்களைப் பற்றி அவரிடம் கேள்விகள் கேட்கிறார். 55ன் காலகட்டம் ஆவணப்படுத்தப் படுகிறது. இந்தியா சுதந்திரமடைந்து மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம். ஆந்திரா மொழிவழி தனி மாகாணமாகிவிட்டது. தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும் என்கிற சுராவின் கேள்விக்கு கவிமணி அவர்களின் பதில்தான் இந்த நேர்காணல் கட்டுரையின் உச்சம். அவர் குறித்த தேசியவாதி பிம்பத்திற்குப் பின்புலத்தில் ஒரு தமிழனாக எவ்விதமான உள்ளக் கிடக்கை இருக்கிறது என்பதை அழகாக வெளிக் கொணர்ந்திருப்பார். ’கவிமணி தந்த கருத்துக்கள்’ என்ற இந்தக் கட்டுரை முற்போக்காளரான தொ.மு.சி ரகுநாதன் அவர்கள் ஆசிரியராய் இருந்த சாந்தி பத்திரிகையில் ஜனவரி 1955ல் வெளியாகி இருக்கிறது. 


ஜெயமோகனின் பெருவலியில் கோமல் மரணப்படுக்கையில் கிடக்கிறார். அவரைப் பார்க்க ஜெயமோகன் 1995ல் செல்கிறார். கோமலின் வெளி பிம்பம் முற்போக்கு ஆனால் அவருக்குள்ளே ”கைலாயம் என்பது ஒரு மாபெரும் விபூதி மலை எனப் பார்க்கும் மனம் இருந்து கொண்டு இருந்தது என்கிறதாகக் ’காட்ட’ எழுதப்பட்டிருக்கும் கதை. 


பிராமணர் சங்கம் தொடங்கப்பட்ட காலத்தில், கோமலிடம் உறுப்பினராகும்படி வேண்டி இருக்கிறார்கள். தனக்கு நம்பிக்கை இல்லை என அவர் மறுத்தார் என்பதை அவரது மகள் லலிதா தாரணி நேரில் சொல்லக் கேட்டிருக்கிறேன். (அனைத்துக் கல்லூரிப் பேச்சு/கவிதைப் போட்டிகளின் வாயிலாக அவர்  நண்பர்). 


தமது இமயமலைப் பயணம் பற்றி கோமலே எழுதிய பயண அனுபவக் கட்டுரை சிவ சிவா எனக் கன்னத்தில் போட்டுக் கொள்கிறவிதமாகவா இருக்கிறது? இமயமலைப் பயணம் / கோமலின் பயணக் கட்டுரை / கதையில் ஜெயமோகன்-கோமல் சந்திப்பு எல்லாம் குறைந்த கால இடைவெளிக்குள் நடப்பவை. கட்டுரைக்குப் பின் அவர் தமது எண்ணத்தை முற்றாக மாற்றிக் கொண்டார் என்பதற்கான சாத்தியம் மிகக் குறைவு. 


தன் கருத்திற்கு கதாபாத்திரங்களை ஊதுகுழலாக்குவது ஒன்றும் புதிதல்ல. கே.பாலச்சந்தரின் திருகப்பட்ட அத்துனைக் கதாபாத்திரங்களும் வித்தியாசமான புத்திசாலித்தனத்துடன் ஒன்று போலவே பேசுவதில்லையா என்ன? கலைப்படைப்பாக அவற்றுக்கு மரியாதை கிடைக்காததற்கும் அதுவேதான் காரணம். 


தெருப் பிள்ளையார்களில் சிலதுக்கு சூடம் காட்டக் கூட ஆளிருக்காது. சிலதுக்கோ கூட்டம் நெரியும். பாண்டிச்சேரியில் ஏழைப்பிள்ளையார் கோயில் என்றே ஒன்று இருந்தது. பெரியமனது வைத்து சாயரட்சைகளில் திறந்து எண்ணேய் குத்திவிட்டுப் போவார் ஒரு குருக்கள். பிள்ளையார்களுக்கிடையிலான ஜாதக தோஷ விசேஷங்கள் பற்றிப் பெருசுகள்  கிசுகிசுப்பாகப் பேசுவதைப் பள்ளிப்பருவத்தில் கேட்டதுண்டு. ஆர்டர் கொடுத்து செய்து வாங்கிய பிள்ளையாரை விட எங்கேனும் நாலுபேர் வழிபடும்படி ஏற்கெனவே உட்கார்ந்திருக்கும் பிள்ளையாரை அபேஸ் பண்ணிக்கொண்டு வந்து கோயிலில் வைத்தால் அதன் ’பவரே’ தனிதான் என்பார்கள். திருட்டுப் பிள்ளையாரின் மவுசு அப்படி. 


”நான் ஒரு ஞானபீடத்தை கொடுக்க வாய்ப்பிருக்கிறது”ஞானபீடத்தை அடுத்தவருக்குக் கொடுப்பதாவது! என்ன அசட்டுத்தனமான பேச்சு இது எதையெதையோ யார்யாரிடமிருந்தோ எடுத்தே பழக்கப்பட்ட கை ஞானபீடத்தையும் எடுத்துக் கொள்வதுதான் பொறுத்தமாக இருக்கும். 


தமிழில் தன் இடம் எதுவென மலையாளிக்கு எப்படி சாதுர்யமாகப் புரிய வைக்கிறார் பாருங்கள். 


பஷீரின் பரப்பு இன்னும் விரிந்தால் நானாவேன் - ஜெயமோகன் சமீபத்திய மாத்ருபூமி பேட்டியில். 


இந்த பேட்டி குறித்து மாத்ருபூமியில் வெளியாகிக் கொண்டிருக்கும் மலையாளிகளின் மறுமொழிகளை யாரேனும் தமிழுக்கு மொழிபெயர்த்தால் நமது சூழலையும் மலையாளச் சூழலையும் விளங்கிக் கொள்ள ஏதுவாய் இருக்கும்.