27 April 2011

தற்காலத்தில் கற்காலம்

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி தழுவா நெறிமுறையின் - மேதினியில்
சுட்டார் பெரியோர் சுடாதார் இழிகுலத்தோர்
சட்டத்தில் உள்ள ஷரத்து


சாதி இரண்டொழிய வேறில்லை
ஒன்று என் சாதி
மற்றது என் பெண்சாதி.

ஜாதி எனச்சொல்லித்
தமிழைக் கெடுக்காதே!
சாதி என
சொல்லிக் கொண்டே
இருப்பதுதான் சரி.

அவன் மோசம்
இவன் மோசம்
என்பதே
என் கோசம்

வெளியில் தெரிந்த எதிரியை
ஒழிக்கும் போரில்
உள்ளே திரண்டனர்
ஓராயிரம் எதிரிகள்

பணமே பயிரெனும்
விளைச்சல் சந்தையில்
கருப்பும் வெளுப்பும்
வடக்கும் தெற்கும்
டாலரும் ரூபாயும்
பங்குதாரர்கள்
லட்சியம் துறந்த
குறுகுறுப்பு மறைக்க
ஒழிந்த நேரத்தில்
இருக்கவே இருக்கு
பாப்பார பஜனை

சிந்தனை வளர்க்க வேண்டி
திறக்கப்பட்டன
டாஸ்மாக் கடைகள்
திரும்பிய பக்கமெல்லாம்
தத்துவ மழை
மொழிபெயர்க்கத்தான்
போதிய ஆட்கள் இல்லை

தனித்தன்மையைக் காப்பாற்ற
என்ன செய்வது?
தண்ணி கலக்காமல்
சரக்கு அடி.