02 April 2011

ஏதோவொரு நாளில் - காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் (விமலாதித்த மாமல்லன்)


ஏதோவொரு நாளில்
கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

தமிழில்: விமலாதித்த மாமல்லன்

மழையற்ற வெம்மையுடன் திங்கள் விடிந்தது. அதிகாலையில் எழும் வழக்கம் கொண்டவரும் பட்டம் பெறாத பல் டாக்டருமான அரேலியோ எஸ்கவார், அன்று காலை ஆறு மணிக்கு தன் அலுவலகத்தைத் திறந்துவிட்டிருந்தார். வார்ப்பில் பொறுத்தப்பட்டிருந்த பொய்ப் பற்கள் சிலவற்றைக் கண்ணாடி அலமாரியிலிருந்து எடுத்து மேசை மேல் வைத்தார். சில கருவிகளையும் அவற்றின் அளவுகளுக்கேற்ப ஒழுங்குபடுத்தி காட்சிக்கு வைப்பதைப்போல் வைத்தார். கழுத்துப்பட்டி இல்லாத சட்டை அணிந்திருந்தார். கழுத்தில் சட்டை இணையும் இடத்தில் தங்க பித்தான் பொறுத்தப்பட்டிருந்தது. அவரது பேண்டை, தோளைச்சுற்றிய பட்டைகள் தாங்கிக் கொண்டிருந்தன. நிமிர்ந்த பக்கையான உடலுடன் இருந்தவரின் தோற்றமானது சூழலுக்குச் சற்றும் பொருந்தாமல், செவிடர்களின் குவிப்பற்ற பார்வையை ஒத்திருந்தது. 

மேசையில் பொருட்கள் ஒழுங்குபடுத்தப்பட்டபின், பல்மருத்துவரின் நாற்காலியில் அமர்ந்தபடி துளைப்பானைக் கீழே இழுத்து பொய்ப்பற்களை மெருகேற்றத் தொடங்கினார். வேறு சிந்தனையற்று, வேலையில மும்முரமாய் ஈடுபட்டிருந்தார். தேவைப்படாத தருணங்களிலும் கூட காலால் உதைத்து துளைப்பானைச் சுழலவிட்டுக் கொண்டிருந்தார். எட்டு மணிக்கு நிறுத்திவிட்டு, ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்தார். அப்போது பக்கத்துவீட்டுக் கூரையின் மேல் யோசனையிலாழ்ந்த இரண்டு பருந்துகள் வெயிலாற்றிக் கொண்டிருப்பதைக் கண்டார். மதியத்திற்கு முன் மழைபெய்யும் என்கிற எண்ணத்துடன் தம் வேலையைத் தொடர்ந்தார். அவரது பதினோரு வயது மகனின் கூக்குரல் அவரது முனைப்பில் குறுக்கிட்டது.

அப்பா...!

என்ன...!

நீங்கள் பல்லைப் பிடுங்குவீர்களா என மேயர் அறிய விரும்புகிறார்.

நான் இல்லை எனச் சொல்...!

அப்போது அவர் பொற்பல் ஒன்றை மெருகேற்றிக் கொண்டிருந்தார். சற்றுத் தள்ளிப் பிடித்து அரைக்கண் பார்வையில் அதை பரிசோதித்துக் கொண்டிருந்தார். அவரது மகன், சிறிய வரவேற்பறையில் இருந்து திரும்பவும் கூவினான்.

நீங்கள் உள்ளேதான் இருக்கிறீர்களாம். உங்கள் குரல் கேட்கிறதே என்கிறார்.

பல்லை சோதிப்பதிலேயே மும்முரமாய் இருந்த மருத்துவர், சோதித்து முடித்து, மேசையில் அதை வைத்த பிறகே பதிலளித்தார்:

நல்லதாகப் போயிற்று” என்றார்.

அவர் திரும்பவும் துளைப்பானை இயக்கினார். வேலை மீதமிருந்த பல பல்வரிசைகளை அட்டைப் பெட்டியிலிருந்து எடுத்து வைத்தவராய், பொற்பல்லில் தம் வேலையைத் தொடர்ந்தார்.

அப்பா...!

என்ன...! என்றார், தமது வெளிப்பாட்டை மாற்றிக்கொளாமல்.

நீங்கள் பல்லைப் பிடுங்காவிட்டால் அவர் உங்களைச் சுட்டு விடுவாராம்...!

பதற்றப்படாமல், நிச்சலனமாய், துளைப்பனை இயக்குவதை நிறுத்தி, அதை நாற்காலியிலிருந்து தூர தள்ளினார். பிறகு மேசையின் கீழ் ட்ராயரை முழுக்க வெளியே இழுத்தார்.

அதில் சுழல் துப்பாக்கி இருந்தது. சரி, அவரை வந்து என்னைச் சுடச் சொல் என்றார்.

நாற்காலியைக் கதவிற்கு எதிராய் உருட்டி தள்ளி விட்டவர், மேசை ட்ராயர் முனையில் கையை வைத்துக் கொண்டார்.

அறை வாயிலில் மேயர் தென்பட்டார். அவரது முகத்தை வலப்பக்கம் மட்டுமே மழித்திருந்தார். மறுபக்கம் வலியில் வீங்கியிருந்ததோடு ஐந்து நாள் தாடியுடனும் இருந்தது. மேயரின் சோர்ந்த விழிகளில் பல இரவுகளின் தவிப்பைக் கண்டார். விரல் முனைகளால் மேசையின் ட்ராயரை மூடிவிட்டு, மென்மையாகச் சொன்னார்.

உட்காருங்கள்

காலை வணக்கம் என்றார் மேயர்.

வணக்கம் என்றார் பல் மருத்துவர்.

பல்பிடுங்கும் கருவிகள் கொதித்துக் கொண்டிருக்கையில், நாற்காலியின் தலை-தாங்கியில் மண்டையை சாய்த்துக் கொண்டதில் மேயர் சற்றுத் தெம்பாய் உணர்ந்தார். அந்த அறையில் சுவாசிப்பது கடினமாயிருந்தது. பழைய மர நாற்காலி, காலால் இயக்கவேண்டிய பல் துளைப்பான், கண்ணாடிக் கதவுடைய அலமாராயில் இருந்த பீங்கான் குடுவைகள் என வருமை பீடித்திருந்த அறை. நாற்காலிக்கு எதிர்ப்புறமிருந்த ஜன்னலில் தோளுயரத்திற்கு திரைச்சீலை இடப்பட்டிருந்தது. மருத்துவர் அருகில் வருவதை உணர்ந்ததும், கால்களை உந்தியபடி நிமிர்ந்து உட்கார்ந்து வாயைத் திறந்தார். ஆரிலியோ எஸ்கவார், மேயரின் தலையை விளக்கிற்காய்த் திருப்பினார். நோயுற்ற பல்லை சோதித்த பின்னர், மேயரின் தாடையை மூடிய விரல்களில் அழுத்தி மூடினார்.

மயக்க மருந்து கொடுக்காமல்தான் இதைச் செய்தாக வேண்டும் என்றார்.

ஏன்?

ஏனென்றால் உள்ளே சீழ் பிடித்து இருக்கிறது.

மருத்துவரின் கண்களைப் பார்த்தபடி மேயர் சரி என்றபடி புன்னகைக்க முயன்றார். மருத்துவர் திரும்பப் புன்னகைக்கவில்லை. கொதித்து சுத்தமாகியிருந்த கருவிகளை வட்டிலோடு வேலைபார்க்கும் மேசைக்குக் கொண்டுவந்தவர், குளிர்ந்த இடுக்கியால் நிதானமாக நீரிலிருந்து அவற்றைக் வெளியில் எடுத்து வைத்தார். பிறகு எச்சில் துப்பும் பாத்திரத்தை ஷூ முனையால் தள்ளிவிட்டு, கைகளைக் கழுவிக்கொள்ளச் சென்றார்.

மேயரை ஏறெடுத்தும் பார்க்காமலேயே இவையனைத்தையும் செய்தார். ஆனால் மேயரோ மருத்துவர்மேல் வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி இருந்தார். மருத்துவர் கால்களை அகட்டி நின்றவண்ணம் சூடாக இருந்த குறடால் கீழ் வரிசை கடவாய்ப் பல்லைப் பற்றினார். நாற்காலியின் கைப்பிடிகளை மேயர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அவரது பலமனைத்தையும் திரட்டி கால்களை அழுத்திக் கொண்டார். மூச்சு முட்டுவதை சிறுநீர்ப்பைகளில் உணர்ந்தார் எனினும் சத்தமெழுப்பவில்லை. பல்மருத்துவர் மணிக்கட்டை மட்டுமே அசைத்தார். காழ்ப்பின்றி, இன்னும் சொன்னால் கசந்த கனிவுடன் பல் மருத்துவர் கூறினார்:

இறந்துபட்ட எங்களின் இருபது மனிதர்களுக்கான இழப்பை, இப்போது செலுத்தப் போகிறீர்கள். எலும்புகள் நொறுங்கிவிடுவது போல தாடையைக் கிட்டித்துக் கொண்ட மேயரின் கண்களைக் கண்ணீர் நிரப்பிற்று. எனினும், பல் வெளியில் வந்துவிட்டது என்பதை உறுதியாய் உணரும்வரை அவர் சுவாசிக்கவேயில்லை. கண்ணீரினூடாக அதைப் பார்த்தார். அதுவரை அனுபவித்திராத அந்த வலி, முந்தைய ஐந்து இரவுகளில் அடைந்த வேதனையெல்லாம் ஒரு வேதனையா என்பதாக ஆக்கிவிட்டிருந்தது. எச்சில் துப்பியை நோக்கி குனிந்தார். வியர்த்துக் கொட்டியது. மூச்சடைப்பதுபோல இருந்தது. சீருடையின் பித்தான்களை அவிழ்த்துக் கொண்டபடியே பேண்டின் சராய்ப் பைக்குள்ளிருந்த கைக்குட்டையை எடுக்க முனைந்தார். பல்மருத்துவர் சுத்தமான துணியைக் கொடுத்தார்.

கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

மேயர் துடைத்துக் கொண்டார். அவர் நடுங்கிக் கொண்டிருந்தார். மருத்துவர் கையைக் கழுவிக் கொண்டிருக்கையில், காரை உதிர்ந்து கொண்டிருந்த கூரையையும் அழுக்கான சிலந்தி வலையில் இருந்த முட்டைகளையும் இறந்த பூச்சிகளையும் பார்த்தார். மருத்துவர் கைகளை உலர்த்தியபடி திரும்பி வந்தார். உப்புத்தண்ணீரில் கொப்பளித்து ஓய்வெடுங்கள் என்றார். மேயர் எழுந்து நின்று, சென்றுவருவதாய்க் கூறியபடி, இலகுவான ராணுவ சலாம் வைத்து கால்களை நெட்டிமுறித்தபடி, சீருடைப் பித்தான்களைப் போட்டுக் கொள்ளாமல், வாயிலைப் பார்த்து நடந்தார்.

பில்லை அனுப்பி வை என்றார்.

உங்களுக்கா, நகரசபைக்கா?

மேயர் திரும்பிப்பார்க்கவில்லை. கதவை மூடி வெளியேறிக்கொண்டே திரைச்சீலை வழியே சொன்னார்.

”இரண்டும் ஒரே இழவுதான்!


தமிழில் @ விமலாதித்த மாமல்லன்.


One of These Days
BY GABRIEL GARCIA MARQUEZ

Monday dawned warm and rainless. Aurelio Escovar, a dentist without a degree, and a very early riser, opened his office at six. He took some false teeth, still mounted in their plaster mold, out of the glass case and put on the table a fistful of instruments which he arranged in size order, as if they were on display. He wore a collarless striped shirt, closed at the neck with a golden stud, and pants held up by suspenders He was erect and skinny, with a look that rarely corresponded to the situation, the way deaf people have of looking.
When he had things arranged on the table, he pulled the drill toward the dental chair and sat down to polish the false teeth. He seemed not to be thinking about what he was doing, but worked steadily, pumping the drill with his feet, even when he didn't need it. After eight he stopped for a while to look at the sky through the window, and he saw two pensive buzzards who were drying themselves in the sun on the ridgepole of the house next door. He went on working with the idea that before lunch it would rain again. The shrill voice of his eleven year-old son interrupted his concentration.
"Papa"
"What?"
"The Mayor wants to know if you'll pull his tooth."
"Tell him I'm not here."
He was polishing a gold tooth. He held it at arm's length, and examined it with his eyes half closed. His son shouted again from the little waiting room.
"He says you are, too, because he can hear you."
The dentist kept examining the tooth. Only when he had put it on the table with the finished work did he say:
"So much the better."
He operated the drill again. He took several pieces of a bridge out of a cardboard box where he kept the things he still had to do and began to polish the gold.
"Papa."
"What?"He still hadn't changed his expression.
"He says if you don't take out his tooth, he'll shoot you."
Without hurrying, with an extremely tranquil movement, he stopped pedaling the drill, pushed it away from the chair, and pulled the lower drawer of the table all the way out.
There was a revolver. "O.K.," he said. "Tell him to come and shoot me."
He rolled the chair over opposite the door, his hand resting on the edge of the drawer.
The Mayor appeared at the door. He had shaved the left side of his face, but the other side, swollen and in pain, had a five-day-old beard. The dentist saw many nights of desperation in his dull eyes. He closed the drawer with his fingertips and said softly:
"Sit down."
"Good morning," said the Mayor.
"Morning," said the dentist.
While the instruments were boiling, the Mayor leaned his skull on the headrest of the chair and felt better. His breath was icy. It was a poor office: an old wooden chair, the pedal drill, a glass case with ceramic bottles. Opposite the chair was a window with a shoulder-high cloth curtain. When he felt the dentist approach, the Mayor braced his heels and opened his mouth. Aurelio Escovar turned his head toward the light. After inspecting the infected tooth, he closed the Mayor's jaw with a cautious pressure of his fingers.
"It has to be without anesthesia," he said.
"Why?"
"Because you have an abscess"
The Mayor looked him in the eye. "All right," he said, and tried to smile. The dentist did not return the smile. He brought the basin of sterilized instruments to the worktable and took them out of the water with a pair of cold tweezers, still without hurrying. Then he pushed the spittoon with the tip of his shoe, and went to wash his hands in the washbasin.
He did all this without looking at the Mayor. But the Mayor didn't take his eyes off him. It was a lower wisdom tooth. The dentist spread his feet and grasped the tooth with the hot forceps. The Mayor seized the arms of the chair, braced his feet with all his strength, and felt an icy void in his kidneys, but didn't make a sound. The dentist moved only his wrist. Without rancor, rather with a bitter tenderness, he said:
"Now you'll pay for our twenty dead men."The Mayor felt the crunch of bones in his jaw, and his eyes filled with tears. But he didn't breathe until he felt the tooth come out. Then he saw it through his tears. It seemed so foreign to his pain that he failed to understand his torture of the five previous nights. Bent over the spittoon,  sweating, panting, he unbuttoned his tunic and reached for the handkerchief in his pants pocket. The dentist gave him a clean cloth.
"Dry your tears," he said.
The Mayor did. He was trembling. While the dentist washed his hands, he saw the crumbling ceiling and a dusty spider web with spider's eggs and dead insects. The dentist returned, drying his hands. "Go to bed," he said, "and gargle with salt water." The Mayor stood up, said goodbye with a casual military salute, and walked toward the door, stretching his legs, without buttoning up his tunic.
"Send the bill," he said.
"To you or the town?"
The Mayor didn't look at him. He closed the door and said through the screen:
"It's the same damn thing."

இந்த ஸ்பானிஷ் - ஆங்கில மொழிபெயர்ப்பாளரின் பெயர் கிடைத்தால் உதவவும்.