18 April 2011

விதி சமைக்கிறவர்களாய் வேஷம் கட்டாத அசல் ஆளுமைகள்

’அன்பளிப்’பைப் பற்றி ஹிந்துவில் மதிப்புரை எழுதிய நேரத்தில் க.நா.சு.விற்கும் அழகிரிசாமிக்கும் நேர்ப்பழக்கமே கிடையாது. அதுமட்டுமல்ல, அழகிரிசாமி ரகுநாதனுடைய உலகத்தைச் சேர்ந்தவர். ரகுநாதனுடைய உலகத்திலிருக்கிறவர்களுக்கு க.நா.சு.வைப் பிடிக்காது. ரகுநாதனுக்குக் க.நா.சு.வைச் சுத்தமாகப் பிடிக்காது.

ஆனால் அந்த மதிப்புரையை க.நா.சு. உயர்வாக எழுதியிருந்தார். எனக்குத் தெரிந்து க.நா.சு. எழுதிய மதிப்புரைகளில் ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு மிக விரிவாக எழுதப்பட்ட மதிப்புரை அது. மிக அற்புதமான சிறுகதை தந்த எழுத்தாளர். அப்படி ஒரு எழுத்தாளர் மொழிக்குக் கிடைப்பது பெரிய அதிருஷ்டம் என்று எழுதியிருந்தார். அதைப் படித்தவுடன் அழகிரிசாமிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. பல தடவை என்னிடம் சொல்லி இருக்கிறார். ’அந்த மதிப்புரையைப் படித்தவுடன்தான் நான் ஒரு எழுத்தாளனானேன். நான் எழுதின சமயத்திலெல்லாம் நான் ஒரு எழுத்தாளன் என்கிற எண்ணமே எனக்கில்லை. என் மனசுக்குள்ளே வெட்கம் போய் ஒரு நிமிர்வு ஏற்பட்டதென்றால் அது இதுதான். நான் க.நா.சு.வுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். என்னைப் பற்றி எதுவும் தெரியாத சமயத்தில் அவர் மதிப்புரை எழுதியிருக்கிறார் என்பது மிக முக்கியம்’ என்று சொல்லுவார்.

பின்னால் க.நா.சு.வுடன் உறவு ஏற்படுவதற்குக் காரணமே அந்த மதிப்புரைதான். க.நா.சு. மேல் அவருக்கு மதிப்பு இருந்தாலும் ஒரு பயம், சங்கோஜம் எல்லாம் இருக்கும். அதை மறக்காமல் அவரிடம் பேசுவது போல எனக்குத் தோன்றும். தன்னுடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருந்தது அந்த மதிப்புரை என்றுகூட அவர் சொல்லியிருக்கிறார். 

அவர் அவ்வளவு கத்தியதற்குக் காரணம் என்னவென்று அவரிடம் பின்னால் கேட்டேன், ‘என்னவோ தாங்க முடியவில்லை. நீங்கள் எத்தனையோ இடத்தில் இது போன்ற போலித்தனத்தைப் பர்த்திருப்பீர்களே? இவர்கள் கம்பனுடைய ரசிகர்களே அல்ல. கம்பன்மீது ஈடுபாடுள்ளவர்கள் இப்படிப் பேச மாட்டார்கள்’ என்றெல்லாம் சொன்னார்.

இதேபோல் பல சந்தர்பங்களில் அவர் கோபப்பட்டிருக்கிறார். நானிருந்த ஒரு சந்தர்பத்தில் ஒரு வாக்குவாதம் உருவானது. அது என்னவென்றால் அந்தக் காலத்தில் தீபாவளி மலர்கள் ஒரு ஏழெட்டு வரும். அவற்றில் வந்த எல்லாச் சிறுகதைகளையும் படித்து எழுத்தில் ஒரு நீளமான கட்டுரையும் எழுதி இருந்தார் செல்லப்பா. அந்தக் கட்டுரையை நான் படித்ததில்லை. பின்னால்தான் தெரிந்தது அந்த மலர்களில் எல்லாம் அழகிரிசாமி கதை எழுதி இருக்கிறார். இரண்டு மூன்று பெயர்களில் எழுதி இருக்கிறார். செல்லப்பாவின் கட்டுரையில் பல கதைகள் நன்றாக இருக்கின்றன. சில கதைகள் நன்றாக இல்லை என்ரு மட்டுமே சொல்லிக் கொண்டு போகிறார். அதில் எந்த இடத்திலும் அழகிரிசாமியின் பெயரைக் குறிப்பிடவே இல்லை. அதுதான் அவருடைய கோபத்திற்குக் காரணம். அழகிரிசாமிக்கு அவரைப்பற்றி நெகட்டிவாகச் சொன்னால் பிடிக்காது. பாராட்டுகளை எதிர்பார்ப்பார். எழுத்தாளர்கள் அவருடைய எழுத்தைப் பிடிக்காததைப் போல் பாவனை காட்டியிருந்தால் அழகிரிசாமிக்கு அவர்களைப் பிடிக்கவே பிடிக்காது.

அழகிரிசாமியைவிட, செல்லப்பா வயதில் பெரியவர். க.நா.சு. செல்லப்பா போன்றவர்களெல்லாம் ஒரு இடைவெளி இல்லாமல் பழகியிருப்பவர்கள். க.நா.சு. சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் அமைதியாக இருப்பார். தன்னுடைய கட்டுரை பற்றி செல்லப்பா சொல்லிக் கொண்டு வந்தார். அவ்வளவு கதைகளையும் கதைகலையும் படித்துச் சிரமப்பட்டுத்தான் எழுதினேன் என்றார். செல்லப்பாவுடன் சண்டை போடும் அபிப்ராயத்துடன்தான் அழகிரிசாமி கடற்கரைக்குப் போகும்போதே இருந்திருக்கிறார். அப்படிப் போய்க்கொண்டிருக்கிற சமயத்தில் இந்த வத்தலகுண்டு பாப்பான் ரொம்ப விஷமம் பண்றான் என்றார். அவர் யாரைச் சொல்கிறார் என்று எனக்குத் தெரியும். வத்தலகுண்டில் வேறு எந்த எழுத்தாளரும் இல்லையே. கடற்கரையில் பேசிக்கொண்டிருக்கும்போது, ராஜம் கிருஷ்ணன் கதையைப் பாராட்டிச் சொல்லி இருக்கிறீர்களே என யாரோ செல்லப்பாவைப் பார்த்துச் சொன்னார்கள். உடனே அழகிரிசாமி ‘மச்சினி’ என்றார். செல்லப்பாவுக்கு அசாத்தியமான கோபம் வந்துவிட்டது. ‘எனக்கு அவங்க மச்சினியா? என் சொந்தக் காரங்களை மட்டும்தான் நான் பாராட்டிப் பேசுவேன் என்கிறீர்களா? நான் எழுத்தை மட்டும்தான் பார்க்கக்கூடியவன்’ என்று பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். அழகிரிசாமி மிகவும் கிண்டலாகக் ‘கோபித்துக் கொள்ளாதீர்கள். ரொம்பப் பாராட்டி எழுதியிருப்பதைப் பார்த்தபோது மச்சினியாக இருக்கலாமோ என்ற சந்தேகம் வந்தது’ என்றார். இதற்கெல்லாம் காரணம் அழகிரிசாமியின் பெயரை எங்கேயும் செல்லப்பா குரிப்பிடவில்லை என்பதுதான். மற்றபடி செல்லப்பாவைக் கோபித்துக் கொள்ளவேண்டும் என்றோ கிண்டல் செய்யவேண்டும் என்றோ புண்படுத்தவேண்டும் என்றோ அழகிரிசாமிக்கு எண்ணமில்லை. இவர் -செல்லப்பா- சொல்லாவிட்டாலும் க.நா.சு. சொல்லியிருக்கிறார். அழகிரிசாமியைச் செல்லப்பா சொல்லாமல் விட்டதற்கும் அதுவே காரணமாக இருந்திருக்கலாம்.
நன்றி: காலச்சுவடு