17 April 2011

ச்சும்மா கதை சொன்ன கு.அழகிரிசாமி!

1980ல் அசோகமித்திரனின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு எழுத வந்தேனேத் தவிர, கூடித்திரிந்த சேக்காளிகளெல்லாம் அப்பிராமண தெற்கத்திக்காரர்கள்தான். 

பஸ்ரூட்டு கூட சரிவர பழக்கப்படாத பச்சை மண்ணாகத் திரிந்த அந்தக் கால வசந்தகுமாராகட்டும் ஊராறுமாதம் நகராறுமாதம் அலைக்கழிந்து கொண்டிருந்த விக்ரமாதித்ய வேதாளமாகட்டும் விடுப்பெடுத்து பொஸஸ்டென்றும் இடியட்டென்றும் ஆங்கிலத்தில் கரைத்துக் கொண்டிருந்த சமயவேலாகட்டும் அன்பை போதிக்க வந்த அப்போஸ்தலராக அனைவரிடமும் நெகிழ்ந்து கொண்டிருந்த வண்ணநிலவனாகட்டும் அத்துனை பேரிடமும் இருந்த மனக்குறை, சிறுபத்திரிகை சூழலில் அழகிரிசாமியை யாரும் சொல்ல மாட்டேன் என்கிறார்களே என்பதுதான். அவர்களின் ஒரே ஆறுதலாய், தருணம் வாய்க்கும் போதெல்லாம் கி.ராஜநாராயணன் மட்டும் சொல்லிக் கொண்டிருந்தார்.இப்படியே போனால் புதிய தலைமுறைக்கு அழகிரிசாமி என்று ஒருவர் இருந்தார் என்பதே தெரியாமல் போய்விடும் என்று தொண்டையடைத்த துக்கம் கொஞ்சநஞ்சமல்ல.

கணையாழி 82ல் முதன்முறையாகக் குறுநாவல் போட்டியை அறிவித்தது. என்னுடைய இலை மற்றும் வலி கதைகள் மட்டுமே பிரசுரமாகி இருந்த தருணம். இரண்டு குறுநாவல்களைக் கொண்டுபோய் கணையாழி அலுவலகத்தில் நேரடியாகக் கொடுத்தேன். ஒன்று என்னுடைய ’பெரியவர்கள்’ மற்றது வசந்தகுமாரின் ‘உச்சிவெயில்’. அவன் பல்துறை திறமைசாலி என்பது அப்போது எனக்குத் தெரியாது. ராஜா அண்ணாமலைபுரத்தில் மரம் செடிகளுக்கு நடுவே இருந்த (ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த வீடென நினைவு) வண்ணநிலவனின் வாடகை வீட்டில்தான் அந்தக் குறுநாவலைக் கொடுத்தான். பார்க்கவே மிரட்ச்சியாக இருந்தது. வெள்ளைப் பேப்பர்களில் அடித்தல் திருத்தலற்ற ஓவியவடிவில் அச்சிட்டது போன்ற எழுத்துக்கள். உலகமே நீள்வெண்தாளில் எழுதிக் கொண்டிருக்கையில் கிரெளன் சைஸ் புத்தக வடிவில் அட்டையோடு கூடிய புத்தகமாகத் தயாரித்து இருந்தான். பார்த்துவிட்டு இதே தலைப்பில் ஏற்கெனவே கதை எழுதப்பட்டு உள்ளதே எனச் சொன்னேன். பரவாயில்லை அதனாலென்ன என்று கூறிவிட்டான். சில மாதங்கள் கழித்து ‘பெரியவர்கள்’ குறுநாவலுக்கு இரண்டாம் பரிசு அளிக்கப்பட்டது. வாழ்த்து தெரிவித்த வசந்த குமார், தன்னிடம் பிரதிகூட இல்லை, அந்தக் குறுநாவல் திரும்பக் கிடைக்குமா,  எனக் கேட்டான். கஸ்தூரி ரங்கனிடம் விஷயத்தைக் கூறி அதைத் திரும்பக் கேட்டேன். போட்டிக்காக வந்தவற்றில் அந்தப் பெயரில் எதையும் பார்த்ததாக நினைவே இல்லை என்றார். பகீல் என்றது. வசந்தகுமாரிடம் இதை எப்படிச் சொல்வது என நான் பட்ட மனக்கஷ்டம் எனக்குதான் தெரியும். அவனிடம் சொல்லி வருத்தப்பட்ட போது மிகச் சாதாரணமாக ’அடக் கெடக்குது விடுப்பா’ என்றான். அவனிடத்தில் நான் இருந்திருந்தால் வசந்தகுமார் என்கிற ஒருவன் உலக மக்கள்தொகைப் ப்ட்டியலில் இருந்தே நீக்கப்பட்டிருப்பான் - குறைந்தது என் மன உலகில் இருந்தேனும். துரதிருஷ்டவசமாக அந்த வருட தீபாவளியை ஒட்டி திஜா இயற்கையெய்தினார். அது திஜா நினைவு குறுநாவல் போட்டி என்கிற பெயரில் அடுத்த வருடத்திலிருந்து அதாவது 83லிருந்து நடத்தப்படத் தொடங்கியது. அடுத்து நடந்த போட்டிகளில் எதிலாவது வசந்த குமார் கலந்து கொண்டிருப்பானா என்பதுகூட சந்தேகம்தான். ஆனால் முதல் குறுநாவல் தொலையப்பெற்ற அவனே, பிற்காலத்தில் பல பேர்களின் முதல் நாவல் தமிழினி மூலம் உருவாகி வெளிவரக் காரணமாய் இருந்தான் என்பது வரலாறு.

பத்திரிகை அலுவலகத்தில் குறுநாவல் தொலைந்து போயும் வசந்தகுமாரே இல்லாமல்போக முடியாதபோது அழகிரிசாமி மறக்கப்பட்டுவிட முடியுமா என்ன? மெளன ராட்சதன் நீறுபூத்த நெருப்பு அல்லவா? உறக்கம் கலைய ஒரு ஊதல் போதாதா என்ன?

சிலதினங்களுக்கு முன்னால் திருமங்கலம் திருப்பத்து ரோட்டில் தார் சரியாகப் போடப்பட்டிருக்கிறதா என கண்கோடியில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்து சில்லறை பொறுக்கியதில் கருப்பு பேண்ட் கந்தலாகி விட்டது. ஆகவே, நுங்கம்பாக்கம் ரேமண்ட்ஸில் இரண்டு கருப்பு பார்க்ஸ் எடுக்க பணம் எடுத்துக்கொண்டு கன்னிமாரா வெளியீட்டு விழாவிற்குப் போனேன். அழகிரிசாமி பற்றி சுந்தர ராமசாமி எழுதிய நேர்காணல் நினைவோடையை 40ரூபாய்க்கு (50-10=40) வாங்கிக் கொண்டு சமத்தாக உட்கார்ந்து கொண்டேன். நேரம் ஆக ஆக ஜுரம் ஏறிக்கொண்டே போகவும் இதை வாங்கினேன். திரும்பும் வழியில் ஒரு பேண்ட் மட்டும் வாங்கிக் கொண்டேன். இன்னொன்றை அப்புறம் வாங்கினால் என்ன கிழிந்துவிடவாப் போகிறது, அடுத்த தார் ரோட்டை சர்வே செய்ய நேரும்வரை.

மெதுவாகப் போகக்கூடாதா என அறிவுரை கூறாத மூடர்களே இல்லை எனலாம். வண்டியின் பெயரை ஃப்ளேம் என்று வைத்துக் கொண்டு நத்தையாக ஓட்டினால் நன்றாகவா இருக்கும்.சாதாரன ஜனபெருக்கிகள் குமாஸ்தாவிய மனோபாவத்தை எழுத்தாளனிடம் எதிர்பார்க்கவோ திணிக்கவோ செய்யலாமோ? எழுத்தாளர்கள் விதி சமைப்பவர்கள். கரண்டியும் கையுமாய் சதா சமைத்துக் கொண்டு இருப்பதே அவர்களின் விதி. இதில் தீர்க்கப்படாத ஒரு சில சின்னசின்ன சிக்கல்கள் மட்டுமே உள்ளன.

அவையாவன

1.சமையல் விதி சம்பந்தப்பட்டது. சில பரிசாரகர்கள் சமைப்பது சில பரிசாரகர்களுக்கு சமையலே இல்லை என்கிற பட்சத்தில் எவர் சிறந்த பரிசாரகர் என யார் முடிவு செய்வது?

2. இன்னும் சிலர் எவனெவனோ சமைத்து வைத்ததை சேமித்து வைத்திருந்து, சமகால பிசுக்கொட்டா வாணலியில் இரண்டு புரட்டு புரட்டி தன் சமையலாய் விலை அட்டை ஒட்டி கல்லாவை வெற்றிகரமாய் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆதியில் சமைத்தவனா அல்லது அப்புறம்வந்து பரிமாரியவனா? எவன் நெற்றியில் விதி சமைத்தவன் என்கிற வில்லையை ஒட்டுவது?

3. தலைமைப் பரிசாரகர் அக்குள் அரிப்போடு சமைத்தாலும் அமிர்தமாகவேத் தோற்றமளிக்கும் குழும விதி. அவருக்கு அரிப்போ ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடத்தில் வருகிறது. அரிப்புக்கேற்பவே அமைகிறது அன்றைய தாளிதம்.

இந்த விதவிதமான விதி சமைக்கும் சமையல் விதிச் சிக்கல்கல்ளை எந்த விதியின் கீழ் வகைப்படுத்தி சிடுக்குகளை விடுவித்துக் கொள்வது?

அல்லது 23.09.1923 முதல் 05.07.1970 வரை வாழ்ந்து

19வது வயதில் ‘உறக்கம் கொள்ளுமா?” முதல் கதையை ஆனந்த போதினி, 1942ல் எழுதி, நூற்று ஐந்தாவது கதையை 46வது வயதில் சுதேசமித்திரன், நவம்பர் 1969ல் எழுதி மறைந்தும் மறையாத கு.அழகிரிசாமியை எந்த விதியை வைத்து பகுத்துக் கொள்வது?

விதி சமைத்தவரா? பரிமாரியவரா? ருசித்தவரா? புசித்தவரா? என்று இவரிடம் கேட்டால் முகம் தூக்கிய புகையிலைக் குதப்பலில் என்ன வார்த்தை பதிலாய் வரக்கூடும்?

இவரது கதைகளிலேயே இதற்கு ஏதேனும் வெளிச்சம் தெரிகிறதா?


சுயரூபம் (கலைமகள் 1959)
நன்றி: காலச்சுவடு