19 April 2011

சுயரூபம் - கு. அழகிரிசாமி தட்டச்சு வடிவில்

வேப்பங்குளம் கிராமத்தில் இருநூறு வீடுகள் உண்டு. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பழம் பெருமையும் உண்டு. இப்போது சில வருஷங்களகப் பருவ ம்ழைகள் சரிவரப் பெய்யாமலும், வேலை வெட்டிகள் கிடைக்காமலும் போய், அகவிலைகளும் தாறுமாறாக ஏறிக்கொண்டுவிடவே, அந்தக் கிராமத்தின் பெரும்பாலான வீடுகளில் ‘உண்டு’ என்று சொல்லுவதற்கு அந்தப் பழம்பெருமை ஒன்றுதான் மிஞ்சியிருந்தது.


பழம்பெருமை படைத்த இந்த வேப்பங்குளத்தில் பிறந்த எத்தனையோ பேரில், தற்சமயம் ஐம்பதாம் வயதைத் தாண்டிய வீ.க. மாடசாமித் தேவரும் ஒருவர். அப்படிச் சொல்லிக் கொள்ளுவதைவிட, வீரப்பத் தேவர் பேரன் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளுவதில்தான் அவருக்குப் பிரியம் அதிகம். தாத்தா வீரப்ப தேவரின் அரிய சாதனைகளையும், ஒரு கடுஞ்சொல்லுக்கு ஒன்பது தலைகளைச் சீவி எறியும் மகா தீரத்தையும், உடன்பிறந்த தங்கை ஏதோ ஒரு சமயம் அவரை லட்சியம் செய்யாமல் இருந்ததற்காக அவளுடைய மூத்த மகன் கல்யாணத்தின் போது யார் யாரோ தாங்கியும் கட்டாயப்படுத்தியும் அழுதும் இன்னும் என்ன என்ன விதமாகவோ கும்பிட்டுக் கூத்தாடியும் கை நனைக்காமலே (சாப்பிடாமலே) வந்துவிட்ட வைராக்கியத்தையும் மாடசாமித் தேவர் தம் வாழ்நாளில் சந்தித்த ஒவ்வோர் இரண்டு கால் பிறவியிடத்திலும் சொல்லிப் பெருமைப்பட்டிருக்கிறார். அப்பேர்ப்பட்ட வீரப்பத் தேவரின் பேரர், காலனும் அஞ்சும் கந்தசாமித் தேவரின் ஏகபுத்திரர். வீ.க. மாடசாமித் தேவர் என்னும் பெயர் கொண்ட அந்த வேப்பங்குளம் வாசி, அன்றொரு நாள் அதிகாலையில் எழுந்து, காலைக் கடன்களை முடித்து, ஊருக்குக் கிழக்கே உள்ள யாரோ ஒருவருடைய மிளகாய்த் தோட்டத்தின் கிணற்றடியில் நின்று பொடி மணலை எடுத்துத் தந்தசுத்தி பண்ணிக் கொண்டிருந்தபோது, முத்தையாத் தேவர் என்ற ஒருவர் எதிர்பாராத விதமாக அங்கே திடீரென்று பிரசன்னமாகி, “என்ன பெரிய தேவரே! இன்னும் எத்தனை நாளைக்குத்தான் என்னை மாதாந்தம் நடக்கச் சொல்லலாம்னு நெனைச்சிக்கிட்டிருக்கீரு? இல்லே, நாள் காணாதா? காலேயரைக்கால் ரூவாக் காசுக்கு ஆயிரம் நடை நடந்தாச்சு; நீரும் வாய் சலிக்காமல் ஆயிரம் சால்ஜாப்பும் சொல்லியாச்சு!” என்று கர்ஜித்தார்.

கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்த ஒரு வேற்று ஜாதிக்காரனின் முன்னிலையில் தம்மை இப்படியெல்லாம் பேசி பாக்கியைக் கேட்கும் முத்தையாத் தேவருக்குச் சரியான புத்தி புகட்டவேண்டுமென்று நினைத்த மாடசாமித் தேவர் “நான் என்ன உமக்குப் பயந்து ஒளிஞ்சுக்கிட்டு அலையறேன்னு சொல்லுறீரா? இல்லே, எதிரே வந்தாத் தலையைச் சீவிருவீரா? தெரியாமத்தான் கேட்கிறேன்” என்றார்.

“ஒளிஞ்சிக்கிட்டு அலையல்லேன்னா வீட்டிலே இருக்கணுமில்லே?”

“ஆமாம். நீர் வருவீர்னு சொல்லி உமக்காக வேலைவெட்டியைப் போட்டுட்டு நான் வீட்டிலேயே உட்கார்ந்துக்கிட்டு இருக்கணும்!”

“இந்த வெவகாரமெல்லாம் எதுக்கையா? எனக்குக் குடுக்க வேண்டியதை விட்டெறிஞ்சிட்டீர்னா, நீர் வீட்டிலே இருந்தாத் தேவலையா, காட்டிலே இருந்தாத் தேவலையா? பெறகு நான் எதற்கு உம்மைத் தேடுகிறேன்?”

”காசு தானே கேக்கிறீர்” என்று நிமிர்ந்து நின்றுகொண்டு ஒரு கேள்வியைப் போட்டார், மாடசாமித் தேவர்.

“வேறு என்னத்தைக் கேக்கிறேன்? அதுகூடவா சந்தேகம்?”

“முத்தையாத் தேவரே! ரொம்ப தூரம் பேச்சுவச்சிக்கிட வேண்டாம். மத்தியானம் காசு வந்து சேருது, பாரும். உம்ம பாட்டிலே என்னென்னத்தையோ...”

மீதிப் பேச்சைக் காதில் வாங்கிக்கொள்ளாமலே முத்தையாத் தேவர் அப்பால் நகர்ந்துவிட்டார். அங்கே நின்றுதான் என்ன செய்யப் போகிறார்?

மாடசாமித் தேவரும், வாயில் கொப்புளித்த வாய்க்கால் தண்ணீரைத் ‘தூ’வென்று துப்பிவிட்டு, கிழக்கே மங்கம்மாள் சாலையை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

மங்கம்மாள் சாலை என்பது இந்நாள் டிரங்க் ரோடாகும். சென்னை மாநகரிலிருந்து கன்னியாகுமரி வரையிலும் செல்லும் அந்தச் சாலையில் கோவில்பட்டிக்கும் கயத்தாறுக்கும் நடுவில் ஒரு விலக்குப் பாதை பிரிகிறது. அரை மைலுக்கு மேற்கில் இருக்கும் வேப்பங்குளத்துக்குச் செல்லும் அந்தப் பாதையும் மங்கம்மாள் சாலையும் சந்திக்கும் இடத்தில், முருகேசம் பிள்ளையின் பலகாரக்கடை என்ற ஒற்றைத் தனிக்குடிசை ஒன்று இருக்கிறது. பஸ்ஸுக்காகப் புளியமரத்து நிழலில் வந்து காத்திருக்கும் பிரயாணிகளையும், தெற்கு நோக்கியும் வடக்கு நோக்கியும் செல்லும் மாட்டு வண்டிகளையும் மற்றும் பாதசாரிகளையும் நம்பி அவ்விடத்தில் இருபது வருஷங்களுக்கு முன் நிறுவப்பட்ட அந்தக் கடை, முருகேசம் பிள்ளைக்கு ஐந்தாறு ஏக்கர் புன்செய் நிலத்தையும், சிமிண்டுத் தளம் போட்ட ஓர் ஓட்டுவீட்டையும் சம்பாதித்துக் கொடுத்ததுமல்லாமல், அவருடைய மூன்று பெண்களுக்குக் கல்யாணமும் செய்து வைத்திருக்கிறது. அந்தக் கடைக்குத் தேவர் போய்ச் சேர்ந்தபோது முருகேசம் பிள்ளை சிலருக்குப் பலகாரம் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்.

முருகேசம் பிள்ளையவர்கள், மாடசாமித் தேவரவர்கள் வந்ததைக் கவனிக்கவில்லை என்று சொல்ல முடியாது; கவனிக்க விரும்பவில்லை என்பதுதான் சரி. பஸ்ஸுக்கு வந்த பிரயாணிகளுக்குப் பலகாரங்களைக் கொடுத்துக் காசாக்குவதிலேயே பிள்ளை கண்ணும் கருத்துமாக இருந்தார். தேவரோ, தாம் வந்ததைத் தெரிவிப்பதற்காக இடையிடையே ஏதேதோ பேச்சுக் கொடுத்துப் பார்த்தார். அது, ’புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொரு’ளைப் போலவும், தாடகையின் மார்பில் பாய்ந்த ராமபாணம் போலவும் இந்தப் பக்கமாகப் புகுந்து அந்தப் பக்கமாகப் பறந்துவிட்டது.

அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் வேப்பங்குளத்துக்காரன். அவனையும் சேர்த்து, ‘ஐயா’, ‘ராசா’ என்று உபசரித்தார், முருகேசம் பிள்ளை. அதைப் பார்த்த தேவர், ‘நாலு காசு சேர்ந்துட்டதுன்னா கழுதை களவாணிப் பயல்களைக்கூட முருகேசம் பிள்ளை தாங்குவாரு!’ என்று இகழ்ச்சியாக எண்ணிக்கொண்டு ஒரு மூலையில் உட்கார்ந்தார்.

எல்லோரும் சாப்பிட்டுப் போய்விட்டார்கள். ‘செல்விருந்து ஓம்பிய’ பிள்ளை, வருவிருந்தைப் பார்த்திருக்கலானார்; ஆனால், அப்போது பரிதாபகரமாக மாடசாமித் தேவர்தான் வந்த விருந்தாகக் காத்துக்கொண்டிருந்தார். ஆள் இல்லாத இந்தச் சமயம் பார்த்து, கோட்டையைப் பிடிப்பதற்காகத் தமது முஸ்தீப்பைத் தொடங்கினார் தேவர்.

“என்ன அண்ணாச்சி, ஆளு ஒருமாதிரி எளைச்சமாதிரி இருக்கிகளே, என்ன சங்கதி?” என்று ஆரம்பித்தார்.

”எளைப்பு என்ன எளைப்பு! எண்ணைக்கும் போலத்தான் இருக்கிறேன்” என்று அலட்சியமாகக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே பதில் சொன்னார் பிள்ளை.

தேவரிடமிருந்து அடுத்த கேள்வி கிளம்பவில்லை.

பஸ் வந்தது. அதிலிருந்து ஒரே ஒரு பிரயாணி மட்டும் இறங்கினான். அவனை வரவேற்றுச்  சாப்பிட அழைத்தார் பிள்ளை. அவன் ‘பசி இல்லை’ என்று சொல்லி அவரிடமிருந்து தப்பித்துக்கொள்ள முயன்றான். அகப்பட்டுக்கொண்டால் அரை ரூபாயோ முக்கால் ரூபாயோ கணக்காகிவிடும் என்று அவனுக்குப் பயம். ஆனால் பிள்ளையா விடுகிறவர்? ஓடிப்போய் அவன் கையைப் பிடித்து இழுத்தார்.

“கையை விடுமையா! பசிச்சா வரமாட்டான், மனுஷன்? கடன்காரன் மாதிரி வந்து கையைப் பிடிச்சு இழுக்கிறீரே!” என்று கோபமாகச் சொல்லி, கையையும் உதறிவிட்டு அவன் ஊரைப் பார்த்து நடந்தான்.

முருகேசம் பிள்ளைக்கு இது அவமானமாக இருந்தது. அதை மறைப்பதற்காக மாடசாமித் தேவரிடம் வலிய வந்து பேச்சுக் கொடுத்தார். தப்பி ஓடியவனைத் தமக்கு மிகவும் வேண்டியவனைப் போலக் குறிப்பிட்டுப் பேசினார். வேண்டியவன் இப்படியெல்லாம் முகத்தை முறித்தாற்போல் பேசுவது அவமானப்படத்தக்க விஷயமல்ல என்று தேவர் நினைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் கையாண்ட தந்திரம் அது.

பிள்ளையவர்கள் தம்மையும் ஒரு பொருட்டாகக் கருதிப் பேச ஆரம்பித்ததை எண்ணி மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கொள்ளத் தொடங்கிய மாடசாமித் தேவர், “என்ன இருந்தாலும் இந்த காலத்துப் பிள்ளைகளுக்கு மனுஷாளோட தராதரம் தெரிகிறதில்லை, அண்ணாச்சி” என்றார்.

“ஆனால், இவன் அப்படியில்லே! தங்கமானபிள்ளை.”

”பய போறான், அண்ணாச்சி, பேச்சை விடுங்க. இப்போ யாவாரம் எப்படி?” என்று விசாரித்தார் தேவர்.

“என்னமோ, அச்சில்லாமத் தேரு ஓடுது. போட்ட மொதலைக்கூடக் கண்ணாலே பார்க்கமுடியல்லே.”

“நல்ல யாவாரமின்னுல்லே சொன்னாக?”

”சொல்வாக, சொல்வாக. சொல்றவுகளுக்கு என்ன? முருகேசம் பிள்ளை, கொள்ளையடிச்சுக் கொள்ளையடிச்சு மூட்டை மூட்டையாகக் கட்டி வச்சிருக்கான்னுகூடச் சொல்வாக. என் கண்முழி பிதுங்குறது எனக்கில்லே தெரியும்? பாருங்க, என் மக மாங்கண்ணு (அவர் மூன்றாவது மகளின் செல்லப்பெயர்) ஆடிக்கு வந்தவ இன்னும் இங்கேயே இருந்துக்கிட்டிருக்கறா. அவளுக்கு நாலு வடத்திலே ஒரு முத்துமாலையைப் போட்டு அனுப்பி வச்சிரணும்னு பாக்கிறேன். அதுக்கு ரெண்டு பவும் சேர மாட்டேங்குது” என்று வருத்தத்தோடு சொன்னார்.

தேவர், மிகப்பெரிய பசியேப்பத்தை விட்டுவிட்டு, பிள்ளையின் துயரத்துக்கு அனுதாபம் காட்டுவதுபோல் நடித்துக்கொண்டு, “ரெண்டு பவும் போதுமா, நாலு வடம் முத்துமாலைக்கு?” என்று குழந்தையைப் போலக் கேட்டார்.

“சரியாப் போச்சு போங்க! கையிலே பத்து பவுன் இருக்கு தம்பி. பன்னிரண்டு பவுனாப் பண்ணிப்பிடணும்னு பார்க்கிறேன்”

”ஆமா, அண்ணாச்சி! செய்றதை நல்லாத்தான் செய்யணும்! யாருக்குச் செய்றோம்? நம்ம குழந்தைக்குத்தானே செய்றோம்?” என்று அனுதாபத்தைப் பூரணமாக வெளிப்படுத்தினார்.

‘ஐயாவுக்கு ரொம்பக் கவலை!’ என்று தமக்குள்ளேயே சொல்லிக் கொண்டார் பிள்ளை.

அப்போது தேவர் தமக்குள் சொல்லிக் கொண்டது பின்வருமாறு:

‘இவன் மகளுக்குச் சங்கிலி போடலேன்னுதான் இந்த வீரப்பத் தேவர் பேரனுக்குக் கவலை! நம்ம தலையெழுத்து, இப்படிப்பட்ட அற்பப் பயல்களுக்கெல்லாம் எரக்கம் காட்டிப் பேச வச்சிருக்கு. அவனவன் அரைவயித்துக் கூழுக்கு அலையிறான்; இந்தப் பய மகளுக்கு என்னடான்னா, முத்து மாலைப் பண்ணிப் போடணுமாம், நாலு வடத்திலே! கும்பி கூளுக்கு அழுததாம்; கொண்டை பூவுக்கு அளுததாம்!”

’அற்பப் பய’லுக்கு அனுதாபம் காட்டுவது தேவருக்கும், ‘வெறும் பயல்’ அனுதாபம் காட்டுவது பிள்ளைக்கும் அடியோடு பிடிக்கவில்லை.

முருகேசம் பிள்ளை பேச விரும்பாமல் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். ரோட்டின் தென்கோடியையும் வலதுகோடியையும் ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு, காலை உணவு உட்கொள்ள உட்கார்ந்தார்.

பிள்ளையவர்கள் இட்டிலிகளையும் வடைகளையும் எடுத்து வைத்துக்கொண்டு தேங்காய்ச் சட்டினியைத் தொட்டுச்  சாப்பிடும் காட்சியைக் கண்ட தேவருக்கு நெஞ்சு படபடவென்ரு அடித்தது. முந்தாநாள் சரியாகச் சாப்பிடாமலும், நேற்று அறவே  சாப்பிடாமலும், இன்று வெறும் ஆசாரத்துக்காகவே பல்தேய்த்துவிட்டுப் பசியேப்பம் விட்டுக்கொண்டும் இருக்கும் ஒரு மனிதன் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறானே என்ற உணர்ச்சிகூட இல்லாமல் பிள்ளை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

“நமக்கும் நாலு இட்டிலி வையுங்க, அண்ணாச்சி” என்று தம்மை மறந்த நிலையில் கேட்டுவிடுவதற்குத் தேவர் வாயைத் திறந்துவிட்டார். நல்ல வேளையாக, திறந்த வாயில் பேச்சு வெளிவராமல், மற்றொரு பசியேப்பமே வந்தது. கேட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? முருகேசம் பிள்ளை கடன் கொடுக்கக் கண்டிப்பாக மறுத்திருப்பார். அத்துடன் தேவரின் நம்பிக்கையும் தகர்ந்திருக்கும். கேட்காமல் இருந்தாலோ, சாயங்காலம் வரையிலாவது நம்பிக்கையை நீட்டலாம். இதை உணர்ந்து பிள்ளையவர்களை மெள்ள மெள்ள வசப்படுத்தி, கடைசியில் தமது காரியத்தைச் சாதிப்பதற்கான உபாயங்களையும் மார்க்கங்களையுமே தேடலானார், தேவர்.

சிறிது நேரத்தில் அடுத்த பஸ் வடக்கேயிருந்து வந்தது. அதிலிருந்து மூன்று பேர் இறங்கினார்கள். மூவரும் உள்ளூர்க்காரர்கள். அவர்கள் சாப்பிட வரமாட்டார்கள் என்பது பிள்ளையவர்களுக்குத் தெரியுமாதலால் அவர்களை வீணாகக் கூப்பிடவில்லை.

”இப்படி வர்ரவுகளெல்லாம் கடைக்கு வராமப் போனா அண்ணாச்சி சொன்ன மாதிரி, யாவாரந்தான் எப்படி நடக்கும்?” என்று வாயைத் திறந்தார் மாடசாமித் தேவர்.

“செடி வச்சவன் தண்ணி ஊத்துவான். நீர் ஏன் கவலைப்படுறீரு?” என்று பதில் சொல்லிவிட்டு பிள்ளை திரும்பி உட்கார்ந்து கொண்டார்.

மத்தியானம் ஆயிற்று. வயிற்றுச் சோற்றுக்கு முருகேசம் பிள்ளை வீட்டில் எடுபிடி வேலை செய்து உயிரைப் பேணிக்கொண்டிருக்கும் ஒரு சிறுவன் வீட்டிலிருந்து அவருக்கு மத்தியானச் சாப்பாடு கொண்டுவந்தான். காரணம் இல்லாமலே, நித்திய வழக்கப்படி அவன்மீது ஒரு வசை புராணம் பாடி முடித்தார் பிள்ளை. பிள்ளையவர்களைச் ‘சண்டாளன்’ என்று மனதுக்குள் திட்டிக்கொண்டு,  அதே சமயத்தில் அவருடைய கட்சியிலேயே சேர்ந்துகொண்டு, அந்தச் சிறுவனை மாடசாமித் தேவரும் கடிந்துகொண்டார். இது பிள்ளையவர்களுக்குப் பிடிக்கவில்லை.

“தேவரே, இவன் என்ன, அனாதைப் பயல்னு பார்த்தீரா? நான் தான் திட்டுறேன்னா, நீரும் எதுக்குப் பின் பாட்டுப்பாடுறீரு?” என்று ஒரு போடு போட்டார்.

தேவருக்கு முகத்தில் அறைந்தாற்போல் இருந்தது. பல்லைப் பல்லைக் காட்டிக்கொண்டு,  “நான் அப்படி என்ன சொன்னேன்...? அவனுக்குப் புத்திதானே சொன்னேன்?” என்று பரிதாபகரமாகச் சொன்னார்.

பையன், தேவரைச் சிம்மப் பார்வை ஒன்று பார்த்துவிட்டுப் போனான்.

காலையிலிருந்து முருகேசம் பிள்ளையோடு வளர்த்த நட்பு இப்படி ஒரு நிமிஷத்தில் தகர்ந்து தரைமட்டமாகி விட்டதே என்று தேவருக்கு ஏமாற்றம். பழையபடியும் அவரோடு சிநேகிதமாகிவிடுவதற்குத் தக்க தருணத்தை எதிர்பார்த்தவராய் அந்த இடத்தில் இருந்தபடியே இருந்துகொண்டிருந்தார்.

இரவு ஏழு மணிக்கு மேல் ஆகிவிட்டது. திருநெல்வேலியிலிருந்தும் கோவில்பட்டியிலிருந்தும் எத்தனையோ பஸ்கள் வந்து போயின. எத்தனையோ பேர் முருகேசம் பிள்ளையின் கடைக்கு வந்து சாப்பிட்டுப் போனார்கள். அவர்களின் சிலருடன் பிள்ளையவர்கள் ‘ஹாஸ்ய’மாகப் பேசியபோது, தேவர் சிரித்தார்; சிலருடன் கோபமாகப் பேசியபொழுது, தேவர் அடி எடுத்துக் கொடுத்தார்; துயரமாகப் பேசியபொழுது, அழாக்குறையாகத் துக்கப்பட்டார். வயிற்றுக் கொடுமை அவரை இப்படியெல்லாம் ஆட்டி வைத்தது. உட்கார்ந்த இடத்தில் கரையான் புற்று வளர்ந்து அவரை மூடாதது ஒன்றுதான் பாக்கி. அந்த மாதிரி அங்கே கிடையாகக் கிடந்தார்.

பிள்ளையவர்களுக்கு அன்று வியாபாரம் சரிவர நடைபெறவில்லை. பத்துப் பன்னிரண்டு இட்டிலிகளும், சில தோசைகளும் மிஞ்சிவிட்டன. அரைப்பானை காபியும் மிஞ்சியது என்றாலும் பிள்ளையவர்கள் அதற்காகக் கவலைப்படவில்லை. எப்போதும் அவர் அதற்காகக் கவலைப்பட்டது இல்லை. அந்தப் பானை ஒரு வற்றாத ‘சமுத்திரம்’. காலையில் அடுப்பில் வைத்துக் கொஞ்சம் கருப்பட்டியையும் காபித்தூளையும் உள்ளே போட்டுக் கொதிக்க வைத்தால், அப்புறம் அது விற்பனை ஆக ஆகப் பானையில் தண்ணீரை விட்டே நிரப்பிக் காபியாக மாற்றிக்கொண்டிருப்பார், பிள்ளை.

இரவு ஒன்பது மணிக்குக் கடைசி பஸ்ஸும் போய்விட்டது. அதற்குமேல் அங்கே வியாபாரம் நடக்காது என்பதோடு மட்டுமின்றி, கடையைத் திறந்து வைத்துக்கொண்டு அவ்விடத்தில் உட்கார்ந்திருப்பதும் தப்பு. ஏகாந்தமான இடம்; நடுக்காடு. அங்கே எவனும் வந்து அடித்துப் பிடுங்கினாலும் கேள்வியில்லை. அதனால் வழக்கம்போல் பிள்ளையவர்கள் கடையைக் கட்டிக் கொண்டு வீட்டுக்குப் புறப்படத் தயாரானார். காபிப் பானையை எடுத்து வழக்கம்போலவே கடைக்குப் பின்புறத்தில் கொண்டு போய்க் கொட்டினார். மிஞ்சிய பலகாரங்களை எடுத்து ஒரு கூடைக்குள் போட்டார். “அந்த விடியாமூஞ்சி வந்து சனீசுவரன் மாதிரி கடைவாசலில் உட்கார்ந்திருந்தா யாவாரம் எங்கே ஆகும்?” என்று முணு முணுத்துக் கொண்டார்.

தேவர், அந்தச் சமயத்தில் மற்றொரு முறை கடனுக்கு நாலு இட்டிலிகளைக் கேட்க வேண்டுமென்று துடித்தார். ஆனால், அப்போது அவருக்கு வாய் வரவில்லை. பிள்ளை ‘இல்லை’ என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற அதே பயம்தான்.

முருகேசம் பிள்ளை தம் தளவாடங்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு, வெறும் கடையை இழுத்துப் பூட்டிவிட்டு, நிலா வெளிச்சத்தில் விலக்குப் பாதை வழியாக மேற்கே நோக்கி நடக்கத் தொடங்கினார். தேவரை அவர் தம்மோடு புறப்படும்படி சொல்லவில்லை. அவரிடம் வேறு வார்த்தையும் பேசவில்லை. தேவருக்கு ஏற்பட்ட அவமானத்தைச் சொல்லிமுடியாது. அன்று பகல் முழுவதும் பிள்ளையவர்களின் இன்பதுன்பங்களில் முழுப் பங்கெடுத்துங்கூடத் தம்மை ஒரு மனிதனாக அவர் நினைக்கவில்லை என்பதற்காகத் தேவர் புண்பட்டு வருந்தினார். ஒரே பசி; எழுந்திருக்க முடியாத சோர்வு; போதாக்குறைக்கு அவமானம் வேறு; என்றாலும் அவர் பிள்ளையவர்களைப் பின்பற்றி நடந்தார். ‘ஒருவார்த்தை, வாய் திறந்து கேட்டிருக்கலாம். கேட்காமல் இருந்துவிட்டோம். வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்’ என்று எண்ணியவராக நடுவழியில் பிள்ளையவர்களைப் பார்த்து, “அண்ணாச்சி, ஒரு காரியமில்லே...” என்று ஆரம்பித்தார்.

“என்ன சமாச்சாரம்?” என்று கேட்டார் முருகேசம் பிள்ளை.

“இல்லே, மிஞ்சிப்போன அந்த இட்டிலியை எடுத்துக்குடுங்களேன், நாளைக்கு காலையிலே காசைக் கொண்டாந்து குடுத்திடுறேன்?”

“இதுக்குத்தான் நீர் இவ்வளவு நேரமும் வலைவீசினீரா? சரிதான், சரிதான்! ஐயா, நம்பகிட்டே கடன்கிடன் என்கிற பேச்சே கிடையாது” என்று சொல்லி, சற்று வேகமாக நடந்தார்.

“நீங்க கடன் குடுக்காமலா இருக்கிறீக?”

“குடுப்பேன் ஐயா, குடுப்பேன்; குடுக்கிறவுகளுக்குக் குடுப்பேன்; உமக்குக் குடுத்துப்போட்டு நான் எங்கே போய்க் காசை வசூல் பண்றது?”

“என்ன அப்படிச் சொல்லிப்போட்டீக, அண்ணாச்சி? இந்த வீரப்பத் தேவர் பேரன் அப்படிப்பட்டவன் இல்லே.”

“ஆமாமா! உமக்குக் கடன் குடுத்திட்டு, அப்புறம் வசூல் பண்ண வீரப்பத் தேவருகிட்டப் போக வேண்டியதுதான்.”

“சத்தியமாச் சொல்றேன்; வாங்கினக் கடனைக் குடுக்காம நான் ஏமாத்தமாட்டேன். ஊசிப்போன பலகாரத்தைத்தான் நான் கேக்கிறேன். அதைக்கூடக் குடுக்க மாட்டேங்கறீகளே!” என்று கெஞ்சினார்.

பிள்ளைக்குக் கோபம் வந்துவிட்டது. “ஊசிப்போன பலகாரந்தானே? அதை நீர் எதுக்குக் கேக்குறீரு? வீட்டுக்குப் போய்ச் சுடச்சுடத் தோசை சுட்டுச் சாப்பிடுமே; யார் வேண்டாங்கிறா!”

“கோவிச்சுக்காதீங்க. நான் இப்படியெல்லாம் கேக்கிறவனில்லே, ஏதோ இண்ணைக்குக் கேக்கிறேன். என் பாட்டன் பூட்டன் காலத்திலே கூட இப்படி எங்க குடும்பத்திலே யாரும் கெஞ்சினது கிடையாது. எங்க பாட்டனாரு, ஒரு கோவத்திலே சொந்தத் தங்கச்சி வீட்டிலே கூடச் சாப்பிடமாட்டேன்னு வந்தவரு...”

“ஐயா நீர் பொழைச்ச பொழைப்பும், ஒம்ம பாட்டன் பொழைச்ச பொழைப்பும் எனக்குத் தெரியும். சும்மா ஆளைப் போட்டு பிடுங்காதீங்க.”

பாட்டன்மாரைப் பற்றி அலட்சியமாகப் பேசிய அந்த வார்த்தைகளுக்காகவே தேவரின் எரிமலை வெடிப்பதற்குக் காத்திருந்தது போலும்! “என்னடா சொன்னே?” என்று இடிமுழக்கம்போல் குரலெழுப்பிக்கொண்டு முருகேசம் பிள்ளை மீது புலிப் பாய்ச்சலாகப் பாய்ந்தார், மாடசாமித் தேவர். இந்தத் தாக்குதலால், பிள்ளையின் தலையில் இருந்த தளவாடங்கள் கீழே விழுந்து சிதறின. உடனே இருவரும் கைகலந்துவிட்டார்கள். திட்டிய திட்டுகளும், பேசிய பேச்சுகளும்... அது வேறு பாஷை. பலம் கொண்ட மட்டும் ஒருவரையொருவர் ஓங்கிக் குத்தினார்கள். ஒருவரைக் கொல்லாவிட்டால் மற்றொருவர் உயிரோடு மீள முடியாது என்பதும் உறுதியாகிவிட்டது. அந்தப் பேயறைகளும், பேய்க் கூப்பாடுகளும் கேட்பாரற்ற ஓசைகளாகக் காற்றீல் கலந்துகொண்டிருந்தன. சண்டையை விலக்குவதற்குச் சுற்றுமுற்றும் ஒரு ‘சுடு குஞ்சும்’ கிடையாது. கை ஓயக் குத்தினார்கள். கையைவிட்டால் அப்புறம் பல்தான் ஆயுதம். பல்லையும் பகவான் கொடுத்திருக்கிறாரே!.... அடியோடு கடியும் சேர்ந்தது. உடம்பெல்லாம் ரத்தக் கோரைகள்....

நடுக்காட்டில் சில நிமிஷ நேரம் இந்தப் பயங்கரப் போர் நடந்தது. முடிவில் மாடசாமித் தேவரே சொந்து விழுந்தார். வயிற்றுப் பசியை வைத்துக்கொண்டு அவர்தான் எப்படித் தாக்குப் பிடிப்பார்? வீசி எறிந்த கோணிப் பை மாதிரி பாதையோரத்தில் சுருண்டு விழுந்தார் தேவர். முருகேசம் பிள்ளை வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டே தம் தளவாடங்களைக் கம்பீரமாகப் பொறுக்கி ஒன்று சேர்த்துக் கொண்டிருந்தார். தேவர் கிடந்த இடத்தில் மூச்சுப்பேச்சே  இல்லை. ஒரே மௌனந்தான் நிலவியது.

முருகேசம் பிள்ளை புறப்படவிருந்த சமயத்தில், மாடசாமித் தேவர் சுய உணர்வு இல்லாத நிலையில். “அண்ணாச்சி, இன்னுங் கூட ஒங்க மனசு எரங்கலையா? வயத்துப் பசியிலே புத்தியைப் பறி கொடுத்திட்டேன், அண்ணாச்சி” என்று மன்னிப்பையும் இட்டிலியையும் ஏக காலத்தில் கேட்டார்.

முருகேசம் பிள்ளையின் மனமா இரங்கும்? அதற்குப் பதிலாகப் பன்மடங்கு கோபமே வந்தது. “இந்தா, திண்ணுத் தொலை. இப்படி மானங்கெட்ட தீனி திண்ணு உடம்பை வளக்கலேன்னா என்னவாம்?” என்று சொல்லிக்கொண்டே கூடையின் வாய்க்கட்டை அவிழ்த்து இட்டிலியை எடுத்துக் கொடுக்கப்போனார்.

“இந்தப் பயகிட்ட நான் பிச்சை வாங்கித் திங்கவா?” என்று வீறாப்புடன் சொல்லிக்கொண்டு தமது முழுப் பலத்தையும் பிரயோகித்துப் பிள்ளைமீது மறுமுறையும் மறுமுறையும் பாய்ந்தார், தேவர். பாய்ந்த வேகத்திலேயே அடி வயிற்றில் ஒரு பலமான குத்து வாங்கிக்கொண்டு கீழே விழுந்தார். உடம்பில் மூலைக்கு மூலை பரல் கற்கள் குத்தின. திரும்ப எழுந்து சண்டை போடுவதற்குத் தேவரிடம் சக்தி இல்லை.

அப்போது முருகேசம் பிள்ளை, “உம்மை விருதாவாக் கொலைப் பண்ணிட்டுத் தூக்குமேடையில் ஏறுவானேன்னு பாக்கிறேன். இல்லேன்னா, நடக்கிற கதை வேறே” என்று கடைசி உறுமலாக உறுமிவிட்டுப் போய்விட்டார்.

அடிபட்டுக் கிடந்த மாடசாமித் தேவருக்கு, என்னென்னவோ பயங்களெல்லாம் வந்து உள்ளத்தில் புகுந்து கொண்டன. முருகேசம் பிள்ளை ஊருக்குள் போய் நடந்த சங்கதியைச் சொன்னால்?.... வீரப்பத் தேவரின் பேரன் வழிப்பறியடித்துப் பசி தீர்க்க முயன்றதாகக் கதை கட்டினால்...? பிறகு, போலீஸ்காரர்கள் வந்து தம்மை ஊரார் முன்னிலையில் கைதியாகக் கூட்டிக்கொண்டு போனால்?....

அவர் தம்முடைய பயங்களை ஒருவழியாக உதறுவதற்கு வெகு நேரம் ஆயிற்று.

’இனி என்ன கஷ்ட வந்தாலும் வரட்டும். என்னதான் வந்துவிடும்? தலைக்கு மிஞ்சின ஆக்கினையா? கோவணத்துக்கு மிஞ்சின தரித்திரமா? இந்த அற்பப் பயல் யாசகமாகக் கொடுத்த இட்டிலியை வாங்கி நாய்த் தீனி தின்னாமல் இருந்தோமே, இந்தக் கடும்பசியிலும் - அது போதும்; மற்றக் கேவலம் எது வந்தாலும் வரட்டும்’ என்று தமக்குத்தாமே ஆறுதல் தேடிக்கொண்டு தள்ளாடித் தள்ளாடி வீட்டை நோக்கி நடந்து வந்தார் மாடசாமித் தேவர்.

கலைமகள் 1959
நன்றி: காலச்சுவடு

*****
தட்டச்சு வடிவம் சென்ஷி.