17 April 2011

பிரமிளின் தெற்குவாசல் / ரவீநன் தெரு


fromSenthil Muthusamy 
tomadrasdada@gmail.com
dateSun, Apr 17, 2011 at 9:51 AM
subjectPiramil Poetry
mailed-bygmail.com
signed-bygmail.com
hide details 9:51 AM (3 hours ago)
Mr. Mamallan:

I saw your posting of Piramil translation poetry, if you have "raveenan theru", and "therkku vasal" from Piramil, please send it to me. Thanks,

Senthil
நன்றி: அடையாளம்
ஆன்லைனில் வாங்க உடுமலை.காம் 
புக்லேண்ட் & டிஸ்கவரி புக் பேலஸ்

தெற்குவாசல்

தெற்குக் கோபுர வாசலுக்கு
வந்த உன்முன் உனது
இடப்புறமாக நிற்கிறான்
காலபைரவன்.

பூணூலில் அவன் 
கோர்த்தணிந்திருக்கும்
பொக்கிஷங்களைப் பார்.
பூக்களல்ல, புஷ்பராகக்
கற்களல்ல,
கபாலங்கள்.
ஒவ்வொரு கபாலமும் 
பார்ப்பானில் இருந்து
பறையன்வரை
ஐரோப்பானில் இருந்து
ஆப்பிரிக்க நீகிரோப்
பழங்குடிவரை,
ஒவ்வொரு மனித
இனப்பிரிவினை காண்.
நேர்கொண்டு பார், சிலையின்
கால்களுக்குப் பின் நாயாய்
உறுமுகிறது மரணம்.
அது, காலத்தின் வாகனம்.
காலபைரவனின்
சிரசில் அணிந்த
நெருப்புக் கிரீடமாய்
நின்று எரிகிறது
சரித்திர நியதி. அவன்
ஏந்தி நிற்கும் 
சிவாயுதங்களிலும்
நடுங்குகிறது அதன் 
நிர்மூல கதி.

டமருவில் பிறந்தது
நாதம்; நாதத்தில் 
பிறந்த விந்து
கலைகளாய் விரிந்து
கால தேசங்களாயிற்று.
தேசங்கள் காலத்தின் 
நேற்றின்று நாளை என்ற
மூவிலைச் சூலத்தில்
கிழிபட்டுக் குலைந்து
அழிந்து
கொண்டிருக்கின்றன.
இடையில் கலைமான்
உள்முகம் நோக்கி
ஓடிக்கொண்டிருக்கிறது.

தெற்கே வந்த உன்முன்
நிற்கிறது காலம்.
நிர்வாணமாய் 
நேர்கொண்டு பார்க்காமல்
நீ தப்ப முடியாது.
உன் கண்களைச் சந்தித்த
கருணையில் குரூரத்தில்
ஊடுருவி உளோடிப்
பிறக்கிறது காலத்தின்
புரியொணாப் புன்னகை.
உன் உடலில் அருவருத்து
உள் ஓடிப் புரள்கிறது
உனைவிட்டுப் பிரியாத
மரணத்தின் பூணூல்.
உன் உயிரை நேர்நோக்கி
பரிகஸிக்கின்றன 
காலங்கள்.
கத்திமுனையாய்
துப்பாக்கியில் வெடித்துச்
சுழன்று வரும் குண்டாய்
உற்பாதங்கள் தந்து,
உருக்குலைக்கும் நோயாய்
உடன்கூடிப் படுத்தவளின்
புணர்ச்சி விஷமாய்
தெற்குக் கோபுரவாசலில்
நிற்கிறது காலம்
நிர்வாணமாய்.
காலிடறும் கல்லும்
ஒரு நாளில்லை ஒருநாள்
காலனுருக் கொள்ளும்-
ஓ, ஓ, மானுட!
ஓடாதே நில்!
நீ ஓட ஓட
தொடர்கிறது கல்;
நாயாக உன்
நாலுகால் நிழலாக.
நீ ஓடஓட
தொடர்கிறது அக்கினி;
ஓயாத உன் 
உயிரின் பசியாக.
நீ ஓட ஓட 
தொடர்கிறது இடைவெளி;
சாவாக நீ
இல்லாத சூனியமாய்.

கற்பித்தத் திளைப்பில்
நீ நின்ற கணம்
மனம் தடுமாறி நீ
சிஷ்டியைப் பிரதி
பலித்த அவ்வேளையில்
எதிரே நிற்கும்
கவிதையே காலம்.

அறிவார்த்த திகைப்பில்
நீ நின்ற கணம்
திசை தடுமாறி உன்
அறிவு திருக
எதிரே எழுகிறது
காலத்தின் விபரீதக்
கருத்துருவக் கோலம்.
உனக்குள் ஓய்ந்து
நீ நின்ற கணத்தில்
உள்வெளி மாற்றி
இக்கணத்தில் மடிகிறது
காலமாய் வக்கரித்த 
ஞாபக லோகம்.

நின்று நேர் கொண்டு
நோக்கிய கணத்தில் 
நீ கண்டதென்ன?
தெற்குக்கோபுர வாசலில்
நியதி நெருப்பைச்
சிரசில் அணிந்து
நிற்பது நீதான்.
நீ அற்ற சூனியத்தில்
நிற்கின்ற பிரக்ஞைக்குள்
விழுகின்ற தத்துவ 
நிழல் உன் பாலம்.
உனக்குள் உன் 
உயிரென நீ
உருவேற்றிக் கொள்வதுவோ
உயிரல்ல, காலம்.

எனவே, எட்டாத
வெற்று வெளி ஒன்றில்
ஓயாத திகிரியை
மென்சிறகலைத்து
ஓட அசைத்தபடி
ஆடாமல் அசையாமல்
பறப்பது நீயல்ல
நானல்ல,
காலாதீதம்.

தெற்குக் கோபுர வாசலில்
திகைத்து நிற்கிறது
நீயற்ற நானற்ற
கல்.

*
பிரமிள்
அஸ்வமேதா 1988, அக்-நவ, 1988.

*****


நன்றி: லயம் கால சுப்ரமணியம்
பிரெஞ்சுக்கவிதை:
மாக்ஸ் ஜேகப்

ரவீநன் தெரு

“ஒரே நதியெனினும் இரண்டாவது தடவை அதில்
நீராடும் போது
அதே நதியல்ல”
          என்றான்
          தத்துவவாதி ஹெராக்ளிட்டஸ்.

இருந்தும் அதே மனிதர்கள் மகிழ்ந்து, விசனித்து
அதே வேளைகளில் அதே மனிதர்கள்.

ரவீநன் தெருவில் நடமாடும் மனிதர்களே,
உங்களுக்கு
மரணமடைந்த சரித்திர நாயகர்களின்
பெயர்களைச் சூட்டி இருக்கிறேன்:

          இதோ வருகிறான்
          ஏகெம்னன்,
          அதோ மேடம் ஹன்ஸா,
          யூலிஸஸ் ஒரு பால்காரன்,
          தெருக்கோடியில் பெட்ரோக்கிள்ஸ்,
          அருகில் ஒரு எகிப்திய ஃபேரோ,
          கேஸ்டரும் பொல்லக்ஸும்
          ஆறாவது மாடியிலுள்ள பெண்மணிகள்.

ஏ தோட்டிக் கிழவா! மாயாஜாலங்கள் நிலவும்
காலைவேளைகளிலே
எனது நல்ல நெய் விளக்கை நான்
அணைக்கும் போது,
இன்னும் ஜீவனுடன் மின்னும்
குப்பை கூளத்தை அகற்றவரும்
அறிமுகமற்ற மர்மமான தோட்டியே!
புகழ்மிக்க ஒரு மகத்தான பெயர் கொண்டு
உன்னை அழைக்கிறேன்:
டாஸ்டாயவ்ஸ்கீ!

தமிழாக்கம்: பிரமிள்.

La Rue Ravignan - Max Jacob

"Y ou can't bathe in the same river twice," said the
philosopher Heraclitus. But here it's always the same
ones climbing the street! Happy or sad, they go by at
the same times. I've named all of you who walk the rue 
Ravignan for famous dead people. Here's Agamemnon.
There's Mme. Hanska! Ulysses is the milkman!
Patroclus lives down the street and a Pharoah is next
door. Castor and Pollux are the ladies on the fifth
floor. But you, old ragman, who come to take the still
unspoiled scraps in the magic morning when I'm turning
off my good big lamp, you that I don't know, mysterious,
poor ragpicker, I've given you a celebrated
name: I call you Dostoevsky!

Le cornet à dés

-37-

Questia, a part of Gale, Cengage Learning. www.questia.com

Publication Information: Book Title: The Selected Poems of Max Jacob. Contributors: Max Jacob - author, William Kulik - editor, William Kulik - transltr. Publisher: Oberlin College Press. Place of Publication: Oberlin, OH. Publication Year: 1999. Page Number: 37.