20 April 2011

சிறு (விமர்சனக்) கவிதைகள் சில - பிரமிள்



tamil mani

 to me
show details 12:51 PM (11 hours ago)
Dear Sir,
On the web yours is the only blog which devotes more pages
for introducing Piramil's wonderful poems. Sir, if i remember correct
tomorrow is
Piramil's birthday, I am just mentioning this to you with hopes to get
some bonus posts on Piramil.
Thanks for the post on Borges.
With regards,
G.Tamilmani

நன்றி. நினைவுபடுத்தியதற்கு நன்றி. 

பிரமிள் (20.04.1939 - 06.01.1997)

என்றேன் என்றார்


’எழுத்து ஒரு 
மேஜிக் அப்பா’, என்றேன்.
அவர் சொன்னார்:
‘ஒப்புக் கொள்கிறேன்
எனக்குத் தெரியாது
எழுத: இருந்தாலும்
எழுதத்தான் வேண்டும்.
ஆண்பிள்ளைச் சமையலுக்கு
காய்கறி லிஸ்ட்
ஊருக்குப் போன மனைவிக்கு
தந்தி போல் பாவித்து
வந்து சேர் என்று
ஒன்றுவிட்டு ஒரு நாள்
கடிதங்கள் - கூடவே
கவிதை எழவு
நான் எழுதும் எல்லாமே
கலை என்கிறார் சிலர்.
இப்போது கூட
எழுதுவதற்கு இருக்கிறது 
பலசரக்குக் கடைக் கணக்கு.

காலண்டர்

காலத்தைப் பற்றி
மூர்த்திகள் இரண்டு
ஆரவாரமாய்
கருத்துப் பரிமாறிக் கொண்டன.
‘காலண்டர் எனக்கெதற்கு?’
என்றான் பிச்சு
‘காலண்டர் தானெதற்கு’
என்றான் கிச்சு

நீ -நான்

வேலைக்கேற்ற ஊதியம்
கேட்கும் கோஷம் உன் கோஷம்.
அதுவும் வேண்டாம், ஆளைவிடு -
என்ற கூச்சல் என் கூச்சல்.

தவளைக் கவிதை

தனக்கு புத்தி 
நூறு என்றது மீன் -
பிடித்துக் கோர்த்தேன் ஈர்க்கில்

தனக்குப் புத்தி
ஆயிரம் என்றது ஆமை -
மல்லாத்தி ஏற்றினேன் 
கல்லை.

‘எனக்கு புத்தி
ஒன்றே’
என்றது தவளை,
எட்டிப் பிடித்தேன் -
பிடிக்குத் தப்பித்
தத்தித் தப்பிப்
போகுது தவளைக்
கவிதை -

         ’நூறு புத்தரே!
         கோர்த்தரே!
         ஆயிரம் புத்தரே!
         மல்லாத்தரே!
         கல்லேத்தரே!
         ஒரு புத்தரே!
         தத்தரே!
         பித்தரே!

நடுநிசிக் குரைப்பு

உன் பெயர் நடுவில்
ஒரு ’வ’
என் பெயர் முடிவில்
ஒரு ‘ள்’

உன்னை நான் பகலின்
பகிரங்கத்தில் 
நிறுத்திக் குரைத்தால்
உன் பதில் நடுநிசி
ரகசியக் குழுக்களில்
பதுங்கிய ‘வள்!’

என்று

”உங்கள் இலக்கிய எழவெடுப்பு
எப்படி இருக்கு” என்று
கவிஞரைக் கேட்டேன்.
அவர் சொன்னார்:
”எப்படி எழுதிப் பார்த்தும் 
வரவில்லை வரவேயில்லை
என் கவிதையில் கவிதை.
எனவே, வருவது வரட்டும் என்று 
நடத்திக் கொண்டிருக்கிறேன் 
கவிதைக்கு என்று 
ஒரு சிறு பத்திரிகை”.

”உங்கள் விமர்சனக் கழுத்தறுப்பு
எப்படி போகுது” என்று
விமர்சகரைக் கேட்டேன்.
அவர் சொன்னார்:
”எப்படி எழுதிப் பார்த்தும் 
வரவில்லை வரவேயில்லை
என் விமர்சனத்தில் விமர்சனம்.
எனவே, வருவது வரட்டும் என்று 
எழுதிக் கொண்டிருக்கிறேன்
ஸ்ட்ரக்ச்சுரலிஸத்திற்கு
விளக்கம்”.

பிரசுரம்

விலை ரூபாய் 30.
வெளிநாட்டுக்கார 
முகமூடி எழுதியது.
உள்நாட்டில் தலை
இல்லாமல் அலையும்
முண்டத்தின் மொழிபெயர்ப்பு.
நூலின் பெயர்:
“இருப்பின் அமைப்பு முதல்
தலையின் இன்மை வரை”

சாசனம்

Government
By the People
of the People
For the People என்ற
ஜனநாயக சுலோகம்
பிறந்தது ஆபிரஹாம்
லிங்கனிடம் அங்கே.

அருமையான கருத்து
இருந்தாலும்
கல்தோன்றி மண்தோன்றாக்
காலத்து முன்தோன்றி
மூத்தகுடி எங்களுக்கு
ஏற்றபடி அதில்
அரிய ஒரு
சிறிய திருத்தம்
Government
By the People
of the People
Fuck the People.

லொட லொட

“தடதடவென்று 
கதவைத் தட்டாதே
மடமடவென்று
தண்ணீர் குடிக்காதே
கடகடவென்று
ரயில் ஓடக்கூடாது
சடசடவென்று
மழை பெய்யக் கூடாது”
என்றார் ஒருவர்
புதுசாய் என்னிடம்.
“என்னங்க இது
தினுசாய்?” என்றேன்


”அடுக்கு மொழி எனக்கு
அடுக்காது” என்றார்.
“கிடக்குது சனியன்
விடும்” என்றேன்.
எரிப்பது போல் என்னை
வெறித்துப் பார்த்து விட்டு
விடுவிடு என்று
நடந்தார் அவர்.

எந்துண்டி வஸ்தி?

‘நில் போ வா’
என்பதை எழுதிக் கீழே
கையெழுத்து வைத்து
அனுப்பினார் சகா
தேவனின் சகோ
தர நாமி.

இதைக் கவிதை என்று
போட்டுவிட்டது தன்
இலையிலே ‘மரம்’

“இதையே
எழுதியது யாரோ
ஏழுமலை ஆறுமுகம்
என்றால் ‘மர’ இலையில்
வருமா இது?” என்றேன்

பதில் இல்லை இன்னும்.

கவிதைக் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ்

நில்=ஓடு=எழுந்திரு
ஒன்றுக்கொன்ர்று
சமன்பாட்டுக்குறி என்றார்
டமில் அண்ட் இங்கிலீஷ்
டபுள் எம்.ஏ. ரைட்டர்.
அப்படியும் விறைக்கவில்லை
சிருஷ்டிக் குறி.

“ஏனானால் எல்லாம்
காயலாங்கடைக் 
கூளமாய்க் கிடக்கும் 
எழுத்து இது” என்கிறான் 
கிரிடிக் நாய் பொயட்

இப்ப என்னடா பண்றது?
புதுஸாய் ஃபாரீன்
செருப்புத் த்ட்டில் ஏதும்
தட்டுப்படுதா தடவிப்பாரு -
ஹையா! டீ அண்டு 
ரீ கன்ஸ்ட்ரக்‌ஷன் செருப்புடா!

அப்போ முதலில்
அணிந்திருபது முழுவதையும்
அவுத்துப் போடு.
செருப்பைப் புரட்டிப்போட்டு
மாட்டு தலையில்!

அக்கர பக்கா!
பிரம்ம்ம்மம்!
தொட்டுடுச்சு தொட்டுடுச்சு
டமில் பிரக்ஞை
ஃபாரீன் செருப்பு.

ஜீன்ஸ் மாட்டு
செருப்புத் தலையுடன்
நட=நில்=இருட்டில்
தெருநாய் கிரிடிக் பொயட் வால்
நின்றது. அதில் - நட நில் - கால்
வாள், வாள்! ஓடுடா ஓடு!
ஜீன்ஸ் பின்புறம் -
நாய்வால் லபக்...டர்ர்ர்-
உள்ளே இல்லே ஜட்டி! 

விமர்சனக் கவிதைகளுக்கான விளக்கம் 
நன்றி: லயம் கால சுப்ரண்யம்