24 April 2011

விகாரங்களும் விஸ்வரூபங்களும்

ஜெயமோகனின் ஆர்வலர் ஒருவருக்கும் எனக்கும் சில மாதங்களுக்கு முன் ஜெமோவை விமர்சித்தது குறித்து சிறு மனஸ்தாபம் உண்டானது. அவர் ட்விட்டரில் என்னைப் பற்றிக் கொஞ்சம் மோசமாய் எழுதினார். என்னளவிற்கு இல்லை, எனினும் அவரளவிற்கு மோசம் என்று வைத்துக் கொள்வோம். எனக்குத் தெரிந்த எளிய எதிர்வினையாக அவரை ப்ளாக் செய்தேன். 

இன்று ஒரு ஆச்சரியம். 

இப்படியான இலக்கியச் சண்டைகளில் பெரும்பாலும் மூல விக்ரகம் உற்சவமூர்த்தியாகி உல்லாச வலம் கிளம்பியது அறியாமல், சண்டையின் ஆதிமூலகர்த்தாவும் சமரசம் செய்யவந்த சன்மார்க்கியும் சட்டையைக் கிழித்துக் கொண்டு சாக்கடையில் புரள்வது சகஜம்.

ஆச்சரியம் அப்படி ஏதும் ஆகாதது. அவர் போட்டிருந்த ஒரு ட்விட்டின் மூலம் தொடர்ந்து என்னை வாசிக்கிறார் - வன்மமற்று எனத் தெரிய வந்தது. சண்டைக்குப் பின்னும் என்னைப் புறக்கணிக்காமல் அவர் படிக்கிறார் என்பதில் நெகிழ்ந்துபோய் ட்விட்டரில் ப்ளாக்கை நீக்கியதை அவருக்கும் தெரிவித்தேன்.

அதற்கு அவர் நன்றி தெரிவித்து இருந்தார்.


fromGiri Ramasubramanian 
tomadrasdada@gmail.com
dateSat, Apr 23, 2011 at 6:29 PM
subjectமேன்மக்கள் மேன்மக்களே!
mailed-bygmail.com
signed-bygmail.com

hide details 6:29 PM (6 hours ago)
நன்றி மச்சி சார்!

Regards,
Giri
அவருக்கு பதிலெழுதத்தொடங்கி....

உங்களுக்குப் பிடித்த ஜெயமோகன் விமர்சிக்கப்படுவதில் அது நிந்தனை தொனியில் இருப்பதில் நீங்கள் வருத்தப்பட்டதும் கோபப்பட்டதும் படுவதும் இயல்புதான்.

ஆனால் அதை எதிர்கொள்வதும், என்னதான் சொல்லப்படுகிறது எனப் பார்ப்பதும் - ஏற்கிறீர்களோ இல்லையோ எட்டியாவது பார்ப்பது - ஜெயமோகனுக்கு உபயோகப்படுகிறதோ இல்லையோ உங்களைப் போன்றவர்களுக்கு உதவக்கூடும். எவ்வளவு கடுமையாக இருந்தாலும் காரணமற்று ஒரு போதும் விமர்சிப்பதில்லை. அந்தக் காரணங்கள்தாம் முக்கியம். அவற்றை ஜெயமோகனில் இருந்து விடுவித்து பார்க்க முயற்சிக்கலாமே!

தனிப்பட்ட தூஷணையை எவர் குறித்தும் செய்ததில்லை - என்னைத் தனிப்பட தொடாதவரையில்.

ஜெயமோகனின் பொதுவாழ்வு குறித்தே அதுவும் ‘அறம்’ பற்றி சுகி சிவமே சங்கோஜப்படும் அளவிற்கு உபவாசித்து உபன்யாசிப்பவர் என்பதால் சற்றுக் கடும் மொழி அமலுக்கு வந்தது. அதையும் முடிந்தவரை தவிர்க்கத் தொடங்கிவிட்டேன்.

ஆனால் ஜெயமோகன் ஈறாக, எல்லா சுவாமிகளும் புத்த பட்சிணிகள்தாம், ஜடாமுடியில் இருந்து ஒரே ஒரு முடி சும்மா ஊதியதில் உதிரும் வரை.

நேர்ப்பேச்சில் என்னிடம்
சுந்தர ராமசாமியை பிரமிள் காய்ச்சாத காய்ச்சு கிடையாது. 
சுந்தர ராமசாமியோ மிக நளினமாக பிரமிள் கவிதைகளை இடது கையால் ஒதுக்குவார்.

பிரமிள் கவிதைகளில்
உள்ளேயே போக முடியவில்லை. 
ஸ்பேஸ் இல்லை. 
புரியவில்லை, உங்களுக்குப் புரிகிறதா? 
இப்படியான நளின காந்தப் புன்னகைக் கத்திகள் மெல்ல நீளும்.
பேருவகையின் பிரவாகமாய் வெளிப்படும் விஸ்தார சிலாகிப்புகளை சிலாகித்து சிரித்தபடி நகர்ந்துவிடுவார்.

சுராவின் விலக்கல், தனிப்பட்ட தாக்குதல்களுக்கான எதிர்வினையே அன்றி பிரமிள் கவிதை பற்றிய உண்மையான இலக்கிய மதிப்பீடு அல்ல. தனிப்பட இருவர்க்குள்ளும் நிகழ்ந்த கைப்புகள் நாம் அறியாதது. 

எல்லா வகையிலும் எதிரிஎதிர் துருவங்களாய் இருந்த இருவரிடமுமே இடைவிடா நெருக்கத்துடன் இருந்திருக்கிறேன்.

81-86 வரையில், சில விஷயங்கள் பிடிக்காமல்போய் அமைதியாய் சில காலம் ஒதுங்கினேன். 87ல் தேனாம்பேட்டைக் காவல் நிலையம் போக நேர்ந்தது வரையில் பிரமிளிடம் நல்ல நெருக்கமான நட்பே இருந்தது. காவல் நிலைய படலத்திற்குப் பிறகு முற்றிலுமாக அவரைத் தவிர்த்தேன். பக்தனுக்கு பகவான் எங்கிருந்தால் என்ன? பல சமயங்களில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் வரையிலேயே பக்தனின் மனதில் பகவான் விண்ணுக்கும் மண்ணுக்குமாய் நெடிதோங்கி நிற்கிறார்.

சுராவுடன் 82-87 வரை ஒரே ஈஷல்தான். அப்புறம் ஊடலுடன் அவ்வப்போது 91-92ல் 2001-2002ல் என விட்டு விட்டு நெருக்கம். 

பிரமிள் மகாகவி. 
உரசல் வராதவரை மகத்தான நண்பர். 
மதித்து அணுக்கமாய் வந்தவனை எப்படி லோகாயதமாக உபயோகித்துக் கொள்ளலாம் என ஒரு போதும் யோசிக்கத் தெரியாதவர். 


ஆனால் விரிசல் வந்த அடுத்த க்ஷணமே விரோதமாய் மாறி நமது முகமும் அகமும் சிதிலப்படும். அவர் மனதில் விகஸித்த நம் பழைய நட்புமுகம் மறைந்துவிடும்.  நம் தந்தையின் சுக்கிலமே சுத்தமானதல்ல என்பது மிகுந்த ஆராய்ச்சிக்குப் பின் அறுதியிட்ட உறுதியுடன் கண்டுபிடிக்கப்படும். விந்து வளர்ந்து விஸ்வரூப அசுத்தமாய் நாம் அவதாரம் எடுப்போம். அதை உண்மை என அவரே நம்பவும் தொடங்கிவிடுவார். உங்களின் புதிய உங்களை உலகத்திற்குக் காட்டுவார். ஆனால் அது நீங்களில்ல என்பது உங்களுக்கு மட்டும்தான் தெரியும். அவருக்குத் தெரியவே தெரியாது. சண்டை வந்ததும் கண்டமேனிக்கு அவர் கூசாது பொய் சொல்வார் என்பது பொதுவான கருத்து. அது உண்மையன்று. அவர் பொய்யே சொல்லவில்லை என்பதுதான் உண்மை. உங்களைப் பற்றிய ’உண்மை’ என்று அவர் ’அப்போது’ நம்புவதை நம்ப விரும்புவதை, சண்டைக்குப் பின் அவர் மனதில் அவரே உருவாக்கி எருவிட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் மகத்தான உண்மை.

நெருக்கமாய் இருந்த காலங்களில், பிரமிளுக்கு மிக நன்றாகத் தெரியும் எனக்கு சுராமேல் இருப்பது தீராத காதல், என்னிடம் சுராவை எவ்வளவு திட்டினாலும் அதில் ஒரு துளியும் நீர்த்துவிடாது என்று. ஆனாலும் திட்டுவார். சமயத்தில் அது என்னையா சுராவையா இரண்டும் கலந்தா என்று பிரித்தறிய முடியாதபடி இருக்கும்.

பிரமிளின் சண்டை கட்டுரைகள் சிறுபத்திரிகைகளில் கிடைத்தால் படித்துப் பாருங்கள். பிரம்மாதமான பல விஷயங்கள் இருக்கும். தனிநபர் தாக்குதலை விடுத்து அவர் உயர்வென உதாரனமாகச் சொல்லும் விஷயங்களைப் பாருங்கள் அதில் பல பொக்கிஷங்கள் புதைந்திருக்கும். 89க்குப் பிறகான ‘கவிதைகளிலேயே’ பெரும்பாலானவை அடிதடியாகவே எஞ்சிப்போனது துரதிருஷ்டம். ஆனால் அவற்றிலும் பிரமிளின் தீற்றல்கள் ஆங்காங்கே இல்லாமலில்லை. 59-89 என 30 வருடங்களில் பிரமிள், கவிதையில் காட்டிய வீச்சிற்கும் அடுத்து நிற்பவருக்குமான பாழ்வெளி,என்றைக்கு நிரப்பப் படப்போகிறதென்று யாரேனும் நிமித்தகம் கூற முடியுமா?

எல்லோரிடமும் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது, நல்லதும் அல்லாததுமாக.

எஸ்.ராமகிருஷ்ணனையே எடுத்துக் கொள்ளுங்கள். சிரட்டையில் இருப்பதை வைத்துப் பல பெட்டாலியன்களுக்குப் பொங்கிப் போடுவது எப்படி என்கிற மாய யதார்த்தத்தை எஸ்.ராவை விட்டால் வேறு யாரை வைத்து நாம் கற்றுக்கொள்ள முடியும்?