05 January 2012

படிக்காத மொக்கையும் படித்த மொக்கையும்


ramji Yahoo (Google+) noreply-a8e4858b@plus.google.com 9:32 AM (1 hour ago) to me

படித்த இளைஞன் சனி ஞாயிறில் கவிதை எழுதக்கூடும். அந்தப் ஊத்தைவாய் பான்பராக்காரனோ கவிதையாய் வாழ்ந்துகொண்டிருந்ததாய்ப்பட்டது. அவனுக்கு அந்தப் பொருட்கள் எங்கே போய்க்கொண்டு இருக்கின்றன என்பது கூடத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. யோசித்துப்பார்த்தால் தெரிந்திருக்கவேண்டிய அவசியமோ அக்கறையோகூடத் தேவையில்லை என்றே தோன்றுகிறது. தன் வேலயில் முழு ஈடுபாட்டுடன் முழு தேர்ச்சியுடன் அவர் ஆழ்ந்திருந்தார். இலக்கியத்திற்கான என் நேரத்தை இன்றைக்கு அளிக்கும் வல்லமை அவரிடமே இருக்கிறது.
ஒரு வகை பார்வையில் இது சரி.

இன்னொரு பார்வை ஒன்று.

பொறியியல் படித்த இளைஞன் பொட்டி அடுக்குவதில் நிபுணன் ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவனின் பார்வை, சிந்தனை வேறு அளவில் இருக்க வேண்டும்.

ஆனால், நம் நாட்டில் . பொறியியல் படித்தவனை பொட்டி தூக்கவும், பிரிண்டர் காற்றிட்ஜை மாற்றவுமே பயன் படுத்துகிறோம்.(under employment)

யானையை பிச்சை எடுக்கப் பழக்கியது போல

***

 விமலாதித்த மாமல்லன் 
in reply to 
<பொறியியல் படித்த இளைஞன் பொட்டி அடுக்குவதில் நிபுணன் ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை> 

<ஏம்பா லாரில பொட்டி அடுக்கவா ஒருத்தன் எஞ்சினியரிங் படிக்கிறான்?> 

எழுதப்பட்டிருப்பது என்ன?

<அருகில் அதிகாரி போல் தோன்றிய இளைஞன் ஒருவன் குட்டிக்கிரேனை ஏற்றி இறக்கி ஒரு குட்டைப் பெட்டியை தூக்கி வைக்க அதை அசக்கி அசக்கி நடைவண்டி பழகிக்கொண்டிருந்தான். அநேகமாய் இன்றைய எனது வீடு திரும்பலை அவனே நிர்ணயிக்கப்போகிறான் என்பதை நினைக்க என் ரத்த அழுத்தம் எகிறியது.>

மேற்பார்வையாளன் அல்லது அதிகாரி போன்றோரின் பணி என்ன? தாமே முன்னால் வந்து முண்டியடித்து பாரம் சுமப்பதா?

ஊழியர்கள், காரியங்களை சரிவர செய்கிறார்களா என்று கண்காணிப்பதுதான் அதிகாரிகளின் வேலை. கொடுக்கப்பட்ட பணியை சரவர செய்யவியலாமல் அவர்கள் திணறும்போது, கடிந்துகொள்ளாமல் தாமே நேரடியாய்க் களத்தில் இறங்கி, இதை இப்படிச் செய்தால் இன்னும் எளிதாகவும் விரைவாகவும் முடிக்கலாம் என்று கீழிருப்போருக்கு ’செய்து’ காட்டுகையில், அந்தக் காரியத்தின்மீது அதிகாரிக்கு இருக்கும் அறிவு, ஆளுகை, நுட்பம், லாகவமாய் செய்யும் திறன் ஆகியவை உதவியாளர்களுக்கு வழிகாட்டுதலாய் உதவியாய் இருப்பது போக, பிரமிப்பை உண்டாக்கி, மேலதிகாரி தமக்கு மேல் அதிகாரியாக இருக்கத் தகுதியானவரே என்கிற மரியாதையை அளிக்க வைக்கும். அதனால் அதிகாரி பற்றிய ’வெறும் வாய்ச்சொல் வீரரில்லை, அவர் சொன்னால் நடைமுறை சாத்தியமுள்ளதாகவே இருக்கும்’என்கிற பிம்பத்தை உருவாக்கும். எதிர்காலத்தில் நடைமுறை சாத்தியமே அற்ற காரியத்தை செய்யச்சொல்லி அவர் இடும் கட்டளையைக்கூட நிறைவேற்றிக் காட்டத்தக்க, அதுவரை ஊழியர்களுக்கு இல்லாத அல்லது இருப்பதாக உணர்ந்திராத வல்லமையை அவர்களுக்கு அளிக்கவும் வல்லது. தம்மைக் கண்டு தாமே பிரமிப்பும் பெருமிதமும் கொள்ளவைக்கும். அவர்களை விஸ்தரிக்கும். 

இதனை அதிகாரி -உதவியாளன் மட்டுமின்றி, எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் தளபதிக்கும் வீரனுக்குமாகக்கூட விரித்துப்பார்க்கலாம்.

எந்தக் களத்திலும் இறங்கி நின்று நேரடியாக யுத்தம் செய்யாத தளபதியின் வாய்மொழியை வேதவாக்கியமாய்க்கொண்டு, முன்னணியில் நின்று உயிரைத் திருணமாக மதித்து சமர் புரியும் வீரனுக்கு, வெற்றிபெற முடியும் என்கிற நம்பிக்கை மற்றும் அதன் விளைவாய் இறுதி வெற்றியும் விளைவிக்கவல்லதாகவும் இந்த யதார்த்த அறிவார்த்த பிம்பமே இயங்குகிறது.

கிடைத்த வெற்றி, வீரனாலா? அல்லது தளபதியின் வழிநடத்தலாலா?

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து 
அதனை அவன்கண் விடல் 

என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இதனை எழுதியவன் ’தெரிந்து வினையாடல்’ என்கிற அதிகாரத்தின்கீழ் ஏன் இதைன் வைத்த்தான். 

பொட்டி அடுக்குபவனைவிட, அடுக்குவதை மேற்பார்வை செய்பவனுக்கு ஏன் அதிக சம்பளம்? உயர்பதவி? அவன்கண் விடாமல் தானே முட்டி மோதி அல்லாடிக்கொண்டு கிடப்பதற்காகவா? 

என்ஜினியருக்குப் பொட்டியை சரியாய் அடுக்க வரவில்லை என்பதைப் பற்றியதா எழுதப்பட்டிருப்பது? பொட்டியை சரியாய் அடுக்கத் தெரிந்தவனிடம் கொடுக்கத் துப்பில்லாததைப் பற்றியல்லவா பேசுகிறது கட்டுரை.

திடீரென்று முளைத்த கறுப்புக்கொடிகள் பற்றிய கதையில் பிரதம்ரின் ரூட்டைப் பிடித்துக்கொண்டு, போகாத ஊருக்கு வழி சொல்லி, பூமணியைக் கொண்டுவந்து புரட்டிவிட்டுப் போய்ச்சேர்ந்த ராம்ஜி எல்லோருக்கும் பரிச்சயப்பட்ட இணையத்தின் செல்ல பரிகாசத்துக்கு உரியவர்.

இப்போது, எழுதப்பட்டு இருபபது என்னவென்று முழுமையாய் படித்துப் பாருங்கள்.

<அருகில் அதிகாரி போல் தோன்றிய இளைஞன் ஒருவன் குட்டிக்கிரேனை ஏற்றி இறக்கி ஒரு குட்டைப் பெட்டியை தூக்கி வைக்க அதை அசக்கி அசக்கி நடைவண்டி பழகிக்கொண்டிருந்தான். அநேகமாய் இன்றைய எனது வீடு திரும்பலை அவனே நிர்ணயிக்கப்போகிறான் என்பதை நினைக்க என் ரத்த அழுத்தம் எகிறியது.> 

என்பதோடு, 

<இன்ஜினியரிங் படித்த அதிகாரி இளைஞன் ஒன்றின் மேல் இன்னொரு பெட்டியை ஒருவழியாய் வைத்திருந்தான். அவனைப் பார்த்த என் பார்வையில் இருந்த பதற்றம் அவனுக்கு உறைத்திருக்க வேண்டும். அருகில் நின்றிருந்த செம்பட்டைப் பரட்டைத்தலை அழுக்குச் சட்டைக்காரன கையில் குட்டிக்கிரேனை ஒப்படைத்தான்.>

இதையும் சேர்த்துப் படிக்க வேண்டாமா? 

வெவ்வேறு இடங்களில் எழுதப்பட்டிருப்பதால், வெந்து வேகாத நம் வாசிப்பில் விடுபட்டுப்போயிருக்கலாம் என்கிற தன்னடக்கமாவது பேசவருமுன் வேண்டாமா? எழுதுகிற எதையும் எட்டுமுறை படித்துத் திருத்தித்திருத்தி எழுதுபவனை வாசிக்கிறோம் அவனுடைய உழைப்புக்கு செலுத்தும் குறைந்தபட்ச கூலியாய், வாயைத் திறக்கும் முன்பாக எதற்கும் இன்னொருமுறை வாசித்து, நமக்குத் தோன்றியது சரிதானா என்று பார்த்துவிடுவோமே என்று பரிசீலிக்கப்போனால் மூடிக்கொண்டாவது இருக்கலாம். எக்கச்சக்கக் கோவணங்கள் இருக்கிற இறுமாப்பு யாரைவிட்டது.

எதையும் படிக்கும்போதே என்ன எழுதப்பட்டு இருக்கிறதென்று ஆழ்ந்து படித்தால்,இருப்பதை கோட்டைவிடுவதும் எழுதப்பட்டதில் இல்லாததையெல்லாம் ‘கண்டுபிடிக்கும்’ கப்டன் காமெடியும் நிகழாது.

இதுவே என்னால் ’நிறைய’ படிக்க முடியாமல் போனதற்கும் போய்க்கொண்டு இருப்பதற்கும் காரணம். மித்ததெல்லாம் பித்தளை என்பதால் இருப்பதற்குள் இது தங்கம் ’போன்றது’ என்று ஏற்க என்னால் முடிவதில்லை..

அதிகாரம் கொடுக்கும் போதையில், தேவையே இல்லாமல், முதிர்ச்சியற்று, தன்னால் எதையும் செய்ய முடியும் என்று காட்டிக்கொள்கிற வேட்கையில், கிடைத்த மெஷினை ஆட்டிக்காட்டுகிறேன்பார் என்று - இப்போது நீங்கள் சம்பந்தா சம்பந்தமில்லாமல் கமெண்ட் போடுவதில்லையா அதுபோல, பொறியியல் படித்த அதிகாரி போன்ற இளைஞன், மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்தாலே போதும் வேலை நடந்துவிட வாய்ப்பிருக்கிறது எனும்போது, தானே வாய்வைத்து கேளிக்கைப் பொருளாவதோடு எல்லோர் நேரத்தையும் வீணாக்கிக்கொண்டு இருக்கிறான் என்பதுதான் எழுதப்பட்டிருக்கிறது என்பதுகூடவா தெரியவில்லை? 

பிறவியிலேயே வெள்ளிக்கரண்டியை சூப்பியபடி மேலதிகாரத்துடன் பிறந்தவர்களுக்கு, என்னைய்யா வேலை செய்யிறே என்று கடுப்படித்து, தானே ‘செய்து காட்ட’ காரிய கங்கையில் இறங்கி மூச்சுத்திணறி, அவசரமான அழைப்பு வந்ததுபோல் பாவனை செய்து அலைபேசியைக் காதருகில் வைத்து முகத்தைக் காப்பாறிக்கொள்ள எதிர்முனை நிசப்தத்திடம் உரையாடியபடி கழன்று ஓடும் அதிகாரியைப் பார்த்த அனுபவம் இருக்கும் என எதிர்பார்க்க முடியாதுதான். 

புத்தகங்களை மென்று போட்ட புழுக்கையைப் போன்றதல்ல வாழ்விலிருந்து கிட்டும் அனுபவம். அது வைரம். 

படிப்பு அறிவைக் கொடுக்கிறது எனினும் பட்டறிவே இல்லாதவர்களிடம், வாழ்க்கையை நேரடியாய் அணுகி உள்ளது உள்ளபடி புரிந்துகொள்வதைக் கெடுத்தும்விடுகிறது.

என் வாசிப்பே வாசிப்பு என ஒற்றைப் பார்வையில் வாசிப்பது ரசனைவாதம். இதையும் ஒரு வாசிப்பு சாத்தியம் என்று எடுத்துக்கொள்ளவேண்டும் என்று ஒன்றரைப் பார்வையில் பின் நவீனத்துவமாய், இருப்பதை விட்டு இல்லாததைப் படிக்கவும் பிடிக்கவும் எனக்குத் தெரியாது. 

கமெண்டைக் கவர்ச்சிகராமாய்ப் போடுவது எப்படி அல்லது கட்டுடைத்து தன்னை நிறுவுவது எப்படி என்கிற முஸ்தீபுகளுடன் எதையும் வாசிப்பதைவிட வாய்க்கு ஸிப்பு போட்டுக்கொள்வது நல்லது.

பாறையைப் பிளப்பது போன்ற கடின பார்வை பார்த்துக் கட்டுடைத்தால்தான், நாமும் அறிவாளி என் வலிந்து ’பார்க்க’ முயன்றால் உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணாதான்.

இணையத்தின் லும்பன் பொறுக்கி மொழியில் இப்படிப்பட்டோரே ‘படித்த மொக்கை’ என்கிற செல்லப் பெயரில் அறியப்படுகிறார்கள்.

சாதாரண மனிதர்கள் வாயிடம் சோறைக் கொண்டுபோவார்கள். என்ன இருந்தாலும் அறிஞர்களும் மேதைகளும் வித்தியாசமான பிறவிகளல்லவா எனவேதான் சோறிடம் வாயைக் கொண்டுசெல்கிறார்களோ என்னவோ.