19 January 2012

எந்துண்டி வஸ்தி?

நகுலன் எழுதிய எல்லாவற்றிலும், இல்லாத அர்த்தங்களை இட்டு நிரப்பி தமக்குத்தாமே இலக்கிய டோப்பா மாட்டிக்கொண்டு இளிக்கும் போலிகளை சுளுக்கெடுக்கும் பிரமிளின் விமர்சனக் கவிதை இது.

உப்புப் பெறாத குப்பைகளையெல்லாம் ‘பிராண்ட் நேம்’ காரணமாய் உப்புமூட்டை சுமந்து சர்க்கரையாய்க் கூவும் வெற்று கும்பலுக்கு எக்காலத்திலும் குறைவில்லை. ஒரு படைப்பை எடுத்துக்கண்டு,   அது ஏன் உப்பு குப்பை அல்லது சர்க்கரை என்று உருப்படியாய்ப் பேசத் துப்புகெட்ட பொக்கை வாய்களுக்குக் கிடைக்கும் பல்செட்டுதான் பிராண்ட் நேம்.

தாம் சொல்வதற்கெல்லாம் இந்த கற்றுக்குட்டிக்கும்பல் சூடமேந்தி ஆடுகிறதா என்று சோதித்துப் பார்ப்பதற்காகவே அந்தப் ‘பெருசு’ நாவைச் சுழற்றியபடி நக்கலுடன் எழுதுகிறதோ என்கிற சந்தேகத்தை நகுலனின் பல ’கவிதைகள்’ அப்போதே உண்டாக்கி இருக்கின்றன.

பிராண்ட் நேம் போட்டுக் கிறுக்கியதற்கெல்லாம் சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் என்று நெற்றிப்போட்டில் குட்டிக்கொண்டு பயபக்தியுடன் உக்கி போடும் மூடர்கூட்டத்தைப் பார்த்து பிரமிளின் கெக்கலிப்பைப் பாருங்கள்.
எந்துண்டி வஸ்தி?

‘நில் போ வா’
என்பதை எழுதிக் கீழே
கையெழுத்து வைத்து
அனுப்பினார் சகா
தேவனின் சகோ
தர நாமி.

இதைக் கவிதை என்று
போட்டுவிட்டது தன்
இலையிலே ‘மரம்’.

“இதையே எழுதியது யாரோ
ஏழுமலை ஆறுமுகம்
என்றால் ‘மர’ இலையில்
வருமா இது?” என்றேன்.

பதில் இல்லை இன்னும்.

***

இதை நகுலனுக்கானதாக மட்டுமின்றி,கோணங்கியைத் தரதரவென்று இழுத்துக்கொண்டுபோய் குன்றின் உச்சியில் நிற்கவைத்துவிட்டு அடிவாரத்தில் நின்று கும்பிட்டபடி அதோபார் லோக்கல் கோவணத்திலேயே தைத்த ஃபாரீனுக்கிணையான கோட்டும் சூட்டும் என்று சமகால ‘அறிவார்த்த உண்டிகுலுக்கிகளுக்கும்’ சேர்த்தே இது எழுதப்பட்டிருப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

போலி சாமியாடிகள் பற்றி நீண்ட கட்டுரை எழுதி நிறுவுவதை சில வார்த்தைகளில் சவுக்குச் சொடுக்காய் சொல்லிவிட்டுப் போவதுதான்  பிரமிளின் மேதமை.

தனி நபர் அந்தரங்கம் ஏதும் இதில் சம்மந்தப்படவில்லை என்பதால், புதியவர்களுக்கும் புரியாதவர்களுக்கும் நம்மாலான உதவியாய்க் கொஞ்சம் கோணார் நோட்ஸ்.

’மரம்’ - அழகிய சிங்கரை ஆசிரியராய்க் கொண்ட நவீன விருட்சம் பத்திரிகை.

<எழுதியது யாரோ ஏழுமலை ஆறுமுகம்> இதிலிருக்கும் ஜாதீய உள்குத்தைப் புரிந்துகொள்ள உரை தேவையில்லை பொது புத்தியே போதும்.

<‘மர’ இலையில்> ஆயிரம் கெட்டவார்த்தை அர்ச்சனைக்கு சமம் இந்த வெளிப்பாடு.

<பதில் இல்லை இன்னும்> சமகாலத்து ’டீ இன்னும் வரலை’க்கு இதுதான் முன்னோடியோ என்னவோ.

எந்துண்டி வஸ்தி? என்று இதற்கு வைக்கப்பட்டிருக்கும் தலைப்பைப் பற்றித் தனியாய் கட்டுரையே எழுதலாம்.

எந்துண்டி வஸ்தி? என்பது தெலுங்கில் எங்கிருந்து வருகிறீர்? இங்கே எங்கிருந்து வருகிறது என்பதன் காரனமாய்க் கண்டதும் பிரசுரிக்கப்படுவதற்கான விமர்சனமாய் நிற்கிறது.

இது தனிப்பாடல் திரட்டுகளில் காணக்கிடைக்கும் கவிதையில் வருகிற தொடர். இதைப் பற்றி கி.வா.ஜகன்னாதன்  "புது டயரி" என்கிற புத்தகத்தில் எழுதியிருப்பதாய் இணையத்தில் கிடைப்பது, வாசகர்களுக்கு உதவக்கூடும்.

ஏமிரா வோரி என்பாள்
எந்துண்டி வஸ்தி என்பாள்
தாம் இராச் சொன்ன எல்லாம்
தலைகடை தெரிந்ததில்லை.
போம் இராச் சூழும் சோலை
பொரும் கொண்டைத் திம்மி கையில்
நாம் இராப் பட்ட பாடு
நமன் கையில் பாடு தானே! 


நாம் மதிக்கும், நம் மனதிற்கு நெருக்கமாக உணரும் ஆளுமைகளை சமயத்தில் நம்மையேக்கூட பிரமிள் திட்டும்போது, முதலில் சுருக்கென்று தைத்தாலும் மொழி அவன் பிடிக்குள் அடங்கி நிற்பதைப் பார்க்கும் திகைப்பே காலகாலத்துக்கும் எண்ணியெண்ணிப் பரவசப்படவைக்கவல்லது. கொந்தளிக்கும் நேர்ப்பேச்சுத் ’திட்டுகளுக்கு’ இடையில்கூட இலக்கியக் கோட்பாடுகளாய்ப் புதிய வாசல்கள் திறப்பதைப் பார்க்க பிரமிப்பாய் இருக்கும். கொஞ்சம் நெருங்கிப் பழகியபிறகு பொய் சொல்கிறாரோ என்று சந்தேகம் முளைக்கத் தொடங்கிற்று. பிறகுதான் அவர் பொய்யே சொல்வதில்லை, தமது மன உலகில் மட்டுமே நிகழும் பல கற்பனை விஷயங்களை எந்தவித சரிபார்த்தலுமின்றி  ’உண்மை’ என்று ’நம்பி’, ஊதிப் பெரிதாக்கிக் கொள்பவர் என்பது பிடிபடத்தொடங்கவும் போதுமென மெல்ல விலகிக்கொள்ளவேண்டியதாயிற்று.

பிரமிளுடன் பஞ்சாயத்துக்காய், 87ல் தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்குப் போக நேர்ந்த சம்பவத்தைப் பற்றி அட்சரம் பிசகாமல் கதையாகவோ கட்டுரையாகவோ என்றேனும் எழுதவேண்டும்.

பிரமிளுடன் பழகிய நாட்களை எண்ணும்போதெல்லாம் Milos Formanனின் Amadeus (1984) படத்தில் Mozart சொல்லும் வாக்கியம்தான் நினைவுக்கு வரும்.

Forgive me, Majesty. l'm a vulgar man. But, l assure you, my music is not