28 January 2012

காசு - விலிருந்து வந்த காசோலை

மனதுக்குப்பிடித்த சந்தோஷமான காரியமே தொழிலாகவும் அமைவதென்பது எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. அந்தவகையில் நான் அதிர்ஷ்டசாலி. 
- லால்குடி ஜெயராமன்

எழுத்தை முழுநேர தொழிலாய்க்கொள்ள, உள்ளூர ஆசைப்படாத எழுத்தாளனே இருக்கமுடியாது. அறைய ஓங்கி நிற்கும் யதார்த்தத்தின் அசுரக்கை நிழலே பெரும்பாலோரின் ஆசையை அடக்கி வைத்திருக்கிறது.

கணையாழியில் கூட எனக்குப் பணம் கிடைத்திருக்கிறது. கஸ்தூரி ரங்கனுக்கு வசதிப்படும்போது, அந்த மாதத்தில் எழுதிய எல்லோருக்கும் செக் அனுப்பி வைப்பார். அது போன்ற அதிர்ஷ்டம் என் சிறுகதை வெளியான மாதத்திற்கும் கிடைத்திருந்தது. 1982ல் 20 ரூபாய் கிடைத்தது என்று நினைவு.

தமிழ் சிறுகதைத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்ட கதைக்காக ஆங்கிலத்தில் ஈஸ்ட்-வெஸ்ட்டாக வந்த போதும் பிறகு பென்குவின் பதிப்பாக வந்தபோதும் திலீப்குமாரிடமிருந்து பூ செக்குகள் வாங்கி இருக்கிறேன். சாகித்திய அகாதெமி வெளியிட்ட தொகுப்பில் சேர்த்துவிட்டு, ஆசிரியரின் அனுமதி கடிதத்திற்காக ஆள் அட்ரசே இல்லாமல் இருந்ததால் எங்கெங்கோத் தேடி தொலைபேசியில் பிடித்து விடுவிடுவென்று விட்டார் சாயாவனம் கந்தசாமி.

யாரைக்கேட்டாலும் நீ எங்க இருக்கேன்னே தெரியலைங்கறாங்க. எங்கையா தொலைஞ்சிப் போயிட்டீரு. இந்த தடவை மட்டும் நீர் கெடைக்கலைனா தொகுப்புலேந்தே உம்ம கதையைத் தூக்கிடறதுன்னு முடிவு செஞ்சிருந்தோம்.

இது நடந்தது 1999 என்று நினைவு. அதைக்கூட என்னிடமிருக்கும் பிரதியை எழுத்துக்கூட்டிப் படித்து என் மனைவி சொல்ல, தொகுத்தவர் வெங்கட் சாமிநாதன் என்று தெரிந்து வைத்திருக்கிறேன். கதைப் பட்டியலில் எது என் கதை என்று கேட்டால் இதோ என்று விரல் ஓடும் அளவுக்கு சித்திரமாய் பதிந்திருக்கிறது ஹிந்தியில் சத்தர் என்கிற போர்வை.

அப்பா செத்த புண்ணியத்தில் கிடைத்த அரசு வேலை இருக்கிற காரணத்தால், எழுத்துக்குக் காசு கிடைக்காமல் எப்படி வாழ்வது என்கிற அவஸ்தையில்லை. லால்குடி போல இல்லாவிட்டாலும் நான் கூட அதிர்ஷ்டசாலிதான். அதே சமயம் எழுதியதற்குப் பணம் கிடைக்கையில் வங்கியில்கூடப்போடாமல் வைத்துக்கொள்ளலாம் என்கிற அளவிற்குப் பெருமிதமாக இருக்கும்.

எழுதி வாழமுடியாத அளவிற்கு மோசமான நிலைமை என்று நொந்துகொண்டு ஒவ்வொரு எழுத்தாளனும் உள்ளூர சபிக்கும் அளவில்தான் இருக்கிறது தமிழ் இலக்கியச் சூழல்.  தப்பித்தவறி இலக்கியத்தை எவனாவது லாபகரமாக வியாபாரம் செய்தால் கலையைக் காசாக்குவதாய்த் தூற்றாமலும் இருக்கமுடிவதில்லை. கலை காசானால்தானே ஐயா கலைஞனின் கஞ்சிக்காகும். புதுமைப்பித்தன் கஷ்டப்பட்டான் என்று உச்சுக்கொட்டியே பொழுதை ஓட்டுவதில் என்ன புளகாங்கிதம்?
ஏற்கெனவே இந்த ஆண்டிற்கான அனுமான வருமான வரியை மாதம் ஐயாயிரம் வீதம் நான்கு மாதங்களுக்குப் பிடிக்கச்சொல்லி அலுவலகத்தில் எழுதிக்கொடுத்தாயிற்று. இதர வருமானமாய்க் குரோம்பேட்டை பிளாட்டிலிருந்து கிடைக்கும் ஆறாயிரத்துடன் இந்த ஆயிரத்தை திங்களன்று சேர்க்க வேண்டும். இந்த ஆயிரத்திற்கு வரி கட்டுவதில் இருக்கிற அலாதியான ஆனந்தத்தை எதில் சேர்ப்பது? வருமான வரி கட்டும் அளவிற்கு எழுத்தில் சம்பாதிக்க முடிந்திருக்கும் அதிர்ஷ்டசாலி என்று லால்குடி போலவே நானும் ஏன் சந்தோஷப்பட்டுக்கொள்ளக்கூடாது?