20 January 2012

விஞ்ச இயலாதவர்களின் குஞ்சுகள்

On Thu, Jan 19, 2012 at 8:30 AM, Arul Victor Suresh <***@gmail.com> wrote:

"கல்கியில் தொடங்கி ஜெயகாந்தன் சுஜாதா பாலகுமாரன் உட்பட அநேக இடைநிலை எழுத்தாளர்கள் தம்மைவிடவும் மொக்கையான எழுத்தாளர்களிடம் இருந்து வாசகர்களை ஈர்த்து குறைந்தபட்சம் கனிசமான வாசகர்களையேனும் தங்களைத்தாண்டி தீவிர இலக்கியத்தை நோக்கிச்செல்ல ஏணியாய் இடைவழிப் பாலமாய் இருந்திருக்கிறர்கள்." வாசகர்களை தன் வசம் ஈர்த்து தங்களது படைப்புகளை விட மேலான இலக்கியத்திற்கு இட்டுச் சென்ற வரிசையில் கல்கியும், பாலகுமாரனும் எப்படிச் சேர்க்கப்பட்டார்கள் என்பதை நேரம் கிடைக்கும்போது விளக்க முடியுமா? சுஜாதா இந்த விஷயத்தில் முன்னோடியும், இது வரை யாரும் விஞ்ச இயலா இடத்திலும் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால், கல்கியோ, பாலகுமாரனோ அப்படி எதுவும் செய்தது போல் தெரியவில்லை. சாரு நிவேதிதா மீதும் நீங்கள் வைக்கும் அத்தனை விமர்சனங்களோடு நான் ஒத்துப் போனாலும், அவர் தன் வாசகர்களை இலக்கிய ஏணியில் ஏற்றி விடவில்லை என்ற விமர்சனத்தோடு ஒத்துப் போக முடியவில்லை. அவர் இலக்கியத்தைப் படைப்பதில் பின்தங்கி இருந்தாலும், இலக்கியத்தைப் பற்றி எழுதுவதில் ஓரளவு சாதனை படைத்துள்ளார் என்றே நினைக்கிறேன். இது சாருவிற்கு மட்டுமல்ல, இணையத்தில் தீவிரமாக இயங்கி வரும் ஜெயமோகன், எஸ். ரா. ஆகியோருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

***

தீவிர இலக்கிய வாசிப்புக்கு வருவதற்கு அடிப்படைத் தேவை, படிக்கிற பழக்கம் அல்லவா? வெகுஜன ப்ரப்பில் சிறு வயதிலேயே புத்தகம் படிக்கும் பழக்கத்தை சில தலைமுறைகளுக்கு ஏற்படுத்தியதில் கல்கியின் பங்கு பெரிது. 

முதிரா இளைஞர்களை ஆட்டிப்படைத்த பாலகுமாரனின் எழுத்து அந்தப் பருவத்தில் வாசிக்க வருபவனை உறவுகள் பற்றி ‘போலி’யாய் சிந்திக்க வைக்கிறது.கொஞ்சம் கண் திறக்கத் தொடங்கியதும் அவரைத் தாண்டிவிடுவது பெரிய கஷ்டமில்லை, கொஞ்ச நாளைக்கு ஒஸ்தி ஒஸ்தியில்லை என்கிறக் குழப்பம் நீடிக்கக்கூடும் என்றபோதிலும்.

சுஜாதா சுஜாதா என்கிறீர்களே அவர் அறிமுகப்படுத்தியதெல்லாம் வெகுஜன வாசகர்களுக்கு வித்தியாசமாய் இருப்பதுபோல் தோன்றும் அதே சமயம் ரொம்ப பயமுறுத்தாத வேலியோர வண்ணதாசன்களைத்தான்.

அதில் பெரிய தவறும் இல்லை. அதற்காக, அப்படி அறிமுகப்படுத்தியதன் மூலம் அவர் ஏதோ பெரும் இலக்கியத் தொண்டாற்றியதைப் போன்ற தொனிதான் சகிக்க முடியவில்லை. மாபெரும் சாதனைகள் புரிந்த இலக்கியவாதிகளையே ‘தொண்டு’ ஆற்றினார் என்று சொல்வது ஏதோ திட்டுவதுபோலத்தான் தோன்றுகிறது. தேனீ தனக்காக சேகரிக்கும் தேனை, சேகரிக்க முடியாமல் இருக்க முடியாததால் சேகரிக்கும் தேனை, தேன் சேகரிப்பு தவிர அதற்கு வேறு ஏதும் தெரியாது என்பதால் அது சேகரிப்பதைத் தொண்டு என்று சொல்ல முடியுமா? தேனின் அற்புதங்கள் அனைத்தையும் அறிந்தேதான் இது சொல்லப்படுகிறது.

கலையின் சிகரங்களுக்கே இதுதானென்கையில், சிறந்த கேளிக்கையாளராய் இருந்த பல தருணங்களில் ஏற்கெனவே எவனெவனோ சேகரித்த ’தேனை’ சொந்த லேபிள் ஒட்டி விநியோகித்த சுஜாதவை இலக்கிய குலதெய்வமாய் இணையத்தில் கொண்டாடுவதை அவரே ஏளனமாய்த்தான் பார்ப்பார் என்பது ஏன் இந்தத் தலைமுறைக்குப் புரிவதில்லை. 

சுஜாதா லட்சணமே இதுதான் எனும்போது இணைய மும்மூர்த்திகளை ஒவ்வொருவராய்ப் பார்க்க வேண்டுமா?

ஏற்கெனவே எழுதப்பட்டவற்றை டவுன்லோடில் திரட்டி தன் லேபிள் போட்ட தப்பும் தவறுமான தமிழ் இலாஸ்டிக் பட்டையில் கட்டி வாசகன் முதுகில் சுமையை ஏற்றும் பார்சல் சர்வீஸின் பெயர் என்ன?

தான் இன்னமும்கூட இலக்கிய ரவுடிதான் எனக்காட்டிக்கொள்ள, புலம்பல் சாதனையை ஒருவரும் கவனிக்கவில்லை எனப்புலம்பியபடி உலக கலையிலக்கிய கத்தி கபடா பெயர்ப்பலகைகளைக் கடைபரப்புவதே அரிய இலக்கிய அறிமுக சாதனையோ?

கோயில் ட்யூப் லைட்டின் மேல் கண்ணையா நாயுடு உபயம் என்று கொட்டையாய் எழுதி குழல் விளக்கின் வெளிச்சத்தையே மறைத்துவிடும் இலக்கிய (சன்னி) தானப் பிரபு என்பதை அறியாமல் இண்டு இடுக்கில் தெரியும் வெளிச்சத்திற்கே ரொங்கிக்கிடக்கும் விட்டில் பூச்சிகளுக்கு விளக்கிச் சொல்லி என்ன பயன்?

இலக்கியத்தை முன்னிருத்தி சுயத்தைப் பின்னுக்குத் தள்ளியிருக்கின்றனரா உமது மும்மூர்த்தீகள்?

புல்லுக்’கும்’ பொசிவதில் போய்
அப்படி என்ன ஓய்
புளகாங்கிதம்?