25 January 2012

எஸ்.ராவுக்கெதிரான அவதூறுக்கெதிராகக் கண்டணம்

இதுவரை 50க்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தம் பெயரில் வெளியிட்டிருப்பவர் என்கிற பெருமைக்கு உரியவர் எஸ்.ராமகிருஷ்ணன். அறந்தை நாராயணன் வாரந்தோறும் வயதாகிறது என்று நடிகையைப் பற்றி எழுதியதைப்போல வாரந்தோறும் விருதாகிறது என்பதையே தம் வாழ்நாள் இலக்கிய சாதனையாக வாழ்ந்துகொண்டிருப்பவர். அவரது இலக்கிய சாதனையைப் பாராட்ட ரஜினியும் வைரமுத்துவுமே வாயில்தேடி வருமளவுக்கு மதிப்பு மரியாதையுடன் இலக்கியமாய் வாழும் ஒருவரைப்போய் அவதூறு செய்யலாமா? அப்படி செய்யப்படும் அவதூறை இலக்கிய உலகம் கண்டிக்காமல் விடலாமா? ஊர்பேர் தெரியாத ஒருவர் கிசுகிசு பாணியில் அவதூறு செய்தால் அதை பார்த்துக்கொண்டு எழுத்தாளர்கள் தமிழில் எழுதும் பாவத்திற்காக சும்மா இருக்க வேண்டுமா? 

மான நஷ்ட வழக்கு தொடரத் தகுதியான அவதூறுதான் இது. ஆனால் இதிலிருக்கும் சட்டச் சிக்கல், யாருடைய மானம் நஷ்டப்பட்டதோ அவர்தான் வழக்குத் தொடர வேண்டும். எஸ்.ராமகிருஷ்ணன் பெருந்தன்மை உடைய பெரிய மனிதர் என்பதால் இதெல்லாம் அவர் பார்வைக்குக்கூடப் போக வாய்ப்பில்லை. போனாலும் இதையெல்லாம் பொருட்படுத்த அவருக்கு நேரமேது? உலக சினிமாவைப் பற்றியும் எழுதியாகவேண்டும். உள்ளூர் சினிமாவுக்கும் எழுதியாகவேண்டும். அவரால் இதற்கு நடவடிக்கை எடுக்க முடியாது என்பதற்காக இலக்கிய உலகம் சும்மா இருக்க முடியுமா? குறைந்த பட்சம் கண்டணமாவது தெரிவிக்க வேண்டாமா?

சினிமா உலகிலிருந்து செய்யப்பட்டிருக்கும் இந்த அவதூறுக்குக் கடும் கண்டணம் தெரிவித்து எழுத்தாளர்களிடம் கையெழுத்து வாங்க வேண்டாமா? ஒரு நண்டுக்குப் பிரச்சனை என்றால் தமிழிலக்கியத்தில் நண்டு சுண்டெல்லாம் ஒன்றாகிவிடும் என்று உலகத்திற்குக் காட்டவேண்டாமா? இணைய இலக்கிய உலகின் கமல் ரஜினியாக வாழும் உலக நாயகன் ஜெயமோகன் சூப்பர் ஸ்டார் சாரு நிவேதிதா இருவரில  முதல் கண்டணக் கையெழுத்தை யாரிடம் வாங்குவது? அவர்களும் சினிமாவில் பிஸி என்றால் குறைந்தபட்சம் இருவரின் ஆன்மக் குரலாய் இயங்கும் அரங்கசாமி பிச்சைக்காரன் இருவரேனும் கண்டணக் கையொப்பம் இடுவார்களா?

அதற்குமுன் எதற்கு கண்டணம் என்று தெரிந்துகொள்ள வேண்டாமா? இதைப் படித்தும் ரத்தம் கொதிக்கவில்லை என்றால் நாமெல்லாம் என்ன இலக்கிய வாசிப்புகள்?


ஆமை அமீனா வரிசையில் இப்பொழுது எஸ்.ராமகிருஷ்ணன் பெயரும் புதிதாக இணைக்கப் பட்டிருக்கிறது.

இதுவரை தமிழ் சினிமாவிற்கு 100 கோடி ரூபாய் வரை நஷ்டம் உருவாக்கிக் கொடுத்திருப்பவர் என்ற உயரிய அந்தஸ்த்தில் இருக்கிறார் இவர்.

பாப்கார்ன், ஆல்பம், பாபா, பீமா, உன்னாலே உன்னாலே, தாம்தூம், மோதி விளையாடு, சிக்கு புக்கு, அவன் இவன்,யுவன் யுவதி என அந்தத் தோல்வி வரிசை நீண்டு செல்கிறது.

சென்ற ஆண்டு மட்டும் அவன் இவன், சிக்கு புக்கு, யுவன் யுவதி போன்ற படங்களில் பணியாற்றி இவர் விளைவித்த நஷ்டம் சுமார்30 கோடி.

சர்வதேச அளவில் இத்தனைத் தோல்விப் படங்கள் எழுதிய எழுத்தாளர்கள் இருக்கிறார்களா என்பதை உலக சினிமாவைக் கரைத்துக் குடித்த ராமகிருஷ்ணன் தான் சொல்ல முடியும். நமக்கு அது அவசியம் இல்லாதது.

நாம் ஆராய வேண்டியதெல்லாம் ராமகிருஷ்ணனின் எந்த குணக்கேடு இப்படித் தொடர் நஷ்டங்களுக்கு காரணமாக இருக்கிறது என்பதைத்தான்.

முதல் விஷயம் ராமகிருஷ்ணன் சினிமா எழுத்தாளர் இல்லை.

சினிமா கலைஞர்கள் வேறு, வெளியில் இருக்கிற கலைஞர்கள் வேறு. இந்த வேறுபாட்டை முதலில் புரிந்து கொண்டால் தான் ராமகிருஷ்ணன் ஏன் சினிமாவுக்கு உபயோகப் படமாட்டார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

வெளியிலும் டெய்லர்கள் இருக்கிறார்கள், சினிமாவிலும் டெய்லர்கள் இருக்கிறார்கள்( நாங்கள் அவர்களை காஸ்ட்யூமர் என்று அழைப்போம் )

வெளி டெய்லர் ஒரு ஜாக்கெட் கொடுத்தால் அதை தைத்துக் கொடுப்பார். அவ்வளவுதான். சினிமா காஸ்ட்யூமர், அதிகாலை இரண்டு மணிக்கு, நல்லி சில்க்கை திறக்க வைத்து, மொத்தக் கடையையும் தலைகீழாகப் புரட்டி போட்டு, மிகச் சரியான ஒரு பட்டுத்துணியை தேர்ந்தெடுத்து , அங்கு வாசலில் இருக்கிற ஒரு டெய்லரை எழுப்பி, அவன் மிஷினை கேட்டு வாங்கி, அதில் ஒரு ஜாக்கெட்டை தைத்து, பைக்கில அந்த ஜாக்கெட்டை எடுத்துக் கொண்டு ஆந்திரா எல்லையில் இருக்கிற தலைக்கோணம் ஃபாரஸ்ட்டுக்கு வண்டியை விரட்டி , மலை மேலே இருக்கிற நுழக்கோணா ஃபால்ஸூக்கு ஏழு மைல் நடந்தே ஏறி வந்து, ஒரு மணிக்கு எடுக்க வேண்டிய ஷாட்டுக்கான அந்த ஜாக்கெட்டை கொண்டு வந்து சேர்ப்பார். இந்த காஸ்ட்யூமரின் அர்ப்பணிப்பு , தியாகம், தீர்மானம், வெறி, சாமர்த்தியம், சினிமா நேசம் , இது போன்ற இன்னும் நூறு விஷயங்களை சாதாரண டெய்லரிடம் எதிர்பார்க்க முடியாது. எஸ். ராமகிருஷ்ணன் ஒரு சாதாரண டெய்லர்.

அது மட்டுமல்லாமல் இலக்கியம்தான் எனக்குப் பிரதானம், சினிமா எனக்கு சம்பாதிக்கிற இடம் மட்டுமே என்று அவரே வெளிப்படையாக சொல்லி வருகிறார்.

இந்த நேர்மையற்ற உறவே முதலில் இந்தப் பணிக்கு அவரைப் பொருத்த மற்றவராக்குகிறது

இரண்டாவது விஷயம், ராமகிருஷ்ணன் சினிமா வேலையை திட்டமிட்டு கலைப்பார்.

சினிமா டிஸ்கஸன் என்பது சினிமாவின் வெற்றியைத் தீர்மானிக்கிற மிக முக்கியமான இடம். ஒரு எழுத்தாளராக அங்கு வருகிற ராமகிருஷ்ணன் வரும் போதே ஏதாவது ஒரு பழைய புத்தகத்தை அன்று காலையில் வாசித்து விட்டு வருவார். உதாரணத்திற்கு ஓமந்தூர் நாராயணரெட்டியின் சுயசரிதை மாதிரியான ஒரு புத்தகத்தை. டிஸ்கஸன் ஆரம்பித்த பத்து நிமிடத்தில் பேச்சை எப்படியாவது ஓமந்தூர் நாராயணரெட்டியிடம் கொண்டு போய் விடுவார். அவ்வளவுதான் அடுத்த இரண்டு மணி நேரம் ஓமந்தூராரைப் பற்றி வாய் ஓயாமல் ஒப்பிப்பதைப் போல் பேசுவார். எப்பொழுதோ படித்தது, இன்னும் நினைவில் இருக்கிறது என்பது போன்ற ஒரு தோற்றத்துடன் பேசி அன்றைய நாளை காலி செய்வார். இப்பொழுது அவர் செய்து வரும் தொடர் சொற்பொழிவுகளுக்கான பயிற்சி  அப்படி டிஸ்கஷன் அறைகளில் மேற்கொள்வதுதான். இப்படி தினசரி, கார்பரேஷன் லாரி குப்பைகளை அள்ளிக் கொட்டுவது போல கொட்டி டிஸ்கஷனையே நாசம் செய்வார். இவ்வளவு பேசுகிறவர் என்றாவது ஒரு நாள் நம் கதைக்கு ஏதாவது செய்து விட மாட்டாரா என்று இயக்குனர்கள் எதிர் பார்த்துக் கொண்டே இருக்க அது நடக்காமலே இயக்குனர் படப்பிடிப்பை சந்திக்க வேண்டி வந்து விடும்.

மூன்றாவது விஷயம் எஸ். ராமகிருஷ்ணனுக்கு வெளிக் கமிட்மென்டுகள் ஜாஸ்தி. சினிமாவுடன் கமிட்மென்ட் கம்மி.

வசனகர்த்தா விஜி இருக்கிறார்( அழகிய தீயே, மொழி, வெள்ளித்திரை) பிருந்தா சாரதி ( பையா, வேட்டை ) இருக்கிறார். அவர்களிடம் ஒரு இயக்குனர் ஒரு கதையை சொல்லி விட்டால் போதும். அவர்கள் அப்பொழுதிலிருந்து அந்த கதையாகி விடுவார்கள். அந்தக் கதை அவர்களின் உடல் உயிரில் எல்லாம் வியாபித்து விடும். Eat cricket, drink cricket, sleep cricket என்பார்களே. அப்படிதான் அவர்கள் அந்தக் கதையுடன் வாழ்வார்கள். அப்படி இருக்கும் படியே சினிமாவில் அவர்களுக்கு ஞானஸ்தானம் பண்ணி வைக்கப் பட்டிருக்கிறது. அந்த சினிமாவின் வெற்றியில் தன் வெற்றியைப் பார்க்கும் வரை அவர்கள் கண்ணயர மாட்டார்கள்.

ராமகிருஷ்ணன் அப்படியில்லை. அவர் அந்த வருடம் வெளிக்கொண்டு வர வேண்டிய 12 புத்தகங்களுக்கும் தலா ஒரு அத்தியாயம் முதல் நாள் இரவு டைப் அடித்து முடித்து விட்டுத்தான் சினிமா வேலைக்கு வருவார். இவர்கள் எப்பொழுது டிஸ்கஸனை முடிப்பார்கள் போய் பிளாக் எழுதலாம், உயிர்மைக்குத் தொடர் எழுதலாம் என்றே இருப்பார்..

சினிமா உருவாக்கம் என்பது ‘ ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை காத்திருக்க வேண்டிய படைப்புத் தொழில். அதன் படைப்பு கடுமையான மன உழைப்பைக் கோரும். ராமகிருஷ்ணன் டிஸ்கஷனுக்கு வரும்போது என்ன தோன்றுகிறதோ அதை சொல்வேன் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்பதாகப் பணி செய்வார். அது தலை வாருகிற போது உதிர்கிற ரோமங்களைத் தருவேன், என்ன செய்து கொள்ள முடியுமோ செய்து கொள்ளுங்கள் என்று கொடுப்பது போலத்தான்.

அப்படி உருவாகிற சினிமா எப்படி இருக்கும். மயிறு போலத்தான் இருக்கும்.

நான்காவதாக விஷயம்தான் ராமகிருஷ்ணன் சினிமாவில் செய்கிற கயமையான காரியம். அயோக்கியத்தனம் என்று கூட சொல்லலாம்.

ஏதாவது ஆங்கிலப் படங்களை சுட்டு, அதை ஏதாவது ஒரு இயக்குனரிடம் சொல்லி, கதை உங்கள் பெயர் போட்டுக் கொள்ளுங்கள், வசனம் மட்டும் என் பெயர் போட்டால் போதும் , எனக்கு சம்பளமாக பத்து லட்சம் கொடுங்கள் என்று டீல் பேசுவார்.

படத்திற்கு சரியாக வசனம் எழுதத் தெரியாத கையாலாகதத் தனத்துடன் சினிமாவில் தொடர்ந்து சம்பாதிக்க ராமகிருஷ்ணன் கண்டுபிடித்து குறுக்கு வழி இது.

சிங்கம் போல இருந்தார் லிங்குசாமி, சங்கருக்கு அடுத்தபடியாக தன்னுடைய சுய சிந்தனையில் தோன்றுகிற கதையை டிஸ்கஷனில் ஜ்வலிக்க வைத்து படமாக்குவது என்ற அழகான நெறியில் செயல் பட்டுக்கொண்டிருந்தார். அவர் மொத்த வாழ்க்கையிலும் அழிக்க முடியாத கரை ஏற்படும்படி பீமா என்ற திருட்டுக் கதையை படமாக்க வைத்து சிங்கத்தை அசிங்கப் படுத்தினார் ராமகிருஷ்ணன்.

சரணை மோதி விளையாடு பண்ண வைத்ததும், மணிகண்டனை சிக்கு புக்கு பண்ண வைத்த்தும் இப்படியான ஒரு டீல் பேசித்தான்.

பலரும் தான் திருட்டுக் கதைகளை படம் பண்ணுகிறார்கள். இதில் அயோக்கியத்தனம் எங்கிருந்து வருகிறது என்று ஒருவருக்குத் தோன்றலாம்.

ராமகிருஷ்ணன் இந்தப் படங்களை அவருடைய பெயரில் இயக்கத் தயாராக மாட்டார். ஒரு விதத்தில் அவருக்கு இந்தப் படங்களின் விதி தெரியும். யார் பெயரிலோ வரட்டும், யார் குடியோ கெடட்டும். தனக்குப் பத்து லட்சம் வந்தால் போதும் என்று அவர் செயல்படுவதில் தான் அயோக்கியத்தனம் வந்து சேர்கிறது.

சினிமா என்பது ஒரு குழந்தையை பிரசவிப்பது போன்றது. அதிலும் பல தாய்கள் ஒன்று சேர்ந்து ஒரு குழந்தையின் கர்பத்தை சுமந்திருந்து ஒரு நாள் பிரசவிப்பது. அதில் ஒரு வசனகர்த்தா என்பவர் குறைந்த பட்சம் ஒரு வாடகைத் தாய் அளவிற்காவது ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும். சூட்டிங்கிற்கு தயாராகிற கர்பிணி வேசக்காரி போல, காலையில் தயாராகி சூட்டிங் முடிந்ததும் எல்லாவற்றையும் கழட்டி எறிந்து விட்டு வெறும் வயிற்றுடன்  போய் விட முடியாது. எஸ். ராமகிருஷ்ணன் செய்வது அது போன்ற காரியம் தான். அதனால் தான் அவர் பங்கெடுக்கிற படங்கள் உயிரற்று இருக்கின்றன.

மலையாளத்தில் எம்.டி வாசுதேவ நாயரைப்போல மேன்மையான திரைப்படங்களோடு சம்பந்தப் படமுடியாமல் தமிழின் சிறுமையான படங்களூடேயே அவர் தொடர்ந்து செயல்பட்டு வருவதற்கு காரணம் அவருடைய சிறுமதியே..

2011ல் மட்டுமல்ல, கடந்த பத்தாண்டுகளாகவே தமிழ் சினிமா என்னும் தேரை புதை குழியை நோக்கி இழுத்துச் செல்பவராக எஸ். ராமகிருஷ்ணன் இருக்கிறார் என்பதை hellotamilcinema.com மிகுந்த கண்டனத்துடன் பதிவு செய்கிறது.