10 January 2012

அம்பி மாமா சீரீஸ் - பூர்வாங்கம் 101 (1)

அம்பி மாமா என்றதும் யாருக்கேனும் அம்புலி மாமா நினைவுக்கு வந்தால் நாம் பொறுப்பன்று. 

அம்பி மாமாவை அம்புலி மாமா என்று கூறுவதுகூட அப்படியொன்றும் குற்றமாகிவிடாது.உள்ளதைச் சொல்வதில் என்ன குற்றம்?நாம் முடிவெட்டிக்கொள்ளும் இடத்தின் பெயர் அம்புலி. அம்பி மாமாவுக்கு அந்தப் பிரச்சனையே கிடையாது. முன்புறம் பார்த்தால் வெண்புலி மாதிரி தலை மட்டும் பார்த்தால் அம்புலி மாதிரி என்று இடையில் டங்கு டக்கு டங்கு டக்கு என மிருதங்கத்தில் நடை போடலாம் என்பது போல், கண்கூச வைக்கும் தேஜஸான தலை. தலை முச்சூடும் இலக்கியத்தாலேயே ஆன மூளை. கம்ப்யூட்டரிலும் புத்தகத்திலுமாய் படித்துப்படித்து வெளியே வந்துவிடும்படியான முழி. உடல் அலுங்காமல் கையெழுத்து மட்டும் போடக் கையசைக்கும் உத்தியோகம். அழைப்புமணி அழுத்தினால் கதவு திறந்து நீளும் ஏவலாள் தலை. அவருக்கெதிரில் கூம்பாய்க் கொண்டையாய் முடிவைத்திருந்தால் ந்ன்றாகவா இருக்கும் என்று சிரங்க அடித்துக்கொள்ளும் பணியாளர்கள். சுகஜீவன பங்குதார நிறுவன அதிபர் என்பதால் உட்கார்ந்த இடம்விட்டு அசைய வேண்டிய அவசியமே இல்லை. எதையும் அசைக்காத காரணத்தால் உண்டான மூலச்சூடு.-குண்டலினி நெற்றி மையத்திற்கு வருவதுபோல -நேராக மூளையைத் தாக்கியதில் அம்புலியாகிவிட்ட தலை. ஆனால் அதற்கும் அம்பி மாமா என்கிற பெயர் வந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இதை விளங்கிக்கொள்ள நாம் இன்னொரு கதையை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். சித்தி பாப்பா என்கிற காரணப்பெயரை இந்தத் தலைமுறை அறிந்திருக்க நியாயமில்லை. இதுபோன்ற சுவாரஸியக் கதைகளெல்லாம் முப்பது வருடங்கள் முன்பாகவே செத்துப்போய்விட்டன. இப்போதைய பாட்டிகளுக்கெல்லாம் தெரிந்ததே கமல் ரஜினி மற்றும் மத்தியான இரவுகளின் மெகா சீரியல்கள். இதுகள் பார்க்கும் கதைகளே சகிக்க முடியாதவை எனும்போது இதுகள் கதை சொல்லி வாழ்ந்தது என்றுதான் குழந்தைகள் கார்ட்டூன் பார்க்கத் தொடங்கிவிட்டனபோலும்.

அந்தக் காலம் அபாண வாயு வெளியேற்றம் தவிர சுற்றுச்சூழல் அதிகம் மாசுபடாத காலம். 150 - 180 மில்லியன்களின் வீரியத்தை சிந்த இடம் பற்றாமல் திண்டாடிய காலம்.  மாமாபோல் தோற்றமளித்த தாத்தாக்களைப் பார்த்து சிட்டுக்குருவிகள் லேகியம் சாப்பிட்ட காலம். அப்போதெல்லாம் பெண்ணும் அம்மாவும் ஒரே நேரத்தில் பேறு பார்த்துக்கொண்டார்கள் என்பதில் என்ன ஆச்சரியம். இந்தத் தலைமுறையில் எத்துனைபேரால் இதை நம்பமுடியும்? என்றாலும் வரலாற்றைப் பதிவது எழுத்தாளன் கடமை என்பது கருதியே இதை எழுதவேண்டி இருக்கிறது.

கொழந்த அழறதே யாராச்சும் பாத்துக்கப்படாதா என்றாள் பச்சை உடம்பின் உப்புசத்துடன் காலகட்டிக் கிடந்த தாய்ப்பாட்டி..

பாட்டி சொல்றாளோல்லியோ அந்த சொப்பை அப்பறந்தான் ஆடறது.  வீல் வீல்னு அழற கொழந்தையக் காத்தாட வெளில கொண்டுபோய் செத்த வெளையாட்டு காட்டப்டாதா என்றாள் மூத்த பெண் தனது தலைச்சன் குழந்தையைப் பார்த்து.

சரிம்மா என்று சொல்லியபடி தன் பாட்டி பெற்ற சக்கரைக் கட்டியை, தன் அம்மாதாத்தா ஆடிய விஸ்வரூப விளையாட்டின் காற்புள்ளிக் கொழுந்தை, சொப்பு விளையாட்டை மட்டுமே அறிந்திருந்த பேத்திச் சிறுமி, தன் சித்தியை இடுப்பில் வைத்துக்கொண்டு காக்கா குருவியைக் காட்டி அழுகையை நிறுத்த விளையாட்டாய் வைத்த கவித்துவப் பெயர்தான் சித்தி பாப்பா.

உறவுமுறைப்படிப் பார்த்தால் அம்மாவின் தங்கை என்பதால் சித்தி, வந்த வரிசைமுறைப்படி பார்த்தால் பாப்பா. குழந்தைப்பருவத்து சூட்சுமங்களை வளர்ந்து செல்லும் வழியில் தொலைக்க நேர்கிறது.

இந்த சித்தி பாப்பா காரணப்பெயர் போலவே, அம்பி போன்ற அறிவும் மாமா போன்ற வயதும் கலந்ததால் வந்ததுதான் அம்பி மாமா. கவிதை இலக்கியம் சினிமா அரசியல் ஊழல் ஹசாரே காமம் ஓமம் என்று கண்டதையும் நாவாலேயே கலக்கியடிக்கும் அம்பி மாமாவின் கற்பித வாழ்வின் அற்புதங்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒவ்வொன்றாய் சொல்ல எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.