18 January 2012

மோர், நீர்மோர் ஆன கதை

தி. ஜானகிராமனின் கர்ஸன் ரோட் அபார்ட்மெண்ட் January 15th, 2012 - சாரு நிவேதிதா

<தி.ஜா.வை தில்லியில் அவர் குடியிருந்த கர்ஸன் ரோடு அபார்ட்மெண்ட்டில் சந்தித்திருக்கிறேன். இப்போது அந்தச் சாலையின் பெயர் கஸ்தூர்பா காந்தி மார்க். அந்தச் சாலையில்தான் நான் வேலை பார்த்த ராஷனிங் அலுவலகப் பிரிவு ஸர்க்கிள் நம்பர் ஸத்தாயிஸ் (27) இருந்தது. அந்த ஸர்க்கிளில் நான் கொஞ்ச காலம் வேலை பார்த்த போது அடிக்கடி தி.ஜா.வை அவர் வீட்டில் சந்திப்பேன். அவர் மனைவி கொடுக்கும் அற்புதமான காஃபியைக் குடித்துக் கொண்டே “ஸார்… உங்கள் நாவல்களில் intensity இல்லை… ஒரு refined பாலகுமாரன் மாதிரிதான் தெரிகிறீர்கள்” என்றேன் ஒருமுறை. அப்போதுதான் நீலமலைப் பனிமலர் என்ற பத்திரிகையில் மரப்பசுவைக் கடுமையாக விமர்சித்து என்னுடைய கட்டுரை ஒன்று வந்திருந்தது. அதையும் அவர் படித்திருந்தார்.

சிறிது கூட கோபமே இல்லாமல் சிரித்துக் கொண்டே “உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார்?” என்றார்.

”Jean Genet… தமிழில் நகுலன்…”

“இலக்கியத்தில் நீங்கள் தீவிரவாதி போல… என்னால் அப்படியெல்லாம் எழுத முடியாது…”

“தமிழில் கு.ப.ரா.வையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதோடு, உங்கள் சிறுகதைகள் எனக்கு மிகப் பிடித்தமானவை. அதில் இருக்கும் தீவிரம் உங்கள் நாவலில் இல்லை….”>

சிறுகதைகளுக்குப் பெயர்போன கு.ப.ராவை தி.ஜாவின் நாவல்களைப்பற்றிப் பேசுகையில் கொண்டுவர முடியுமா? முன்னவரின் சீடர்தான் பின்னவர் என்றபோதிலும் இலக்கியவாதி எவராவது இதைப் பார்த்து என்னையா ஒப்பீடு என்று சிரிக்காமல் இருக்கமுடியுமா?

முடியும். சொல்வது சாருவாகவும் கேட்பது தி.ஜாவாகவும் இருந்தால் முடியும். ஆனால் அடிப்படையில் இப்படியான நிகழ்ச்சியே நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறு எவ்வளவு சதவீதம் என்று பார்க்கலாம்.

1979ல் ஆகாசவாணியிலிருந்து ஓய்வு பெற்றார் தி.ஜா. அதற்குப்பின் emeritus producerஆக இரண்டுவருட பணி நீட்டிப்பில் தில்லி வாசத்தில் இருந்தார். 81ல் முழு ஓய்வு பெற்றபின்  கணையாழியின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.சென்னைக்கு அவ்வப்போது வந்து சென்றுகொண்டிருந்தார். அவர் ஆசிரியராக இருந்த கணையாழியில் நடந்த முதல் குறுநாவல் போட்டியில்தான் ’பெரியவர்கள்’ குறுநாவல் இரண்டாம் பரிசு பெற்றது. 81-82வாக்கில் சென்னை   திருவான்மியூர் வீட்டிற்கு வந்து நிரந்தரமாக சென்னைவாசியானார். 82 தீபாவளியை ஒட்டி இறந்தும் விட்டார். கணையாழி குறுநாவல் போட்டியாய் தொடங்கியது 83ன்றிலிருந்து தி.ஜா நினைவு குறுநாவல் போட்டியாய் மாறியது.

கவிதைகள் சிறுகதைகள் என்று 70களில் இலக்கியப் பத்திரிகைகளில் எழுதத்தொடங்கிய பாலகுமாரன் மாலன் சுபரமண்ய ராஜூ ஆகியோரில் திசைகள் மூலம் மாலன் பத்திரிகையாளராகிவிட வெகுஜனப் பத்திரிகைகளில் சிறுகதையாசிரியராக அதிவேகமாக பாலகுமாரன் வளர்ந்துகொண்டு இருந்த காலகட்டம் 78-79. 

சாவியில் 79ல் தொடராக வெளியான மெர்குரிப்பூக்கள் மூலம் வெகுஜன கவனிப்புக்கு வந்தார் பாலகுமாரன். அது புத்தகமாக 1981 ஏப்ரலில் வெளியானது. காஃப்கா காம்யூவெல்லாமே கவர் பண்ண முடியாத ரசனையின் உச்சத்தில் Jean Genet வைப் படித்துக்கொண்டு இருந்த சாரு நிவேதிதா சாவி பத்திரிகையில் வெளியான தொடர்கதையைப் படித்திருக்க வாய்ப்பில்லை அல்லவா. மெர்க்குரிப் பூக்களை சாரு வாசித்திருப்பதற்கான வாய்ப்பே அது புத்தகமாக வந்த பிறகுதான். கிட்டத்தட்ட தி.ஜா சென்னை செல்லும் தருவாயில்தான் சாத்தியம். 

இதுபோக, தி.ஜாவை சாரு சந்தித்திருப்பதற்கான வாய்ப்பு எவ்வளவு பிரகாசமானது என்று பார்க்கலாம்.

வீடுகட்டும் சித்தாள் பெண்கள் தலைச்சுமையோடு ஏணியில் ஏறுகையில் அவர்களது குண்டிகள் அசையும் அழகை ஜேஜே எப்படி ரசிக்கப்போயிற்று என்று தனது புரட்சிக் கழியைக் கைபோன மேனிக்கு சாரு சுழற்றிக்கொண்டிருந்த காலகட்டம் அது. 

அப்போது, வெங்கட் சாமிநாதனுடன் படுபயங்கர சண்டை வேறு. சண்டையென்றால் உங்கள் விட்டு எங்கள் வீட்டு சண்டையில்லை.  வெ.சா கடலின் நிறம் நீலம் என்று எங்காவது சொல்லிவிட்டால் போதும். அது நீலமில்லை சிவப்பு, வெ.சா எப்படியான வண்ணக் குருடர் என்று உலக இலக்கியத்திலிருந்தெல்லாம் மேற்கோள்காட்டி கட்டுரை எழுதி நிறுவியபின்னரே முதல் கவளம் சாருவுக்கு தொண்டையில் இறங்கிக்கொண்டிருந்த காலம். 

வெ.சாவுக்கு திஜா தமிழ் இலக்கியத்தின் உன்னத கோபுரம். அப்படி இருந்தும் தி.ஜாவை வீட்டுக்குப்போய் சாரு சந்தித்திருக்கிறார் என்றால் தமிழிலக்கியத்தில் அதைவிடவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி வேறொன்று இருக்கவே முடியாது.

ஒரே ஒரு தொடர்கதை எழுதியிருந்த பாலகுமாரனைப்போல intensity இல்லாமல்  தி.ஜானகிராமனின் நாவல்கள் இருக்கின்றன என்று தி.ஜாவிடம் சொல்லியதாக சாரு சார் எழுதி இருப்பதை அப்படியே தேவ வாக்காக சீரியஸாக நினைக்காமல் ச்சும்மா இன்றைய தலைமுறைக்குப் புரிவதற்காக ’பாலகுமாரனைப் போல’ என்று சொல்லியிருக்கக்கூடும், என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இன்று என்றில்லை என்றுமே, இலக்கியம் மட்டும் என்றில்லை ஒட்டுமொத்த தமிழ்ச்சூழலிலும் சாருவை யாருமே சீரியஸாய் எடுத்துக்கொள்ளாமல் இருந்ததற்கும் இருப்பதற்கும் இந்தத் தொடர்பின்மை தொடர்ச்சியின்மை அந்தந்த நேர ஆவேசம் பல சமயங்களில் வெறும் வேஷம் என்று எந்தவித intensityயும் இல்லாமல் வண்டியை ஓட்டிக்கொண்டிருப்பதுதான் காரணம். க்ஷணச்சித்தம் க்ஷணப்பித்தம் என்பது மட்டுமே மேதமையின் அடியாளம் எனக்கொண்டால் கீழ்ப்பாக்கத்தில் அல்லவா இலக்கியம் செழித்துக்கொண்டிருக்க வேண்டும். இந்த ஒரே குணாம்ச குவாலிபிகேஷன் மட்டுமே தன்னையும் ஒரு கலைஞனாக தக்கவைத்துவிடும் என்கிற தக்கையான நம்பிக்கை கொடுக்கும் தன்முனைப்பால் மட்டுமே எவ்வளவுகாலம் நிற்கமுடியும்? 


தனக்குப் பிடித்த கலைஞர்கள் யாருக்கும் தான் கலைஞனாகவோ தன் எழுத்து பொருட்படுத்தத் தக்கதாகவோ இல்லை என்கிற புலம்பல் எதிலிருந்து ஏன் எழுகிறது? அதன் அடித்தளம் சுய சந்தேகமா? ஆசைப்படுவது கிரீடம், மாட்டிக்கொள்ளக் கிடைத்ததோ புஜக்கிரீடம். 

<சுந்தர ராமசாமியை என்னால் எழுத்தாளராகவே ஏற்க முடியவில்லை. தமிழில் mediocre எழுத்தின் ஒட்டு மொத்த வடிவம் அவர். தமிழ் எழுத்தாளர்கள் அத்தனை பேரையும் வசீகரித்த சு.ரா. நேர்ப்பேச்சில் கூட என்னை ஈர்க்கவில்லை. ஒரு சராசரி அரசாங்க குமாஸ்தாவிடம் பேசுவது போல் இருந்தது எனக்கு.> 

ஜேஜே சில குறிப்புகள் பற்றி நடந்த ஒரு கூட்டத்தை விட்டால் எத்துனைமுறை சாரு நிவேதிதா சுந்தர ராமசாமியை நேரில் பார்த்திருக்கிறாராம்? சாருவை ஈர்க்காமல் போகுமளவிற்கு, எவ்வளவுமுறை சு.ராவுடன் பேசி இருக்கிறாராம், சு.ரா, சாருவை ஈர்க்காமல் போனதில் தவறில்லை. ஆனால் சாரு ஏதோ சு.ராவுடன் அடிக்கடி மெரினாவில் காலாற பேசியபடி நடந்து போனதுபோலவும் அப்படியும்கூடத் தன்னை அவர் கவரவில்லை என்பதுபோலவும் காட்டுகிற படம்தான் சகிக்கவில்லை. அடுத்த தப்படி அதைவிட தப்படி.

<அதற்கு ஒரே காரணம், தர்மு சிவராமு. சிவராமுவிடம் பழகியவர்களால் சு.ரா.விடம் பழகுவது சிரமம். சிவராமு ஒரு தீப்பிழம்பு. அவரிடம் பேசி விட்டு வந்தால் ஒரு சிங்கத்திடம் இருந்து விட்டு வந்தது போல் இருக்கும்.  அந்தக் காரணத்தினால் மட்டுமே எலிக் குஞ்சுகள் என்னை ஈர்க்கவில்லை.>

இதைவிட சிறந்த நகைச்சுவையை இந்த ஜென்மத்தில் எவரும் எழுதிவிட முடியாது. இதைப் படித்ததும் இணைய தொட்டபெட்டா வட்டத்தின் வாசகக் குஞ்சுகளுக்கு, ஆஹா நம் சாரு பிரமிளுடன் நேரடியாய்ப் பழகி ஒரே தட்டில் சாப்பிட்டுக் கட்டிப்புரண்ட கலை ஆளுமை என்றல்லவர் புல்லரிக்கத் தொடங்கிவிடும். அரிப்பு அடங்க விபூதியைப் பூசுவது கைவைத்தியக் கடமை அல்லவா?. 
சாரு நிவேதிதாவை தருமு சிவராமு என்கிற பிரமிள் தன் அருகிலேக் கூட அண்டவிட்டதில்லை என்பதுதான் உண்மை. அதற்கு சாட்சியமாய் கவுன்டர் கல்ச்சர் லிமிட்டெட் என்கிற இந்த விமர்சன நெடுங்கவிதை ஒன்றே போதும்.

வெ.சாவுடன் இருக்கையில் தருமுவை அடி. வெ.சாவுடன் சண்டையா தருமுவிடம் அண்ட முயற்சித்து வெ.சாவை படுமட்டமாய் அடி.எதைப் பற்றியுமே சீரிய அக்கறையில்லாத இணையத்து சிறுசுகளிடம் 35 வருடமாய் ரத்தம் சிந்தி இலக்கியம் வளர்ப்பதான பிம்பப்பேருரு காட்ட வெங்கட் சாமிநாதனே என் குருநாதர் என்று கூறிக்கொள். எவன் வந்து கேட்கப்போகிறான்?

எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்பவன், உண்மையை ஊறுகாய் போல, தொட்டுக்கொள்ளவாவது உபயோகிக்க வேண்டாமா?சாராயத்திற்குக் குறைந்தபட்ச சைட் டிஷ் ஆக உபயோகப்படுவதல்லவா ஊறுகாய்.

இந்த தி.ஜா - பாலகுமாரன் விஷயமாய் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தபோது, இதற்குப்போய் ஏன் இவ்வளவு மெனக்கெடவேண்டும்? சாரு எழுதியதில், சாருவும் தி.ஜானகிராமனும் தில்லியில்தான் குடியிருந்தார்கள் என்பதைப்பொறுத்த வரையில், சாருவும் இந்திய ஜானாதிபதியும் தில்லியில்தான் வசித்தார்கள் என்பதுபோல  அசைக்க முடியாத சத்தியம். தி.ஜா என்றில்லை கு.ப.ராவைக்கூட சாரு சந்தித்து அளவளாவியதாக எழுதலாம். இடிப்பது கு.ப.ரா இறந்த வருடமும் சாரு பிறந்த வருடமும்தான்.பாபர் மசூதியை இடித்தவர்களையே அடப்போயா ரொம்பகாலமாச்சு இன்னும்போய் பழைய கதையைப் பேசிக்கொண்டு என்று அசால்ட்டாய் கடந்துசெல்லத் தயாராய் இருக்கும் ஜனக்கூட்டத்திற்கிடையில் இலக்கிய பம்மாத்தெல்லாம் ஒரு விஷயமா என்ன?

<இல்ல சார். பொதுவாவே ஜெயமோகன் எஸ்.ரா மாதிரி இல்லாம சாருவை நீங்க சாஃப்ட்டா டீல் பண்றீங்கன்னு ஒரு அபிப்ராயம் இருக்கு. அது அப்படி இல்லேன்னு காட்ட இது ஒரு சான்ஸ் இல்லையா?

ஏம்பா! ஜெயமோகனையும் எஸ்.ராவையும் பத்தி எழுதறேன்னா அவங்க கட்டுரை எழுதறாங்க இல்லாட்டா சிறுகதை எழுதறாங்க. அதைப் படிச்சா எனக்கு ஏதாவது சொல்ல இருக்கு. சாருவோட தளத்துல அப்பிடி என்ன இருக்கு? அப்படி இருந்து சொல்லாமப்போனாதான நான் சாருவை மட்டும் சாஃப்ட்டா டீல் பண்றதா சொல்லலாம்?>

கைபேசியில் நிகழ்ந்த மேற்படி நேயர் விருப்பத்தை மதித்து இப்போது எழுதியாயிற்று. இதற்காக அடிக்கவேண்டும் என்று யாருக்காவது கை பரபரத்தால் கேள்வி கேட்ட அவரை அடியுங்கள். அதற்கு அந்தக் கேள்வியைக் கேட்ட நபர் யார் என்று தெரியவேண்டுமல்லவா? அதைத் தெரிந்துகொள்ள அந்த உரையாடலுக்கு சாட்சியாய் ஹைதராபாதில் அவர் அருகில் அமர்ந்திருந்த சாருவைக் கேளுங்கள்.

சாட்டில் நுழைந்து சரிந்துவிட்ட பிம்பத்தை சரிசெய்துகொள்ளவேண்டிய  நிர்பந்தத்தால் ஆன்மீகத்தில் நுழைந்து அமைதி கண்டுவிட்ட சாருவால் பாவம் முன்புபோல் வீராவேச வேஷம்கட்ட முடியவில்லை. 

ஹி..ஹி..ஹி..இதற்காகவெல்லாம் கோமாளி நாடகத்தை நிறுத்திவிடமுடியுமா என்ன? பிய்த்து உதற இருக்கவே இருக்கிறது பிச்சைக்காரன் என்றொரு பினாமி முகம்.